கைதொழு மதிகள் போல மறுவிலிர் – செவியறிவுறூஉ – கலி விருத்தம் - வளையாபதி 23

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நிரையசையில் நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!

2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

உயிர்கள் ஓம்புமின் ஊன்விழைந்(து) உண்ணன்மின்
செயிர்கள் நீங்குமின் செற்றம் இகந்தொரீஇக்
கதிகள் நல்லுருக் கண்டனிர் கைதொழு
மதிகள் போல மறுவிலிர் தோன்றுவீர். 23 வளையாபதி

பொருளுரை:

எல்லாவுயிர்களையும் அருள் கூர்ந்து காப்பாற்றுங்கள்;

பிறவுயிரினங்களின் ஊனை விரும்பி உண்ணாதீர்கள்;

தணியாக் கோபத்தை முற்றிலும் விலக்கி காமம் முதலிய குற்றங்களினின்றும் நீங்கி வாழுங்கள்;

இவ்வாறு வாழ்வீர்களாயின் மேல்வரும் பிறப்புக்களில், மேல்நிலை உலகங்களில் தேவர் முதலியோராக அழகிய உருவங்களை அடைந்து, உலகத்தார் கை குவித்துக் தொழுகின்ற குளிர்ந்த முழு நிலவு போன்று குற்றமில்லாதவர்களாக அருள் நிரம்பிய புகழொடு விளங்குவீர்.

செற்றம் – செறு - 1. Rancour, hatred - மனவைரம். (திவா.) செற்ற நீக்கிய மனத்தினர் (திருமுரு. 132).

2. Aversion - வெறுப்பு. ஆர்வமுஞ் செற்றமு நீக்கிய வச்சுதனே (திருநூற். 20)
.
3. Irrepressible anger – வெகுளி, தணியாக்கோபம். (பிங்)

4. Love-quarrel - ஊடற்சினம். செற்றமுன் புரிந்ததோர் செம்மல் (கம்பரா. உண்டாட்டு. 30)

செயிர் - காம முதலிய ஆறுவகைக் குற்றங்களும் ஆம்.

விளக்கம்:

உயிர்களை ஓம்புதல் என்பது மறந்தும் உயிர்க் கொலை செய்யாமல் உயிர்களைப் பாதுகாத்து ஒழுகுதலாகும். இவ்வறமே நூலோர் தொகுத்த அறங்களுள் தலைசிறந்த அறமாவது பற்றி முன்னிலைப்படுத்திச் சொல்கிறார்.

மேலும்,

கிடைத்ததைப் பகுந்து கொடுத்துத் தானும் உண்டு பல உயிர்களையும் காப்பாற்றுதல் அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறமாகும் என்று,

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்று ளெல்லாந் தலை. 322 - கொல்லாமை

எனவரும் திருக்குறளில் திருவள்ளுவர் உணர்த்துகிறார்.

வேள்வி முதலிய செய்வதற்கு உயிர்களைக் கொன்று ஊன் உண்பது நல்லறமே என்னும் மடமை உடையவர்களும் உள்ளனர் என்பதால் நீங்கள் விரும்பி ஊனுண்பதை எப்படியாகிலும் நிறுத்தி ஒழியுங்கள். உண்பீர்களேயானால், நரகத்தில் வீழ்ந்து துன்பப்படுவீர்கள் என்று ’விழைந்து ஊன் உண்ணன்மின்’ என்றார்.

இதனை,

வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர் என்றும்,

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை. 328 - கொல்லாமை

உயிர்கள் உடம்பு பெற்று வாழும் நிலைமை, ஊன் உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது ஊன் உண்டால் நரகம் அவனை வெளியே விடாது என்றும்,

உண்ணாமை யுள்ள துயர்நிலை யூனுண்ண
அண்ணாத்தல் செய்யா தளறு. 255 - புலான் மறுத்தல்

என்ற இரு குறள்களில் சொல்லப்பட்டிருப்பதை உணர்ந்து செயல்படுங்கள் என்றும் திருவள்ளுவர் வலியுறுத்துகிறார்.

தீவினை பிறத்தற்கெல்லாம் வெகுளியே தலைசிறந்த காரணமாவதால், செயிர்கள் நீங்குமின் என்று மட்டும் சொல்லாமல் அதனைக் தனித்தெடுத்தும் சொல்கிறார்.

இவ்வாறெல்லாம் நாள்தோறும் நல்லறம் பேணி வாழ்வீர்களானால், நீங்கள் ஒளியுலகில் அழகிய தேவயாக்கை பெற்றுக் திகழ்வீர் என்று அவற்றின் பயனையும் உடனே சொல்கிறார்.

அறம், நான்கு பேர் முன் நமக்கு மேன்மையைத் தரும்; நல்ல செல்வத்தையும் கொடுக்கும். இத்தகைய அறத்தைக் காட்டிலும் மேன்மையானது நமக்கு உண்டா? என்றும்,

சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூஉங்
காக்க மெவனோ வுயிர்க்கு. 31 – அறன் வலியுறுத்தல்

ஒருவருடைய வாழ்க்கைக்கு அறத்தை விட நன்மையானதும் இல்லை. அறத்தை போற்றாமல் மறப்பதை விடக்கொடியதும் இல்லை என்றும்,

அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
மறத்தலி னூங்கில்லை கேடு. 32 – அறன் வலியுறுத்தல்

ஆகிய திருக்குறள்களில் திருவள்ளுவர் அறிவுறுத்துவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jun-19, 5:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 97

மேலே