மானமுடையார் மரபு நிலைகுன்றி ஈனமடையார் இழிந்து - ஆண்மை, தருமதீபிகை 286

நேரிசை வெண்பா

வானுடைந்து வீழ்ந்தாலும் மண்ணிடிந்து தாழ்ந்தாலும்
ஊனடைந்த சீவன் ஒழிந்தாலும் - தானடைந்த
மான முடையார் மரபு நிலைகுன்றி
ஈனம் அடையார் இழிந்து. 286

- ஆண்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வானம் உடைந்து விழுந்தாலும், மண் இடிந்து பேர்ந்தாலும், உயிர் ஒழிய நேர்ந்தாலும் மானமுடைய ஆண்மையாளர் மரபு நிலை திரிந்து இழிந்து ஈனமடைய நேரார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஆன்ம உரிமையாய் அமைந்துள்ள மேன்மையைத் ’தானடைந்த’ என்றது. மதிப்பும் மரியாதையும் சுதந்திர உணர்ச்சியும் நிரந்தரமாக நிலைத்துள்ள நீர்மை, மானம் எனும் போல் மருவி யுளது.

மரபு நிலை - தலைமுறையாகத் தழுவி வந்த மேலோரது நெறி முறை. பான்மை அளவே மேன்மை மிளிரும்.

எவ்வளவு துன்பங்கள் நேர்ந்தாலும் எத்தனை சோதனைகள் எதிர்ந்தாலும் உத்தம சீலர்கள் தமது நிலைமை குலையாமல் தலைமையுடன் நிலைத்து நிற்பர் என்பதை இது உணர்த்துகின்றது.

வான் உடைதல், மண் இடிதல் என்றது எவரும் அஞ்சி நடுங்கும்படியான கொடிய நெடிய அபாய நிலைகளை உபாயமாக அறிவுறுத்த வந்தது. உலகம் பிரளயமாய் உலைந்து படினும் உயர்ந்தோர் தம் உள்ளம் பிறழார் என்னும் உறுதி நிலையை உறுதியாகத் தெளிவுறுத்த மூன்று இறுதி நிலைகள் தோன்றி நின்றன.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
ஆழி எனப்படு வார். 989 சான்றாண்மை

உயர்ந்த பெருந்தகையாளர் நிலைமையை வரைந்து காட்டியிருக்கும் இது நினைந்து சிந்திக்கத் தக்கது. ஆழி - கடல்.

உலக சிருட்டிகள் தலை தடுமாறினும் உயர்ந்தோர் நிலை தடுமாறார் என்றமையால் அவரது உள்ளப் பான்மையும் உறுதி நிலையும் அறியலாகும்.

பரிசுத்தமான சித்தமுடையவர் பரம ஆன்மநிலையைப் பற்றி நிற்றலால், அவர் எது நேர்ந்தாலும் எவ்வழியும் கலங்காமல் செவ்விய சீர்மையில் சிறந்து நிற்கின்றார்

கட்டளைக் கலித்துறை

உலகு கலங்கினும் ஊழி திரியினும் உள்ஒருகால்
விலகுதல் இல்லா விதியது பெற்றநல் வித்தகர்காண்
அலகில் பெருங்குணத்(து) ஆரூர் அமர்ந்த அரனடிக்கீழ்
இலகுவெண் ணீறுதம் மேனிக்(கு) அணியும் இறைவர்களே.

என்னும் இத்திருமுறைப் பாசுரம் உரவோர் நிலைமையை உணர்த்தியுள்ளது.

கட்டளைக் கலித்துறை

மண்பா தலம்புக்கு மால்கடல் மூடிமற்(று) ஏழுலகும்
விண்பால் திசைகெட்(டு) இருசுடர் வீழினும் அஞ்சல்நெஞ்சே!
திண்பால் நமக்கொன்று கண்டோம் திருப்பா திரிப்புலியூர்க்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே. 9 - 094 திருப்பாதிரிப்புலியூர், திருநாவுக்கரசர் தேவாரம், நான்காம் திருமுறை

வானம் துளங்கிலென்? மண்கம்பம் ஆகிலென்? மால்வரையும்
தானம் துளங்கித் தலைதடு மாறிலென்? தண்கடலும்
மீனம் படிலென் விரிசுடர் வீழிலென்? வேலைநஞ்சுண்(டு)
ஊனமொன்(று) இல்லா ஒருவனுக்(கு) ஆட்பட்ட உத்தமர்க்கே. 8 - 12 பொது, திருநாவுக்கரசர் தேவாரம், நான்காம் திருமுறை

திருநாவுக்கரசர் தம் நெஞ்சை நோக்கியும் உலகை நோக்கியும் கூறியுள்ள இவ்வுரைகளால் அவருடைய உள்ளத்திண்மையும் உத்தம பத்தியும் ஞான வைராக்கியங்களும் நன்கு புலனாகின்றன:

ஞான சீலரும் மான வீரரும் யாண்டும் நிலை குலையாமலும், நெறி பிறழாமலும் நின்று விளங்குகின்றார்,

ஈன நிலைகளில் யாதும் இழியாமல் எவ்வழியும் மானம் பேணி மதிப்புடன் வாழ வேண்டும்; அதுவே உயர்ந்த மனிதத் தன்மையாம். அத்தன்மை தழுவி நன்மை யுறுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jun-19, 9:20 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

மேலே