ஆசில் புகழ்வரின் தம் ஆருயிரும் வீசத் துணிந்து விரைகுவார் - மேன்மை, தருமதீபிகை 296

நேரிசை வெண்பா

ஆசில் புகழ்வருவ(து) ஆயின்தம் ஆருயிரும்
வீசத் துணிந்து விரைகுவார் - நீசப்
பழிஎனினோ வான்வரினும் பற்றாருள் அஞ்சி
ஒழிவர் பெரியர் உணர். 296

- மேன்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சிறந்த பெரியோர்கள் புகழுக்காகத் தமது அரிய உயிரையும் கொடுத்து விடுவர்; சுவர்க்க போகம் வருவதாயினும் பழிபட அவர் இசையார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

குற்றமற்ற நல்ல கீர்த்தியை ‘ஆசு இல் புகழ்’ என்றது, ஆசு – குற்றம்; மாசுபடாமல் வருவது தேசுடையது.

புகழ் என்பது சிறந்த நன்கு மதிப்பு. உயர்ந்தோரால் புகழ்ந்து பேசப்படுவது புகழ் என வந்தது. புண்ணியத்தின் மணமாய் மனிதரைக் கண்ணியப்படுத்தி வருதலால் புகழை எவரும் எண்ணி மகிழ்கின்றார்.

இழிவான தீமையைப் பழி எனப்பட்டது. உலகத்தாரால் பழிக்கப்படுவது பழி என நேர்ந்தது. இது பாபத்தின் துணையாய் உயிர்களைப் பாழ்படுத்தி விடும்.

மேலோர் புண்ணிய சீலராதலால் யாண்டும் புகழையே பேணி ஒழுகுவார். அரிய உயிரினும் அதனை உரிமையாக அவர் கருதி வருகின்றார்.

புகழ் வருவதாயின் தம் உயிரும் வீச விரைகுவார் என்றது மேன்மையாளரது உள்ளப் பான்மையும் உறுதி நிலையும் உணர வந்தது. புகழும் புண்ணியமும் சீரியர் உரிமைகள் ஆகின்றன.

பிறர்க்கு உபகாரமான நிலைகளில் தமது உடல், பொருள், ஆவி முழுவதையும் உவந்து கொடுக்கும் கொடைப்பண்பு பெரியோர்களிடம் இயற்கையாக அமைந்திருத்தலால் உரிய சமயம் வரும்போது உயிரை அவர் எளிதே உதவி விடுகின்றார்.

பழி எனினோ வான் வரினும் பற்றார் என்றது தேவபோகங்கள் யாவும் ஒருங்கே தருகின்றேன்; பழியான சிறிய ஒரு பிழை செய்க என இந்திரனே நேரே வந்து இரந்து வேண்டினும் பெருந்தகையாளர் யாதும் இசையார்.

அவரது ஆன்ம பரிபாகமும் அதிசய அமைதியும் எவரும் துதி செய்து தொழும்படி துலங்கி நிற்கின்றன.

புகழெனின் உயிரும் கொடுக்குவர்; பழியெனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர். 182

வாணன் வைத்த விழுநிதி பெறினும்
பழிநமக்(கு) எழுக என்னாய் விழுநிதி
ஈதல் உள்ளமொ(டு) இசைவேட் குவையே. – மதுரைக்காஞ்சி

மேன் மக்களுடைய பான்மைகளைக் குறித்து வந்திருக்கும் இவை இங்கே சிந்திக்கத் தக்கன.

பழி எனின் அஞ்சி ஒழிவர் என்றது அஞ்சாத ஆண்மையாளரான அவர் அஞ்சி நிற்கும் இடம் தெரிய வந்தது.

கீழான பழியைக் கண்டபொழுது மேலோர் உள்ளம் குலைந்து அருவருத்து ஒதுங்குவராதலால் அந்நிலைமையை அச்சச் சொல் உச்சமாக உணர்த்தி நின்றது.

இசையை விழைந்தும், வசையை வெறுத்தும் அசையா ஆண்மையுடன் மேலோர் அமர்ந்து நிற்கின்றார், அந்நிலைமையைத் தலைமையாக உலகம் உவந்து கொண்டாடுகின்றது.

The real poet, as he braves every hardship for fame, so is he equally a coward to contempt. - Goldsmith

‘உத்தமக் கவிஞன் கீர்த்திக்காக எதையும் துறக்கத் துணிகின்றான்; பழி எனினோ பதறி விடுகின்றான்” என்னும் இந்த ஆங்கில வாக்கியம் ஈங்கு ஊன்றி உணரவுரியது.

தீய பழியை வெறுத்து ஒதுங்கித் தூய புகழையே எவ்வழியும் போற்றிச்.சிறந்த புண்ணிய சீலனாய் யாண்டும் உயர்ந்து வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (20-Jun-19, 9:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே