மேக்குயர்ந்த ஆக்கமே நாடித்தன் ஆண்மையுடன் நிற்கும் மேல் - ஆண்மை, தருமதீபிகை 289

நேரிசை வெண்பா

ஊக்கி விரைந்தே உறுகரியைக் கோளரிமுன்
தாக்கி அருந்தும் தகைமைபோல் - மேக்குயர்ந்த
ஆக்கமே நாடித்தன் ஆண்மையுடன் நிற்கும்மேல்;
காக்கை பிடிக்கும் கடை. 289

- ஆண்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

வலிய மதயானை மேல் விரைந்து பாய்ந்து அதனையே சிங்கம் உணவாக அருந்தி வருதல் போல் சிறந்த ஆண்மையாளர் உயர்ந்த ஆக்கத்தையே நோக்கி ஊக்கி நிற்பர்; அல்லாதவர் இழிந்ததையே விழைந்து கழிந்து படுவர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் உயர்ந்த குறிக்கோளுடன் வாழவேண்டும் என்கின்றது.

வலிய பெரிய மத யானையை உறுகரி என்றது. கோளரி - சிங்க ஏறு. எந்த மிருகத்தையும் கொன்று தொலைக்க வல்லது என்னும் குறிப்பில் வந்தது. கோள் - வலி.

மான் முதலிய எளிய பிராணிகளை விரும்பாமல் வலிய யானைகளையே சிங்கம் ஆய்ந்து பாய்ந்து உண்ணும்; அதுபோல் இழிந்ததை நாடாமல் உயர்ந்த நலங்களையே நோக்கி ஆண்மையாளர் அடைந்து கொள்வராதலால் அது இவர்க்கு உவமையாய் வந்தது.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

முலைமுதல் துறந்த அன்றே
..மூரித்தாள் ஆளி யானைத்
தலைநிலம் புரள வெண்கோ(டு)
..உண்டதே போன்று தன்கைச்
சிலையிடம் பிடித்த ஞான்றே
..தெவ்வரைச் செகுத்த நம்பி
நிலவுமிழ் குடையின் நீழல்
..துஞ்சுக வையம் என்பார். - சிந்தாமணி

சிங்கத்தின் இயல்பை விளக்கிக்காட்டி அத்தலைமையான நிலைமையுடையவன் என சீவக மன்னனை இவ்வாறு குறித்துள்ளனர்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

பிறந்திடும் சிங்கக் குட்டி
..பிறக்குமுன் குதித்துத் துள்ளி
மறந்தலைக் கொண்டு நால்வாய்
..மண்டையைப் பிளக்கச் செல்லும்
சிறந்திடும் தீர வீரச்
..சேவகர் சுபாவம் இவ்வா(று)
இறந்திடும் ஆயுள் மூப்போ(டு)
..இளமையும் குறித்தி டாரே. - பத்திர கிரியம்

வயதில் இளையராயினும் ஆண்மையாளர் உயரிய காரியங்களை முடித்தருளுவர்; யாண்டும் பங்கம் அடையாத சிங்க நிலையினர் என இங்ஙனம் அவரை நூல்கள் புகழ்ந்திருக்கின்றன.

மேல் ஆண்மையுடன் நிற்கும்; கடை காக்கை பிடிக்கும். என்றது மேலோர், கீழோர் என்னும் இருவர் நிலைகளையும் ஒரு முகமாயுணர்த்தியது. உயர்ந்த எண்ணங்கள் இன்றி இழிந்து கடைப்பட்டுள்ளவர் கடை என நின்றார்.

காக்கை பிடித்தல் என்றது வஞ்ச நெஞ்சராய்ப் பிறரை வீணே புகழ்ந்து இச்சகம் பேசி வயிறு வளர்க்கும் கொச்சை வாழ்க்கையைக் குறித்தது.

ஆண்மையாளர் மேன்மை எய்தி நிற்கின்றார்; அல்லாதவர் கீழ்மை உறுகின்றார். கடையனாய் இழிந்து படாமல் தலைமையாளனாய் மனிதன் நிலவி நிற்க வேண்டும் என வேண்டிய படியிது.

நல்ல எண்ணங்களை உடையவனிடம் எல்லா வலிமைகளும் தாமாகவே வந்து சேருகின்றன; அதனாலவன் அருந்திறலாளனாய்ச் சிறந்து எங்கும் சிங்கம் எனப் பொங்கிய சீர்த்தியுடன் பொலிந்து திகழ்கின்றான்.

The righteous are bold as a lion. - Bible

’நீதிமான்கள் சிங்கம் போல் தைரியசாலிகள்' என்னும் இது இங்கே அறியவுரியது. நரி, நாய்கள் போல் இழிந்து நில்லாமல் ’அரிய சிங்கம்போல் உயர்ந்து வருக’ என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jun-19, 9:47 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே