விரதத்தின் விரிவகை - பிறர் பெண்ணொடு நண்ணன்மின் - கலி விருத்தம் - வளையாபதி 17

கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

கள்ளன் மின்,கள(வு) ஆயின யாவையும்;
கொள்ளன் மின்,கொலை கூடி வரும்அறம்;
எள்ளன் மின்,இலர் என்றெண்ணி யாரையும்;
நள்ளன் மின்,பிறர் பெண்ணொடு நண்ணன்மின். 17 வளையாபதி

பொருளுரை:

களவு என்று கருதப்படுகின்ற தொழில் வாயிலாய் எப்பொருளையும் கவர்தல் செய்யாதீர்கள்;

உயிர்க் கொலையோடு கூடி வருகின்ற தீய செயல்களை மேற்கொள்ளாதீர்கள்;

வறியவர் என்று நினைத்து யாரையும் இகழாதிருங்கள்;

ஆராயாமல் யாருடனும் நட்புக் கொள்ளாதீர்கள்;

பிறர் மனைவியரோடு உறவு கொள்ள விரும்பாதீர்கள்.

விளக்கம்:

களவு என்று பிறரால் கருதப்படும் செயல்களைச் செய்து எப்பொருளையும் கொள்ளாது விடுங்கள்!

கொலை கூடிவரும் அறம் என்றது வேதியர் வேத வேள்விகளை, சிறு தெய்வங்கட்கு உயிர்ப்பலி செய்து வழிபடுதல் முதலியன.

யாரையும் நள்ளன்மின் என்றது, ஆராய்ந்து நல்லாரை நட்டலன்றிக் கண்டவரோ டெல்லாம் நட்புச் செய்யற்க என்றதாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Jun-19, 8:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே