தன்மையுறு மேன்மக்கள் குணநலன்கள் - மேன்மை, தருமதீபிகை 295

நேரிசை வெண்பா

உள்ளம் கலங்கார் உரைதிறம்பார்; ஒன்னலர்க்கும்
கள்ளம் புரிந்து கறைசெய்யார்; - எள்ளலெனும்
புன்மைதனை யாதும் பொருந்தார்; புறங்கூறார்
தன்மையுறு மேன்மக்கள் தாம். 295

- மேன்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

நல்ல மேன்மக்கள் அல்லலுறினும் உள்ளம் நிலை குலையார்: சொல்லிய சொல் தவறார், பகைவரிடமும் கள்ளம் புரியமாட்டார்; சிறுமையை எவ்வகையும் கருதார்; யாரையும் புறம் பேசி இகழார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

மேலோர் நெறிமுறையே ஒழுகும் மன உறுதியுடையராதலால் எது வரினும் அவர் நெஞ்சம் கலங்கி நிலை தடுமாறார்.

தாம் கூறிய உறுதி மொழிகளிலிருந்து எவ்வழியும் வழுவார் என்றமையால் அவரது வாக்கின் தூய்மை அறியலாகும்.

முன்னது மனநிலையைக் குறித்தது; பின்னது வாக்கு நலனை உணர்த்தியது. திறம்பல் - பிறழ்தல், மாறுபடல்.

சத்துருக்களிடத்தும் உத்தமர் ஒழுங்கு தவறி நடவார் என்றது செயல் ஒழுக்கங்களை விளக்கியது.

ஒன்னலர் – பகைவர்; கறை – குற்றம்; ஒன்னலர் இன்னல் நிலையினராகலின் உம்மை அவர் வெம்மை தெரிய வந்தது.

கொடிய விரோதிகளிடமும் பெரியோர் நெறி கடந்து யாதும் கரவு புரியார் என்றமையால் அவரது அருந்திறலாண்மையும் பெருந்தகைமையும் அறிந்து கொள்ளலாம்.

இகழத்தக்க இழி செயல்களை 'எள்ளலெனும் புன்மை’ என்றது.

யாண்டும் புகழத்தக்க நன்மைகளையே புரிந்து வருவாரன்றிப் புன்மைகளை மறந்தும் அவர் கருதார்.

’யாதும் பொருந்தார்’ என்றது தீமைகளையும், சிறுமைகளையும் அவர் அருவருத்து விலகும் அமைதி அறிய வந்தது.

பிறருடைய பிழைகளை எவ்வழியும் எவரிடமும் பேசாமல் இருப்பது உயர் பெருந்தகைமைக்கு ஒர் உறுதியான அளவுகோலாதலால் அவ்வுளவு தெரிய அது இறுதியில் நின்றது.

’பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு’ என்ற வள்ளுவர் அருள் மொழியின் பொருள் நிலை ஈண்டு ஊன்றி உணரவுரியது.

உள்ளம் கலங்கலும், உரை திறம்பலும், கள்ளம் புரிதலும், கறை செய்தலும், புன்மை மருவலும், புறங் கூறலும் புல்லிய செயல்களாதலால் இவற்றையுடையவர் சிறியர் என நிற்கின்றார்; இவை இல்லாதவர் பெரியர் என மிளிர்கின்றார்.

மனவுறுதி, வாய்மை, நேர்மை முதலிய சீர்மைகள் தோய்ந்து யாவரும் சீர்மையுற வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jun-19, 9:17 pm)
பார்வை : 46

மேலே