மேன்மக்கள் மற்றையர்பால் குற்றம் கண்டு கூர்ந்து சொலார் - மேன்மை, தருமதீபிகை 299

நேரிசை வெண்பா

கற்றுயர்ந்த மேன்மக்கள் கண்ணன்றி மற்றையர்பால்
குற்றம் குறைகண்டு கூர்ந்துசொலார் - வெற்றிமிகப்
பூண்பரிபால் அன்றியே புன்கழுதை பால்சுழிகள்
காண்பர் எவர்காண் கனிந்து. 299

- மேன்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

சிறந்த குதிரைக்குச் சுழிகள் பார்ப்பாரேயன்றி இழிந்த கழுதைக்கு ஒன்றும் பாரார்; அதுபோல் உயர்ந்த மேன்மக்களிடமே குற்றங்களைக் கூர்ந்து நோக்கி உலகத்தார் குறை சொல்லுவார்; மற்றையரிடம் யாதும் கூறார் என்கிறார் கவிராஜ பண்டிதர். இது உயர்ந்தவன் நிலைமையை உணர்த்துகின்றது.

கல்வி அறிவால் ஆன்ம ஒளி மிகுகின்றது; அதனால் மேன்மை விளைகின்றது; அவ்விளைவுக்கு மூலகாரணமாய் நிற்றலால் ‘கற்று’ என்னும் அடை உயர்வுக்கு உரிமை பெற்று வந்தது.

சிலர் கற்றிருந்தாலும் நல்ல ஒழுக்க நெறியில் நின்றுயராமல் இழிந்து கிடப்பராதலால் அத்தாழ்வில் வீழாமல் வாழ்வில் உயர்ந்த வகைமை தெரியக் கற்றலோடு உயர்தலும் கலந்து வந்தது.

கலைநலம் கனிந்து உலக நிலையில் தலைசிறந்து நிற்கும் பெரியோர் தமது நிலைமையை மிகவும் கண்ணூன்றிப் பாதுகாத்து வர வேண்டும்; சிறிது வழுவினும் பெரிய பழியாய் வெளிவர நேரும்.

மேலோரைப் பொதுமக்கள் கூர்ந்து கவனித்து ஓர்ந்து வருதலால் அவரிடம் சிறிய ஒரு குறை காணினும் அதனைப் பெரிதுபடுத்தி அவர் பேச நேர்கின்றார். அப் பேச்சுகள் ஏச்சுகள் ஆகின்|றன; ஆதலால் உயர்ந்தவர் எவ்வழியும் பிழை நேராமல் தம்மைப் பேண வேண்டியவராய்ப் பெருகி நிற்கின்றார்.

அறிவு நலம் குன்றிய இழிந்த மக்களை மற்றையர் என்றது. இவரிடம் உள்ள குறைகளை உலகம் கவனிப்பதில்லை. இவரை எவரும் ஒரு பொருளாக மதியாமையால் இவருடைய குற்றங்கள் மறைந்து போகின்றன.

நேரிசை வெண்பா

பெருவரை நாட! பெரியார்கண் தீமை
கருநரைமேல் சூடேபோல் தோன்றும்; கருநரையைக்
கொன்றன்ன இன்னா செயினும், சிறியார்மேல்
ஒன்றானும் தோன்றாக் கெடும். 186 நாலடியார்

பெரியோர் பிழை வெள்ளை மாட்டின் மேல் இட்ட சூடு போல் வெளியே தெளிவாய்த் தெரியும்; கொலை பாதகம் செய்யினும் சிறியோர் பழி யாதும் தெரியாது போம் என்னும் இது ஈண்டு உணர வுரியது.
கரை - வெள்ளை எருது.

நேரிசை வெண்பா

கன்றி முதிர்ந்த கழியப்பன் னாள்செயினும்
ஒன்றும் சிறியார்கண் என்றானும் - தோன்றாதாம்
ஒன்றாய் விடினும் உயர்ந்தார்ப் படுங்குற்றம்
குன்றின்மேல் இட்ட விளக்கு. 204 பழமொழி நானூறு

பல தீமைகளைச் செய்யினும் சிறியாரிடம் அவை தெரியாது மறையும்; பெரியோர் ஒரு சிறு பிழை செய்யினும் அது மலைமேல் விளக்குப் போல் நிலை ஓங்கி விளங்கும் என்றதனால் அவரது நிலைமை புலனாம்.

தூய வெள்ளை ஆடையில் கரிய புள்ளி போல் நல்ல தூயரிடம் சிறிய வழுவும் பெரிதாய்த் துலங்கித் தெளிவாய்த் தெரிகின்றது.

The fairer the paper, the fouler the blot.

‘தெள்ளிய நல்லோர் குற்றம் ஒள்ளிய வெள்ளைக் கடிதத்தில் துள்ளி விழுந்த கருங்கறை போல்வதாம்’ என ஆங்கிலப் பழமொழியும் இங்ஙனம் கூறியுள்ளது.

'கற்றுயர்ந்த மேன்மக்கள் கண்அன்றி மற்றையர்பால்
குற்றம் குறைகண்டு கூர்ந்து சொலார்’

என்றதனால் மேலோரது தலைமையும் கீழோரது நிலைமையும் வெளியாயின. நல்ல மாணிக்க மணிகளில் குற்றங்களைக் கூர்ந்து நோக்கிச் சோதிக்கின்றனர்; புல்லிய வெட்டுக் கற்களில் யாதும் பார்ப்பதில்லை.

மதிப்புடையதை உலகம் மதித்துப் பார்க்கின்றது. மதிப்பில்லாததை மிதித்துத் தள்ளி விடுகின்றது.

அவரது காட்சியும் மாட்சியும் கருதி மேன் மக்களைக் குதிரையோடு ஒப்ப வைத்தது. குதிரைக்குச் சுழி பார்ப்பது போல் மேலோரிடம் குற்றங்களைக் கூர்ந்து நோக்குகின்றார் என்றது அவருடைய குண நலங்களை ஓர்ந்து கொள்ள வந்தது.

நல்ல சுழியுள்ள குதிரையை வைத்திருப்பவனுக்கு எல்லா நலங்களும் உளவாம்; கெட்ட சுழியுடையது கேடு பயக்கும்.

எழுசீரடியாசிரிய விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

அணிகிளர் கழுத்தில் வலஞ்சுழித் திருந்தால்..
..அறிந்தவர் அதனையே தெய்வ
மணியென விசைப்பர்; முகந்தலை நாசி
..மார்புமிந் நான்குமிவ் விரண்டு
பணிதரு சுழியும் நுதனடுப் பின்னைப்
..பக்கமும் ஒவ்வொரு சுழியுந்
துணிதர விருப்ப(து) இலக்கணம் உளதிச்
..சுழியில திலக்கண வழுவே. 111

பிரிவுற வுரத்தில் ஐஞ்சுழி யுளது
..பேர்சிரீ வற்சமா நுதலில்
இருசுழி யாதன் முச்சுழி யாதல்
..இருக்கினும் நன்றது வன்றேல்
ஒருவற நான்கு சுழிவலம் புரியா
..வுள்ளது நல்லது வன்றி
இருசுழி முன்னங் கால்களின் மூலத்
..திருக்கினு நல்லதென் றிசைப்பார். 112

களநடு விரட்டைச் சுழியுடைப் பரிதன்
..கருத்தனுக் கறமிடி காட்டும்
அளவறு துன்ப மரணமுண் டாக்கும்
..அவைகணைக் காலுள வாகில்
உளபயந் துன்ப நிகளபந் தனமேல்
..உதடுமுற் காலடி கபோலம்
வளர்முழந் தாளிந் நான்கினுஞ் சுழிகண்
..மன்னினுந் தலைவனை வதைக்கும். 113 நரி பரியாக்கிய படலம், திருவாலவாய்க் காண்டம், திருவிளையாடற் புராணம்

இதில் குறித்துள்ள சுழி நிலைகளைக் கூர்ந்து நோக்கிக் குதிரைகளின் பான்மை மேன்மைகளை ஓர்ந்து கொள்ளலாம்.

உயர்ந்தோர் புனித நிலையில் ஒழுகிவரின் அது மனித சமுதாயத்திற்கு இனிமையாகின்றது. ஞாலம் போற்றி வரும் மேலோர் தம் சீலம் போற்றி வாழ வேண்டும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jun-19, 9:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 156

மேலே