முதல் கவிதை

இங்கே நான்
என் மௌனத்தைக்கூட
உதிர்க்க முடியாத
அந்நிய தேசத்தில்
அடிமைப்படுத்தப்பட்ட -அகதியாய்
அலைகிறேன்....
என் நிழல்கூட சில நேரங்களில்
நிராகரிக்கப்படுகிது ..
காயங்களுக்கு மருந்திடுவதாய் எண்ணி -சிலர்
என்னைக் குத்திக்கிழிக்கின்றனர்....
உணர்வுகளை உறக்கச்சொல்ல முடியாத ஊமையாகவும்,
சில உறவுகளை உதறமுடியாதவளாகவும்,
பலர் பார்வைகளில் பண்ணாத பாவம் செய்த
மரணதண்டனைக் கைதியாகவும் சிக்கித்தவிக்கிறேன்.....
உன்னைத்தேடும் என் விழிகள் உயிர் இருந்தும் நடைப்பிணமாய் நகர்வலம் வருவதை நான் மட்டுமே அறிவேன்....
இனி- என் காயங்கள்
கரைக்கப்பட வேண்டாம்,
காலம் என்னைப் புதுப்பிக்கப்வேண்டாம்,
பட்டினியைக்கூட பழக்கப்படுத்திக்கொண்டேன்..
பலர் பார்வைக்காய்
பல சாலியாகவும் வேடமிட்டுக்கொண்டேன்..

என்னுயிரே!!

கவலைக்கொள்ளாதே!

நீயில்லா இந்த நாட்களில்
துன்பம் என்ற ஒன்று- என்னை உயிருக்கு உயிராக காதலிக்க ஆரம்பித்துள்ளது,

ஏன் உன்னைவிடக்கூட அதற்கு என்னைப்பிடித்ததுவிட்டது போல,
நொடியும் என்னை விட்டு நகர்வதில்லை ..

பார்த்தாயா வேடிக்கையை!!

காதலில் தோற்றவள் என்று
நினைக்கப்போகிறார்கள்....

என் உயிரே!!
உன்னை நான் தொலைத்ததை அறியாதவர்கள்...

பைத்தியக்காரியே!!

இந்த பிள்ளையின்
மனம் உனக்கு தெரியாதா???

என்னைவிட உனக்கு அந்த கூற்றுவன் கூப்பிட்டது பிடித்துவிட்டதா??

ம்ம்ம்...

தலைசாயும் நேரங்களில் எல்லாம் உன் மடிதேடும்
இந்தப் பாவியின் மனம்
உன்னை
தொலைத்த,
நீ வாழும் தேசத்திற்கான முகவரியை மட்டும் மூச்சுவிடும்
நொடிப்பொழுதிலும் முழுமூச்சாக தேடுவதை மறக்கவில்லை....

தவிப்புகள் தனிமையில்
மண்டியிடுகிறது,
விடியாத என் உலகின்
விடிவெள்ளி நீதான் என்பதறியாது,,
என் எழுத்துக்கள்
மெருகேற்றப்பட்டு விட்டதாம்,,
வேதனையைப் பார்த்தாயா??
உனக்காக நான் எழுதிய முதல் கவிதை,நீ வாசிக்காத முதல் கவிதை!!

எழுதியவர் : இரா.சுடர்விழி (25-Jun-19, 5:01 pm)
சேர்த்தது : சுடர்விழி ரா
Tanglish : muthal kavithai
பார்வை : 1040

மேலே