புலால் மறுத்தல் - கலி விருத்தம் - வளையாபதி 21

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

தகாதுயிர்கொல் வானின் மிகாமையிலே பாவம்
அவாவிலையி லுண்பான் புலால்பெருகல் வேண்டும்
புகாவலைவி லங்காய்ப் பொறாதுபிற வூன்கொன்(று)
அவாவிலையில் விற்பானும் ஆண்டதுவே வேண்டுமால். 21 வளையாபதி

பொருளுரை:

ஊனுண்ணும் அவாவினாலே அதனை விலைகொடுத்து வாங்கித் தின்பவன் அந்த ஊனுணவு நாள்தோறும் மிகுதியாக வந்து அவனுக்குக் கிடைப்பதையே விரும்புவான்.

தான் வலையிற் பிடித்த விலங்குகளே தனக்கு உணவாக ஆவதுடன் திருப்திப் படாமல் மேலும் விற்றுப் பொருள் சேர்க்கின்ற விருப்பம் காரணமாக பிற உயிரினங்களைக் கொன்று அவற்றின் ஊன்களைக் கொண்டு வந்து விற்பவனும் அவனுக்கு அவ்வூன் மிகுதியாகக் கிடைப்பதையே விரும்புவான்.

ஆதலால் உயிரைக் கொல்பவனைப் போலவே, ஊனை விலைகொடுத்து வாங்கித் தின்பவனுக்கும் தீவினை மிகுதியாகும். ஆகவே, விலை கொடுத்து ஊன் கொண்டு உண்பதுவும் அறவோர்க்குத் தகாத செயலாகும் எனப்படுகிறது.

விளக்கம்:

ஊன் உண்ணும் விருப்பத்தினாலே ஊன் உண்பவன் அவ்வூன் உணவு மிகுதியாகக் கிடைத்தலையே விரும்புவான். ஆகவே அவன் கொலைக்கு உடன்பட்டவனாகிக் உயிர்களைக் கொன்றவனே ஆகின்றான்.

எப்படியென்றால், ஊன் விற்பவனும் அங்ஙனமே ஊன் மிகுதியாகக் கிடைப்பதனையே விரும்பிக் கொல்கின்றான். ஆதலால் கொல்பவனுக்குத் தீவினை மிகுவது போலவே உண்பவனுக்கும் மிகுதல் என்பது உறுதியாகும். ஆதலால் ஊனுண்ணல் தகாது என்பதாம்.

‘ஆண்டருகல் வேண்டும்’என்பது பாட வேறுபாடு.

இனி,

புலால் தின்னும் பொருட்டு உலகத்தார் உயிர்களைக் கொல்லாது இருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர் இல்லாமல் போவார் என்னும் கருத்தை,

தினற்பொறுட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டா லூன்றருவா ரில். 256 புலான் மறுத்தல்,

என்ற குறட்பாவில் வள்ளுவனார் கூறுகிறார்.

இக்கருத்தினையே, கீழ்வரும் பாடலில் வலியுறுத்தப்படுகிறது.

ஊனையவன் உண்ண உயிரையிவன் கொல்கின்றான்
ஆன புலைகொலைகள் யாவுக்கும் – ஊனினைத்
தின்பவனே காரணனாய்த் தீநரகுக்(கு) ஆளாகித்
துன்பமுழந் துள்ளான் தொடர்ந்து.

கருத்துரை:

ஒருவன் ஊனை உண்ண மற்றொருவன் ஓர் உயிரைக் கொல்கிறான். மாமிசம் உண்ண நடைபெறும் கொலைகள் அனைத்துக்கும் ஊனை உண்பவனே காரணமாகிறான். ஆகவே ஊனை உண்பவன் கொடுமைகள் நிறைந்த நரகத்திற்குச் சென்று தொடர்ந்து துன்பத்தில் உழன்று துன்புறுவான் என எடுத்துரைக்கப்படுகிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jun-19, 11:14 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 40

சிறந்த கட்டுரைகள்

மேலே