தமிழக இயற்கை வளங்கள் பாதுகாப்பு செயற்பாட்டாளர் முகிலன் அவர்களின் நேர்காணல்--------------சிறகு சிறப்பு நிருபர் -------------May 17, 2015

கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகத்தை கூறுங்கள்?

பதில்: எனது பெயர் முகிலன், எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், சென்னிமலை. எனது மனைவி பெயர் பூங்கொடி, எனக்கு ஒரு மகன் இருக்கிறார் அவருடைய பெயர் கார்முகில். இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். எனது மனைவி சென்னிமலையில் சொந்தமாக ஒரு கணிணியகம் வைத்து செயல்பட்டு வருகிறார். நான் பொறியியல் பட்டயப்படிப்பு முடித்தேன், முடித்துவிட்டு நான்காண்டு காலம் பொதுப்பணித் துறையிலே பணியாற்றினேன். பின்பு அந்த வேலையில் விருப்பம் இல்லாததால் வெளியில் வந்துவிட்டேன். எனது குடும்பம் என்பது ஒரு சிறிய குடும்பம்தான்.

கேள்வி: தங்களுக்கு சுற்றுச்சூழலியல் ஆர்வம் எப்போது ஏற்பட்டது?

பதில்: சுற்றுச்சூழலில் தனியான ஆர்வம் என்று ஒன்று இல்லை. சமூகத்தினுடைய நிலைமைகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்து எனக்கு சிறுவயதிலிருந்தே இருந்தது. இதற்குக் காரணம் கிட்டத்தட்ட எனக்கு நினைவுதெரிந்த காலத்திலிருந்து நான் செய்தித்தாள் படிக்க வைக்கப்பட்டேன். எப்படி என்று சொன்னால் அது ஒரு சுவாரசியமான செய்திதான். எனது வீட்டிற்கு அருகில் சுப்பிரமணியம் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஒரு முடித்திருத்தகம் வைத்திருந்தார். அவர் சிங்கப்பூரில் சென்று பணியாற்றியவர், அதனால் அந்தக் கடையின் பெயரே சிங்கப்பூர் சலூன் என்று இருந்தது. நான் சிறிய வயதில் முதலாம் வகுப்புப் படிக்கும் பொழுது எங்கள் ஊரில் அந்தக் கடையில் மட்டும்தான் சுழலும் நாற்காலி இருக்கும். எனது வீட்டிற்கு அடுத்ததாக இரண்டு கடைகளுக்கு அப்பால் அந்தக் கடை இருக்கும். அவருக்கு படிக்கத் தெரியாது ஆனால் தீவிரமான திராவிட முன்னேற்றக் கழக அமைப்பைச் சேர்ந்தவர். தி.மு.க வெறியர் என்ற அளவிற்கு அவர் இருப்பார். நான் தினமும் பள்ளி விட்டு வந்தவுடன், அவர் என்னை அழைத்து அந்த நாற்காலியிலே உட்காரவைத்து ஒரு நான்கு சுற்று சுற்றிவிட்டு முரசொலி செய்தித்தாளை படித்துக் காட்டச் சொல்லுவார். சில மணி நேரங்கள் அவருக்கு தினசரி செய்தித்தாளைப் படித்துக் காட்டுவது என்பது என்னுடைய வாழ்க்கையாக மாறியது. இது என்னுடைய முதல் வகுப்புப் படிக்கும் பொழுதே ஏற்பட்ட பழக்கம்.

என்னை நான்கு வயதிலேயே பள்ளிக்கு அனுப்பிவிட்டார்கள். எனது வீட்டின் அருகில் ஆசிரியர் இருந்தார், அவர் என்னை தினமும் பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவார். ஓராண்டு பள்ளியில் பெயர் எழுதாமலேயே இருந்தேன், அதனால் சிறுவயதிலேயே வாசிப்புப் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. அவருடைய கடையில் முரசொலி படிப்பதோடு, தினத்தந்தி செய்தித்தாளும் இருக்கும். முரசொலி அவருக்காகவும் தினத்தந்தி எனக்காகவும் படிக்கின்ற வழிமுறைகள் இருந்தது. அந்த வகையில் பொது நிகழ்வின் மீது எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து விபரம் ஏற்பட்டது. எனது தந்தை ஒரு சோசலிசம் அமைப்பைச் சேர்ந்தவர். எங்கள் பகுதியிலே காரா நல்லசிவம் என்ற ஒரு மகத்தான சோசலிசத் தலைவர் வாழ்ந்தார். பல ஆண்டுகாலம் எங்கள் பகுதியில் அதாவது கிட்டத்தட்ட இருபது ஆண்டுகாலம் சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர் அவர். அவருடைய அமைப்பில் என்னுடைய தந்தை ஒரு சாதாரண ஆதரவாளர்தான், பெரிய செயல்பாட்டாளர் அல்ல, அதில் அங்கம் வகித்து வந்தார். 1977ல் சோசலிசக் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஜனதா கட்சி என்று உருவானது. அப்பொழுது பழைய காங்கிரசு ஜனசங்கம், லோக்தல், சோசலிசக் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஜனதா என்று உருவானது. அவர் அந்த கட்சியினுடைய ஆதரவாளராக இருந்தார். எங்கள் வீட்டிற்கு அருகாமையிலேயே ஒரு மூன்று பொதுக்கூட்டங்கள் நடக்கின்ற இடங்கள் இருந்தது. ஒன்றின் பெயர் குமரன் சதுக்கம், மற்றொன்றின் பெயர் நடராசன் திடல், மற்றொன்று குமராபுரி. இந்த இடங்களில் நடக்கக்கூடிய பொதுக்கூட்டங்களுக்கு சிறிய வயதிலேயே எந்தக் கட்சிக் கூட்டம் போட்டாலும் போய் கேட்பது என்ற வழக்கம் எனக்கு சிறிய வயதிலேயே இருந்தது. அதனால் பொது புத்தியில் சிறு வயது முதலே பலர் பேசுவதைக் கேட்டு பல்வேறு சமூகப் பிரச்சனை மீதான கருத்துக்கள் எனக்கு ஏற்பட்டிருந்தது.

1977ல் அப்போது எனக்கு வயது பத்து, ஆனால் அன்று நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-விற்கு ஆதரவாக என்னை ஒத்த சிறுவர்களை அழைத்துக் கொண்டு தேர்தலிலே அ.தி.மு.க கட்சியினருடன் சேர்ந்து துண்டறிக்கை வாங்கி பிரச்சாரம் செய்ததெல்லாம் எனக்கு நினைவிற்கு வருகிறது. நான் தினசரி முரசொலி படிப்பவனாக இருந்தாலும் கூட தி.மு.க.வின் மீது மிகக்கடுமையான விமர்சனங்களைக் கொண்டவனாக வளர்ந்தேன். காரணம் அது ஊழல் கட்சி என்று அன்று மிகப்பெரிய அளவிற்கு அ.தி.மு.க, பொதுவுடைமைக் கட்சிகள் பிரச்சாரங்களை செய்தது. அதன் மீதான பதிவு எனக்கு இருந்தது. செய்தித்தாளை படிக்கவைக்கச் சொல்லக்கூடிய அவரிடமே, “நீங்கள் இருக்கக்கூடிய கட்சி ஊழல் கட்சி, முரசொலியில் வரக்கூடிய செய்திகள் எல்லாம் தவறான செய்திகள், பொய்யான செய்திகள்” என்று அவரிடம் நான் வாதிடுவேன். அன்று எல்லோருக்கும் பொதுவாக நல்லவர் என்று சொன்னால், அது திரைப்பட பிம்பங்கள் வழியாகவும், ஊடகங்கள் வழியாகவும் எம்.ஜி.ஆர் மட்டுமே என்று இருந்த நிலையில், எம்.ஜி.ஆர் பிம்பம் வந்து என்னோடு ஒட்டிக்கொண்டது. அன்றைக்கு பெரும்பாலான சிறுவர்கள் மனதிலும் அப்படித்தான் இருந்திருக்கும் என்று கருதுகிறேன். தொழில்நுட்பக் கல்லூரி செல்கின்ற காலம் வரை அந்த நிலைதான் இருந்தது.

தொழில்நுட்பக் கல்லூரியில் சென்ற பிறகு அங்கு இருக்கக்கூடிய நூலகம் எனக்கு மிகப் பெரிய பார்வையைக் கொடுத்தது. அங்கே இருந்த பெரியாருடைய நூல்கள், அண்ணாவினுடைய நூல்களைப் படித்தேன். நான் பொள்ளாச்சியிலே படித்த பொழுது, என்னுடைய கல்லூரி விடுதித் தோழர்கள் பலர் ஒட்டன்சத்திரத்தின் பகுதியில் இருந்து வந்து தங்கியிருந்தார்கள். அவர்கள் எல்லாரும் அன்றைய காலத்திலே தென்மொழி இதழ்களோடு தொடர்புடையவர்களாக இருந்தார்கள், அய்யா பெருஞ்சித்திரனாரோடு தொடர்புடையவர்களாக இருந்தார்கள், உலகத்தமிழ் முன்னேற்றக் கழகத்தோடு. கல்லூரி எனக்கு பெரியாரையும் அண்ணாவையும் நெருக்கமாக அறியப்படுத்தியது, அதேபோல் பெருஞ்சித்திரனாரையும் மிக நெருக்கமாக அறியப்படுத்தியது. தமிழ்தேசிய விடுதலைக் கருத்துக்கள் எனக்கு அறிமுகமானது. கல்லூரி சென்றவுடன் எனக்கு எம்.ஜி.ஆர் மீது இருந்த மாயை எல்லாம் அகன்று, பெரியாரை ஒரு மிகப்பெரிய வழிகாட்டியாக காணக்கூடிய ஒரு பார்வை எனக்கு வளர்ந்தது. அதேபோல் பெருஞ்சித்திரனாருடைய தமிழ்தேசிய விடுதலைக் கருத்து என்னை மிகவும் ஈர்த்த நிலையில் இருந்தது. அப்படி இருந்த பொழுதுதான், 1983ல் கல்லூரியிலே நான் முதலாம் ஆண்டு படித்த காலத்திலிருந்து மாணவர்களுடைய பிரச்சனைகளில் முன்னணியில் இருந்து செயல்படத் துவங்கினேன்.

இரண்டாம் ஆண்டு மாணவர் பிரச்சனைக்காக கல்லூரியில் எண்ணற்ற போராட்டங்களை நடத்தத் துவங்கினோம். மூன்றாம் ஆண்டு தொடக்கத்திலே தமிழ் ஈழத்தில் 1983ல் வெளிக்கடைச்சிறையிலே குட்டிமணி, ஜெகன் போன்றோர் கொல்லப்படுவதற்கு முன் அவர்கள், “எங்களை தூக்கிலிட்டால் எங்களது கண்களை எடுத்து பார்வையற்றவர்களுக்குப் பொறுத்துங்கள், அவர்கள் வழியாக நாங்கள் தமிழ் ஈழத்தைப் பார்க்கிறோம்” என்று சொன்னதற்காகவே அவர்களுடைய கண்களைக்கூட எடுத்து காலில் போட்டு நசுக்கிய நிகழ்வுகளை எல்லாம் செய்தித்தாள் வழியாக அறிந்தோம். அதுமட்டுமல்லாமல் தமிழனின் கறி இங்கே கிடைக்கும் என்ற பல்வேறு பெயர் பலகைகளைப் பார்த்தோம். இதெல்லாம் மிகுந்த வேதனையையும், மிகுந்த ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. அதற்காக எங்கள் கல்லூரியிலே போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினோம். அதனால் கல்லூரி காலவரையற்று இழுத்து மூடப்பட்டது. இழுத்து மூடப்பட்டவுடன் எனக்கு என்னசெய்வதென்று தெரியாத வயது எனக்கு, அப்போது வயது பதினாறு வயதுதான். பள்ளியில் சேர்த்த பொழுது என்னுடைய வயதை அதிகரித்துச் சொல்லி சேர்த்துவிட்டார்கள், அதனால் நான் தொழில்நுட்பக் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் பொழுது எனக்கு வயது பதினாறு தான் ஆகியிருந்தது. பத்தாவது முடித்தவுடன் நேரடியாக பட்டயப்படிப்பு பொறியியலில் மூன்றாண்டு காலம் இருந்தேன். அப்பொழுது ஏதாவது செய்யவேண்டும் என்ற ஒன்று இருந்தது, என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை.

வெளியில் பெரிய சமூக ரீதியான பழக்கங்கள் இல்லை, ஆதலால் ஈழத்தில் சென்று அங்கே போராடக்கூடிய போராளி அமைப்புகளோடு சேர்ந்து நாம் ஏதாவது செய்யவேண்டும் என்று நினைத்து, தங்கச்சிமடம் வரையிலும் ஓடிச்சென்றேன், அப்பொழுது எனக்கு சிறியவயதுதான், மீசைகூட அரும்பாத வயது, கையில் சிறிது பணம் எடுத்துச் சென்றிருந்தேன். அப்பொழுது அங்கிருந்த மீனவரிடம் என்னை எப்படியாவது இலங்கை கொண்டு போய் சேர்த்துவிடுங்கள் என்று சொன்னேன். அவரும் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, சிறிது தொகையை வாங்கிக் கொண்டு படகில் ஏற்றிக்கொண்டு சென்றார். இடையிலேயே இந்திய இராணுவத்திடம் சிக்கியதால் திருப்பி அனுப்பப்பட்டோம். மீனவர் மீன்பிடிக்கப்போகிறோம் என்று சொன்னார், ஆனால் இப்பொழுதெல்லாம் அங்கே போகக்கூடாது என்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

அதன் பின்பு வேதனையோடு வீட்டிற்கு வந்த பொழுது, ஐயா நெடுமாறன் அவர்கள் ஒரு அறிவிப்பைச் செய்திருந்தார் “நாம் ஏற்கனவே கோவா இந்தியாவோடு சேராத காலத்தில், போர்ச்சுக்கீசியரின் ஆதிக்கத்தில் இருந்த பொழுது அதை இந்தியாவோடு இணைக்கவேண்டும் என்று சொல்லி ராம் மனோகர் லோகியா தலைமையிலே பம்பாயிலிருந்து ஒரு பெரிய அணி கோவாவிற்குச் சென்றது. அங்கே கோவாவில் இறங்கியவர்களை அங்கே இருந்த அரசு சுட்டது. அதனால் இந்திய இராணுவம் தலையிட்டு கோவாவை இந்தியாவோடு சேர்த்தது. அதுபோல் நாமும் இங்கேயிருந்து நம் உயிரைப் பற்றி கவலைப்படாமல் அர்ப்பணிப்போடு இலங்கைக்குச் செல்லுவோம், ராமேஸ்வரம் சென்று அங்கேயிருந்து படகுகளை எடுத்துக் கொண்டு இலங்கை போய் இறங்குவோம். இலங்கை போய் இறங்கும் பொழுது மத்திய அரசு ஏதாவது வலிமையான நடவடிக்கை எடுத்தே தீரவேண்டிய அவசியம் ஏற்படும், நம் உறவினர் கொலை செய்யப்படுவது தடுக்கப்படும்” என்று தியாகப்பயணம் என்ற ஒரு பயணத்தை அறிவித்திருந்தார். அந்த சமயம் கல்லூரி இழுத்து பூட்டப்பட்டுவிட்டது, ஊரில் எதுவும் சொல்லாமல் ஓடிச்சென்று அந்தப் பயணத்தில் பங்கெடுத்துக்கொண்டேன். மதுரையில் துவங்கிய பயணம் ஒவ்வொரு கிராமங்களாக, கிடைத்த இடத்தில் தங்கிக்கொண்டு, ஒருவர் இருவர் அல்ல ஐந்தாயிரம் பேருடன் மிகப்பெரிய எழுச்சியாக அந்தப் பயணம் சென்றது.

பத்து தடவை பாடை வராது

பதுங்கி கிடக்கும் புலியே தமிழா

செத்து மடிதல் ஒருமுறைதான்டா

சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா

என்ற உணர்ச்சிப் பாடலுடைய வரிகளை ஏந்திக்கொண்டு அதை முழக்கங்களாக இட்டுக்கொண்டு, தினசரியும் அதிகாலையில் எழும்புவோம், பத்து மணி வரை பயணம் செய்து ஏதாவது இடத்தில் தங்குவோம், அங்கு கிடைக்கக்கூடிய உணவை சாப்பிட்டுவிட்டு திரும்பவும் மாலை தொடங்கி இரவு 9 மணிவரையிலும் அந்தப் பயணம் தினசரியும் பத்து மணிநேரம் நடக்கும். அப்படி ஆகஸ்ட் 7ந்தேதி துவங்கிய அந்தப் பயணம் அன்று பாம்பனில் ரயில் பாதை மட்டும்தான் உண்டு, சாலை வசதி கிடையாது, அனைவரும் சென்று பாம்பனில் ரயில் ஏறி ஆகஸ்ட் 15 ராமேஸ்வரம் சென்றடைந்துவிட்டோம். பல லட்சக்கணக்கான பேர் ராமேஸ்வரத்தில் அன்று கூடியிருந்தார்கள்.

அப்பொழுது அங்கே தமிழக அரசின் நேரடி பிரதிநிதியாக தமிழக சட்டமன்ற சபாநாயகராக இருந்த ராஜாராமன் இங்கு அனுப்பிவைக்கப்பட்டு, “முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் இந்தப் பயணத்தை ரத்து செய்யவேண்டுமென கோருகிறார்கள், நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொல்கிறார்கள், நீங்கள் பயணம் செல்லக்கூடாது” என்று நெடுமாறன் ஐயா அவர்களிடம் மேடையிலேயே தெரிவிக்க, இல்லை நாங்கள் தீர்மானித்த மாதிரி செல்லுவோம் என்று நெடுமாறன் ஐயா அவர்கள் அறிவித்து அங்கே பயணத்திற்கு செல்ல முயற்சி செய்தோம். ஆனால் அங்கே இருந்த அத்தனை படகுகளும் தமிழக அரசால் அகற்றப்பட்டிருந்தது. ஆதலால் அத்தனை பேர்களும் செல்வதற்கு வழி இல்லை, அவசர அவசரமாக ஒரு படகு கொண்டுவரப்பட்டு, அதில் நெடுமாறன் போன்ற தலைவர்கள் ஏறிச்சென்றார்கள், அவர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்களோடு சென்றிருந்த நாங்களும் அங்கே கைது செய்யப்பட்டு, அன்று முழுக்க ராமேஸ்வரத்திலே வைக்கப்பட்டு, அன்று இரவு அங்கே இருந்து பாம்பன் கொண்டுவரப்பட்டு, பாம்பனிலிருந்து பேருந்தின் மூலம் மதுரை அழைத்துவரப்பட்டு, மதுரையில் எங்களை விடுவித்தார்கள்.

இப்படி பதினாறு வயதிலே சமூகப் போராட்டத்திலே தொடங்கிய பயணம் இன்றுவரை பல்வேறு தளங்களில் சென்றுகொண்டிருக்கிறது. இப்பொழுது கடைசியாக, கடந்த ஒரு பத்தாண்டுகளாக சுற்றுச்சூழல் என்ற இந்தப் பயணம் நடந்துகொண்டிருக்கிறது. நாங்கள் கல்லூரிகளில் படிக்கும் பொழுது நடத்திய தொடர்ந்த போராட்டம் வெற்றியை எங்களுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றியை ஈட்டிக்கொடுத்ததை இப்பொழுது நினைத்துப்பார்க்கிறேன். நாங்கள் படிக்கும் பொழுது தொழில்நுட்ப கல்லூரியில் படித்தவர்கள், B.E.யில் சேரவேண்டும் என்று சொன்னால் நேரடியாக முதலாம் ஆண்டிலிருந்துதான் படிக்கவேண்டும் என்ற நிலைமை அப்பொழுது இருந்தது. அதை நாங்கள் B.E. இரண்டாம் ஆண்டு தொழில்நுட்பக் கல்லூரியில் படித்தவர்களுக்கு, B.E. நேரடியாக ஓராண்டு குறைத்து படிக்கவைக்கவேண்டும் என்ற கோரிக்கையை வைத்துத் தொடர்ந்து போராடினோம், அதற்காக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்தோம், நாங்கள் ஆறு பருவத்திலும் அதற்காகப் போராட்டம் செய்தோம் படிக்கக்கூடிய காலத்திலே. அப்பொழுது தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து அந்தப் போராட்டத்திலே ஒருங்கிணைத்ததில் நானும் ஒருவனாக செயல்பட்டேன். நாங்கெல்லாம் படித்து முடித்து சில ஆண்டுகளுக்குப் பின்பு அந்த நடைமுறை இப்பொழுது இருந்துகொண்டிருக்கிறது. இப்படி கல்லூரி முதல் போராட்டம் என்பது என்னுடைய இயல்பான மூச்சாகவே, வாழ்க்கையாகவே மாறியது.

சமூகச் செயல்பாடு என்பது எனக்கு விபரம் தெரிந்த காலத்திலிருந்து இருக்கிறது. எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து இந்த சமூகத்திற்காக வேலை செய்யவேண்டும் என்ற கருத்து இருந்தது. அது படிக்கக்கூடிய காலத்தில் மிக வலுவாக மாறியது. நான் படிக்கக்கூடிய காலத்தில் என்னுடைய வகுப்பிலே பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு ஆசிரியர் ஒரு செய்தியைச் சொன்னார். இது வரை அது என்னுடைய நினைவிலே ஓடிக்கொண்டே இருக்கக்கூடிய செய்தி. ஒரு நாள் என்னைக் கேட்டார், உங்களது அம்மா அப்பா படித்திருக்கிறார்களா என்று கேட்டார். நான் இல்லை, படிக்கவில்லை என்று சொன்னேன், தாத்தா பாட்டி படித்திருக்கிறார்களா என்று கேட்டார், படிக்கவில்லை என்று சொன்னேன். ஏன் வசதி இல்லையா என்று கேட்டார், இல்லை வசதிகள் எல்லாம் இருந்தது, ஆனால் அவர்கள் படிக்கவில்லை என்று சொன்னேன். ஏன் படிக்கவில்லை என்று தெரியுமா என்று கேட்டார், எனக்குத் தெரியவில்லை அவர்களைத்தான் கேட்கவேண்டும் என்று சொன்னேன். அப்பொழுது அவர் சொன்னார் “கல்வி என்பது இந்த சமூகத்திலே ஒரு சாதியினருக்கு மட்டும் குறிப்பாக மேல்சாதியினராக இருக்கக்கூடிய பார்ப்பனர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்தது, ஆனால் இதை மாற்றவேண்டும் என்று 1950 களின் இறுதியிலே பெரியார் இடஒதுக்கீடு கேட்டு மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார். அதில் முப்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது ஆனார்கள். மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரு மாதம் முதல் மூன்று வருடம் வரை சிறையில் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் சிறையில் இருந்து பெற்றுக்கொடுத்த உரிமை இன்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கல்வி உரிமையாக மாறியிருக்கிறது” என்ற ஒரு செய்தியை அவர் பேச்சு வாக்கில் தெரியப்படுத்தினார், ஆனால் ஒரு பெரிய தாக்கம் ஏற்பட்டது.

அப்பொழுது நாம் படிப்பதற்குக் காரணம் பெற்றோர்களா மற்றவர்களா என்று சொல்லும் பொழுது பெற்றோர்கள் எனக்கு செலவு செய்தார்கள் என்பது சரியானது. அவர்கள் என்னைப் பெற்றார்கள், வளர்த்தார்கள், என்னுடைய கல்விக்கு செலவு செய்தார்கள் என்பது சரியானதே ஒழிய, இந்த உரிமையைப் பெற்றுக்கொடுத்தது பெற்றோர்களா என்று கேட்டால் கிடையாது. யாரோ முகம் தெரியாத தோழர்கள் தம்முடைய அர்ப்பணிப்பினால் இந்த உரிமையைப் பெற்றுக் கொடுத்தார்கள். அவர்களுடைய குழந்தைகள் படித்தார்களா இல்லையா என்று தெரியாது. ஆனால் நான் படித்தேன், நான் அரசு வேலைக்குச் செல்லக்கூடிய வாய்ப்பையும் பெற்றேன். அப்பொழுது நாம் பெற்றிருக்கக்கூடிய கல்வி என்பது இந்த சமூகத்தை முன்னடத்தி சென்றவர்கள் போராடிப் பெற்றுக்கொடுத்த உரிமை. அப்பொழுது நாம் பெற்றிருக்கிற அறிவு என்பது சமுதாயம் கொடுத்திருக்கக்கூடிய அறிவு. இந்த அறிவை நாம் சமூகத்திற்கு பயன்படுத்த வேண்டும், சமூக முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து அந்த ஆசிரியர் பேசிய காலத்தில் என்னுடைய மனதில் ஆழமாகப் பதிந்தது.

அதற்குப் பின்பு மார்க்சீயம் மீது அறிமுகம் ஏற்பட்டு மார்க்சு அவர்கள் சொல்வதைப்போல ஒருவன் தனக்கென வாழ்ந்தால் மிகப்பெரிய அறிஞனாகலாம், மிகப்பெரிய செல்வந்தனாகலாம், ஏன் மிகப்பெரிய மகானாகக்கூட ஆகலாம், ஆனால் மகத்தான மனிதனாக ஆக முடியாது என்று சொன்னார். தனக்கென்று வாழ்கின்ற வாழ்வு அது தன்னல வாழ்வு, மனிதநேயம் என்பது தன்னலத்திற்கானது அல்ல அது பொதுநலத்திற்கானது. எனவே மற்றவர்களுக்காக வாழக்கூடிய வாழ்வுதான் மகத்தான வாழ்வு என்று மார்க்சு சொன்னதும், எனக்கு மிகப்பெரிய உணர்வு ஏற்பட்டது. அந்த உணர்வுடன் அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். அதனால் இந்த சூழல் என்பது கடைசி பத்தாண்டுகளில் அதை ஒரு முதன்மை பிரச்சனையாக எடுத்துக் கொண்டு வேலை செய்கிறேன். பல்வேறு சமூக தளத்திலே தமிழ்தேசிய இனத்தின் மீதான ஒடுக்குமுறை, தமிழ்தேசிய விடுதலைக்கான செயல்பாடு, சாதிய ஒடுக்குமுறை, மது ஒழிப்பு, லஞ்சம் ஊழல் ஒழிப்பு இப்படி பன்முகப்பட்ட தன்மைகளில் வேலைகளை அமைப்பின் சார்பில் பங்கெடுத்து ஈடுபட்டு வருகிறேன். அமைப்பின் செயல்பாடுகளிலிருந்து விலகியிருந்த காலத்திலும் பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறேன்கேள்வி: இன்றைய சூழலில் இயற்கைப் பாதுகாப்பு என்பது எந்த அளவிற்கு அவசியம்?

பதில்: மனிதன் என்பவன் இயற்கையோடு இயைந்து வாழவேண்டியவன். நமக்குத் தேவையான அனைத்தையும் நாம் இயற்கையிலிருந்துதான் பெறுகிறோம். நாம் பெறுவதை இயற்கைக்குத் திரும்ப கொடுக்க வேண்டும். இயற்கையிலிருந்து நாம் பெறுவதை இயற்கைக்கு சேதாரம் இல்லாத வகையில் பெற வேண்டும். அப்படி இல்லாத நிலையில் இயற்கை நம்மீது மிகப்பெரிய எதிர்வினையாற்றும். எனவே இந்தப் பார்வையை இந்தக் கண்ணோட்டத்தை சமூகக் கண்ணோட்டமாக மாற்றி, சமூகச் செயல்பாடு இந்த வகையில் அமையவேண்டுமென நான் விரும்புகிறேன்.

கேள்வி: இயற்கையை அழிக்கும் மக்களிடமிருந்து இயற்கையைக் காப்பாற்ற அரசும் மக்களும் பின்பற்றவேண்டியவை எவை?

பதில்: மக்கள் இயற்கையை அழிக்கிறார்கள் என்று சொல்வது ஒரு தவறான வாதம். மக்கள் இயற்கையோடு இயைந்து வாழக்கூடியவர்கள்தான். இன்றைக்கு மிகப்பெரிய மக்களாட்சி நிலவுகின்ற நாடு எனப் பேசிக்கொள்கிறோம். ஆனால் ஏற்கனவே நிலவுடைமை சமுதாயமாக இருந்த மன்னராட்சி நிலவிய காலத்தில் கூட இயற்கையைப் பாதுகாப்பதற்காக இயற்கையோடு இயைந்து வாழக்கூடிய வேலையைத்தான் அனைவரும் செய்தார்கள். நம்முடைய தமிழகத்தில்தான் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் இருந்தது. இது எல்லாம் இன்று மக்களாட்சி காலத்தில் கட்டப்பட்டதல்ல. இதை மக்களாட்சி என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களாட்சி காலத்தில் கட்டப்பட்டதும் அல்ல. இதெல்லாம் ஏற்கனவே இங்கே மன்னர்களாக நிலவுடைமை சமூகம் இருந்த காலத்திலே கட்டப்பட்டது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சமூகம்.

ஒரு தமிழ்ச் சமூகம் என்பது ஒரு ஐந்தாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்டது என்று சொல்லும் பொழுது, நாம் இதை பழம்பெருமைக்காக பல்வேறு அரசியல் கட்சிகள் பேசி வருகிறார்கள். நாம் அந்தப் பெருமையில் இருந்து பேசுவதில்லை. ஐந்தாயிரம் ஆண்டு காலம் என்று சொல்லும் பொழுது இந்த சமூகத்திற்கு ஐந்தாயிரம் ஆண்டு காலத்திற்கு மேற்பட்ட அறிவு இருக்கிறது. அப்படி ஒவ்வொன்றையும் காரண காரியத்தோடு அறிந்து அதை உருவாக்கிய சமூகம் இது. அப்படி இயற்கையோடு இந்த சமூகம் தொடர்ந்து இசைந்து பேணிக்கொண்டிருந்தது. ஆனால் முதலாளித்துவ சமூகம் உருவான பின்பு விவசாயம் என்பது தொழிலுக்காகவும், தொழில் என்பது விவசாயத்திற்காகவும் என்ற நிலையில்தான் முதலாளிய சமுதாயம் உருவாகியிருந்தது. அப்படி இருந்தபொழுது இந்த விவசாயத்தையும் இயற்கையையும் தொழிலுக்கு பயன்படுத்துவது என்ற பெயரில் விவசாயத்தின் மூலம் வரக்கூடிய கச்சாப்பொருட்களை வைத்து தொழிலை செய்வது, தொழில் மூலம் உற்பத்தியாகக்கூடிய பண்டங்களை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் விநியோகிப்பது என்ற சமூகப் பிரிவினையை இயற்கை வளங்களை கொள்ளையடித்து தனது பணப்பையை பெருக்குவது, இயற்கை வளங்கள் எவ்வளவு சேதமுற்றாலும் அதைப்பற்றி கவலை இல்லை, தன்னுடைய பணப்பையை பெருக்குவது என்ற அடிப்படையிலே முதலாளிய சமூகம் மிகக்கொடூரமான வகையிலே ஏகாதிபத்தியமாக, தன்னுடைய நாட்டை சுரண்டுவது மட்டுமல்லாமல், மற்ற நாடுகளையும் சுரண்டுவது என்ற நிலை வந்த பொழுதுதான் இயற்கையை அழிக்கின்ற மிகப்பெரிய கொடூரங்கள் வந்தது.

அதனுடைய விளைவு நம்முடைய மேற்குத்தொடர்ச்சி மலை முழுக்க அழிக்கப்பட்டு இன்று மலை வளங்கள், காட்டுவளங்கள் அழிக்கப்பட்டு அனைத்தும் தேயிலைத் தோட்டங்களாக மாற்றப்பட்டுவிட்டது. இங்கே இருக்கக்கூடிய அனைத்து வளங்களும், இயற்கையாக பூமியில் கிடைக்கக்கூடிய வளங்கள் என்பது காலங்காலத்திற்கும் இருக்கக்கூடியதல்ல, குறிப்பிட்ட காலத்திற்கு இருக்கக்கூடிய வளங்கள்தான். அந்த வளங்களை கொள்ளையடிக்கக்கூடிய வேலைகளைத் தொடங்கினார்கள். அதற்காகத்தான் கிழக்கிந்திய கம்பெனி என்று ஒன்று வந்து பிரிட்டனுடைய ஏகாதிபத்தியத்தின் முழுக் கட்டுப்பாட்டுக்குள் மாறியது. 1947க்குப் பின்பு பிரிட்டன் ஏகாதிபத்தியத்திலிருந்து கைமாறி, இன்று உலகத்தில் இருக்கக்கூடிய அத்தனை ஏகாதிபத்தியத்தினுடைய சுரண்டல் கூடமாக இயற்கையை அழிக்கின்ற செயல்பாட்டிற்கு இன்று இந்த நாடு மாற்றப்பட்டிருக்கிறது. எனவே இயற்கையை அழிப்பது என்பது அரசும், அரசு வைத்திருக்கக்கூடிய கொள்கையிலிருந்துதானே ஒழிய மக்கள் அல்ல என்பதை நான் சிறகின் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன்.

கேள்வி: புவி வெப்பமடைதலால் மனித சமூகம் பட இருக்கும் இடர்கள் என்ன? புவி வெப்பமடைதலைத் தடுக்க தாங்கள் கூறும் வழிகள் என்ன?

பதில்: புவி வெப்பமடைதல் என்பது ஒரு சிறிய பிரச்சனை அல்ல, மிகப்பெரிய பிரச்சனை. ஏனென்றால் அது ஒரு எல்லையில் பார்க்கக்கூடிய விசயம் அல்ல. அதாவது இயற்கையோடு இயைந்து வாழவேண்டியவன் மனிதன், அப்படியான நிலை தகர்ந்ததின் விளைவுதான் இன்று புவி வெப்பமயமாதல் என்பது. இன்று நமக்குத் தேவையான சக்திகளைப் பெற இயற்கையிலேயே எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும்கூட அந்த வாய்ப்புகளை நாம் பயன்படுத்துவதில் அரசு முழு கவனம் வைப்பதில்லை. காரணம் அது சுரண்டுவதற்கு ஏதுவாக இருக்காது. நம்முடைய தமிழகத்தை எடுத்துக்கொண்டால், முழுக்க வெப்பமண்டலப் பகுதி, ஆண்டு முழுக்க சூரிய மின்சாரம் கிடைக்கக்கூடிய பகுதி, 1075 கிலோ மீட்டர் கடல் எல்லையைக் கொண்டிருக்கின்ற பகுதி, நம்முடைய பாலக்காட்டு கணவாய் வழியாகவும், ஆரல்வாய்மொழிப்பகுதி கணவாய் வழியாகவும் எப்பொழுதும் காற்று வீசிக்கொண்டிருக்கக்கூடிய பகுதி.

இப்படி எத்தனையோ வாய்ப்புகளில் நமக்கு மின்சாரம் தயாரிக்கமுடியும் என்பதை, பல நாடுகள் நமக்கு நிரூபித்துக் காட்டியிருந்தும்கூட, இங்கே அனல்மின்சாரத்தை முதன்மையாகவும், அதேபோல இன்று மிகப்பெரிய அளவிலே மக்களை அச்சுறுத்தக்கூடிய அணுமின்நிலையங்களைக் கொண்டுவரக்கூடிய நிலையிலும்தான் அரசு இருக்கிறதே தவிர, இதற்கான மாற்று பற்றி விவாதத்தளத்திலேகூட பேசப்படக்கூடிய நிலைமை இல்லை. உலகநாடுகளில் எட்டிலிருந்து ஒன்பது விழுக்காடு மட்டுமே மின்சார விநியோகத்தில் சேதாரம் ஏற்படுவது என்பது தமிழகத்தில் இருபத்து ஐந்திலிருந்து முப்பது விழுக்காடு இருக்கிறது. இதை ஒழுங்குபடுத்தினாலே தமிழகத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்யக்கூடிய மின்சாரத்தில் பெரிய அளவிற்கான நிறைவை செய்துவிடமுடியும், இப்படியெல்லாம் இதைப்பற்றியான விவாதத்தளங்களே கிடையாது. இங்கே பேசுவதெல்லாம் வெறும் வெற்றுக்கூச்சல்களாக, வீண் ஆரவாரங்களாக இருக்கிறது.

அதே போல ஒரு பக்கம் மலைகளை அழிக்கின்ற வேலைகளை, மரங்களை அழிக்கின்ற வேலைகளை வெகுவேகமாக செய்துகொண்டே இருக்கிறோம், செய்துகொண்டிருக்கிறது அரசும், சுரண்டலாளர்களும். ஆனால் அதை அனுமதித்துக்கொண்டே, இன்னொரு பக்கம் மரம் வளர்ப்போம் என்ற இயக்கத்தை அரசு ஒரு கண் துடைப்பாக செய்து வருகிறது. நான் பல மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் பேசியதுண்டு. உச்சநீதிமன்றம் ஒரு மரத்தை வெட்டினால் பத்து மரத்தை நடவேண்டும் என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறது. தமிழகத்திலே தேசிய நெடுஞ்சாலை இவ்வளவு தூரம் இருக்கிறது NHAI-யின் கட்டுப்பாட்டில். எங்காவது வெட்டப்பட்ட மரத்திற்கு ஈடாக மரம் நடப்பட்டிருக்கிறதா? எல்லா இடங்களிலும் சுங்கச்சாவடி இருக்கிறது. ஐம்பது கிலோமீட்டருக்கு ஒரு முறை சுங்கச்சாவடி இருக்கிறது. கட்டணம் வசூல் செய்துகொண்டே இருக்கிறார்கள். ஆனால் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பைக் கொடுத்தப்பின்பும்கூட நீங்கள் எங்கேயும், ஏன் வெட்டியமரத்திற்கு ஈடாக, புதிய மரத்தை வைக்கச்சொல்லவில்லை, வெட்டியமரத்திற்கு ஈடாக மரத்தை நட்டீர்களா என்று கேட்பதற்கு எந்த மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் பதில் சொல்வதற்கு வழி இல்லை, துணிச்சல் கிடையாது, அதுமட்டுமல்ல புதிதாக கரூர் – திருச்சி சாலை அமைக்கப்பட்ட பொழுது, அங்கிருந்த திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெய்ஸ்ரீ அவர்களிடம் மாவட்ட விவசாய குறைதீர்க்கும் கூட்டத்தில் நேரில் பலமுறை பேசினேன். நீங்கள் கரூர் – திருச்சி சுங்கச்சாவடிக்கு அனுமதி, அவர்கள் மரத்தை வைத்தால் மட்டுமே கொடுங்கள் இல்லையென்றால் கொடுக்காதீர்கள் என்று. முதலில் சரி சரி என்று சொன்னவர், ஒருமுறை நேரிலேயே குறைதீர்க்கும் கூட்டத்தில் சொன்னார், “நான் மாவட்ட ஆட்சித்தலைவராக இருப்பதா வேண்டாமா நீங்கள் முடிவு செய்துகொள்ளுங்கள், எனக்கு அவ்வளவு நெருக்கடி இருக்கிறது, புரிந்துகொள்ளுங்கள்” என்று பேசக்கூடிய நிலை இருக்கிறது.

என்னுடைய எளிமையான ஒரு கேள்வி, இந்த புவி வெப்பமயமாதல் என்று ஒன்று சொன்னால் அதற்கு முழுக்க முழுக்கக் காரணம் இந்த அரசு பின்பற்றக்கூடிய கொள்கைகள். அதனுடைய செயல்பாடுகள் முழுக்க முழுக்க இங்கே ஒரு பசுமை மண்டலத்தை ஏற்படுத்துவதோ, பசுமை மண்டலத்தை ஏற்படுத்தி இந்தப் புவியைப் பாதுகாப்பதோ, இந்த இயற்கையைப் பாதுகாப்பதோ அல்ல. நாம் வெறுமையாக மரத்தை நடுவது இங்கே பசுமை மண்டலத்தை உருவாக்குவது என்று பேசினால் இந்தப் பிரச்சனை தீர்க்கக்கூடியது அல்ல. இந்தப் பிரச்சனைக்குக் காரணமாக இருக்கக்கூடிய, நிலவக்கூடிய அரசு அமைப்பு இந்த கட்டமைப்பை எப்படி நாம் மாற்றப்போகிறோம், உண்மையில் இந்தக் கட்டமைப்பு யாருக்காக செயல்படுகிறது, நிலவக்கூடிய கட்டமைப்பு எப்படி பன்னாட்டு முதலாளிகளுக்கும், அவர்களுடைய ஆதரவு பெற்ற, இங்கே இருக்கக்கூடிய தரகு முதலாளியாக இருக்கக்கூடிவர்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு, இதை நாம் மாற்றுவதற்கான கண்ணோட்டத்தோடு செயல்பட்டால்தான் இந்த புவிவெப்பமயமாதலை நாம் தடுக்க முடியுமே ஒழிய, பொதுவாக NGO பாணியில் மரத்தை நடுவோம் மழை பெறுவோம் என்று சொன்னால் அது நடக்காது, உண்மைகளை உரக்கச் சொல்ல வேண்டும், உண்மைகளை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும், அறிந்த உண்மைகளை நேர்மையாகச் சொல்ல வேண்டும். அப்படியான ஒரு நேர்மைத் திறன் தமிழத்திற்கு ஏற்பட்டால் மட்டும்தான், நான் புவிவெப்பமயமாதலைப் பேசினாலும் கூட அந்தப் பிரச்சனையின் மையக்கண்ணியை நாம் உணரவேண்டும். அப்பொழுதுதான் இந்தப்பிரச்சனையை உண்மையில் களையமுடியும் என்று நான் கருதுகிறேன்.

கேள்வி: நியூட்ரினோ, மீத்தேன் போன்றவை ஒரு சாரார் நன்மை என்றும், ஒரு சாரார் தீமை என்றும் கருதிவரும் இச்சூழலில் உங்கள் கருத்து என்ன?

பதில்: அடிப்படையில் நான் இயற்கையை நேசிப்பவன். இயற்கையை பாதுகாப்போம், மனிதகுலத்தை விடுவிப்போம் என்ற கருதுகோளை சொல்பவன். தொடக்கத்திலேயே உங்களோடு உரையாடும் பொழுது ஒரு வார்த்தையைச் சொன்னேன். இயற்கையை நாம் தேவையான அளவு மட்டும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும். இயற்கையை நாம் எங்கெல்லாம் அளவிற்கு மீறி சுரண்டியிருக்கிறோமோ அங்கே எல்லாம் அழிவைப் பார்த்திருக்கிறோம். தமிழகத்தில் 1075 கிலோ மீட்டரில் சுனாமி தாக்காத பகுதி இரண்டே பகுதி. ஒன்று அலையாத்தி காடுகளில் இருந்த பிச்சாவரம் பகுதி, மற்றொன்று பவளப்பாறைகளில் இருந்த ராமேஸ்வரம் பகுதி. மற்ற அனைத்து பகுதிகளிலும் நாம் சீரழிவைக் கண்டோம். காரணம் கடலோரங்களில் முழுக்க இறால் பண்ணை என்று போட்டு கடலோரத்தை அழித்தோம், அலையாத்தி காடுகளை அழித்தோம், தென்மாவட்டங்களில் குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இருந்த தேரிக்காடுகளை, கடலிலிருந்து அரண் போல காட்டிலிருந்து வந்த மணல் தேரிகள் இருந்தது, அந்த மணல் தேரிகளை அழித்தார்கள். அதன் விளைவாக சுனாமியில் எண்ணற்ற லட்சக்கணக்கான மக்களை பலி கொடுத்தோம். அதைப்பற்றியான புரிதல் இன்று வரைகூட வளராத நிலைதான் இருக்கிறது. இன்றும் கூட கடலோரங்களில் நாம் இதைப் பாதுகாக்கவேண்டும் என்ற உணர்வு அரசுக்கோ அரசியல் கட்சிகளுக்கோ கிடையாது. கடலோரத்தை, முழுக்க தொழிற்சாலைகளுடைய கழிவுத்தொட்டியாக, உலகத்தில் இருக்கக்கூடிய கழிவுத்தொழிற்சாலை நிலவக்கூடிய இடங்களாக, உலகத்தில் இருக்கக்கூடிய கழிவுகளை கொண்டுவந்து வைக்கக்கூடிய இடங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

நியூட்ரினோவைப் பொறுத்தவரையில், நியூட்ரினோ என்ற ஒன்று நமக்கு எதிரானவை அல்ல. ஏனென்று சொன்னால் நியூட்ரினோ என்பது பிரபஞ்சம் முழுக்க இருக்கிறது. அந்த நியூட்ரினோ 1930ல் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அதைப் பற்றியான பல்வேறு ஆய்வுகள் நடந்துகொண்டிருக்கிறது. அப்படியான இயற்கையிலேயே இருக்கக்கூடிய நொடிக்கு பல லட்சம் நியூட்ரினோக்கள் நமது உடலை துளைத்துக் கொண்டு சென்றுகொண்டிருக்கிறது. நியூட்ரினோக்கள் என்பது நூறு பூமியை வரிசையாக வைத்தாலும் கூட அதையும் துளைத்துக்கொண்டே சென்றுகொண்டிருக்கும். நியூட்ரினோவை பிடிக்க முடியாது, அதனால்தான் அதை பிசாசுத் துகள் என்று விஞ்ஞானிகள் இன்னொரு வார்த்தையில்கூட சொல்கிறார்கள். அப்படிப்பட்ட நியூட்ரினோவை ஆய்வுசெய்வதைப் பற்றி நமக்கு எந்தவித மாறுபட்ட கருத்தும் கிடையாது. ஆனால் இன்று பேசப்படுவது செயற்கையாக நியூட்ரினோ கற்றைகளை உருவாக்கி, அதை பல ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு நிலத்திற்கு அடியிலே அனுப்பி, அதைப்பிடித்து ஆய்வுசெய்கின்ற ஒரு மிகப்பெரிய வேலை நடந்துகொண்டிருக்கின்றது. இந்த ஆய்வைக்கூட உலகத்தில் பல நாடுகள் ஏற்கனவே செயலிழந்த சுரங்கங்களில் நடத்திக்கொண்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் குறிப்பாக தமிழகத்தில் தேவாரம் பகுதியில் இருக்கக்கூடிய பொட்டிபுரத்திலே இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மலையைக் குடைந்து சென்று அமைப்போம் என்கிறார்கள்.

இந்த நியூட்ரினோ ஏற்கனவே இந்தியாவில் ஆய்வுசெய்யப்பட்டது, எங்கே என்று சொன்னால் கோலார் தங்கவயலிலே அந்த சுரங்கத்திலே ஆய்வு செய்யப்பட்டது. அந்த ஆய்வு, தங்கவயல் சுரங்கம் மூடியதால் மூடிவிட்டோம் என்று அரசு சொல்கிறது, இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்கவயலை மூடினால் நல்லதுதானே சுரங்கம் செயல்படுவதற்கு எந்தவிதத் தடையும் இல்லை, சிறப்பாகச் செயல்பட வேண்டியதுதானே. இங்கே இந்தியாவில் எண்ணற்ற சுரங்கங்கள் இருக்கிறது. ஏற்கனவே பல்வேறு கனிமங்களை எடுப்பதற்காக தோண்டப்பட்ட எண்ணற்ற சுரங்கங்கள் இருக்கிறது. அங்கே வைப்பதற்கு என்ன தடை?, ஏன் அங்கே செய்யாமல் புதிதாக ஒரு இடத்தில் தோண்டுகிறீர்கள், அதுவும் பல்லுயிர்ப்பெருக்கம் என்று யுனோஸ்கோவால் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி என்று அறிவிக்கப்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலையின் ஒரு அங்கமாக இருக்கக்கூடிய, சார்க்கோனைட் பாறைகள் இருக்கக்கூடிய பொட்டிபுரத்திலே ஏன் வைக்கிறீர்கள்.

அந்த பொட்டிபுரத்தில் நேரடியாக நீங்கள் இதைத் தோண்டுகின்ற பொழுது வடமேற்காக இந்த சுரங்கம் அமையுமேயானால், அது மதிகெட்டான் சோலை சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதியாக வரும், அரை கிலோமீட்டர் தமிழ்நாட்டிலும், ஒன்றரை கிலோ மீட்டர் கேரளத்திலும் வரும். கஸ்தூரி ரங்கன் கமிட்டி அறிக்கை தெளிவாகச் சொல்லியிருக்கிறது, “மேற்குத் தொடர்ச்சி மலையிலே இருபதாயிரம் சதுரடிக்கு மேல் எந்த விதமான தோண்டலையும் நடத்தக்கூடாது” என்று. ஆனால் அவையெல்லாம் மீறி இதைச் செய்கிறார்கள், ஏற்கனவே இத்தாலியிலே செயற்கை நியூட்ரினோ கற்றை அனுப்பப்பட்ட பகுதியிலே பூகம்பம் ஏற்பட்டிருக்கிறது அருகாமையிலே. ஏன் அங்கே பூகம்பம் ஏற்பட்டது என்று இன்றுவரை தெரியாது. அதே போல இந்த செயற்கை நியூட்ரினோ அனுப்பப்பட்ட பகுதியிலே கதிர்வீச்சு ஏற்பட்டிருக்கிறது, அக்காரணத்தினால் மூடப்பட்டிருக்கிறது ஜப்பானிலே.

அப்படி இருக்கும் பொழுது இதையெல்லாம் மறைத்து வைத்துவிட்டு இங்கே இருக்கக்கூடிய சில அறிவியல் மேதாவிகள் என்று சொல்லக்கூடியவர்கள், இங்கே நியூட்ரினோ வந்தால் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கிறார்கள். இவர்கள் நேர்மையாக இது அமெரிக்கா ஃபெர்மலேபுக்காக செய்யப்படக்கூடிய ஆய்வு என்று எங்காவது சொல்லியிருக்கிறார்களா?. இந்த ஆய்வு இந்திய அரசால் நடத்தப்படக்கூடிய தன்னிச்சையான ஆய்வு அல்ல, அமெரிக்காவினுடைய ஃபெர்மலேபுக்காக செய்யக்கூடிய ஆய்வு இது. இந்த ஆய்வின் முடிவைக்கூட இந்தியா வைத்துக்கொள்ள முடியாது. அமெரிக்காவின் ஃபெர்மலேபுக்கு ஒப்படைக்க வேண்டும். இப்பொழுது நாங்கள் அச்சப்படுவது என்பது, இந்த நியூட்ரினோ கற்றைகளை செயல்பாட்டில் வெற்றிகரமாக வைத்தால், நியூட்ரினோ கற்றைகளை ஆயுதமாக்கி உலகத்தை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கான வேலையாக மட்டுமே அதற்காகத்தான் செய்கிறார்கள் என்று நாங்கள் கருதுகிறோம். காரணம் ஏற்கனவே உயிரி ஆயுதங்களை உருவாக்குவதற்கு இந்த ஃபெர்மலேப் பயன்பட்டிருக்கிறது.

இந்த ஃபெர்மலேப்பிற்கு மிகப்பெரிய அளவிற்கு நிதி ஒதுக்கக்கூடியது கோகோ கோலா நிறுவனம் ஒன்று. இவர்களுக்கெல்லாம் என்ன அக்கறை இருக்கிறது. நமக்கு ஒன்று தெரியும் தெளிவாக, அரசியல் அதிகாரத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களுடைய நலனுக்காகத்தான் அந்த அறிவியல் ஆய்வும் இருக்கும். இன்று அரசியல் அதிகாரத்தில் இருக்கக்கூடியவர்கள் எல்லாம் உலகத்தில் பணம் படைத்த மிகப்பெரிய செல்வக்கூட்டங்கள், பன்னாட்டு நிறுவனங்கள். இவர்களுக்காக செய்யக்கூடிய, இவர்களுக்காக ஆளக்கூடிய அரசில், இவர்களுக்காக செய்யக்கூடிய அறிவியல் ஆய்வில் மக்களுக்காக என்ன நடந்துவிட முடியும். இன்னொன்றும் கூட கேட்கிறேன், இதே சார்க்கோனைட் பாறைகள் கேரளத்தினுடைய பொன்முடியிலும், கர்நாடகத்திலுள்ள பிலிகிரிரங்காவிலும் இருக்கிறது. அங்கே ஏன் இந்த ஆய்வைத் தொடங்கவில்லை. மேற்குத் தொடர்ச்சி மலை முழுக்க கடினப்பாறைகளைக் கொண்டது. 1400 கிலோ மீட்டருக்கு மேலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பாறையில் எந்த இடத்திலும் கடினப்பாறைக்குள் இந்த சுரங்கத்தைத் தோண்டி இந்த ஆய்வை செய்தால், ஆய்வை அங்கே செய்யமுடியாது என்று சொல்வதற்கான ஏதாவது அறிவியல் பூர்வமான ஆய்வு உண்டா?, இமயமலை இளையமலை எனவே அங்கே செய்யமுடியாது என்ற வாதத்தை வைக்கிறார்கள். இமயமலை இளையமலை என்பதால், அந்த மலையிலே சுரங்கம் தோண்டி இந்த ஆய்வை செய்யமுடியாது, செய்தால் பிரச்சனை ஏற்படும் என்று நிரூபிக்கக்கூடிய ஆய்வு ஏதாவது இருக்கிறதா?, கிடையாது.

ஏதாவது ஒன்றை அறிவியலாளர் என்ற பெயரில் உளறிக்கொட்டிவிட்டால், அதை இந்த மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அறிவியலாளரை எதிர்த்து சாதாரண மக்கள் பேசக்கூடாது. உங்களுக்கு என்ன அறிவியல் தெரியும், எனக்கு ஒரு அறிவியல் தெரியும், அறிவியல் ஆழம் கிடையாது ஆனால் ஒரு அறநெறி உண்டு. அறிவியலாளர்கள் என்பது நேர்மையானவர்களா?, நான் ஒரு கேள்வியைக் கேட்கிறேன், இவர்களுடைய வாதப்பிரகாரம் ஏற்கனவே அமைக்க விட்டிருந்தால் பல்லுயிர்பெருக்கமும், மிகப்பெரிய நீர்நிலைகளும், புதுமலைச் சரணாலயத்தையும் கொண்ட சிங்காரா பகுதியில் இந்த ஆய்வு தொடங்கப்பட்டிருக்கும், அதே போல மேகமலைச் சரணாலயமான சுருளிப் பகுதியிலே தொடங்கப்பட்டிருக்கும். இவர்களின் ஆய்வுக்கு அந்த இடத்தைத் தீர்மானித்த பொழுது அது பல்லுயிர்ப் பெருக்க மண்டலம், அது சரணாலயப் பகுதி, அருகிலே அணைகள் இருக்கிறது என்ற விபரங்கள் அந்த அறிவியலாளர்களுக்குத் தெரியாதா?, தெரியும். ஏன் அப்படி இருந்தும் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார்கள். எதிர்ப்பினால்தானே அதனைக் கைவிட்டார்கள்.

அப்படியென்றால் இவர்களுக்கு இந்த இயற்கையைப் பற்றியோ, இந்த இயற்கைச் செல்வங்கள் அழிவதைப் பற்றியோ, இந்த சமூகம் அதனால் ஏற்படும் பாதிப்பைப் பற்றியோ இவர்களுக்கு எள்ளளவும் அக்கறை கிடையாது என்பதுதான் யதார்த்தமான உண்மை. அப்படி இருந்தால் இந்த இடத்தை எப்படி அவர்கள் தேர்ந்தெடுத்திருப்பார்கள். ஏற்கனவே சிங்காராவையும், சுருளிமலையையும் எப்படி தேர்ந்தெடுத்திருப்பார்கள். ஆதலால் அறிவியலாளர்கள் என்பவர்கள் ஆளுகின்ற கூட்டத்திற்கு ஜால்ரா போட்டுக்கொண்டு வயிறு வளர்க்கின்ற கூட்டமே தவிர, இவர்கள் மக்கள் நலனைச் சார்ந்த அறிவியலாளர்கள் அல்ல, அப்படி இருந்தால் நீங்கள் சிங்காராவிலே இதைக் கொண்டுவந்திருக்க மாட்டார்கள், சுருளி மலையிலே இந்த நியூட்ரினோ திட்டத்தைக் கொண்டுவந்திருக்க மாட்டார்கள். இப்பொழுது எந்த விதமான அறநெறியும் இல்லாமல், இது மேய்ச்சல் நிலம் இருக்கக்கூடிய புறம்போக்கு பகுதி என்று ஒரு வார்த்தையைச் சொல்கிறார்கள். பல லட்சக்கணக்கான வருடங்களாக உருவாக்கப்பட்ட, மேய்ச்சல் நிலம் என்றால் அதாவது திணையை ஐந்தாக வகைப்படுத்தி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று வகைப்படுத்தி வாழ்ந்த மிகப்பெரிய இனம் தமிழினம். அதற்கான கடவுளைப் படைத்து, அதற்கான வாழ்வியல் முறைகளைப் படைத்து, வாழ்வியல் நெறிகளைப் படைத்து வாழ்ந்தவர்கள். மேய்ச்சல் நிலம் என்பது மிகப்பெரிய முல்லை நிலப்பகுதியில் ஒரு பகுதி. அப்படி இருக்கக்கூடிய பகுதியை அழிப்பதைப் பற்றி எந்தவிதமான இதுவும் கிடையாது.

இதுமட்டுமல்ல இந்த நியூட்ரினோ திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமானால் இதனுடைய பாதிப்பு முதலில் இடுக்கி அணை அதாவது உலகத்திலேயே மிக உயரமான இடுக்கி அணை பாதிக்கப்படும். அதுமட்டுமல்ல முல்லைப்பெரியாறு அணை மிகப்பெரிய உரிமைப்போராட்டத்தை நடத்தி மீட்டெடுக்கப்பட்ட முல்லைப்பெரியாறு உட்பட்ட இருபத்து ஒரு அணைகளும் சேதாரமாகும். இவர்கள் பேசுகிறார்கள், Tunnel அமைப்பதென்பது புதிதா, ஏற்கனவே அங்கே அமைக்கவில்லையா, இங்கே அமைக்கவில்லையா என்று. ஒவ்வொன்றையும் அமைத்து அமைத்து அதனுடைய பின்விளைவுகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இதனுடைய பாதிப்புகளைப் பற்றி இங்கே வெடிவைக்கும் பொழுது முதுகைத் தட்டுவது போன்ற அதிர்வுகள் இருக்கும் என்று. வேலூர் பகுதியைப் போய் கேட்டுப்பாருங்கள், அங்கே சார்க்கோனைட் பாறைகள் போன்ற கிரானைட்டுகளைத் தோண்டும் பொழுது முதுகைத் தட்டுவது போலவா அதிர்வு நடந்தது என்று.

எந்த விதமான அறமும் இல்லாமல், நெறியும் இல்லாமல் கிளிப்பிள்ளையைப் போல ஒரு பொய்யை மக்களிடம் திணிப்பதற்கான வேலையை இவர்கள் செய்கிறார்கள். நான் இந்த நியூட்ரினோ திட்டத்தை ஆதரிக்கக்கூடிய மார்க்சீய பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்த தமிழ்நாடு அறிவொளி இயக்க நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன், “உங்களுக்கு அறம் இருக்குமானால், உங்களுக்கு நேர்மை இருக்குமானால், உங்களுடைய செயல்பாட்டில் உண்மை இருக்குமானால் இதற்கு முன்பால் நீங்கள் அறிவியலின் பெயரால் எதிர்த்த திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று பரப்புவதற்கான வேலைகளை நீங்கள் செய்திருக்கிறீர்களா?, உங்களது கட்சி செய்திருக்கிறதா?, கூடங்குளத்தில் அணுஉலை அமைக்கக்கூடாது என்பது உங்களுடைய கட்சியின் முடிவு. இதை எதிர்த்து நீங்கள் எங்காவது பிரச்சாரம் செய்திருக்கிறீர்களா?. மீத்தேன் திட்டம் என்பது பாதிப்புக்குள்ளாகும் என்பது உங்களது கட்சியினுடைய முடிவு, இதை எதிர்த்து எங்காவது பிரச்சாரம் செய்திருக்கிறீர்களா? இப்படியெல்லாம் மக்களை பாதிக்கக்கூடிய பிரச்சனைகளை பிரச்சாரம் செய்யாத நீங்கள், இந்த நியூட்ரினோ திட்டத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ஆதரித்து கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டு உங்களுடைய திட்டம் போல் இதை செய்வதற்கு ஒரு நோக்கம் இருக்கிறது.

அரசு பிரச்சாரம் செய்தால் கடுமையான எதிர்ப்பு வரும், அரசு பின்வாங்க வேண்டும். அந்த நெருக்கடியை ஒரு pressure groupஐபோல இவர்கள் எடுத்துச் சென்று அந்த எதிர்ப்புகளை இவர்கள் வாங்கிக் கொள்வது போல் செய்து பின்பு அரசைக் கொண்டு வருவது என்ற ஒரு மிகப்பெரிய அரசினுடைய கையாளாக என்று சொல்வதை விட, கைக்கூலியாக செயல்படக்கூடிய அமைப்பாக தமிழ்நாடு அறிவொளி இயக்கம் மாறியிருக்கிறது. நீங்கள் அறிவொளி இயக்கம் என்று பெயர் வைத்திருக்கிறீர்கள், அறிவொளி இயக்கம் முல்லைப்பெரியாறு பிரச்சனையிலே என்ன நிலைப்பாட்டை எடுத்தீர்கள். இருபது ஆண்டுகாலம் தமிழகத்தின் வாழ்வாதாரமான போராட்டமாக அங்கே நடந்த பொழுது நீங்கள் அந்த பிரச்சனையின் மீது என்ன வினையாற்றியிருக்கிறீர்கள். அறிவியலின் அடிப்படையில் முல்லைப்பெரியாறு பாதுகாப்பானது என்று எங்காவது பேசியதுண்டா?, எழுதியதுண்டா?, வேலைசெய்தது உண்டா?. பல லட்சக்கணக்கான மக்கள் அணி திரண்டு செல்லும் பொழுது தவிர்க்கப்படாத காரணங்களால் கடைசி நேரத்தில் அதைப் பேசினீர்களே ஒழிய, தொடக்கத்திலேயே அந்தப் பிரச்சனை பாதுகாப்பில்லை என்று கேரளா சொல்லும் பொழுது நீங்கள் அறிவியலாளர்களை முன்மொழிந்து பேசியிருக்கவேண்டும் அல்லவா, பேசினீர்களா. அப்படிப் பேசாத நீங்கள் இன்று நியூட்ரினோவை பேசுகிறீர்கள், இது வன்மையான கண்டனத்திற்கு உரியது, அறமற்றது, நேர்மையற்றது.

இந்திய ஆளும் வர்க்கம் முழுக்க முழுக்க சுரண்டல் நலனுக்காகக் கொண்டு வரக்கூடிய திட்டங்களை அமெரிக்காவினுடைய அடிமைகளாக மாறி இதை நடைமுறைப்படுத்துகிறீர்கள், வருங்காலம் இதை உங்களுக்கு உணர்த்தும், இதன் மூலம் தமிழக மக்கள் மத்தியிலிருந்தே, அவர்களுடைய மனங்களிலிருந்தும் ஒரு பொதுவுடைமையைக் காண்பது, மாவோ சொல்லுவார் கம்யூனிஸ்ட் என்பவர்கள் விதை போன்றவர்கள், மக்களிடம் சென்று, அவர்களின் மனங்களில் ஊன்றி வேர் போல் ஊடுருவிச் செல்லவேண்டும் என்று சொல்வார்கள். நீங்கள் மக்களிடமிருந்து வேரோடு பிடுங்கி எரியப்படக்கூடிய ஒரு போலி பொதுவுடைமையாளர்களாக மாறியிருக்கிறீர்கள். தமிழ்நாடு அறிவொளி இயக்கத்தைச் சேர்ந்த சிலர் இந்தத் திட்டத்தை அமல்படுத்தக்கூடிய இந்திய கணித அறிவியல் கலகத்தில் பணியாற்றுவதினாலே இதற்கு ஆதரவாகப் பேசிக்கொண்டு, மக்கள் மத்தியிலிருந்து தனிமைப்பட்டு சென்றுகொண்டிருக்கிறீர்கள். இதை நாங்கள் உங்களுக்கு எச்சரிக்கையாக சொல்கிறோம், உங்களுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளுங்கள், பரிசீலியுங்கள் இல்லை மாற்றிக்கொள்ளுங்கள். மக்களின் பின் நில்லுங்கள், அறத்தின் பின் நில்லுங்கள், நேர்மையின் பின் நில்லுங்கள், உண்மையான அறிவியலின் பின் நில்லுங்கள், மக்களுக்கான அறிவியலின் பின் நில்லுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். அப்படி இல்லாமல்போனால் நீங்கள் இந்த மண்ணிலிருந்து அகற்றப்படுவீர்கள்.

நியூட்ரினோ திட்டம் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கு எதிரான திட்டம், இயற்கையை அழிக்கின்ற திட்டம், சுற்றுச்சூழலை அழிக்கின்ற திட்டம், நமது வாழ்வாதாரத்தை அழிக்கின்ற திட்டம், தமிழகத்தை அழிக்கின்ற திட்டம், இதை விட மிகக் கொடுமை நாற்பத்து எட்டாயிரம் வருடம் வைத்து பாதுகாக்கவேண்டிய அணுஉலை கழிவுகளை வைப்பதற்கான ஒரு வருங்காலத் திட்டம் அது. இன்றுவரை இந்திய அரசு இந்தியாவிலே உருவாகக்கூடிய அணுஉலை கழிவுகளை எங்கே வைக்கப்போகிறோம் என்பதைப் பற்றி இதுவரை இந்திய அரசு பேசவில்லை. நாளை இந்தக் கழிவுகள் கட்டாயம் இந்த நியூட்ரினோவுக்காக தோண்டப்படக்கூடிய சுரங்கத்திலே பாதுகாப்பாக வைப்பதற்கு இதைத்தவிர வேறு இடம் இல்லை என்ற பெயரில் அங்கே வைக்கப்படும், இது கட்டாயம் நடக்கும். இப்படித்தான் தமிழகத்தினுடைய தலையிலே பல்வேறு திட்டங்கள் கட்டப்படுகிறது, தமிழகத்தினுடைய வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. வடக்கே கல்பாக்கம் அணுஉலை பூங்கா என்ற பெயரிலே பல்வேறு அணுஉலைத் திட்டங்கள் கொண்டுவரப்படுகிறது. தெற்கே கூடங்குளத்திலே கொண்டுவரப்படுகிறது, தமிழகத்தின் மேற்குப் பகுதியிலே இந்த நியூட்ரினோ திட்டம் கொண்டுவரப்பட்டு தமிழகம் முழுக்க அணுக்கழிவுகளின் கூடாரமாக, அணுக்கழிவுகளின் குப்பைத்தொட்டியாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

மீத்தேன் திட்டத்தைப் பொறுத்தவரை, மிகப்பெரிய டெல்டாப் பகுதி தஞ்சை டெல்டாப் பகுதி. அந்த தஞ்சை டெல்டா பகுதி பாலைவனமாகக்கூடிய திட்டம் இது. ஏதோ 2010 புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் மீத்தேன் திட்டம் என்று வந்துவிட்டது என்று நாங்கள் கருதவில்லை. காரணம் இதற்கு ஒரு நீண்ட நெடிய ஒரு சதி இருக்கிறது. இந்த நாட்டிலே பல்வேறு ராக்கெட்டுகளும், செயற்கைக்கோள்களும் வானுக்கு அனுப்பப்படுகிறது. அது என்ன செய்கிறது என்று யாராலும் பேசப்படுவதில்லை. அனுப்பப்படும் நாளில் மட்டும் ஒரு மிகப்பெரிய நாடு முழுக்க மகிழ்ச்சியும், தலைப்புச் செய்தியாகவும் இருக்கிறதே ஒழிய அது என்ன வேலையை செய்துகொண்டிருக்கிறது என்று சொல்லப்படுவதில்லை. நான் சொல்கிறேன், இந்த நாட்டில் என்னென்ன கனிமங்கள் எங்கே இருக்கிறது, எங்கெங்கே நீர்வளங்கள் இருக்கிறது, எங்கேயெல்லாம் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து கொடுப்பதுதான் இந்த செயற்கைக்கோளினுடைய வேலை. அப்படி பல பத்தாண்டுகளுக்கு முன்பு தஞ்சை டெல்டாப் பகுதியிலே, காவிரி டெல்டாப் பகுதியிலே பல லட்சம் கோடி ரூபாய்க்கு நிலக்கரி படுகை இருக்கிறது. அந்த நிலக்கரி படுகைக்கு மேலே மீத்தேன் இருக்கிறது என்பதை உலக முதலாளிகள் கண்டுணர்ந்து விட்டார்கள். அந்த உலக முதலாளிகளுடைய ஏவலாளியாக எடுபிடியாக மட்டுமே இந்திய அரசு செயல்படுகிறது என்பது என்னுடைய பார்வை. அது காங்கிரசு கட்சியாக இருக்கலாம் அல்லது பாரதிய ஜனதா கட்சியாக இருக்கலாம்.

எந்தக் கட்சியாக இருந்தாலும் அது இந்தக் கொள்கையை மட்டுமே நிலவக்கூடிய சமூக அமைப்பில் நடைமுறைப்படுத்த முடியும். அப்படி இந்த வளத்தைக் கண்டறிந்தவர்கள் இந்த வளத்தை அழிக்க வேண்டும் என்று சொன்னால், வளத்தை கைப்பற்றவேண்டும் என்று சொன்னால் என்னசெய்வதென்று யோசித்தார்கள். அதனுடைய தொடக்க கட்டம், எங்கே காவேரி ஆறு உற்பத்தியாகிறதோ அந்த குடகு பகுதியை மலையில்லா பகுதியாக மாற்ற, அங்கே இருந்த மலை வளத்திற்கு காரணமாக இருந்த காட்டுவளத்தை அழித்து, அங்கே முழுக்க தேயிலைத் தோட்டம் போடப்படும் என்கிறார்கள்.

அதற்குப் பின்பு குறிப்பாக 1996லே வேட்டி கட்டிய தமிழர்கள் இந்த நாட்டை தீர்மானிக்கிறார்கள் என்று சொல்லி தி.மு.க-வும் தமிழ் மாநில காங்கிரசும் மிகப்பெரிய செல்வாக்குடன் இருந்து செயல்பட்ட அன்றைய இந்திய அரசில் நிதி அமைச்சராக இருந்த பன்னாட்டு நிறுவனத்திற்காகவே தன்னுடைய வாழ்க்கையெல்லாம் செலவு செய்த மிகப்பெரிய கல்விமானாக அறியப்படக்கூடிய பொருளாதார மேதையாக அறியப்படக்கூடிய சீமான் சிதம்பரம் அவர்கள் ஒரு மிகப்பெரிய வேலையை செய்தார்கள். ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கு கர்நாடகத்தில் காவேரி பகுதியிலே விரிவாக்கம் செய்வதற்கான பல்வேறு ஊடுகால்வாய்களையும், ஏறிகளையும், குளங்களையும், தடுப்பணைகளையும் கட்டுவதற்கான நிதிகளை ஒதுக்கினார்கள். அவர்களுடைய ஆட்சியில்தான் ஒதுக்கப்பட்டது ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கு. 1990லே காவேரியினுடைய டெல்டா பாசனம் 25 லட்சம் ஏக்கர், கர்நாடகத்தின் காவிரிப்பாசனப் பகுதி 11 லட்சம் ஏக்கர். இன்று காவிரியின் பாசனப்பகுதி கர்நாடகத்திலே 20 லட்சத்தைத் தாண்டிவிட்டது. நம்முடைய 25 லட்சம் ஏக்கராக இருந்த காவிரி டெல்டா பாசனம் இன்று 16 லட்சமாக மாற்றப்பட்டிருக்கிறது.

மூன்று போகமாக இருந்த காவிரி டெல்டா பகுதி பாசனம் இன்று ஒரு போகமாக மாற்றப்பட்டது. இங்கே வந்த நீரெல்லாம் ஐந்தாயிரம் கோடி ரூபாய் திட்டத்திலே கர்நாடகத்தின் உட்பகுதிக்கெல்லாம் காவிரி நீர் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. இன்று தமிழகத்திற்கு காவிரியிலே வரக்கூடிய நீர் என்பது கர்நாடக அணைகளால் தேக்கி வைக்க முடியாத, கர்நாடகத்தில் இருக்கக்கூடிய குளம் குட்டைகள் எல்லாவற்றுக்கும் கொண்டு சென்று தேக்கி வைக்கப்பட முடியாத நீரைத்தான் கடந்த இருபது ஆண்டுகளாக தமிழகத்திற்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். வடிகாலாக அங்கே வெள்ளம் வரும் பொழுது இங்கே திறந்து விடக்கூடிய பகுதியாக மட்டுமேதான் தமிழகத்திற்கு காவிரி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதனுடைய விளைவு காவிரி விவசாயி உழவியல் ரீதியாகவே நாம் இனி இங்கே வாழ முடியாது. சோழ நாடு சோறுடைத்து என்பது மாறி இங்கே எலிக்கறி உண்ணக்கூடிய அவலம் காவிரி பகுதியிலே ஏற்பட்டு கட்டாய வறட்சி அங்கே ஏற்படுத்தப்பட்டு அந்த விவசாயி உழவியல் ரீதியாக விவசாயத்தை விட்டு வெளியேறவேண்டும் என்ற மனநிலைக்கு அவனை ஏற்படுத்தி 2010லே புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற ஒன்றை கிரேட் ஈஸ்டெர்ன் எனர்ஜி நிறுவனத்தின் மூலம் காவிரிப்படுகையிலே மீத்தேன் எடுக்கிறோம் என்று சொல்லி கொண்டுவந்திருக்கிறார்கள் 671 சதுர கிலோமீட்டர் தூரத்திற்கு. அதன் அடிப்படை மீத்தேன் மட்டுமல்ல, மீத்தேன் எடுப்பது அதற்குப் பின்பு கீழே உள்ள மீத்தேன் என்பது 6 லட்சம் கோடி ரூபாய்க்கு இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதற்குக் கீழே இருக்கக்கூடிய பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நிலக்கரியை எடுப்பது. இப்படி ஒரு மிகப்பெரிய சதி இந்த மீத்தேன் திட்டத்திலே இருக்கிறது.

நேற்று தேர்தலிலே நிற்கும் பொழுது புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட திராவிட முன்னேற்ற கழகம், 2014 நாடாளுமன்றத் தேர்தலில் புரியாமல் போட்டு விட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று மக்களிடம் வாக்கு வாங்குவதற்காக நடித்தார்கள். பாரதிய ஜனதா கட்சி நாங்கள் வந்தால் இந்த மீத்தேன் திட்டத்தை எதிர்ப்போம் என்று சொன்னார்கள், இன்று மீத்தேன் திட்டத்தை அனுமதிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள். அன்று மீத்தேன் திட்டத்தை கொண்டு வருவதற்காக காங்கிரசு கட்சி இன்று மீத்தேன் திட்டத்தை எதிர்ப்பதாக நடிக்கிறார்கள். இப்படி இந்த நாட்டில் ஆண்ட கட்சிகளும், ஆளும் கட்சிகளும் அழகாக நடித்து மக்களிடம் ஏமாற்றுகின்ற, மக்களைத் தொடர்ந்து போராட்ட களத்திலிருந்து அப்புறப்படுத்துவதற்காக சலிப்பூட்டுகின்ற வேலையை எவ்வளவு காலம் நாம் போராடுவது என்ற மனநிலையை மக்களாக ஏற்படுத்துவதற்கான வேலையை தொடர்ந்து செய்கிறார்கள். இதை எதிர்த்து ஒரு வலிமையான தேசிய இயக்கத்தை, ஒரு வலிமையான அதாவது இங்கே நடக்கக்கூடிய அது நியூட்ரினோவாக இருக்கலாம், அது மீத்தேனாக இருக்கலாம், அது நீர் வளத்தைக் கொள்ளையடிக்கக்கூடிய கோகோ கோலா போன்ற நிறுவனங்களாக இருக்கலாம், பெப்சி போன்ற நிறுவனங்களாக இருக்கலாம் அல்லது நம்முடைய பல்வேறு வளங்களைக் கொள்ளையடிக்கக்கூடிய பல்வேறு திட்டங்கள் இருக்கலாம். நீங்கள் ஏற்கனவே கேட்டதைப்போல புவி வெப்பமயமாதலுக்குக் காரணமாக இருக்கக்கூடிய பல்வேறு மலைவள அழிப்புகளும், பல்வேறு தொழிற்சாலைகளுமாக இருக்கலாம். இதற்கு எல்லாவற்றிற்கும் ஒரு மையக்கண்ணி இருக்கிறது அதை பின்பு பார்ப்போம்.

கேள்வி: தற்காலச் சூழலில் காட்டுயிர்களைப் பாதுகாப்பதன் அவசியம் என்ன?

பதில்: இது ஒரு தனித்துவமான பிரச்சனை அல்ல. இயற்கையை அழித்ததினுடைய ஒரு பகுதியாகத்தான் இன்று காட்டுயிர்ச் சூழலும் பாதுகாக்க முடியாத நிலை இருந்து வருகிறது. குறிப்பாக நாம் பார்த்தோம் என்றால் இன்று நம்முடைய நாடாகச் சொல்லப்படக்கூடிய இந்தியாவின் தேசியப்பறவையாக மயில் சொல்லப்படுகிறது. மயில் தமிழ்தேசியக் கடவுள் என்று சொல்லக்கூடிய முருகனுடைய வாகனமாகவும் சொல்லப்படுகிறது. மயிலை நாம் சிறிய வயதில் இருக்கும் பொழுது மயில் தோகைகளை எடுத்து அது குட்டிபோடும் என்று கருதி புத்தகங்களுக்குள் வைத்துக் கொண்டு சென்ற அனுபவம் எனக்கு இருந்திருக்கிறது, உங்களுக்கு இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை. பலருக்கும் அது இருந்திருக்கும். மயில் எல்லோராலும் மிகவும் பார்த்து பரவசமடையக்கூடிய பறவை. ஆனால் இன்று அந்த மயில் என்பது விவசாயிகளுக்கு மிகப்பெரிய எதிரியாக பார்க்கப்படுகிறது. காரணம் மயிலினுடைய பெருக்கம் இன்று அளவு கடந்து போய்விட்டது.

ஏன் இந்த மயில் பெருகிவிட்டது என்று யாரும் அதைப் பற்றிப் பேசவில்லை. இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய நெருக்கடி. விவசாயி போடக்கூடிய அனைத்து பயிர்களையும் இந்த மயில் சென்று அழித்து விடுகிறது. எப்படி திடீரென்று இவ்வளவு மயில்கள் பெருகிவிட்டது என்று பார்த்தால், இதில்தான் காட்டுயிர்ச் சூழலுக்கான சூட்சுமம் இருக்கின்றது. இங்கே இயற்கை உயிர்ச்சூழல் பண்பை வைத்திருக்கிறது, ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்ற ஒரு சார்பு தத்துவத்தை வைத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இங்கே காட்டுப் பகுதிகளில் பார்த்தோம் என்றால் குட்டை மரக்காடுகளில் குறிப்பாக காட்டுப்பூனை, கீரி, வங்காநரி போன்ற பல்வேறு உயிரினங்கள் இருக்கும். இந்த உயிரினங்களின் மிக முக்கியமான உணவு மயில் முட்டை. இந்த மயில் முட்டையை இவ்வுயிரினங்கள் தேடிச்சென்று சாப்பிடும். அப்பொழுது இயல்பாக இப்படி ஒரு சூழல் இருக்கும் பொழுது இங்கே மயிலால் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால் இன்று குட்டைப்புதர் காடுகள் அழிக்கப்பட்டுவிட்டது. வங்காநரி என்பது இல்லாமலே போய்விட்டது, காட்டுப்பூனை எனக் கிடைத்ததை எல்லாம் அடித்து சாப்பிட்டுவிட்டோம், கீரி என்பதும் இல்லாமல் குறைந்துகொண்டிருக்கிறது.

இப்படி ஒரு உயிர்ச்சூழல் பண்பு இல்லாததின் விளைவு மயில் முட்டை அதிகமாகி மயிலினுடைய எண்ணிக்கை அதிகமாகி இன்று மயில் மிகப்பெரிய தொந்தரவு தரக்கூடிய பறவையாக நம்மால் பார்க்கப்படுகிறது. இப்படி காட்டுயிர்கள் எல்லாமே இங்கே இயற்கையைப் பாதுகாக்கக்கூடிய கண்ணோட்டத்தை சமூகத்தில் இல்லாமல் போனதின் விளைவு, இங்கே நம் கல்விகளிலும் முறைகளிலும் அனைத்துச் செயல்பாடுகளிலும் அந்தப் பார்வை இல்லாததின் விளைவு சுரண்டலமைப்பு நிலவுகின்ற காரணத்தினால் இன்று காட்டுயிரின் அழிவு என்பது மிக அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்த காட்டுயிர் அழிவு என்பது ஒரு மிகப்பெரிய நெருக்கடி.

இன்று பார்த்தால் கழுகுகளையே இன்று பார்க்கமுடியவில்லை. கழுகுகள் உயிர்ச்சூழலில் மிக முக்கியமான ஒன்று. ஆனால் அந்த கழுகுகள், சாப்பிடக்கூடிய உணவு இறந்த மாடுகள்.மனிதன் ரசாயன உரங்களைப் பயன்படுத்தி பயிர்களை பயிர் செய்கிறான். அதை சாப்பிடுகின்ற மாடுகளுடைய குடலில் இருப்பதை மாடு இறந்தவுடன் கழுகுகள் சாப்பிட்டால் அந்தக் கழுகுகள் இறந்துவிடுகிறது. இப்படி இனப்பெருக்கமே இல்லாமல் அற்றுப்போய்க் கொண்டிருக்கிறது. நாம் ஏதோ பூச்சி மருந்து அடித்தோம், ஏதோ ரசாயன உரம் போட்டோம் என்பது அல்ல. ஒரு தவறை ஒரு இடத்தில் செய்தால் அது எங்கேயோ இருக்கக்கூடிய நுண்ணுயிரை, பறவைகளை, விலங்குகளை, மனிதனை பாதிக்கிறது. இன்று எங்கே திரும்பினாலும் மலட்டுத் தன்மை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது, சர்க்கரை நோய் என்பது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இது எல்லாம் நம்முடைய தாத்தா காலத்திலே கேள்விப்பட முடியாத நோய்கள். ஏன் இத்தனை நோய்கள் நம்முடைய மனிதனுக்கு இங்கே வந்துகொண்டிருக்கிறது என்று சொன்னால் இன்று இங்கே இயற்கையின் மீது பல்வேறு வகையில் செயல்படக்கூடிய தாக்குதல்கள்தான் இதற்குக் காரணமாக இருக்கிறது. எனவே காட்டுயிர்களும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்ற நிலையில்தான் நாம் சொல்ல வேண்டும்.

கேள்வி: பசுமைப் புரட்சித் திட்டம் தமிழகத்திற்கு வரமா? சாபமா?

பதில்: இதைக் கொண்டு வந்தவர்களே சாபம் என்று சொல்லிவிட்டார்கள், நான் சொல்லவேண்டியதில்லை. பசுமைப்புரட்சித் திட்டத்தை பெரிய வளர்ச்சி என்று கொண்டுவந்தவர் ஆளும் வர்க்கத்தினுடைய மிகப்பெரிய அறிவியலாளர் என்று போற்றப்படக்கூடிய எம்.எஸ்.சாமிநாதனும், நாங்கள் பிறந்த பகுதியைச் சேர்ந்த அன்றைய நிதியமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியம் அவர்களும்தான். ஆனால் இன்று அந்த பசுமைப்புரட்சி ஏற்படுத்திய விளைவுகளை உணர்ந்ததால் பசுமைப்புரட்சி கொண்டுவந்த அந்த விஞ்ஞானி என்று போற்றப்பட்ட எம்.எஸ்.சாமிநாதனே பசுமைப்புரட்சி தவறு, இங்கே இயற்கை வழி வேளாண்மைதான் சரி என்று இன்று பேசக்கூடிய நிலை வந்துவிட்டது. இந்த நாட்டில் யாரெல்லாம் வசதி இருப்பவர்களாக இருக்கிறார்களோ இன்று அவர்கள் எல்லாம் பசுமைப் புரட்சியால் உருவாக்கப்பட்ட தானியங்களை உணவுப்பயிர்களை மறுத்து, இயற்கை வழியில் உருவாக்கப்பட்ட பயிர்களை சாப்பிடுகிறார்கள் வசதி உள்ளவர்கள் அறிவுள்ளவர்கள். எனவே பசுமைப்புரட்சி வரமா சாபமா என்று பேசுவதல்ல. பசுமைப் புரட்சி என்பது இந்த நாட்டை அழித்த மிகப்பெரிய அழிவு, சாபம்.

கேள்வி: சுற்றுச்சூழல் போராட்டத்தை பல்விதமான மக்கள் இயக்கம் மட்டுமே நடக்கிறதே தவிர எந்தக் கட்சியும் இதற்காக போராடவில்லையே ஏன்?

பதில்: சுற்றுச்சூழல் போராட்டம் என்பது மிக முக்கியமான அம்சம் இருக்கிறது. நாட்டில் இருக்கக்கூடிய பெரும்பாலான அரசியல் கட்சிகளுக்கு நம் நாட்டில் நிலவக்கூடிய தொழில் வளர்ச்சியின் மீது, இந்த நாட்டில் இருந்து வரக்கூடிய தொழில்நுட்பங்கள் மீது கண்ணோட்டங்களே இல்லாத கட்சிகளாகத்தான் இருக்கிறது. உதாரணத்திற்கு ஒரு விசயத்தைப் பார்த்தோம் என்றால் புதிய பொருளாதாரக் கொள்கைக்குப் பின்னால் வந்த நிலைமையில் சாயப்பட்டறை கழிவுகளினால் காவிரி ஆற்றின் துணை ஆறாக இருந்த நொய்யலாறு செத்துப்போன அபாயம் ஏற்பட்டது. உலக நதிகளில் எல்லாப் பகுதிகளிலும் நாம் பார்ப்போம், எங்கள் ஊருக்கு அணையிலிருந்து தண்ணீரை திறந்து விடுங்கள் என்று போராடியதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் நொய்யலாற்றுக்குக் குறுக்கே கட்டப்பட்ட ஒரத்துப் பாளையத்தில் ஒரு டி.எம்.சி. தண்ணீர் 1996 முதல் தண்ணீரை திறந்துவிடக்கூடாது என்று விவசாயிகள் போராடிய அவலம் நடந்தது. காரணம் நொய்யலாற்றில் அந்தத் தண்ணீர் சென்றாலே நீர் செல்லக்கூடிய பாதையிலே இருக்கக்கூடிய ஆற்றின் கரையில் இருக்கக்கூடிய 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு அனைத்து நீராதாரங்களும் நச்சாக மாறியது. எனவே மக்கள் அந்த அணையிலிருந்து தண்ணீரை திறந்துவிடக்கூடாது என்று போராட்டம் செய்தனர். நொய்யல் ஒரத்துப்பாளையம் அணையிலிருந்து நொய்யல் ஆறு கலக்கக்கூடிய கரூர் மாவட்டம், நொய்யல் பகுதிவரை கிட்டத்தட்ட புகலூருக்கு அருகாமையில் வரை அந்தப் பகுதி விவசாயிகள் போராடினார்கள்.

பத்தாண்டுகளுக்கு மேல் அந்த அணை திறக்கப்படாத நிலையிலேயே இருந்தது. உச்சநீதிமன்றம் நேரடியாக தலையிட்டு காவிரியில் வெள்ளம் வரும் பொழுது அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக திறந்துவிடுங்கள் என்று சொல்லி அதற்குப் பின்புதான் 2010 வாக்கில் தான் அங்கே இருந்த நீர் வெளியேற்றப்பட்டது. இப்படி ஒரு பேரவலம் நடந்தபோதும் கூட இங்கே இருக்கக்கூடிய கட்சிகள் இந்தப் பிரச்சனை மீதான அனுகுமுறைப் பற்றி என்ன பேசியது என்றால், இந்த திருப்பூரில் வரக்கூடிய ஈரோட்டில் வரக்கூடிய சாயப்பட்டறை தோல் தொழிற்சாலைக் கழிவுகளை ஒரு குழாய் போட்டு கடலில் கொண்டு போய் விடலாம் என்றுதான் எல்லா கட்சிகளும் பேசினார்கள். ஒரு ஆற்றை அழித்த தண்ணீரை கடலில் கொண்டுபோய் கொட்டினால் அந்த கடலில் இருக்கக்கூடிய ஜீவராசிகள் அழியாதா?, அந்தப் பகுதி நாசமாகாதா? அந்தப் பகுதி என்னவாகும் என்பது பற்றியான எந்த விதமான கருத்துக்களும் எவருக்கும் கிடையாது. எல்லா கட்சிகளும் ஆமாம் ஆமாம் அதுதான் சரி கடலுக்கு கழிவுநீரைக் கொண்டு போய் சேர்ப்போம் என இதுதான் எல்லா கட்சிகளின் கொள்கையாக இருந்தது.

காரணம் இந்த நாட்டில் ஏற்கனவே ஆண்ட ஆளும் கட்சிகள் என்று சொல்லக்கூடிய அனைத்துக் கட்சிகளும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு கூட இங்கே நடந்துவரக்கூடிய தொழில்கள் மீது, அந்த தொழில் நுட்பங்களின் மீது எந்த விதமான கண்ணோட்டங்களும் பார்வைகளும் கிடையாது. தமிழகத்திற்கு வந்துள்ள தொழில் வளர்ச்சி எப்படிப்பட்டது. புதிய பொருளாதார கொள்கை என்ற பெயரிலே தமிழ்நாட்டிற்கு வந்துள்ள தொழில்வளர்ச்சி என்பதெல்லாம் வெளிநாடுகளில் அவருடைய பகுதி அழியக்கூடாது, அவர்களுடைய நீர் வளம் அழியக்கூடாது, அவர்களுடைய கடல் வளம் அழியக்கூடாது, அவர்களுடைய மண் வளம் அழியக்கூடாது, அவர்களுடைய காற்றுப் பகுதி மாசுப்படக்கூடாது என்று சொல்லி அங்கே இருந்து மாசுபடுத்தக்கூடிய நச்சாக்கக்கூடிய தொழில் நுட்பங்கள்தான் இங்கே வந்தது. தொழில் நுட்பங்கள் மட்டுமல்ல, அங்கே விற்காத, அங்கே செயலிழந்த காயலாங்கடைச் சரக்கான தொழில்நுட்ப கருவிகளும் வந்தது.

இன்று அணுஉலையிலே இங்கே ரசியாவோடும், அமெரிக்காவோடும் இந்தியா ஒப்பந்தம் போடுகிறது என்று சொன்னால் செர்னோபில் விபத்திற்குப் பின்பு ரசியாவில் அணுஉலையே கிடையாது, அமைக்கவில்லை. அங்கே உருவாக்கி வைத்திருந்த அந்தக் கருவிகளை விற்பதற்கு அவர்களுக்கு சந்தை வேண்டும், அதற்கு இங்கே நம் தலையில் கட்டுகிறான். 1979 மூன்று மைல் தீவு விபத்திற்குப் பின்பு அமெரிக்காவிலே அணுஉலைகள் அமைக்கப்படவில்லை புதிதாக. அங்கே அணுஉலை கட்டப்படக்கூடிய தொழிற்சாலைகளின் கழிவுகள் விற்கவேண்டும். அதற்கு இந்தியா போன்ற நாடுகள் சந்தையாக்கப்படுகின்றது. இங்கே வரக்கூடிய தொழிற்கருவிகள் உலகநாடுகளில் நடைமுறைப்படுத்த முடியாத காயலாங்கடைச் சரக்கான தொழிற் கருவிகள், அதேபோல் இங்கே மாசுபடுத்தக்கூடிய தொழிற்நுட்பங்கள், இதுமட்டுமல்ல இன்னும் கூட சொல்லப்போனால் வெளிநாட்டுக்கழிவுகள், அங்கே சுத்திகரிக்கமுடியாத கழிவுகள், இங்கே கொண்டுவந்து கொட்டப்படுகிறது.

உதாரணத்திற்கு சொல்லப்போனால் தமிழ்நாட்டிலுள்ள பல பகுதிகளில் புதிது புதிதாக காகிதத் தொழிற்சாலைகளும் அட்டைத் தொழிற்சாலைகளும் என்று தொடங்கப்படுகிறது. ஏற்கனவே மரக்கூழிலிருந்து காகிதம் தயாரிக்கக்கூடிய சேசசாயி காகித ஆலை, TNPL போன்ற காகித ஆலை நமக்குத் தெரியும். ஆனால் வெளிநாட்டிலிருந்து கழிவுகளைக் கொண்டுவந்து காகிதக்கூழ் தயாரிப்பதுபோன்ற பல தொழிற்சாலைகள் தமிழகத்தினுடைய மேற்கு மாவட்டங்களிலும் தெற்கு மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகிறது. இந்தத் தொழிற்சாலையின் மூலப்பொருட்கள் என்னவென்று பார்த்தால் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரக்கூடிய கழிவுகள். இந்தக் கழிவுகளை வெளிநாடுகளில் சுத்திகரிக்கவேண்டும் என்று சொன்னால் ஒரு டன் பன்னிரண்டாயிரம் ரூபாய் செலவு செய்யவேண்டும். ஆனால் இங்கே ஏற்றுமதி செய்து அனுப்புவதற்கு ஒரு டன்னுக்கு மூவாயிரம் ரூபாய்தான் செலவாகுகிறது. அந்தக் கழிவுப் பொருட்களை இவர்கள் அப்படியே வாங்கிக்கொண்டுபோய் அதனுடைய இருபது விழுக்காடு இவர்களுக்கு மூலப்பொருட்களாக தேவைப்படும். இருபது விழுக்காடுகள் இவர்களுடைய தொழிற்சாலைக்கு காகித அட்டைக்கூழ் தயாரிக்க, 2 plus phone தயாரிக்க பயன்படுத்திவிட்டு மீதி எண்பது விழுக்காடு கழிவுகளை இங்கே உள்ள நம்முடைய சாலை ஓரங்களில், ஏற்கனவே கல்குவாரிகளாக தோண்டப்பட்டு பயன்படுத்தப்படாத பாறைக்குழிகளில் பல்வேறு பயன்படுத்தப்படாத கிணறுகளில், பல்வேறு நிலங்களில் கொண்டப்படுகிறது. இப்படி கழிவுகள் நமக்குத் தெரியாமலேயே நாடு முழுக்க பரப்பப்பட்டு வருகிறது.

கழிவுகளைப் பற்றி நேரடியாக உணர்ந்தவன் நான். காரணம், எங்களது ஊர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை. எங்களுடைய பாரம்பரிய நிலத்திற்கு வடக்குப் பகுதியில்தான் பெருந்துறை சிப்காட் இருக்கிறது. 2700 ஏக்கர் நிலமெடுத்து முழுக்க நாசகாரத் தொழில் அமைக்கப்பட்ட பகுதி அதுதான். என்னுடைய மனைவியின் ஊர் சென்னிமலை அருகே இருக்கக்கூடிய ஒரத்துப் பாளையம். அந்த ஊரில்தான் ஒரத்துப்பாளையம் என்ற அணையைக் கட்டியிருக்கிறார்கள். ஆனால் இந்த கழிவுகள் எல்லாம் எப்படியெல்லாம் கொண்டு வருகிறார்கள், எப்படியெல்லாம் இவர்கள் காகிதத்தை சுத்திகரிக்கப்போகிறோம் என்று சொல்லுகிறார்கள், நடைமுறைகளை எப்படி செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற அனைத்தையும் நாங்கள் நேரிலே உணர்ந்தது மட்டும் அல்ல, பல ஆண்டுகளாகவே அதை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறோம். கட்சிகளைப் பொறுத்தவரை மற்ற அரசியல் சார்ந்த பிரச்சனைகளுக்குப் போராடுவதைப்போல சுற்றுச்சூழல் பிரச்சனைக்குப் போராட முடியாது.

காரணம் ஒரு சிறு உதாரணமாக எடுத்துக்கொண்டு சொன்னால் இன்று தமிழீழத்தில் ஒரு பிரச்சனைக்காக இங்கே ஒரு அரசியல் இயக்கம் நடத்தப்படுகிறது என்று சொன்னால் அந்த பிரச்சனையை ஒட்டி ஒரு அரசியல் கட்சி என்ன செய்யும் என்று சொன்னால் ஒரு நாடு தழுவிய ஒரு ஆர்ப்பாட்டத்தை வைக்கலாம், பேரணியை நடத்தலாம், பொதுக்கூட்டத்தை நடத்தலாம், ஒரு நாளில் பல லட்சம் நபர்களை ஒரு இடத்தில் திரட்டி ஒரு மாநாட்டைக்கூட நடத்தி ஒரு மிகப்பெரிய பதிவை பண்ணிவிடலாம். அதை காலம் பூராவும் சொல்லிக்கொண்டிருக்கலாம். ஆனால் சுற்றுச்சூழல் பிரச்சனை அப்படி அல்ல. சுற்றுச்சூழல் பிரச்சனையிலே தலையிட வேண்டும் என்று சொன்னால் முதலில் அந்தப் கட்சிக்கு சுற்றுச்சூழல் பிரச்சனையைப் பற்றி தெளிவான நிலைப்பாடு வேண்டும். எப்படிப்பட்ட சமுதாயத்தை அமைக்கப் போகிறோம் என்ற பார்வை வேண்டும்.

அதுமட்டுமல்ல தொடர்ந்து அந்தப் பிரச்சனையிலே அதாவது சுற்றுச்சூழலால் ஒரு ஆலை பாதிப்படைகிறது என்று சொன்னால் அந்த ஆலையை மூடுகின்ற வரை தொடர்ந்து மக்களோடு இணைந்து போராட வேண்டும். மக்களை தொய்வில்லாமல், தளர்வில்லாமல் அவர்களோடு அரவணைத்து எடுத்துச் செல்லவேண்டும். இங்கே உள்ள தேர்தல் சார்ந்த அரசியல் இயக்கங்களுக்கு இது போன்ற நடைமுறைகள் சாத்தியமே அல்ல. ஆதலால்தான் இவர்கள் எல்லாம் மக்கள் ஒரு போராட்டத்தை நடத்தும் பொழுது கூடவந்து ஒட்டிக்கொண்டு நாங்களும் கூட இருக்கிறோம் என்று காட்டிக்கொள்கின்ற வேலையைச் செய்கிறார்களே ஒழிய, இவர்கள் கட்சி அணிகளை இதற்காக முழுக்கப் போராடுவது, செயல்படுத்துவது என்ற வேலையை யாரும் செய்வதில்லை.

கூடங்குளம் அணுஉலை போராட்டத்தில் மூன்றரை ஆண்டுகாலம் நான் ஈடுபட்டிருந்தவன் என்ற முறையிலே தமிழ்நாட்டிலே இருக்கக்கூடிய ஆறு அரசியல் கட்சிகளைத் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் அங்கே வந்தார்கள். வந்தவர்களை நாங்கள் மதிக்கின்றோம். ஆனால் மனசாட்சியைத் தொட்டுப் பேசவேண்டும் அந்தக் கட்சிகள். அங்கே வந்து போராடிய மக்களோடு கூட நின்று தங்களுடைய ஆதரவைத் தெரிவித்தார்களே ஒழிய வெளியே அவர்களுடைய கட்சியினுடைய நிகழ்ச்சி நிரலாக இதை மாற்றி எடுத்துச் சென்ற தேர்தல் கட்சிகள் எத்தனை. இடிந்தகரையில் பேசியவர்கள் அருகே நடந்த காவல் கிணறுகளைப் பேசவில்லை, ராதாபுரத்திலே பேசவில்லை, திசையன்விளையிலே பேசவில்லை, அஞ்சுகிராமத்திலே பேசவில்லை, நான் திருநெல்வேலி கன்னியாகுமரியைக்கூட சொல்லவில்லை. இவர்களுடைய கட்சியில் இருக்கக்கூடிய கடைசி மட்டத் தொண்டன் வரையிலும் இதைப்பற்றிய அறிவைக் கொடுக்கின்ற வகையில் ஒரு சுவரொட்டியைக் கொடுத்து நீ ஊரில் சென்று ஒட்டு, துண்டறிக்கையை அச்சிட்டு உன் கிளையிலே இருக்கக்கூடிய ஊர் மக்களுக்கு இந்தப் பிரச்சனையை எடுத்துச் செல் என்ற பார்வையும் அரசியலும் அவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. காரணம் அது ஒரு மிகப்பெரிய பணி. அதற்குத் தன்னை அமைப்பைத் தயார்படுத்தக்கூடிய நிலையில் கட்சித் தலைவர்கள் போராடினார்களே ஒழிய, கட்சி முழுக்க போராடியதா கட்சியினுடைய கடைசி மட்டத் தொண்டன் வரை இதில் இணைக்கப்பட்டிருக்கின்றானா என்று கேட்டால் தேர்தல் சார்ந்த அரசியல் கட்சிகள் இந்த வேலையை செய்ய வில்லை.

சிறிய சிறிய அரசியல் இயக்கங்கள் தன்னுடைய அனைத்து சக்தியையும் பயன்படுத்தியது. மக்கள் இயக்கங்கள், அரசியல் இயக்கங்கள் இதற்குச் செய்தார்கள். நாம் அவர்களை மதிக்கிறோம், நாம் பெரிய அரசியல் இயக்கங்களைக்கூட ஆதங்கமாகத்தான் குறிப்பிடுகிறேன். அவர்கள் வந்தார்கள், இணைந்தார்கள், பேசினார்கள் ஒழிய கீழ்மட்டம் வரை இந்த வேலையை எடுத்துச் சென்று நாட்டினுடைய மிகப்பெரிய இயக்கமாக மாற்றியிருக்கவேண்டும் அல்லவா. கூடங்குளம் போராட்டம் என்பது கூடங்குளம் அணுஉலை போராட்டத்தில் இருந்த எனக்கு உதயகுமாருக்கு, புஷ்பராயனுக்கு மட்டுமான பிரச்சனை அல்ல, நாங்கள் இதற்காக அவதாரம் எடுத்து வந்தோம் என்று யாரும் அறிவித்து கொண்டு வந்தவர்கள் அல்ல. ஒரு சூழலில் நாங்கள் அங்கே போய் இணைந்து அந்தப் போராட்டத்தை மேற்கொண்டோம் மக்களுக்காகவே செயல்படுகிறோம் என்று. கட்சிக்குக் கொள்கையும் அதற்கான அமைப்பையும் மேலே இருந்து கீழே வரை அமைப்பு பலத்தை வைத்திருக்கக்கூடிய அரசியல் கட்சிகள், தேர்தல் அரசியல் இயக்கங்கள், இதற்கான வேலை திட்டத்தை வைத்து என்ன வேலையைச் செய்தார்கள். எனவே இது ஒரு மிகப்பெரிய வேலை.

நான் கூடங்குளம் அணுஉலை போராட்டத்திற்கு மட்டுமல்ல, அதற்கு முன்பு நாமக்கல் மாவட்டத்திலே, குறிப்பாக ஒரு காகித ஆலையை எதிர்த்து மூன்றரை ஆண்டு காலம் போராடினோம். கூடங்குளம் போராட்டத்திற்காவது மிகப்பெரிய வெளியிலே பெரிய அறியப்பட்ட செய்தியாக மாறப்பட்டதால் பல அரசியல் கட்சிகள் வந்து ஆதரவு கொடுத்தது, இந்தப் போராட்டத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளையும் தாங்கிப்பிடித்து மூன்றரை ஆண்டுகாலம் போராட்டம் நடத்தியும் கூட ஒரு கட்சி கூட அங்கு வந்து எட்டிக்கூட பார்த்ததில்லை. இப்படிப்பட்ட நிலைதான் இருக்கிறது. அரசியல் கட்சிகளுக்கு முதலில் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றியான தெளிவான பார்வை கிடையாது. இங்கே சூழல் பிரச்சனை பொறுத்தவரை வெறும் சுற்றுச்சூழல் பிரச்சனை, வெறும் அந்த ஆலையால் பாதிப்பான விசயத்தை மட்டும் விட்டுவிட முடியாது. இது ஒரு பெரிய அரசியல் உள்ளடக்கத்தோடு இணைந்து இருக்கிறது.

இங்கு நிலவக்கூடிய இந்தப் பிரச்சனைகளுக்குக் காரணங்களை கண்டுணர்ந்து அந்தக் காரணங்களுக்குக் காரணமான செயல்பாடுகளை அதற்குத் தடையாக நிற்கக்கூடியவர்களை அகற்ற வேண்டுமென்ற தொலைநோக்கு இருப்பவர்களால்தான் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கான போராட்டங்களை முழுமையாக எடுத்துச் செல்ல முடியும். எனவேதான் இதுபோன்ற பிரச்சனைகளில் கட்சிகள் தன்னுடைய செயல்பாட்டு பட்டியலில் இணைத்துக் கொள்வதில்லை. இன்னொன்று இங்கு இருக்கக்கூடிய பெரும்பாலான அறியப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மிகப்பெரிய பணபலமாக, பக்கபலமாக, மிகப்பெரிய பொருளாதார வாய்ப்பாக இருக்கக்கூடியவர்களே இது போன்ற மாசுபடுத்தக்கூடிய இந்த ஆலைகள்தான். சிறிய கட்சிகளுக்கெல்லாம் பெரிதாக பங்கு தரமாட்டார்கள். ஆண்ட ஆளும் கட்சிகளுக்கு, சமூகத்திலே உயர்ந்து வரக்கூடிய கட்சிகளுக்கு அவர்களுடைய அமைப்பு இயங்குவதற்கான அனைத்து பணத்தையும் கொடுத்து செயல்படுத்த வைப்பவர்கள் இத்தகைய ஆலைகள்தான். இவர்களை எதிர்த்து அவர்கள் போராட்டம் செய்வார்கள் என்று பார்ப்பது கானல் நீர்தான்.

கேள்வி: தாங்கள் மேற்கொண்ட சமூகப் போராட்டங்கள் என்ன?

பதில்: இது நான் கூடங்குளம் போராட்டத்திற்கு செல்வதற்கு முன்னால் நடந்தது. 2011 செப்டம்பர் 11ந்தேதி கூடங்குளம் அணுஉலைப் போராட்டத்திற்குச் சென்றேன். இன்றைக்கும் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்குழுவில் ஒருவராக இருந்து செயல்பட்டு வருகிறேன். அதற்கு முன்னால் என்னுடைய செயல்பரப்பு என்பது ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில்தான். ஈரோடு, நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களில் 2005-களில் இருந்து தொடர்ந்து வினையாற்றி வருகிறேன். தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராக அறியப்பட்டாலும் கூட, என்னுடைய செயல்பாடு என்பது நேரடியாக சுற்றுச்சூழலுக்கு வந்தது அல்ல. நான் ஏற்கனவே தொடக்கத்திலேயே சொன்னேன், தமிழீழ விடுதலை, தமிழ்தேசிய விடுதலை என்ற அரசியல் களத்தின் மூலம்தான் நான் சமூக செயல்பாட்டுக்கு வந்தேன்.

1983-லே தமிழீழப் படுகொலை நடந்த பொழுது, தியாகப் பயணத்தில் பங்கெடுத்தப் பின்பு, நெடுமாறன் அய்யா அவர்களுடைய அன்றைய தமிழ்நாடு, காமராசு காங்கிரசு அமைப்பில் இணைந்து செயல்பட்டேன். அதனுடைய மாணவர் அமைப்பினுடைய பொறுப்பாளராக இருந்தேன். தமிழ்நாடு காமராசு காங்கிரசு என்பது தமிழர் தேசிய இயக்கமாக மாற்றப்பட்ட பொழுதும் அதனுடைய மாணவர் அமைப்பிலே பொறுப்பாளராக செயல்பட்டேன். அப்போதைய காலகட்டங்களில் எனக்கு மார்க்சீயத்தின் மீதான பரிச்சயம் ஏற்பட்டு, புரிதல்கள் ஏற்பட்டு அதைப்பற்றி பலரோடும் விவாதிக்கத் தொடங்கினேன். அதனுடைய வழி இங்கே ஒரு சுரண்டலற்ற, ஒருவரை ஒருவர் ஆதிக்கம் செய்யாத, சுரண்டல் இல்லாத ஒரு சமத்துவமான சமூகம் அமையவேண்டும், இந்த நாட்டிலே வியர்வை சிந்தி உழைக்கக்கூடிய உழவர் தொழிலாளருடைய அதிகாரம் அமைய வேண்டும் என்பதே. அப்படிப்பட்ட அதிகாரம் என்பது குறிப்பாக இந்தியச் சூழலிலே இந்தியா என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட நாடு. இந்த கட்டமைக்கப்பட்ட இந்திய நாடு என்பது எந்த விதமான மொழி தேசிய இனத்திற்கும், எந்த விதமான சுதந்திரமான அணுகுமுறைகளும் தராமல் முழுக்க முழுக்க ஒரு அடிமைப்படுத்தி வைக்கக்கூடிய கட்டமைப்புதான் இந்திய கட்டமைப்பு என்பதை உணர்ந்து இங்கே ஒவ்வொரு மொழி வழி தேசிய இனமும் தன்னுடைய தேசிய விடுதலை புரட்சியை நிகழ்த்துவதன் ஊடாகத்தான் சமூகம் அடுத்த படிநிலைக்கு செல்லப்படமுடியும்.

இங்கே ஒரு புதிய சனநாயகப் புரட்சி என்று சொல்லப்படக்கூடிய அதாவது ஏற்கனவே முதலாளித்துவ தலைமையில் நடந்தது பழைய சனநாயகப் புரட்சி, தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் நடத்துகின்ற முதலாளி உற்பத்தியைக் கொண்டுவரக்கூடியது புதிய சனநாயக புரட்சி என்று சொல்வார்கள். இங்கே புதிய சனநாயகப் புரட்சி என்பது இந்திய சமூக அமைப்பிலே தேசிய விடுதலைப் புரட்சியின் ஊடாகத்தான் அந்த நிகழ்ச்சிகள் நடக்கும் என்ற தமிழ்நாடு மார்க்சீய லெனினிய கட்சியினுடைய அரசியல் நிலை ஏற்புடையதாக இருந்து தமிழ்நாடு மார்க்சீய லெனினிய கட்சியில் இணைந்து செயல்படத் தொடங்கினேன். பல ஆண்டுகள் தமிழ்நாடு மார்க்சீய லெனினிய கட்சியினுடைய பகுதிநேரப் பொறுப்பாளராகவும், சில ஆண்டுகள் முழுநேரப் பொறுப்பாளராகவும் தொடர்ந்து செயல்பட்டேன். தமிழ்நாடு மார்க்சீய லெனினிய கட்சி என்பது தமிழ்நாடு விடுதலைப்புரட்சியின் ஊடாகத்தான் இங்கே ஒரு புதிய சனநாயகப் புரட்சியை நிறைவு செய்யமுடியும். இங்கே ஏற்கனவே ரசியாவில் நடந்தது போலவோ, சீனாவில் நடந்தது போலவோ நடத்த முடியாது, காரணம் ரசியாவில் ஒடுக்கும் தேசிய இனம் ஒன்று இருந்தது.

அந்த ஒடுக்கும் தேசிய இனத்தில் ஒரு பாட்டாளி வகுப்புக் கட்சி பலமாக இருந்தது. அது மற்ற தேசிய இனங்களுடைய சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்ததால் அங்கே அனைத்து தேசிய இனங்களும் ஒருங்கிணைந்து ஒரு ஒன்றுபட்ட புரட்சியாக நிகழ்த்த முடிந்தது. சீனாவிலே நூற்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் இருந்தாலும் கூட அங்கே ஹான் தேசிய இனத்தில்தான் சீன கம்யூனிஸ்ட் கட்சி இருந்தது. அது மற்ற தேசிய இனங்களுடைய ஆயிரம் பேரைக் கொண்ட தேசிய இனத்திற்குக்கூட அதற்கான உரிமையை அங்கீகரித்திருந்தது. அப்படி அங்கீகரித்ததின் விளைவு அங்கே எல்லா தேசிய இனங்களுக்கும் சமத்துவத்தைக் கொடுத்து நடத்தியது. ஆனால் இங்கே ஒடுக்கும் தேசிய இனம் என்ற ஒன்று இல்லை, இங்கே ஒடுக்கும் தேசிய இனம் ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியில்தான் இந்திய தேசியம் என்ற இந்தி மொழியைப் பேசக்கூடிய ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சியில்தான் இந்தியா இருக்கிறது.

இந்தியாவில் இந்தி மொழி என்ற மொழி 1900 க்கு முன்பு கிடையாது. 1905ல் பனாரஸ் பல்கலைக்கழகத்தில்தான் இந்தி மொழிக்காக ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்கி அதற்குப் பின்புதான் கொண்டுவரப்பட்டது. அப்படி அதை உருவாக்கிய ஒரு நபர்தான் இப்பொழுது பாரதரத்னா கொடுத்து கௌரவிக்கப்பட்ட மாளவியா அவர்கள். அவர் கல்வித் தந்தை அல்ல, அவரை கல்வியாளர் என்று எதன் அடிப்படையில் சொன்னால் இந்தி மொழி என்ற மொழியை, ஏற்கனவே பல நூறு ஆண்டு காலம் இங்கே முகலாயர்கள் ஆண்டதால் அவர்கள் பாரசீக லிபி-யை அங்கே இருந்த வட்டார வழக்கான இந்துஸ்தானியோடு உருவாக்கினர். உருது மொழியை பல ஆண்டு காலமாக இங்கே அரச மொழியாக இருந்தது. உருது மொழியை நாங்கள் அரசு மொழியாக நாங்கள் பயன்படுத்த மாட்டோம் என்று சொல்லி சமஸ்கிருதத்தை இந்துஸ்தானி லிபியிலே கலந்து அது தேவநாகரிலிபியிலே இந்தி மொழியை உருவாக்கி அதைக் கல்வி மொழியாக்கினார்கள்.

இன்று கூட நாம் இந்தியாவின் பல மாநிலங்களுக்குச் செல்கிறோம், பள்ளியில் படிப்பவர்களுக்கு இந்தி தெரியுமே ஒழிய மக்களுக்கு யாருக்கும் தெரியாது. மராட்டியத்திற்குப் போனால் மராட்டியம்தான் பேசுவார்கள், குஜராத்துக்குப் போனால் குஜராத்திதான் பேசுவார்கள், நீங்கள் மத்தியப்பிரதேசத்திற்குப் போனால் பல மொழிகள் பேசக்கூடிய பல பகுதிகளைப் பார்க்க முடியும். உத்திரப்பிரதேசத்தில் பார்க்கிறோம், ஒரிசாவிற்குப் போனால் ஒரியாதான் பேசுகிறார்கள், அசாமிற்குப் போனால் அசாமிதான் பேசுகிறார்கள், இப்படி எல்லா நிலைகளிலும் இப்படித்தான் இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது மதன்மோகன் மாளவியா இந்து மகாசபையில் இருந்தார், காங்கிரசின் தலைவராக இருந்தார், இந்துமகாசபையின் தலைவராக இருந்தார் என்று சொல்லப்படுகின்றதே ஒழிய எது சொல்லப்படுவதில்லை என்று சொன்னால் அவர் இந்தி மொழி என்ற ஒரு மொழியை இங்கே உருவாக்கியவர், உருவாக்கி அதற்கான ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவியவர், அதற்காகவே அவரை உயர்த்திப் பிடிக்கிறார்கள். எனவே இந்தியாவைப் பொறுத்தவரை இங்கே உள்ள பார்ப்பன சக்திகள், இங்கே உள்ள பன்னாட்டு நிறுவனங்கள், இங்கே உள்ள தரகு முதலாளிகள் அதாவது பன்னாட்டு நிறுவனங்களோடு ஏற்கனவே கூட்டு சேர்ந்து இங்கே தொழில் துவங்கிய டாடா, பிர்லா, அம்பானி போன்றோரையும் நாங்கள் தரகு முதலாளி என்ற பார்வையில் பார்க்கிறோம். அவருடைய நலனுக்கான கட்டமைப்பாக, இந்திய கட்டமைப்பு இருக்கிறதே ஒழிய, இந்திய சமூக அமைப்பு இருக்கிறதே ஒழிய இங்கே முழுக்க மக்களுக்காக அல்லது சனநாயகத்தை மதிக்கக்கூடியதாக இல்லை.

டெல்லி என்பதை முழுக்க முழுக்க தரகு பார்ப்பனிய ஏகாதிபத்திய அரசாகத்தான் அதைப் பார்க்கின்றோம். அது பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு ஏவல் செய்யக்கூடிய அரசாகத்தான் பார்க்கிறோம். தமிழகத்தில் இருப்பது டெல்லியினுடைய எடுபிடி பொம்மை அரசு, எந்தவிதமான அதிகாரமும் அற்ற அரசு. இதை பலமுறை நாங்கள் சொல்லியிருக்கிறோம், நேரிலும் அது பலமுறை நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. இதை யாரும் பேசுவது கூட கிடையாது. உதாரணத்திற்குச் சொல்லப்போனால் கடந்த தேர்தல் காலத்திலே ஏப்ரல் மாதத்திலே பதினொன்றாம் தேதியன்று கூடங்குளம் 3,4 க்கான அணுஉலைக்கான ஒப்பந்தம் ரசியாவோடு இந்திய அரசு செய்துகொண்டது காபந்துஇந்திய அரசு இருந்தது. ஆனால் ஒப்பந்தம் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை எங்களுக்குத் தெரியாமல் எப்படிப் போட்டீர்கள் என்று தமிழக அரசைக் கேட்கவில்லை. இன்று நியூட்ரினோ திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதற்கு தமிழக அரசு கேட்கவில்லை. கூடங்குளம் அணுஉலையில் மின்சார உற்பத்தி ஒன்றரை ஆண்டுகாலமாக நடத்துவதாக சொல்கிறார்கள், நடப்பதாக சொல்கிறார்கள். இன்று வரை ஒரு மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகி அது வினியோகத்திற்கு வரவில்லை. வினியோகத்திற்கு வந்திருந்தால் அதற்கான தொகையைப் பெற்றிருக்க வேண்டும் ஆனால் அந்தத் தொகையைப் பெறவில்லை.

நாங்கள் கடந்த டிசம்பர் மாதம் தமிழக முதலமைச்சரை சந்தித்த பொழுது இந்த வாதத்தை நான் முன் வைத்தேன். நீங்கள் தமிழகத்தின் முதல்வராக இருக்கிறீர்கள், ஆனால் உங்களுக்கு கூடங்குளத்தில் அணுஉலையில் என்ன நடக்கிறது என்று தெரியுமா?, மின்சார உற்பத்தி நடக்கிறதா இல்லையா என்று தெரியுமா? தெரியாது. அங்கே விபத்திலே அடிபட்ட ஆறு பேர் என்ன நிலையில் இருக்கிறார்கள் என்று தெரியுமா? தெரியாது. இப்படி எந்தவித அதிகாரமற்ற நிலையிலே தமிழக அரசு வைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னேன். கேரள முதல்வரை எங்களது போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் அவர்கள் சந்தித்த பொழுது எங்களுக்கு இதுவரை ஒரு மெகாவாட் மின்சாரம் கூட வரவில்லை என்று உம்மன் சாண்டி தெரிவித்தார். இப்படி எந்தவிதமான அதிகாரமும் அற்ற நிலையில் மாநில அரசு வைக்கப்பட்டிருக்கிறது. மாநில அரசை மத்திய அரசு எப்படி பயன்படுத்துகிறது என்று சொன்னால் நீ உன் மாநிலத்தில் நாங்கள் கொடுக்கக்கூடிய திட்டங்களில் வேண்டுகின்ற கொள்ளைகளை செய்துகொள்ளுங்கள். செய்துகொண்டு நீங்கள் அடிமையாய் இருப்பதைப் பற்றி வெளியில் பேசாதீர்கள் என்ற நிலையைக் கொடுத்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஆண்ட கட்சிகள் எல்லாமே கடந்த அறுபத்திஏழு ஆண்டுகளாக அப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறது. இதுதான் நிலைமை. ஆதலால் இந்த அடிப்படையிலே தமிழகம் என்பது ஒரு அடிமை தேசிய இனமாக வைக்கப்பட்டிருக்கிறோம். தமிழகம் அரசு உரிமையற்ற தேசிய இனம். தமிழகம் இறையாண்மை அற்ற தேசிய இனம். நாம் இன்று பல பிரச்சனைகளைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், அதற்கு அடிப்படைக் காரணம் இங்கே என்ன வரவேண்டும், என்ன வைக்கவேண்டும் என்பதைப் பற்றியான இறையாண்மை நமக்குக் கிடையாது. எங்கேயோ டெல்லியில் தீர்மானிப்பார்கள், நாம் அதை நடைமுறைப்படுத்தியாக வேண்டும். இப்படிப்பட்ட நிலையில்தான் இருக்கிறோம். டெல்லியில் இருக்கக்கூடிய அரசு கட்டமைப்பு ஒரு வலுவான கட்டமைப்பா என்று பார்த்தால் அதுவும் கிடையாது.

டெல்லியிலே இருக்கக்கூடிய இங்கே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் தான் காட் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. காட் ஒப்பந்ததை கையெழுத்து போட்டுவிட்டு வந்துதான் நாடாளுமன்றத்தில் தெரிவித்து அதை நிறைவேற்றினார்கள். அமெரிக்காவினுடைய அணுசக்தித்துறை 123 ஒப்பந்தமும் 543 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல்தான் கையெழுத்து போடப்பட்டது. போடப்பட்டு பின்பு நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து அதை விவாதத்திற்கு வைத்தார்கள். பொதுவுடைமைக் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக்கொள்கிறோம் என்று சொன்ன பொழுது அதற்காக நடந்த பேரங்கள் எல்லாம் நமக்குத் தெரியும். இப்படி மக்களுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அதிகாரம் இல்லாத ஒரு போலியான கட்டமைப்பு முறையிலே இன்று நம்முன் காட்டப்படக்கூடிய ஆட்சி வடிவங்களும் சரி, நிலவக்கூடிய ஆட்சி முறைகளும் சரி, அரசியல் கட்சிகளும் சரி இந்த உண்மைகளை மக்களுக்குப் பேசுவதில்லை, செயல்படுவதில்லை.

உண்மையில் நம் நாட்டில் இருக்கக்கூடிய அடிப்படைப் பிரச்சனைகளுக்கான காரணம் என்பது தமிழகம் இறையாண்மை அற்ற ஒரு அடிமை தேசிய இனமாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த அடிமை தேசிய இனங்கள் எல்லாம் சேர்ந்து போராடலாம் என்றுகூட சொல்லலாம். ஒரு தேசிய இனம் விடுதலைக்குத் தயாராக இருக்கிறது, ஒரு தேசிய இனத்தில் இப்பொழுதுதான் எழுச்சி வந்துகொண்டிருக்கிறதை நாம் பார்க்கிறோம். ஜார்கண்டில் சந்தா இன மக்கள் போராடி ஜார்கண்ட் வந்தது. உத்ராஞ்சல் மக்கள் போராடி உத்திரகாண்ட் வந்தது. சட்டீஸ்கர் மக்கள் போராடி சட்டீஸ்கர் வந்தது. இப்பொழுதுகூட அசாமிலிருந்து போடோ மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் தனி மாநில கோரிக்கையை முன் வைத்து, தனி அரசு கோரிக்கையை முன் வைத்து அல்ல. வங்காளத்திலிருந்து கூர்க்பகுதி மக்கள் கூர்க்கா லாந்துக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். தெலுங்கானாவை இப்படி பார்க்க முடியாது, தெலுங்கானா ஒரு மொழி தேசிய எழுச்சியில் வந்ததல்ல. அது நிர்வாகப் பிரச்சனை, காலம் காலமாக கையாளப்பட்ட பிரச்சனையில் வந்தது. நாம் சொல்வது இங்கே மொழிதேசிய இனங்கள் பல எழுச்சி பெற்று வந்துகொண்டிருக்கிறது. இப்பொழுது உத்திரப்பிரதேசத்தைக்கூட ஐந்தாக பிரிக்கலாம் என்று மாயாவதி அவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். உத்திரப்பிரதேசம் என்பது பெயரே வடக்குப் பிரதேசம் அவ்வளவுதான், உத்தர் என்பது வடக்கு. மத்தியம் என்பது மையம், தட்சிணப் பிரதேசம் என்பது தெற்கு. பிரதேசம் என்பது எல்லை அடிப்படையில் இருக்கிறது, மொழி அடிப்படையில் இல்லை. இங்கே வெளிப்படக்கூடிய மொழி தேசிய இனங்கள் பல எழுந்து கொண்டே இருக்கின்றன. அது தனக்கான கோரிக்கைகளை முன்வைத்துக்கொண்டே இருக்கும். அப்படித்தான் நாம் பார்க்க வேண்டும்.

அப்படி தமிழகத்தைப் பொறுத்தவரை இங்கே ஒரு எழுச்சிபெற்ற தமிழ்தேசிய இனம் என்பது பல்லாயிரக்கணக்கான வரலாறு என்று சொல்வது இது தனக்கான அறிவியலை, தனக்கான முறைகளை பலவும் வைத்திருக்கிறது. இதற்காகத் தன்னைத்தானே ஆளக்கூடிய தற்சார்பை வைத்திருக்கக்கூடிய இனம். இந்த தேசிய இனம் ஒரு அரசு உரிமைப் பெறுவதற்கு முழுத் தகுதி பெற்ற இனம். இப்படியான ஒரு விடுதலையின் ஊடாகத்தான் நாம் இங்கே ஒரு சமூக மாற்றம் உண்மையில் நடக்கும். அது வரை நடப்பது ஒரு சீர்திருத்தம் என்று சொல்லலாம். இங்கு நடக்கக்கூடிய பல கோரிக்கைகள், போராட்டங்கள் எல்லாமே சீர்திருத்தத்திற்கு என்று சொல்லலாமே ஒழிய உண்மையில் இங்கே சமூக மாற்றத்திற்கான வேலையைச் செய்ய முடிவதன் அடிப்படையில் தமிழ்நாடு மார்க்சீய லெனினிய கட்சியில் இருந்து நான் செயல்பட்டேன். அதில் எண்ணற்ற தமிழ்தேசிய கோரிக்கைகளுக்காக பல வேலைகளை எடுத்து நாங்கள் மேற்கொண்டோம். தமிழீழ விடுதலைக்கான வேலைகளை மேற்கொண்டிருக்கிறோம். சாதிய அடக்குமுறைக்கு எதிராக பல்வேறு வேலைகளை மேற்கொண்டிருக்கிறோம். அதே போல் மக்களை பாதிக்கக்கூடிய லஞ்சஊழல், ஆபாசம், மது, சூதாட்டங்கள் M.L.Mஎன்று சொல்லக்கூடிய மோசடிகள் இவைகளை எதிர்த்து எண்ணற்ற பிரச்சனைகளில் தொடர்ந்து மக்கள் பிரச்சனைகளில் நாங்கள் கலந்துகொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழகத்தினுடைய தேசிய கோரிக்கை என்று சொல்லும் பொழுது வாழ்வாதாரக் கோரிக்கை என்று பல எண்ணற்ற பிரச்சனைகளை உள்ளடக்கியுள்ளது.

இப்படி சமூகப் பிரச்சனைகளில் தொடர்ந்து கடந்த முப்பதாண்டு காலமாக எனக்குத் தெரிந்து 1983 முதல் செயல்பட்டு இன்றுவரை கிட்டத்தட்ட 32 ஆண்டுகாலமாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன். தமிழ்நாடு மார்க்சீய லெனினிய கட்சியிலே தொடர்ந்து செயல்பட்டு வந்தேன். ஆனால் அந்தக் கட்சியில் பகுதிநேர ஊழியராகவும் பல ஆண்டுகள் செயல்பட்டேன், முழுநேர ஊழியராகவும் சில ஆண்டுகள் செயல்பட்டேன். அமைப்பினுடைய தேவைக்கேற்ப ஒரு அமைப்பு என்று சொல்லும் பொழுது ஒரு மக்கள் சார்ந்த அமைப்பு என்பது அதனுடைய தேவைக்கேற்ப தன்னை வளர்த்துக்கொண்டு செல்லவேண்டும். அப்படியான வாய்ப்புகளில் என்னை நான் வளர்த்துக்கொண்டு செல்லமுடியாத நிலையில் நான் தேங்கிப்போனேன். தமிழ்நாடு மார்க்சீய லெனினிய கட்சியின் தேவைக்கேற்ப என்னை வளர்த்துக்கொள்வதில் சில தேக்கங்கள் என்னிடம் இருந்தது. அதனால் அமைப்புகளின் பொறுப்புகளில் இருக்கமுடியாத நிலை ஏற்பட்டது. அரசியல் ரீதியாக தமிழ்நாடு மார்க்சீய லெனினிய கட்சியினுடைய அரசியல் நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டவன், அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டாலும் அமைப்பினுடைய நேரடி பிரதிநிதி அல்ல நான். நான் சுற்றுச்சூழல் பிரச்சனைகளில், லஞ்சஊழல் செயல்பாடுகளில், பல்வேறு மக்கள் நலம் சார்ந்த செயல்பாடுகளில் 2006களுக்குப் பின்பு தொடர்ந்து செயல்பட்டு வருகிறேன், பல்வேறு தளங்களில் செயல்பட்டு வருகிறேன்.

இன்று பல்வேறு பணிகளில் பல்வேறு ஊக்கமுடன் பல்வேறு விரிவார்ந்த பார்வைகளோடு மற்றவர்களைப் போல இல்லாமல் இருக்கிறேன் என்று சொல்லப்படுவேனேயானால் அதற்குண்டான முழுப்பெருமையும், தகுதியும் நான் ஏற்கனவே செயல்பட்ட தமிழ்நாடு மார்க்சீய லெனினிய கட்சிக்குத்தான் முழுக்க சேரும். உண்மையில் நம்முடைய அறிவை, சமூகம் கொடுத்த அறிவை சமூகத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற முழுக்கருதுகோளோடு என்னை உணரவைத்து ஒரு உலகளவிலான பார்வையைக் கொடுத்து அதற்கான கண்ணோட்டத்தையும் அதற்கான சரியான வழிமுறைகளையும் கொடுத்து செயல்பட்டு வரும் அமைப்பு அது. ஆனால் அந்த அமைப்பின் தேவையோடு என்னை நான் பொறுத்திக்கொள்ள முடியவில்லை, அந்த அளவிற்கு நான் ஒரு முழுமையான மனிதனாக மாறுவதற்கான நிலை பலரும் என்னைப் பார்த்து பல்வேறு பணிகளில் வியப்பைக் கூட அடையலாம். ஆனாலும் என்னிடமும் பல பிரச்சனைகள் அந்த அமைப்பின் தேவைக்கேற்ற வகையில் என்னால் செயல்படமுடியவில்லை என்பதுதான் யதார்த்தமான பிரச்சனை. அதை தன்னாய்வோடுதான் எப்போதும் உணர்ந்து நான் செயல்பட்டு வருவேன்.

கேள்வி: தற்பொழுது கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டு வருவதில் தாங்கள் பெற்ற அனுபவம் என்ன?

பதில்: நம் நாட்டில் சாதாரணமான முறைகேடுகள், லஞ்ச ஊழல்கள் இவையெல்லாம் மிகப்பெரிய அளவிலே பிரம்மாண்டமாக பேசப்படுகிறது. நான் பொதுவாழ்க்கையில் வந்த காலம்கூட ஊழல் எதிர்ப்பு காலம் என்று சொல்லலாம். நான் துவக்கத்திலே சொன்னேன் கருணாநிதி அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட காலம் என்னுடைய சிறிய பத்துவயது காலத்தில்தான். எனக்கு பொதுவாழ்க்கையில் அதையே திரும்பத்திரும்ப படித்தும் கேட்டும் வளர்ந்தவன் நான். ஊழல் எதிர்ப்பு, லஞ்சஊழல் எதிர்ப்பு என்ற வகையிலே. எம்.ஜி.ஆர்-ஐ ஒரு காலத்தில் பிடித்தது என்பதுகூட திரைப்படக் கட்டமைப்பில் கட்டமைத்துக் காட்டப்பட்ட அவர், ஊழலை எதிர்ப்பவர், நேர்மைக்காக நிற்பவர் என்ற மனோபாவம்தான், அவர் மீதான ஒரு பெரிய ஈர்ப்பை ஏற்படுத்தியது. பின் சமூக ரீதியாக வளரும் பொழுது, அறிவு ரீதியாக வளரும் பொழுது அப்படியான நிலை எல்லாம் அந்தக் கட்சியும் இல்லை, அவரும் இல்லை என்பதற்கான புரிதல் பெற்றேன். அதற்கான வகையிலே என்னுடைய மாற்றுச் செயல்பாடுகளை அமைத்துக்கொண்டவன் நான். அந்த வகையிலே ஊழல் ஒழிப்பு என்பது சிறு வயதிலிருந்தே லஞ்சத்தை எதிர்ப்பது, ஊழலை ஒழிப்பது என்பதில் மிகப்பெரிய ஆர்வமும் வெறியும் கொண்டவன் என்றுகூட சொல்லலாம்.

நான் பொதுப்பணித்துறையில் பணியாற்றிய காலத்திலே அந்தத்துறை வேலையை வேண்டாம் என்று வெளியே வருவதற்கு இந்த மனோபாவம் கூட ஒரு காரணம். பொதுவாக சமூகம் சார்ந்த வேலை செய்யவேண்டும் என்ற ஆசை ஒரு பக்கம் இருந்தது, இன்னொரு பக்கம் அன்று தமிழக விடுதலைப்போராட்டங்கள் பல்வேறு நிலைமையில் இருந்த பொழுது விடுதலைப்புலிகளோடு இணைந்து பல்வேறு வேலைகள் செய்யவேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. இப்படி பல்வேறு அழுத்தங்கள். இப்படி இருந்த நிலைமையில்தான் அந்தப் பணியை விட்டு வெளியே வந்தேன். அதனால் ஊழல் ஒழிப்பு, லஞ்ச ஒழிப்பு என்பது எனக்கு மிகப்பெரிய மிக விருப்பமான ஒரு செயல்பாடு. இதற்காக எண்ணற்ற செயல்பாடுகளை நான் சார்ந்திருந்த அமைப்பிலும் இருந்து செயல்பட்டேன். அமைப்பை விட்டு வெளியே வந்தபொழுதும் இந்த ஊழல் ஒழிப்பு செயல்பாடு என்பதில் மிகத் தீவிரமாக செயல்பட்டேன்.

நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பிரச்சனையில் செயல்பட்டு வரும் பொழுது அங்கே இருந்த பல்வேறு சமூக செயல்பாட்டாளரோடு இணைந்து ஊழலை ஒழிக்கவேண்டும் என்ற ஒரு முயற்சியை மேற்கொண்டோம். ஊழல் என்பதற்கான காரணம், நிலவக்கூடிய சுரண்டலமைப்புதான். இந்த நாட்டில் தனி உடைமை சிந்தனை இருக்கின்ற வரை, மனிதனுக்கு சொத்தாசை இருக்கின்ற வரை இந்த ஊழலும் லஞ்சமும் இருந்துகொண்டுதான் இருக்கும் என்பது யதார்த்தம். ஆனாலும்கூட நிலவக்கூடிய கட்டமைப்பிலே, அதற்கான சீர்திருத்த முறையிலே சில வேலைகளை செய்யலாம் என்று சொல்லும் பொழுது பெருவாரியான மக்கள் இந்த லஞ்சஊழலில் எதில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைப் பார்த்தோம். அப்படி எதில் பாதிக்கப்படுகிறார்கள் என்று பார்த்தால் ஒன்று காவல்துறை, இன்னொன்று வருவாய்துறை. சாதாரண மக்கள் நாடுவது இந்த இரண்டு துறைகளில்தான். அதிலும் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் பெறுவதற்கு வருவாய்துறையை மிக அதிகமாக மக்கள் நாடுகிறார்கள். வருவாய்துறையின் அடிநாதமாக இருக்கக்கூடியது கிராம நிர்வாக அலுவலர்கள்.

1980-களுக்கு முன்பு கிராமநிர்வாக அலுவலர்கள் என்று சொன்னால் அது உள்ளுரில் மணியக்காரர் என்று ஒரு பாரம்பரிய பதவியை வைத்திருப்பார்கள். மாணியாளர் என்றும் சொல்வார்கள், சில பக்கம் கிராம முனிசிப் என்று சொல்வார்கள். 1980-களுக்குப் பின்பு எம்.ஜி.ஆரின் ஆட்சியிலே அதை மாற்றி VAO(Village Administative Officer) என்று பத்தாம் வகுப்பு படித்த கல்வித்தகுதி உள்ளவர்களைக் கொண்டு அதை நிரப்பத் தொடங்கினார்கள். இந்த VAO -க்களை 1980-களுக்கு முன்பு மக்கள் அணுகுவது அனைவருக்கும் எளிதாக இருந்தது. காரணம் அப்பொழுது கிராம நிர்வாக அலுவலகர் பதவி ஒரு கௌரவப் பதவி. அவர் உள்ளுர் சார்ந்தவராக இருக்கும் பொழுது அவர் கிராமத்தினுடைய சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கான வேலையைச் செய்வார். ஆனால் சாதாரண மக்களிடம் பணம் பெற்றுக் கொள்வதை அவமானமாகக் கருதுவார்கள், இப்படியான நடைமுறை கிடையாது. கையெழுத்துப் போட்டுத்தருவது போன்ற மற்றவற்றெல்லாம் இயல்பான முறையாக இருந்தது.

இந்த முறை மாறிய பிறகு இவர்கள் எல்லாருமே வெளியூரிலிருந்து அந்த ஊருக்கு பணிகளுக்கு அனுப்பப்பட்டவர்கள். அவர்களுக்கு உள்ளுரிலே அரசு முதலில் தங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தரவில்லை என்பது ஒன்று, இன்னொன்று இவர்கள் உள்ளுரிலே தங்கினால் மக்கள் தினசரியும் சந்தித்து தேவையானதைப் பெறுகின்ற நிலை ஏற்பட்டது, இதனால் இவர்கள் வெளியூரிலே தங்கிக்கொண்டு உள்ளுரில் விருந்தினர் போல வந்துபோகின்ற வேலையைச் செய்வார்கள். இவர் தங்குகின்ற இடம் மக்களுக்குத் தெரியாது. கிராம நிர்வாக அலுவலகத்திற்கு எப்போது போவார், வருவார் என்று யாருக்குமே தெரியாது. கேட்டால் அவர் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று விட்டார் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார்கள். இப்படியாக மக்கள் நான்கைந்து முறை அலைந்து அலைந்து பார்த்துவிட்டு கிராமத்தில் அவருக்கு உதவியாளராக இருக்கக்கூடிய தண்டல்காரர் என்று சொல்லக்கூடியவர், நீங்கள் பணம் கொடுத்தால் உடனே கையெழுத்து வாங்கிக் கொடுத்துவிடுவோம் என்று சொல்லிவிடுவார். இப்படி மக்களிடம் VAO-வை சந்தித்து, எதைப் பெறுவதாக இருந்தாலும் காசு கொடுப்பது என்ற மனநிலையை ஏற்படுத்தியிருந்தார்கள். இதை நாங்கள் நாமக்கல் மாவட்டத்திலே ஒரு மாற்றமாக செய்யவெண்டும் என்று நினைத்து கிராம நிர்வாக அலுவலர்களுடைய பணி எப்படி இருக்கவேண்டும் என்பதை ஒரு தொகுப்பாக எடுத்தோம். கிராம நிர்வாக அலுவலர்கள் எப்படி செயல்படவெண்டும் என்பதைப் பற்றியான கையேடுகளை வாங்கிப் படித்தோம்.

தமிழ்நாடு குடிமைப்பணிகள் விதிகள் என்றும் அவர்களுடைய செயல்பாடுகளைப் பற்றி மிக விரிவாக உள்ளது. வேலையைச் செய்யும் பொழுது கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரியும் கிராமத்திலேயே தங்கிப் பணியாற்ற வேண்டும். அப்படி தங்கிப் பணியாற்றவில்லை என்றால் அவர்களை பணிநீக்கம் செய்யலாம் என்று அவர்கள் பணியில் சேரும் பொழுதே விதி இருக்கிறது. கிராம நிர்வாக அலுவலர்கள் தங்கும் கிராமத்தில் தங்கிப் பணியாற்றவில்லை என்று சொன்னால் இடை நீக்கம் அல்ல, பணிநீக்கம் செய்யவேண்டும் என்பது சட்டம், விதி. இதை வைத்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில வருவாய்துறை ஆணையருக்கு ஒரு கடிதம் எழுதினோம். அவர், “ஆம், இந்த அடிப்படையில் இருக்கிறது, அப்படி இல்லை என்றால் பணி நீக்கம் செய்யப்படுவார்” என்று ஒரு கடிதத்தைக் கொடுத்தார், அதை வைத்து தமிழ்நாட்டில் 32 மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும், வருவாய்துறை ஆணையர் சொல்லியிருக்கிறார். எனவே இதை நீங்கள் அமல்படுத்த வேண்டும், கிராமப்புறத்தில் VAO-க்கள் கிராமத்தில் தங்கவில்லை என்றால் அவர்களை பணிநீக்கம் செய்யவேண்டும் என்ற ஒரு தகவலுக்கு விண்ணப்பித்தோம். அதை நாமக்கல் மாவட்டத்திலும் கொடுத்தோம்.

அதற்கு முன்பு நாமக்கல் மாவட்டத்தில் எத்தனை கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமத்தில் தங்கியிருக்கிறார்கள் என்று பார்த்தோம், முன்னூறு கிராம நிர்வாக அலுவலர்களில் முப்பது நபர்கள் கூட கிராமத்தில் தங்கவில்லை. எனவே அனைத்து கிராம நிர்வாகர்களையும் கிராமத்தில் தங்கவைக்கவேண்டும் என்று தகவல் உரிமைச் சட்டத்திலே மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பினோம். இந்த மாவட்ட ஆட்சியராக மதிப்பிற்குரிய சகாயம் அவர்கள் இருந்தார்கள். அவர் இதைப் பார்த்தவுடன் சங்கரீதியாக, அமைப்பு ரீதியாக அவர்கள் மிக வலுவாக இருக்கிறார்கள், காலம் காலமாக இப்படியே அனுமதித்துவிட்டார்கள். எனவே இவர்களை முதலில் இப்படியான முறையில் அணுகுவதை விட, நான் சில வழிமுறைகளை கையாள்கிறேன் என்று சொல்லி இன்னொரு வழிமுறையை யோசனை செய்து, ஒன்றைக் கையாண்டார். கிராம நிர்வாக அலுவலர் கிராமத்தில் தங்கவில்லை என்றால் அவர்களுக்கு HRI என்று சொல்லக்கூடிய வீட்டில் தங்குவதற்கான படி ஒன்றைக் கொடுக்கிறார்கள் அந்த HRI தரமுடியாது இதற்கான விளக்கத்தை நீங்கள் தரவேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரு மெமோ அனுப்பினார்.

உடனடியாக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களும் பரமத்தி வேலூர், ராசிபுரம், திருச்செங்கோடு, ஈரோடு என்ற நான்கு வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒரு போராட்டத்தை நடத்தினார்கள். சகாயம் என்பவர் அவரது வீட்டிற்காகச் சொல்லவில்லை, சட்டம் என்ன சொல்கிறதோ அதை நடைமுறைப்படுத்தச்சொல்லி அவர் சொல்கிறார்.

சகாயம் என்பவர் ஒரு நேர்மையான அதிகாரி, இவர் நாமக்கல் மாவட்டத்திற்கு வந்த பின்பு, அரசியல்வாதிகள் யாரும் எந்த நலத்திட்டத்திலும் கைவைக்க முடியவில்லை. அவை சத்துணவுப் பணியாளருடைய பணி நியமனமாகவும் இருக்கலாம் அல்லது சமத்துவபுர வீடு ஒதுக்கீடாகவும் இருக்கலாம், எந்தத் துறை சார்ந்த பணிகளாக இருந்தாலும், அரசு விதி என்னவோ அதை அப்படியே நடைமுறைப்படுத்தினார். அதே போல தனக்குக் கீழ் இருக்கக்கூடிய பணியாளர்களையும் நேர்மையாக இருக்கத் தொடர்ந்து வலியுறுத்தினார், நேர்மையாக இல்லை என்றால் நேரடியாக எனக்கு புகார் கொடுங்கள் என்று அறிவித்து வேலை செய்தார்.

நீங்கள் முதல்வன் என்ற திரைப்படத்தைப் பார்த்திருக்க முடியும். அதில் எப்படி நேர்மையற்ற ஒருவரைப் பற்றி, முதல்வரிடம் ஒருவர் தொலைபேசியில் புகார் செய்ய முடியும். அதே போல் நாமக்கல் மாவட்டத்திலே சகாயம் அவர்கள் பணிபுரியும் பொழுது, நாங்கள் அங்கே விவசாய அமைப்புப் பொறுப்பாளராக செயல்பட்டு, மாதாமாதம் நடக்கும் விவசாய குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொள்வோம். அந்தக்கூட்டங்களில் நாங்கள் நேரடியாக ஒரு அதிகாரியைப் பற்றியான புகாரைச் சொல்லமுடியும். அதாவது இப்படி இவர் பணத்திற்காக எதிர்பார்த்து அந்த வேலையை செய்யாமல் இருக்கிறார் என்ற புகாரை தெரிவித்தால், அந்த இடத்திலேயே அந்த அதிகாரியை அழைத்து மாலைக்குள் அந்தப் பணியை முடித்துக்கொடுப்பார். நாங்கள் பல தகவல் பெறும் உரிமைச்சட்டங்களின் மூலம் பல்வேறு தவறான செயல்பாடுகளைச் செய்த பல கிராம நிர்வாக அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைத்தோம், தாசில்தார் மீதும் நடவடிக்கை எடுக்க வைத்தோம்.

இப்படியான நிலைமையில் VAO-க்கள் சகாயத்திற்கு எதிராக ஒரு போராட்டத்தை நடத்தினார்கள். இப்படி பேசும் பொழுது மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், ஏன் VAO-க்கள் மீது ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள் என்று பார்த்தால் கிராமங்களில் நடக்கக்கூடிய கனிம வள முறைகேடுகளைப் பற்றி இந்த VAO-க்களுக்குத் தெரியும். VAO-க்கள் என்று சொன்னால் அறிவிக்கப்படாத கிராம கலெக்டர். அவர்தான் கிராமத்தின் இன்ஸ்பெக்டர், அவர்தான் கிராமத்தின் எஸ்.பி எல்லாமே அவர்தான். அந்த ஊருக்குள் யார் ஒருவர் வந்தாலும் போனாலும் அது அவருக்குத் தெரியும். உள்ளுரில் சுங்ககேட் ஏலம் விட்டுவிடுவதைப் பார்த்தீர்கள் என்றால், ஒரு ஐஸ் வண்டி வந்தாலும் கூட தெரியும், ஆள் போட்டிருப்பார்கள் அதனால் பிடித்து விடுவார்கள். அந்த மாதிரி சிறிய பொருளை விற்கக்கூடியவர் வந்தாலும் கூட அவர் பேருந்தில் ஏறினாலும் கூடப் பிடித்துவிடுவார்கள். அது மாதிரி கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அந்த கிராமத்திலே எந்த கனிமங்கள் எந்த இடத்திலிருந்து எடுத்துச் செல்லப்படுகிறது என்று எல்லாவிதமான விபரங்களும் தெரியும்.

இந்தக் கனிம வளங்கள், அதிகாரத்திற்கு வந்த காலத்திலிருந்து பல காலம் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே இவர்களுக்கு நேரடியான பங்கு இருக்கிறது. இவர்களுக்கு மட்டுமல்ல இந்த பங்கு அரசியல்வாதிகளுக்கு, அதிகாரிகளுக்கு யார் யாருக்குப் போகிறது என்ற விபரங்களும் தெரியும். எனவே கிராம நிர்வாக அதிகாரிகளுக்கும் கனிம வள முறைகேடுகளுக்கும் மிகப்பெரிய தொடர்பு உண்டு. இதை முறைப்படுத்துவதற்காக பல வழக்குகள் போட்டு மாதாமாதம் கனிமவள முறைகேடுகளைப் பற்றி கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தப் பகுதியின் காவல் ஆய்வாளர் வட்டாட்சியர் சுரங்கப் புவியியல் துறையைச் சேர்ந்த அதிகாரி, பொதுப்பணித்துறை அதிகாரி எல்லோரும் சேர்ந்து மாதம் மாதம் கனிமவளம் கொள்ளையடிக்கப்படுவதை ஆய்வு செய்யவேண்டும் என்ற கூட்டங்களைப் போட வேண்டும் என்று 2006-லேயே தீர்ப்புகளை வாங்கி வைத்திருக்கிறோம். ஆனால் அப்படி எங்கேயுமே நடப்பதில்லை.

இப்படி பல நிலைமைகளில் இருந்தது, குறிப்பாக எங்கள் ஊரில் சென்னி மலையிலே, சென்னி மலை என்பது மிகப்பெரிய பெயர்பெற்ற கோவில்தளம். அங்கே முருகன் கோவில் இருக்கிறது. அந்த முருகன் கோவிலுக்கு கிழக்குப் பகுதியிலே ஒரு மலை இருக்கிறது. அந்த மலையை காங்கேயம் செல்லக்கூடிய சாலை பிரிக்கும். அந்த மலையை நாங்கள் பூப்பொறிக்கும் மலை என்று சொல்லுவோம். பூப்பொறிக்கும் மலை என்பது சென்னிமலையிலே தைப பொங்கல் திருவிழா நடக்கும் பொழுது சென்னிமலையில் இருக்கக்கூடி அத்தனை மக்களும் அதாவது நாற்பதாயிரம் மக்களும் அந்த மலை மேல் சென்று அந்த மலையிலே இருக்கக்கூடிய பல்வேறு பூக்களையும் பறித்துக்கொண்டுவந்து கும்மியடித்து கொண்டாட்டம் செய்துவிட்டு மாலை வீட்டிற்குக் கொண்டுவந்து அதை சூரியனுக்கு படையலிட்டு விழாவாகக் கொண்டாடிக் கொண்டிருந்த மலை. அந்த பூப்பொறிக்கின்ற மலையை மேய்ச்சல் பட்டாவாகப் போட்டு, அதை அயன் பட்டாவாக மாற்றி மலையை ஒரு விவசாய நிலமாகக் காட்டி விவசாய நிலம் மேடாக இருக்கிறது, இதை சமப்படுத்துகிறோம் என்று சொல்லி அந்த மலையை வெட்டுகின்ற வேலையைத் தொடங்கினார்கள் 2010லே. அன்றைய காலகட்டத்தில் எண்ணற்ற சூழல் போராட்டம் நடத்திய அனுபவம் எனக்கு உண்டு.

இப்படி தொடங்கியவுடன் பதறியது நெஞ்செல்லாம். அவர்கள் வாங்கிய அனுமதி என்பது மூன்றாண்டுகளுக்கு. ஒரு ஆண்டுக்கு 1200 லாரி லோடு எடுத்துச் செல்வது ஆகும். அந்த மலையை வெட்டுவதற்கு ஒரு ஆண்டுக்கு 1200 என்று சொன்னால் மாதம் 100 லோடு, தினசரி மூன்று லோடு. அனுமதி வாங்கியவுடன் முதல்நாளிலேயே இருநூறு லோடு, முன்னூறு லோடு என்று வெட்டி மண்ணை அள்ளத் தொடங்கினார்கள். ஐநூறு, ஆறுநூறு லோடு என்று தினசரியும் மலையை வெட்டுகின்ற வேலையைத் தொடங்கினார்கள். நாங்கள் கதறினோம், ஓடினோம், மாவட்ட நிர்வாகத்திடம் சொன்னால், சொன்னதற்கான பரிசு மாவட்ட ஆட்சியாளருக்கு மிகப்பெரிய தொகை சேர்ந்தது. அன்றைய வனத்துறை அமைச்சருக்கு மிகப்பெரிய தொகை கையூட்டாகப் போனது, மலை வெட்டுகின்ற வேலை மட்டும் நிற்கவே இல்லை.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் சொல்வது, வனத்துறையிடம் சொல்வது என்று பெரிய பண்டித்துவம் பெற்றோம் என்று சொல்லப்பட்டாலும் கூட, தகவல் உரிமை மூலமாக தகவல் வாங்கும்பொழுது எங்களுக்கு தகவல் கொடுக்க மறுத்ததால், நாங்கள் அலுவலகத்தை நேரடியாக ஆய்வுசெய்து எல்லா விவரங்களையும் பெற்று, அந்த எல்லா விவரங்களையும் ஊடகங்கள் வழியாக எல்லாவற்றுக்கும் எடுத்துச் சென்றும் எங்களால் மலை வெட்டுகின்ற வேலையைத் தடுக்க முடியவில்லை. என்னுடைய மகன் கேட்டான் “அப்பா எந்தெந்த ஊரிலியோ சென்று என்னென்னவோ செய்து எத்தனையோ தொழிற்சாலைகளை நிறுத்தியிருக்கிறீர்கள். பல பிரச்சனைகளை கையாண்டிருக்கிறீர்கள், ஆனால் கண் முன்னால் மலையை வெட்டுகிறார்கள் நம் ஊரில். நான் பார்ப்பதற்கு இந்த மலை இருந்தது, நாளைக்கு என்னை மாதிரியான சிறியவர்கள் பார்ப்பதற்கு மலை இருக்குமா?” என்ற ஒரு கேள்வியைக் கேட்டான். அந்தக் கேள்வி இது வரை என் காதிலே செவிட்டில் அறைவதுபோல் இருந்தது.

அந்த மலையை வெட்டுவதை தடுப்பதற்கான வேலையை செய்து முடிப்பதற்கு எங்களுக்கு எட்டுமாத காலம் ஆகிவிட்டது. மக்களைத் திரட்டி மலையைச் சுற்றி போராட்டங்கள் செய்து, நல்லக்கண்ணு போன்றோர்களை அழைத்துக்கொண்டு போராட்டங்கள் செய்து, இம்மாதிரியான எண்ணற்ற சூழல் அனுபவங்கள் இருந்தும் கூட எட்டு மாத காலம் அந்த மலையை வெட்டுகின்ற வேலையைத் தடுப்பதற்கான வேலையை செய்தோம். அதற்குள் இந்த மலை பாதி மலை கரைக்கப்பட்டது. மலையை வெட்டுவதற்கென்றே தமிழ்நாட்டிலே இல்லாத நவீன கருவிகள் எல்லாம் கொண்டுவந்தார்கள். ஈரோடு அருகில் எங்களது ஊர் இருக்கிறதால், மலையை சமப்படுத்தினால் சென்னிமலையும் சமமாகிவிடும். அதனால் அந்த இடம் சென்ட் பல லட்சம் ரூபாய்க்கு விற்கலாம். ஊருக்கும் அதுக்கும் மலையை சமப்படுத்தித்தான் அந்த இடம் ரியல் எஸ்டேட் போட்டு விற்பதற்கான இடமாக. இப்படியான நிலைமைகளிலே மிகப்பெரிய போராட்டம் நடத்தி அதை நிறுத்தினோம், அது தனி கதை. இப்படி ஒரு வேலையைச் செய்வதற்கு எட்டு மாத காலம் ஆகியது. எண்ணற்ற அனுபவங்களைக் கண்டேன்.

இந்த மாதிரி அனுபவம் இல்லாத பகுதியில், இம்மாதிரி செயல்பாடு இல்லாத பகுதியில் பல மலைகள் காணாமல் போனதைக் கண்டறிந்தவன் நான். குறிப்பாகக் கூடங்குளம் போராட்டத்திலே மூன்றரை ஆண்டு கூடங்குளம் பகுதியிலே இருந்த பொழுது நாங்கள் இருந்த கூடங்குளம் பகுதியிலே மக்களுக்குக் கடுமையான நோய்கள் வரும். அங்கே நான் இருந்த ஊர் இடிந்தகரை, இந்தப் போராட்டத்தில் முக்கியமாக இருந்தது கடலோர ஊர்கள். அந்த கடலோர ஊர்களில் எல்லாம் பார்த்தால் இறக்கக்கூடியவர்கள் 70 விழுக்காடு நபர்கள். புற்றுநோயினாலும் சிறுநீரக செயலிழப்பினாலும் இறக்கிறார்கள். பல பகுதிகளில் தைராய்டினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிறுநீரக செயலிழப்பு வந்தால் டையாலிசிஸ் செய்வதற்கு மட்டும் 12 லட்சம் முதல் 15 லட்சம் அந்த மீனவர்கள் செலவிடுகிறார்கள். இப்பொழுது சென்னையிலே இருக்கிறோம், இங்கு கடலோரத்திலே நாம் தோண்டினால் நல்ல தண்ணீர் கிடைக்கும், ஊற்றுத் தண்ணீர் கிடைக்கும். ஆனால் நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களில் கடலோரப் பகுதிகளில் எங்கும் குடிதண்ணீர் கிடையாது. அத்தனை மக்களும் இருபது ஆண்டு காலமாக தண்ணீரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகிறார்கள். இடிந்தகரையிலே கிட்டத்தட்ட 16000 மக்கள் இருக்கிறார்கள், 2000 குடும்பத்திற்கு மேல் இருக்கிறது, இரண்டாயிரம் குடும்பங்களும் தினசிரி தண்ணீருக்கு மட்டும் 4 குடம் தண்ணீரை இருபது ரூபாய்க்கு வாங்கினார்கள் என்றால், ஒரு மாதம் 600 ரூபாய், ஒரு ஆண்டுக்கு 7000 ரூபாய் தண்ணீருக்கு மட்டும். இருபது ஆண்டு காலத்தில் ஒரு குடும்பம் தண்ணீருக்கு மட்டும் ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள். ஏன் இந்த நிலை வந்ததென்று பார்த்தால் தாது மணலை அள்ளுவது.

தாது மணல் கடலோரத்தில் இயற்கை சமநிலையைப் பாதுகாக்கிறது. இயற்கையிலே கிடைக்கக்கூடிய தாதுமணலை, கடலோரத்தில் இருக்கக்கூடிய தாதுமணலை அள்ளும் பொழுது கடலுக்கும், உள்ளே இருக்கக்கூடிய சமவெளிக்கும் இருந்த அந்த பாதுகாப்பு வளையம் உடைக்கப்படுகிறது, அறுக்கப்படுகிறது. அதனால் கடலில் உப்பு வந்துவிட்டது. கடலோரத்தில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு கடலோர கிராமத்தில் மட்டுமல்ல, கடலோரத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவிற்கு இருபது ஆண்டுகளாக நல்ல தண்ணீர் கிடையாது. இன்றுவரை காசு கொடுத்துத்தான் அந்த மக்கள் குடிதண்ணீரைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். குடிதண்ணீரை காசு கொடுத்து பெறுவது மட்டுமல்ல, அத்தனைக் குடும்பங்களிலும் புற்றுநோயும், சிறுநீரக செயலிழப்பும், தோல்நோயும், கழுத்தில் கட்டிகள் வருவது போல் தைராய்டு கட்டிகளாலும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இடிந்தகரையில்மட்டும் நான் ஒரு கணக்கை எடுத்தேன். இடிந்த கரையிலே இந்த இருபது ஆண்டுகளில் ஏற்கனவே கிடைத்த வகை மீன்கள் இப்போது கிடைக்காமல் போயிருக்கிறது என்று. 42 வகையான மீன்கள் கிடைக்காமல் போயிருக்கிறது கடலோரத்திலே. காரணம் மீன்கள் கடலோரத்திற்கு வரும், அலை உருவாகின்ற இடத்திற்கு வரும். ஆனால் கடலோரத்திலே தாதுமணல் அள்ளப்படுவதால் அங்கே இயற்கையாய் உருவான மீன்களுக்கு உணவாகக் கிடைக்கக்கூடிய நீர்பாசிகள், பவளப்பாறைகள், நீர்த்தாவரங்கள் இல்லாமல் அழிந்து போய் விட்டது. இந்த தாதுமணல் ஆலைகள் தன்னுடைய கழிவுகளை கடலிலே கலக்கிறார்கள். அதனால் கடல்நீர் அமிழ் நீராகமாறியது. நமக்கெல்லாம் தெரியும் கடல்நீர் நீலநிறம் என்று. ஆனால் இடிந்த கரையிலே 2013 ஆகஸ்ட்டு வரை நீங்கள் திருச்செந்தூர் கடலிலே குளித்தாலும் சரி, கன்னியாகுமரி கடலிலே குளித்தாலும் செங்கடலில்தான் குளிக்க முடியும். தண்ணீரே சிகப்பாகத்தான் இருந்தது. தாதுமணல் ஆலைகளின் கழிவுனால். தாதுமணலைக் கழுவுவதற்கான அமிலங்களைக் கலந்து அந்தத் தண்ணீரைக் கடலில் விட்டதால், தண்ணீரே இருபது ஆண்டுகாலமாக செங்கடலாக இருந்தது.

நீங்கள் கடல், நீர்ப்பறவை என்ற இரண்டு படங்கள் திருச்செந்தூர் அருகே இருக்கக்கூடிய மணப்பாடுஎன்ற ஊரில் எடுக்கப்பட்டது. அந்த இரண்டு திரைப்படத்தையும் பாருங்கள், கடல் செங்கடலாக இருக்கும். காரணம் தாதுமணல் ஆலைகள் விட்ட கழிவுகள். இது அந்த மக்களுடைய உடல் நலத்திற்கு மட்டுமல்ல, மீன்களுடைய அழிவுக்கும் காரணமானது. நாங்கள் ஒரு அறிக்கையை வாங்கிவைத்திருக்கிறோம். மீன் நச்சாகி இருக்கிறது, தாதுமணல் ஆலைகள் விட்ட கழிவுகளால் இந்த மூன்று மாவட்டத்தில் எடுத்த தண்ணீரை ஆய்வு செய்து மீனே நச்சாக இருக்கிறது என்ற ஒரு ஆய்வு அறிக்கையை நாங்கள் வாங்கியிருக்கிறோம். இந்த ஆய்வு நிறுவனம் ஏதோ வெளியாரின் நிறுவனம் அல்ல, வைகுண்டராஜனுக்கு ஆய்வு செய்து அறிக்கைக் கொடுத்த நிறுவனம்தான் அது. அந்த நிறுவனத்தில் நாங்கள் கடல் தண்ணீரை எடுத்து ஆய்வுக்குக் கொடுத்து கடல் தண்ணீரிலே இருக்கக்கூடிய மீன் இப்படி நச்சுத் தன்மை உள்ளது, இதிலுள்ள ஆர்சானிக் நச்சுத்தன்மை உள்ளது என்ற அறிக்கையைப் பெற்றிருக்கிறோம். இப்படியான அவலங்களை நான் பார்த்தேன். கடலோரத்திலே தாதுமணல் எடுப்பதால் ஏற்பட்ட அவலங்கள், அங்கே ஏற்பட்ட இயற்கைச் சூழலில் ஏற்பட்ட அவலம். கடலோரத்தில் சுனாமி வந்தது என்று சொன்னால் கடலோரத்தில் தாதுமணல் அள்ளப்பட்டதால் ஏற்பட்டதுதான் சுனாமி.

கேள்வி: தற்பொழுது கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்க ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டு வருவதில் தாங்கள் பெற்ற அனுபவம் என்ன?

கடலோரத்தில் தாதுமணல் என்பது இயற்கையிலேயே கதிரியக்கத் தன்மை உள்ளதாகத்தான் இருக்கும். அதை பயன்படுத்துவது, அள்ளுவதற்கு பல்வேறு வழிமுறைகளை அரசு வைத்திருக்கிறது. இதனால் பாதிப்புகள் வருவதெல்லாம் பார்த்துத்தான் தாதுமணல் என்ற நூலை எழுதினேன். அப்பொழுது ஒரு வாய்ப்பாக காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது போல, தமிழ்நாட்டில் சகாயம் அவர்கள் கனிமவள முறைகேடுகளை ஆய்வு செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. சகாயம் அவர்கள் நாமக்கல் மாவட்டத்திலே பணியாற்றிய பொழுது எனக்குத் தெரியும். அவர் மதுரையிலே பணியாற்றிய பொழுது கிரானைட் பிரச்சனைகளில் சில ஊர்களில் நேரடியாக தலையிட்டு அது போன்ற பிரச்சனைகளில் அனுபவமும் பெற்றவன் நான். கனிமவள முறைகேடுகளைப் பற்றி உணர்ந்து அதைப்பற்றியான நூலையும் எழுதியிருக்கிறேன். ஆற்றுமணல் கொள்ளையை எதிர்த்து தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் வேலை செய்திருக்கிறோம். இப்படி பல்வேறு விதமான கனிம கொள்ளைகளை எதிர்த்து நாங்கள் வேலை செய்திருக்கிறோம்.

இதுமட்டுமல்ல கொல்லி மலையிலே மேட்டூரில் இருக்கக்கூடிய மால்கோ நிறுவனம் அனுமதியில்லாமல் பத்தாண்டுகளுக்கு மேல் கொல்லி மலை செம்மேடு பகுதியிலிருந்து தினசரி 400 லோடு பாக்ஸைட் தாதுவை வெட்டிக்கொண்டு போய்க்கொண்டிருந்தது பத்தாண்டுகாலம் அனுமதியே இல்லாமல் ஒரு நிறுவனம். அதை குளத்தூர் மணி, பியூஸ் போன்ற தோழர்கள் உயர்நீதிமன்றத்திலே அள்ளக்கூடாது என்று உத்தரவு பெற்றும் கூட அதை நடைமுறைப்படுத்துவதற்காக அதிகாரிகள் இல்லை. சகாயம் அவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் ஆட்சியத்தலைவராக இருந்த பொழுது, அவரிடம் எடுத்துச் சென்று சொன்னதற்கு அவர் இதுபோன்ற நிறுவனத்தில் கை வைப்பதற்கு அவருக்கான அதிகாரத்திலிருந்து பல வேலைகளை மேற்கொண்டார். நேரடியாகச் செய்தால் நெருக்கடி வரும் என்று சொல்லி, முதலில் ஓவர் லோடு என்று அந்த லாரிகளில் பலவற்றை முடக்கினார். பிறகு அதிக வேகம் என்று பிடித்தார். பின்பு ஆண்டுக்கு ஒருமுறை மறுபரிசீலனைக்காக வரும் பொழுது அதற்கான அனுமதியை ரத்து செய்து அந்த வேலையை நிறுத்த வைத்தார். அதனால் எண்ணற்ற நெருக்கடிகளை சந்தித்தார்.

இப்படி கனிமவள பிரச்சனைகளைப் பொறுத்தவரை, எங்கள் ஊரில் மலையை வெட்டுவதைப் பார்த்தவன், பாக்ஸைட் வெட்டுவதை நிறுத்தியவன், ஆற்றுமணல் அள்ளுவதை எதிர்த்து போராடியவன், கிரானைட் பிரச்சனையை உணர்ந்தவன், தாதுமணல் கொள்ளையை நேரிலே உணர்ந்தவன் இப்படி பல பிரச்சனைகளிலும் நேரடியாக நாங்கள் சம்மந்தப்பட்டிருந்ததால் சகாயம் அவர்களை நியமித்த பொழுது ஒரு வேலையைச் செய்ய முடிவு செய்தோம். என்ன வேலை என்றால் இதற்கான ஒரு ஆதரவு இயக்கத்தைக் கட்டமைக்க வேண்டும் என்ற முடிவு செய்தோம். சகாயம் செய்யப்போகிறார் எதற்காக ஆதரவு இயக்கம் என்று நீங்கள் கேட்கலாம். இந்த நாட்டில் நீதிமன்றங்களைப் பொறுத்தவரை பல சட்டங்கள் இருக்கிறது, ஆனால் அமல்படுத்துவதற்கு அதிகார வர்க்கம் கிடையாது, அரசியல் வாதிகள் தயாராக இல்லை. பல்வேறு அழுத்தங்களினால்தான் பல்வேறு சட்டங்கள் நடைமுறைக்கு வருகிறது. இந்த நாட்டைப்பொறுத்தவரை பல சட்டங்கள் ஏட்டளவில் இருக்கிறது, ஆனால் நடைமுறை அளவில் அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறது.

அப்படி இருக்கும் பொழுது சகாயம் ஆய்வுக் குழுவிற்கு ஒரு நெருக்கடி கட்டாயம் இந்த அரசு நடைமுறைப்படுத்துமா?, நடைமுறைப்படுத்தாதா? என்ற நிலை இருந்தது. இதற்கு நம் தமிழகத்திலே கூட ஒரு முன்னுதாரணம் இருக்கிறது. 2010-லே நெல்லையைச் சேர்ந்த சுடலைக்கண்ணு என்பவர் ஒரு வழக்கைப் போட்டார். தாமிரபரணி ஆறுகளில் அனுமதி மீறி மணல் அள்ளுகிறார்கள். எனவே தடைசெய்யவேண்டும் என்று சொல்லி, அதில் மதிப்பிற்குரிய இந்திய பொதுவுடைமை இயக்கத்தினுடைய தலைவர் நல்லகண்ணு அவர்களும் தன்னை இணைத்துக்கொண்டு அவரே நேரடியாக நீதிமன்றத்திலே வாதாடினார். அந்த நீதிமன்ற தீர்ப்பைக் கொடுத்த மதிப்பிற்குரிய நீதிபதி பானுமதி அவர்களும், நீதிபதி நாகமுத்து அவர்களும் 42 பக்க அற்புதமான தீர்ப்பைக் கொடுத்தார். அந்தத் தீர்ப்பிலே அவர்கள் தாமிரபரணி நதியை மட்டும் சொல்லவில்லை, தமிழ்நாட்டிலே தாமிரபரணியில் மட்டும் ஆற்றுமணல் கொள்ளையடிக்கப்படுவதில்லை, தமிழ்நாட்டிலே இருக்கக்கூடிய 33 ஆறுகளிலும் ஆற்றுமணல் கொள்ளையடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

எனவே தமிழ்நாட்டிலே தாமிரபரணி ஆற்றில் இருக்கக்கூடிய குவாரிகளுக்கு ஐந்தாண்டுகாலம் தடைவிதிக்கப்படுகிறது, ஐந்தாண்டு காலம் மணல் அள்ளக்கூடாது என்று உத்தரவோடு தமிழ்நாட்டில் நடக்கக்கூடிய ஆற்றுமணல் முறைகேடுகளில் ஆய்வைக் கண்டறிந்து ஒழுங்கு படுத்துவதற்கான ஒரு குழுவை நாங்கள் அமைக்கிறோம் என்று சொல்லி தமிழகத்தை நான்கு மண்டலமாகப் பிரித்து நான்கு மண்டலக்குழுக்களை அமைத்தார்கள். மண்டலக் குழுக்களை அமைத்தது மட்டுமல்ல, அந்த மண்டலக் குழுக்களுக்குத் தலைவராக ஓய்வுபெற்ற ஒரு மாவட்ட நீதிபதி. அவருக்கு உதவியாக ஒரு சுற்றுச்சூழலில் நிபுணர், ஒரு நீரியல் நிபுணரை நியமித்தார்கள். இவர்களை ஒருங்கிணைப்பதற்காக தமிழ்நாடு முழுக்க ஒருங்கிணைப்பதற்காக ஓய்வு பெற்ற ஒரு உயர்நீதிமன்ற நீதிபதியும் அவருக்கு உதவுவதற்காக ஒரு அரசுத் துறை செயலாளரை நியமிக்கவேண்டும் என்ற உத்தரவைப் போட்டார்கள். யார் அந்த நீதிபதி என்ற பெயர் பட்டியலை அறிவித்தார்கள். அதுமட்டுமல்ல இவர்கள் அலுவலக நடைமுறைக்காக அந்த ஓய்வு பெற்ற நீதிபதிக்கு மாதம் 75000 ரூபாய் சம்பளமும், அவருக்கு உதவியாக இருக்கக்கூடிய நீரியல் நிபுணருக்கும், சுற்றுச்சூழல் நிபுணருக்கும் 25000 ஊதியமும், இவர்களுக்கு ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலத்திலும் அலுவலக அறை ஒதுக்க வேண்டும். அவர்களுக்கு அங்கே வேலை செய்ய உதவியாக உதவியாளர் ஒருவரும், அலுவலகப் பணியாளர் ஒருவரும் நியமிக்கப்படவேண்டும், இவர்களுடைய வேலை, நேரடியாக அனுமதி பெற்ற ஆற்றுமணல் குவாரிகளுக்குச் சென்று பார்ப்பது, மக்களிடமிருந்து புகார் செய்தால் அதை ஆய்வு செய்வது, அரசுக்கு எடுத்துச் செல்வது, மாவட்ட ஆட்சியர் அதை கண்காணிக்க வில்லை என்றால் நீதிமன்றத்திற்கே கொண்டுசெல்வது என்ற பல்வேறு வழிகாட்டுதல்களை அந்த நீதிபதி அவர்கள் கொடுத்தார்கள் 2010 இரண்டாவது மாதத்தில்.

ஆனால் முடிவு என்ன? நீதிபதி உத்தரவு போட்டார் தமிழகம் முழுக்க நல்லகண்ணு அவர்கள் தாமிரபரணி ஆற்றிலே தடைவாங்கிவிட்டார், தாமிரபரணி ஆற்றினை காப்பாற்றி விட்டார் என்ற செய்தி வந்தது. குழுக்கள் அமைக்கப்பட்டதா, அது இயங்கியதா, இயக்கவிட்டார்களா, என்ன பிரச்சனையை சந்தித்தார்கள் என்று பார்த்தால் அதற்குப் பின்பு எதுவுமே கிடையாது. இரண்டாண்டு காலம் இந்தக் குழு இயங்கும் என்று அறிவித்திருந்தார்கள். 2010 இரண்டாவது மாதத்தில் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதற்குப் பின்பு 2011 தேர்தல் காலகட்டமாக போய்விட்டது. 2011 வரை தி.மு.கவும், தேர்தலுக்குப் பின்பு அ.தி.மு.கவும் ஆட்சிக்கு வந்தது. இவர்கள் இரண்டு பேருமே நேரடியாக இந்த ஆற்று மணல் கொள்ளையடிப்பவர்களோடு பங்குதாரர்களாக இருந்தவர்கள். இவர்கள் இந்தக் குழுவை இயக்குவார்கள் என்று எதிர்பார்க்க முடியுமா? பண்ணவில்லை. இந்தத் தீர்ப்பை இங்கே இருக்கக்கூடிய அரசியல் கட்சிகளோ சமூக இயக்கங்களோ நடைமுறைப்படுத்தவேண்டும் என்று போராடியதா என்று கேட்டால் கிடையாது. அன்று நாங்களும் சமூக இயக்கங்கள்தான் அதற்காகப் போராடினோம். எங்களுக்கும் இந்தத் தீர்ப்பைப் பற்றிய புரிதல் அப்போது கிடையாது. இதைத் தெரிந்துகொண்டும் போராடுவதற்கான வேலையைச் செய்யவில்லை.

இந்தத் தீர்ப்பு 2014 செப்டம்பர் மாதம் 11 வந்தது. இந்த அற்புதமான தீர்ப்பு வந்தும் தமிழகத்தினுடைய ஆற்றில் நடந்த கொள்ளையைத் தடுப்பது நிற்கப்படவில்லை, தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. தீர்ப்பு வந்தால் மட்டும் இது நின்றுவிடாது, குழு அமைக்கப்பட்டால் மட்டும் நின்றுவிடாது, இந்தக் குழு செயல்பாட்டுக்குப் போனால்தான் இது நிற்கும் என்ற அடிப்படையிலே சகாயம் அவர்களின் ஆய்வுக்குழுப்பணிக்கு உத்தரவிடப்பட்டவுடன் உடனடியாக தமிழ்நாடு முழுக்க கூடங்குளம் அணுஉலைப் போராட்டத்தில் இருந்தவன் என்ற முறையிலும், ஏற்கனவே சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகளிலே கடந்த பத்தாண்டுகளாக இருந்தவன் என்ற முறையிலும் தமிழ்நாடு முழுக்க இருக்கக்கூடிய சூழல் சார்ந்த செயல்பாடுகளில் அக்கறை உள்ளவர்களை, லஞ்ச ஊழல் ஒழிப்பு செயல்பாடுகளில் அக்கறை உள்ளவர்களை மட்டும் இணைத்து சென்னையிலே ஒரு ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி அக்டோபர் மாத இறுதியிலே கனிமவள முறைகேடு சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம் என்ற ஒரு அமைப்பை துவங்குவது என்று முடிவு செய்தோம்.

இதை முடிவு செய்து எல்லா மாவட்டங்களிலும் இதற்கான அமைப்புகளை அமைப்பது, எல்லா கட்சிகளின் ஆதரவைப் பெற்றோம். ஏனென்று சொன்னால் சகாயம் அவர்களுக்குத் தீர்ப்புக் கொடுத்தபோது, உடனடியாக தமிழக அரசு அப்பீலுக்குச் சென்றது உச்சநீதிமன்றத்திற்கு. சகாயம் அவர்களை நியமிக்க வேண்டியதில்லை, ஏற்கனவே அங்கே சிறப்பாகச் செய்வோம் என்று உச்சநீதிமன்றம் அதை தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்றம் சொன்னது சரிதான் இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லியும், அதற்குப் பின்பும் சகாயத்திற்கு எந்த விதமான உதவிகளையும் தமிழக அரசு செய்துதரவில்லை. நீதிமன்றம் உத்தரவைப் போட்டுவிட்டு அமைதியாக இருந்துவிட்டது. அதற்குப் பின்பு சில வழக்கு போட்ட ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மீண்டும் நீதிமன்றத்திற்குச் சென்று சகாயம் பல விவரங்களை, உதவிகளை தமிழக அரசிடம் கேட்டிருக்கிறார், இதை செய்து கொடுக்கவேண்டும் என்றும் சகாயம் அவர்களுக்கு ஏற்கனவே மதுரை மாவட்ட ஆட்சியாளராக இருந்த காலத்திலே அவர் கிரானைட் முறைகேட்டை வெளிகொண்டுவந்ததற்காக அவர் மீது பல்வேறுவிதமான தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது, எனவே அவருக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டுமென தலைமைச் செயலாளருக்கு 2012லேயே கடிதம் எழுதியிருக்கின்றனர்.

அவருக்கு பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை என்ற பல விவரங்களை எடுத்துச்சென்ற பொழுது நீதிமன்றம், சகாயம் அவர்கள் கேட்டதை தமிழக அரசு செய்துதரவேண்டும், அதே போல அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யவேண்டும் என்ற உத்தரவைக் கொடுத்து, ஏனெனில் தமிழக அரசு செய்யாது என்று தெரியும், காரணம் கனிமவள முறைகேடு என்பது தமிழகத்தில் நடந்த ஏன் இந்தியாவில் நடந்த முறைகேட்டில் மிகப்பெரிய முறைகேடு. தமிழகத்திலே தாதுமணல், ஆற்றுமணல், கிரானைட் இந்த மூன்றில் மட்டும் முப்பது லட்சம் கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்கிறது என்று நாங்கள் மதிப்பீடு செய்திருக்கிறோம். இன்று இந்தியாவில் மிகப்பெரிய ஊழலாகப் பேசப்படுவது இரண்டு. ஒன்று 2G ஒரு லட்சத்து எழுபத்து ஆறாயிரம் கோடி, இன்னொன்று நிலக்கரி இரண்டரை லட்சம் கோடி ஊழல். அதை விட மிகப்பெரிய ஊழல் முப்பது லட்சம் கோடி ஊழல் இந்தக் கனிமவள கொள்ளையிலே நடந்திருக்கிறது. இதை வெளிக்கொணரவேண்டும் என்ற நோக்கத்திலே இந்த அமைப்பைத் துவங்கினோம்.

இதைத் துவங்கும் பொழுது நாங்கள் பணியாற்றிய கூடங்குளம் பகுதியில் இருக்கக்கூடிய மீனவ மக்கள் கூட எங்களை எச்சரித்தார்கள். இந்த வேலையை நீங்கள் செய்யப்போகிறீர்கள், உங்களை உயிரோடு விடமாட்டார்கள். உங்களைக் கொன்று விடுவார்கள், வேண்டாம் நீங்கள் எங்களுக்கு வேண்டும், நாட்டிற்கு வேண்டும் என்று சொன்னார்கள். நான் தெளிவாகச் சொன்னேன் “கடந்த மூன்றரை ஆண்டு காலம் இடிந்த கரையிலே நான் இருந்தேன், இடிந்த கரையிலே வாழ்ந்தேன், நீங்கள் உணவைக் கொடுத்து என்னைப் பாதுகாத்தீர்கள், உங்களுடைய பெற்ற மகனைப் போல அதற்கும் உயர்வாக ஒவ்வொரு நாளும் காவல்துறையாலும், எதிரியாலும் எங்களுக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்று பலநூற்றுக்கணக்கான நபர்கள் தினசரியும் நாங்கள் தங்கியிருந்த இடத்தைச் சுற்றிலும் பாதுகாப்பு கொடுத்து, இந்த மண்ணிலிருந்து இந்த கடலோரப்பகுதியிலிருந்து எத்தனையோ பேர் படித்து பெரிய பொறுப்புகளில் இருக்கிறார்கள், பங்குத் தந்தைகளாகஇருக்கிறார்கள். ஆனால் யாரும் இந்த உண்மைகளை பேசத்தயாரில்லாத நிலை இன்றுவரை இருக்கிறது. தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் கட்சிகள் பேசவில்லை. இந்தத் தாதுமணல் கொள்ளைப் பற்றி ஒரு நூலை நான் எழுதியிருக்கிறேன் என்று சொன்னால் அதற்கான மிக அடிப்படையான காரணம் யாரும் பேசாததால்தான். 25 ஆண்டுகாலம் இந்த மக்கள் எண்ணற்ற போராட்டம் நடத்தியிருக்கிறார்கள், உயிர் தியாகம் செய்திருக்கிறார்கள், இன்றுவரை எப்படி சாகிறோம் என்று தெரியாமலே செத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த நாட்டினுடைய வளம் பல லட்சம் கோடி கொள்ளைபோய்க் கொண்டிருக்கிறது. இந்த உண்மையை நான் பேசுகிறேன். எங்கேயோ நூறு கிலோ மீட்டர் தள்ளி ஈரோட்டிலே பிறந்த நான் கூடங்குளத்திலே இருந்து இடிந்த கரையிலே இருந்து போராட்டத்தை நடத்த பாதுகாப்பு கொடுத்தீர்கள். இந்த வேலையைச் செய்வதற்காக என்னுடைய உயிர் பறிக்கப்படுமேயானால், நான் கொலை செய்யப்படுவேயேனால் அதை மிகவும் மகிழ்வாக வரவேற்கிறேன்” என்று சொல்லித்தான் இந்த இயக்கத்தைத் துவங்கும்போதும் சொன்னோம். இதை நாங்கள் தமிழ்நாடு முழுக்க எடுத்துச் செல்லவேண்டும் என்ற முனைப்பிலே இருந்த பொழுது தமிழக அரசு மீண்டும் மீண்டும் சகாயம் அவர்களை செயல்படாமல் வைக்கவேண்டும் என்று சொல்லி கடைசியாக மதுரைக்கு மட்டும் அவருக்கு கிரானைட் முறைகேடுக்கான அனுமதியை மட்டும் கொடுத்தது. அதற்குக் கொடுத்தது கூட தமிழக அரசுக்கு உள்நோக்கம் இருந்தது.

தமிழக அரசு சகாயம் அவர்கள் கிரானைட் முறைகேட்டைப் பற்றி 2012 மே 19ந்தேதி தமிழக அரசின் தொழில்துறைக்கு 16338 கோடி ஊழல் நடந்திருக்கிறது என்ற அறிக்கையைக் கொடுத்தார். கொடுத்த நூறுமணி நேரத்தில் மாற்றப்பட்டார் மே 23 2012. அதற்குப் பின்பு யாரும் இதைப் பற்றி பேசவில்லை. இந்தப் பணிகளைப் பற்றி யாரும் பேசவில்லை, இந்த அறிக்கையைப் பற்றி யாரும் பேசவில்லை. சகாயம் அவர்களை மாற்றி அன்சுல் மிஸ்ரா அவர்களை மாவட்ட ஆட்சியராக தமிழக அரசு நியமித்தது. 2012 மே மாதம் சென்றது, சூன் மாதம் சென்றது, சூலை மாதம் 31ம் தேதியில்தான் புதிய தலைமுறை தொலைக்காட்சியிலும், சென்னையைச் சேர்ந்த ஒரு ஊடக நண்பர் அதை தகவல் உரிமைச் சட்டத்திலே பெற்று ஒரு நூலாக பத்திரிகையாளர் மன்றத்திலே வெளியிட்டார். அதன்பின்புதான் தமிழகத்தில் இந்த கிரானைட் கொள்ளை பேசப்பட்டது. சகாயம் ஏன் மாற்றப்பட்டார் என்பது பூடகமாக பேசப்பட்டதே ஒழிய, பகிரங்கமாகப் பேசப்படவில்லை. இதற்காக நாங்கள் எண்ணற்ற வேலைகளைச் செய்தோம் இந்த அறிக்கையை வெளிக்கொண்டுவருவதற்கு. இந்த 16338 கோடி ரூபாய் ஊழல் 75 நாட்கள் கழித்து ஊடகத்திலே வந்த பின்புதான் தமிழக அரசு அவசர அவசரமாக அன்சுல் மிஸ்ரா தலைமையிலே ஒரு குழு அமைத்தது. இந்தக் குழு அமைத்தது எதற்காக என்று சொன்னால் இது ஏற்கனவே 2G போலவோ, நிலக்கரி போலவோ உச்சநீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பிலே வந்து. சிறப்புக் குழு அமைத்து இந்த முறைகேட்டை கண்டுபிடிக்கக்கூடாது என்பதற்காகத்தான் அன்சுல் மிஸ்ரா அவர்களை அமைத்தார்கள்.

அன்சுல் மிஸ்ரா மிகச்செறிவான ஆய்வு செய்தார். அனைத்து முறைகேடுகளையும் ஆய்வு செய்துமுடித்தார். முடித்துவிட்டு அவர் செய்த ஒரே ஒரு தவறு என்னவென்றால் எல்லா ஆய்வையும் முடித்துவிட்டு முறைகேட்டைப்பற்றி அரசுக்கு அறிக்கை மட்டும் கொடுத்திருந்தால் பிரச்சனையில்லை, இவர் ஒரு முன்மொழிதல் வைத்தார். என்ன முன்மொழிதல் என்றால் இங்கே இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட முறைகேடான கற்கள் கண்டறியப்பட்டிருக்கிறது. இங்கே இருக்கக்கூடிய ஒவ்வொரு கல்லும் அரசு விலைக்கு வைத்தால் மேலூரிலே கிடைக்கக்கூடிய மேலூர் white என்று சொல்லக்கூடிய கல் ஒரு கன மீட்டர் ஒன்றேகால் லட்சம் ரூபாய், நீங்கள் பார்க்கக்கூடிய ஒரு கிரானைட் கல் ஐந்து கனமீட்டரிலிருந்து 12 கனமீட்டர் கொண்டது. ஒரு கல்லின் விலை 7 லட்சம் ரூபாயிலிருந்து 15 லட்சம் ரூபாய். மேலூர் white என்று சொல்லக்கூடிய கல்லும் பொக்கிச மலையிலே எடுக்கக்கூடிய Yellowwhite என்ற கல்லும். Kashmir whiteஎன்ற கற்கள் எண்பது ஆயிரம் ரூபாய், ஒரு கனமீட்டர் கொண்டது. ஒரு கல் என்பது 5 கனமீட்டரிலிருந்து 12 கனமீட்டர் வரும். இதை உள்ளுர் விலைக்கு வைத்தால் ஒரு கல் என்பது மொத்தமாக ஒரு லட்சம் ரூபாய்க்குத்தான் போகும். ஆனால் சர்வதேச அளவில் விற்றால் 10 லட்சம் ரூபாய்க்கு அரசுக்குக் கிடைக்கும் என்ற ஒரு முன்மொழிதலை அவர் வைத்தார்.

இதை வைத்ததற்காகவே அவரும், அவருக்கு முழுக்க ஆய்வுக்கு உதவியாக இருந்த காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் அவர்களும் மாற்றப்பட்டார்கள். இது பேசப்பட்ட பொழுது, சகாயத்தை மதுரைக்கு மட்டும் அனுப்பினார்கள், எதற்கு மதுரைக்கு மட்டும் அனுப்பினார்கள். சுகாயத்தை மதுரைக்கு அனுப்பினால் ஏற்கனவே எல்லா ஆய்வும் பண்ணிவிட்டார். சகாயம் சென்று என்ன செய்வார், மதுரையை மட்டும் ஆய்வு செய்து விபரத்தைக் கொடுப்பார் என்ற அடிப்படையில்தான் அனுப்பினார்கள். எங்களைப் போன்ற சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நாங்கள் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த வேண்டும். நாங்கள் அமைக்கும் பொழுதே வெறும் பொருளிழப்பு என்ற விசயத்தில் இதைப் பார்க்கக்கூடாது. இயற்கை சேதாரம் நடக்கும் பொழுது வெறும் பொருள் இழப்பு மட்டுமல்ல, அங்கே சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. உயிர் பண்மைச்சூழல் பாதிக்கப்படுகிறது, இயற்கை வளம் அழிக்கப்படுகிறது, நீராதாரம் அழிக்கப்படுகிறது, நீர் வளம் அழிக்கப்படுகிறது, விவசாயம் அழிக்கப்படுகிறது, குடியிருப்பு அழிக்கப்படுகிறது, மக்களின் குடிநீர் ஆதாரம் அழிக்கப்படுகிறது. அங்கே இருக்கக்கூடிய மலைகளில் இருந்த உயிரினங்கள் ஓடியிருக்கிறது, அங்கே இருந்த வெடிகளால் அருகில் இருந்த பகுதிகள் பாதிக்கப்பட்டிருக்கிறது, தொல்லியல் சின்னங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது, மீன் வளம் பாதிக்கப்பட்டிருக்கிறது. இது அனைத்தையும் மக்கள் புகாராக சொல்ல வேண்டும். நாங்கள் சகாயம் ஆய்வுக்குழு என்பது வேறு ஒன்றுமல்ல, மக்களிடம் சென்று நீங்கள் புகார் கொடுங்கள், உங்களுக்கு புகார் கொடுப்பதற்கு பயமாக இருந்தால் எங்களிடம் கொடுங்கள் நாங்கள் கொடுக்கிறோம்.

எங்களிடம் கொடுக்கக்கூடிய புகாரை நாங்கள் உடனடியாக எங்களுடைய இணையப்பக்கத்தில், முகநூல் பக்கத்தில் சொல்லிவிட்டு கொண்டு போய் கொடுப்போம் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துவதற்கு. காரணம் இந்தப் பகுதிகளில் எல்லாம் இவர்கள் கிரானைட்டை, ஆற்றுமணலை, தாதுமணலை எடுப்பவர்கள் ஏதோ தொழில் மட்டும் செய்யவில்லை, அவர்கள் மிகப்பெரிய கொள்ளை சாம்ராஜ்யத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழில் கொள்ளை என்ற வார்த்தைக்கு மேல் சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. இதில் கொள்ளை என்பதை எண்ணற்ற வார்த்தைகளில் சொல்லலாம் லஞ்சம், ஊழல், சமூக அழிப்பு, சமூக புறக்கணிப்பு, இயற்கை வளம் அழிப்பு, சுற்றுச்சூழல் அழிப்பு, விவசாயம் அழிப்பு இதுமட்டுமல்ல மனித வளங்கள் அழிப்பு இப்படி எண்ணற்ற விடயங்களைப் பேசலாம். சமூக வன்முறைகள், ஊருக்குள் கலவரத்தை உருவாக்குதல், ஊரை அழித்தல் என்று எண்ணற்ற விடயங்களை சொல்லலாம். இத்தகைய மிகப்பெரிய கொள்ளையர்கள்தான் தமிழ்நாட்டின் அரசியலை தீர்மானிப்பவர்களுக்கு பக்கபலமாக இருக்கக்கூடியவர்கள். எனவே இந்த உண்மைகளை, சகாயம் ஆய்வுக்குழு முழுமையாக வெளியே செயல்படவேண்டும் என்று சொன்னால் வெளியே சமூக இயக்கங்கள் இதற்காக வலிமையாக செயல்படவேண்டும் என்ற அடிப்படையிலே இந்த இயக்கத்தைத் துவங்கினோம்.

இந்த இயக்கத்தை மக்கள் மத்தியிலே பிரச்சாரத்தின் மூலம் கொண்டு சென்றோம். அரசு ஏராளமான தடைகளைச் செய்தது. இந்த இயக்கச் செயல்பாடுகளுக்கு அத்தனை தடைகளையும் முறியடித்தோம். உதாரணத்திற்குச் சொல்லவேண்டும் என்று சொன்னால் நாங்கள் ஒரு பைக்கில் சென்று மதுரை மாவட்டத்திலே துண்டறிக்கை பிரச்சாரம் செய்யவேண்டும் என்று முடிவு செய்து வேலையைச் செய்த பொழுது நீங்கள் இருசக்கர வாகனத்தில் சென்று துண்டறிக்கை வினியோகித்தால் ரோட்டில் ஒலி மாசும், புகை மாசும் ஏற்படும் என்று சொல்லி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பைக்கில் போகக்கூடாது என்ற கடிதத்தை கொடுத்தார். இருசக்கர வாகனத்தில் சென்றால் ஒலி மாசும், புகை மாசும் ஏற்படும் என்ற ஒரு கடிதத்தைக் கொடுத்தார்கள், என்ன அநியாயம் ஒரு நாளில் லட்சக்கணக்கான வாகனம் சாலையில் சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் ஐம்பது இருசக்கர வாகனத்தில் நூறு பேர் சென்றால் ஒலிமாசும், புகை மாசும் ஏற்படுமாம். இந்த அரசு எவ்வளவு கீழ்த்தரமான அரசு. சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம் செயல்படக்கூடாது என்று சொல்லி என்னென்ன செய்கிறார்கள்.நாங்கள் பத்திரிகையில் செய்தி கொடுக்கிறோம், இணையங்களில் சொல்கிறோம், தொலைக்காட்சியில் விவாதிக்கிறோம், மக்கள் மத்தியிலே விழிப்புணர்வாக மாற்றி எல்லோரும் உண்மையைச் சொல்லுங்கள் என்று சொல்கிறோம்.

உங்களுடைய பாதிப்புகளை சகாயத்திடம் சொல்லுங்கள் என்று சொல்கிறோம். ஏற்கனவே அன்சல் மிஸ்ரா அவர்களும் பாலகிருஷ்ணா அவர்களும் ஆய்வு செய்த பொழுது மக்களுக்கு அரசே செய்கிறது என்று முழு நம்பிக்கை இருந்தது. அதனால் மக்கள் தைரியமாக வந்து சொன்னார்கள். சகாயம் அவர்கள் தங்குகின்ற அறையிலேயே ஒட்டுக்கேட்கின்ற கருவியை வைக்கின்ற அரசு, சகாயம் அவர்களுடைய அலைபேசியை ஒட்டுக்கேட்கின்ற அரசு, சகாயம் அவர்களிடம் புகார் கொடுக்கக்கூடியவர்களை துப்பாக்கியைக் காட்டி காவல்துறையை வைத்து மிரட்டுகின்ற அரசு, தாக்குதலை நடத்துகின்ற அரசு இருக்கும் பொழுது எப்படி சகாயம் அவர்களிடம் உண்மையை சொல்ல மக்கள் தைரியமாக வருவார்கள். எனவே தைரியமாக வரவைக்கவேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம் இது. இதன் விளைவு பலநூற்றுக்கணக்கான பேர் மதுரை மாவட்டத்தில் சகாயம் அவர்களுக்கு சொல்லி பல உண்மைகளும் சகாயம் அவர்களும் அவரது அறிவுக் கூர்மையால் அவரது பல்வேறு நடைமுறை அனுபவத்தால் இந்த மக்கள் மீது கொண்ட பற்றால் எண்ணற்ற வழிமுறைகளை மேற்கொண்டு அரசு என்பது சகாயத்தை ஒரு நேர் எதிரியாக நின்று அணுகிவருகிறது இன்று வரை.

சகாயம் அவர்களை நாம் நேரில் சந்திப்பதில்லை, ஊடகங்கள் வழியாக பார்க்கிறோம். ஏனென்றால் அதற்கு அவசியமில்லை, நாம் ஒரு வேலையைச் செய்கிறோம், அவர் ஒரு அரசு ஊழியர் அவர் அவரது வேலையைச் செய்கிறார். நாங்கள் சமூகக் கடமை என்ற முறையிலே செய்கிறோம். அவருக்கு அரசு கொடுக்கின்ற நெருக்கடிகளை நாம் ஊடகங்கள் வழியாக பார்த்து வருகிறோம். ஒரு அதிகாரியை நள்ளிரவிலே கதவைத்தட்டி காலி பண்ணுங்கள் என்று சொல்கிறார்கள் என்றால் என்ன ஒரு கொடுமை. இந்த நாட்டில் ஆட்சியா நடக்கிறது.

சகாயம் அவர்களின் ஆய்வுப்படி முழுமையாக நடைபெற இந்த நாட்டில் நமக்குக் கிடைத்த ஒரு நல்வாய்ப்பாக இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மலையை வெட்டுவதற்கு எட்டுமாத காலம் உழைத்தவன் நான் என்ற அடிப்படையிலே, கடந்த இருபத்து ஐந்து ஆண்டு காலத்திற்கு மேலாக நம் நாட்டில் நடந்த அனைத்து கனிமவள முறைகேடுகளையும் குறிப்பாக தாதுமணல், ஆற்றுமணல், கிரானைட் முறைகேடுகளை வெளிக்கொண்டுவருவதன் மூலம் இந்த நாட்டில் பேசப்படாத பல விடயங்கள் பேசப்பட வேண்டும். இந்த மக்களினுடைய அவலங்கள் வெளியே உணர்த்தப்படவேண்டும் என்ற நோக்கிலே இதில் முப்பது லட்சம் கோடி ஊழல் என்ற ஒன்றே தனியாக மாட்டலாம். ஆனால் இன்றுகூட இந்தப் பிரச்சனைகளை எங்களைப் போன்றோர் பேசுகின்றோமே ஒழிய, அரசியல் இயக்கங்கள் இதற்காக என்ன செய்திருக்கிறது. ஒரு அறிக்கை, சகாயம் அவர்களுக்கு அரசு ஒத்துழைக்க வேண்டும். அதற்குமேல் யாரும் எதுவும் செய்யவில்லை. தெருவில் இறங்கி போராடவேண்டுமல்லவா.

இன்று மக்களிடம் பேசவில்லை என்றால் மக்கள் ஆதரவை அவர்கள் இழப்பார்கள். எனவே அதற்காக பேசுகின்றனரே ஒழிய உண்மையிலேயே சகாயத்தின் ஆய்வுக்குழு முழு வெற்றியடையவேண்டும் என்று இங்கே உள்ள ஆண்ட, ஆளும் கட்சிகளும் மிக வலுவாக இருக்கக்கூடிய கட்சிகளும் விரும்பவில்லை என்பதுதான் யதார்த்தமான உண்மை. ஏனென்றால் இந்த கொள்ளையர்களின் பணம்தான் இன்று இவர்களுடைய பல்லாயிரம் ஓட்டுக்கு பத்தாயிரம், இருபதாயிரம் என்று கொடுக்கக்கூடிய அளவிற்கு பணம் இருக்கிறது என்று சொன்னால், எல்லாம் இவர்கள் கொள்ளையடித்து வந்த ஒரு பங்கு என்பதுதான். எனவே சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம் என்பது மக்கள் மத்தியில் எடுத்துச்சென்று மக்கள் தைரியமாக தங்களுடைய புகார்களை வெளிக்கொணரவேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட அமைப்பானது தொடர்ந்து வேலைளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறோம். தமிழ்நாடு முழுக்க இருக்கக்கூடிய கனிமவள முறைகேடுகளைப் போக்க ஒரு நல்வாய்ப்பாகக் கருதி சகாயம் அவர்கள் மூலம் எடுத்துச்செல்வதற்கான அனைத்து வேலைகளையும் நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம். இதற்காக பல்வேறு சட்ட வல்லுனர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

சிறகிற்காக நேர்காணல் அளித்தமைக்கு மிக்க நன்றி.

சிறகு

எழுதியவர் : சிறகு சிறப்பு நிருபர் (20-Jun-19, 1:17 am)
பார்வை : 227

சிறந்த கட்டுரைகள்

மேலே