ஊன் உண்போரின் இழிதகைமை - கலி விருத்தம் – வளையாபதி 22

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

பிறவிக் கடலகத்(து) ஆராய்ந்(து) உணரின்
தெறுவதில் குற்றம் இலார்களும் இல்லை
அறவகை ஓரா விடக்கு மிசைவோர்
குறைவின்றித் தம்சுற்றம் தின்றனர் ஆவர். 22 வளையாபதி

பொருளுரை:

உயிரினங்கள் பிறப்புற்று உழல்கின்ற கடல் போன்ற இப்பேருலகத்தில் ஆராய்ந்து காணும் பொழுது பிறவுயிரைக் கொல்வதனால் உண்டாகும் தீவினையில்லாதவர் ஒருவரேனும் இல்லை.

ஆனாலும், அறமுறைகளை ஆராய்ந்து உணராமல் ஊன் தின்பவர் அவர்களுக்குள்ளேயே எந்தவொரு அவலமும் இன்றித் தம்முடைய மனைமக்கள் முதலிய சுற்றத்தாரைக் கொன்று தின்ற அத்தனைக் கொடுவினை யாளரே ஆவார்கள் எனப்படுகிறது.

விளக்கம்:

உய்ந்து கரையேற ஒண்ணாதபடி விரித்து கிடத்தலின் பிறவியைக் கடல் என்றார். வள்ளுவனாரும் பிறவாழி என உரைக்கிறார்.

பிறவியுட்பட்டு உழல்வோர் தம் வாழ்நாளில் யாதொரு உயிரையும் கொல்லாது தூயராகவே வாழ்வது யாவரானும் இயலாத ஒன்றேயாகும். உலகினில் கண்ணால் காணப்படாத சிற்றுயிர்களும் கொதுகு எறும்பு போல் எங்கும் நிறைந்திருத்தலால் தெரிந்தோ தெரியாமலோ இவற்றைக் கொல்லாதவர் யாருமிலர்.

அங்ஙனமிருப்பினும், ஆறறிவுபடைத்த மாந்தர் அறமுணர்ந்து கொலைவினை ஒழித்து வாழ வேண்டும் அல்லவா? ஊன் உண்பவர், யாவரும் கேளிர் என்னும் மெய்யுணர்வு இல்லாததால் தமக்கு நெருங்கிய உறவுடைய உயிரினங்களைக் கொன்று அவற்றின் ஊனைத் தின்கின்றனர். இவ்வாறு செய்வதால், இவர் தம் மனைவி மக்களைத் தின்பவர் போன்று பெருந்தீவினையாளரே என்பதில் ஐயமில்லை எனப்படுகிறது.

தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க் கின்னா செயல். 318 இன்னாசெய்யாமை

கருத்து:

அடுத்தவர் செய்த தீமை தனக்குத் துன்பமானதை அனுபவித்து அறிந்தவன், அடுத்த உயிர்களுக்குத் தீமை செய்ய எண்ணுவது என்ன காரணத்தால்? என்றும்,

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து. 329 கொல்லாமை

கருத்து:

கொலை செய்வதைத் தொழிலாகக் கொண்டு வாழும் மக்கள், அத்தொழிலின் தீமையை அறியாதவர் என்றாலும், அறிந்த பெரியோர் மனத்துள் அவர்கள் கீழான செயல் செய்பவராய் எண்ணப்படுவார்;

என்ற திருக்குறள் கருத்துகளையும் உணர வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jun-19, 11:56 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே