அருளுடைமை 2 - அருளைப் பொருளால் அறஞ்செய்து பெறல் - கலி விருத்தம் - வளையாபதி 20

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

பொருளைப் பொருளாப் பொதிந்தோம்பல் செல்லா(து)
அருளைப் பொருளா அறம்செய்தல் வேண்டும்;
அருளைப் பொருளா அறம்செய்து வான்கண்
இருள்இல் இயல்பெய்தா தென்னோ நமரங்காள். 20 வளையாபதி

பொருளுரை:

எம் சுற்றத்தீரே! செல்வப் பொருளை மிகவும் ஈட்டுதலே மாந்தர்க்கு உறுதிப் பொருளாவது என்று கருதி அவற்றைக் கட்டி வைத்து மறைத்துக் காத்திராமல் அருளையே உறுதிப் பொருளாகக் கருதி அப்பொருளாலே நல்லறங்களைச் செய்தல் வேண்டும். அதுவே அறிவுடைமையாகும்.

அருளையே உறுதிப் பொருளாக உணரந்து நீங்கள் ஈட்டும் பொருளாலே அறங்களைச் செய்து அவ்வறத்தின் பயனாகிய மேல்நிலை உலக வாழ்வினைப் பெற்று இருட்டு இல்லாத ஒளியுடைய சுவர்க்க உலகை அடைய முயலாததற்குக் காரணம் என்னவோ? இப்பொழுதே தாங்கள் ஈட்டிய பொருளினால் அறச் செயல்களைச் செய்யுங்கள் என்கிறார் இப்பாடலாசிரியர்.

விளக்கம்:

பொருள் - செல்வப் பொருள். அவை பொன் மணி நெல் முதலியன.

பொருளாக என்ற ஆக்கச்சொல் இரண்டிடத்திலும் ஈறு தொக்க நின்றன.

பொருளாக - உறுதிப் பொருளாக, பொதிதல் - மறைத்து வைத்தல்.

ஓம்பல் செல்லாது – செல்வப் பொருளை மறைத்து வைத்துக் காத்திடாமல்

அருளே மேனிலையுலகில் ஒளியுடைய வாழ்க்கை நல்கும் உறுதிப் பொருளாக வுணர்ந்து எனப்படும்.

வான் - மேனிலையுலகம்.

அறம் – விருந்தோம்பல், ஈதல் முதலியன.

இருள்இல் இயல்பு - ஒளியுடைய தன்மையுடைய அமரவாழ்வு.

அருட்செல்வஞ் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள. 241 அருளுடைமை

பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; ஆனால், உயர்ந்தவரிடத்தில் மட்டுமே செல்வங்களில் சிறந்த செல்வமாகிய அருளாகிய செல்வ உள்ளது என்பதும்,

நல்லாற்றா னாடி யருளாள்க பல்லாற்றாற்
றேரினு மஃதே துணை. 242 அருளுடைமை

நல்ல வழியால் ஆராய்ந்து அருளுடையவர்களாக விளங்க வேண்டும்; பலவழிகளால் ஆராய்ந்து கண்டாலும் அருளுடையவர்களாக வாழ்வதே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும் என்பதும்,

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா வுலகம் புகல். 243 அருளுடைமை

அருள் நிறைந்த நெஞ்சம் உள்ளவர்களுக்கு, இருட்டான தீமைகள் நிறைந்த துன்ப உலகமாகிய நரகம் புகும் நிலை இல்லை என்பதும்,

அருளுடையோர் மேலுலகில் இருளில்லாத சொர்க்கம் அடையும் இயல்பு எய்துதல் உறுதி என்றும், அத்தகைய பேரின்ப வாழ்க்கையை நீங்கள் பெற முயலாதது ஏனோ? என்றும் இதனால் உணரப்படுகிறது.

இனி, பொருளால் வரும் பயன் அருளுடையராகி ஈதலே என்பதை,

செல்வத்துப் பயனே யீதல்
துய்ப்பே மெனினே தப்புந பலவே புறநா,169

எனவரும் நக்கீரனார் மொழியால் உணர்ந்து கொள்ள வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Jun-19, 9:03 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 43

மேலே