சீலமெனும் தெய்வத் திருவுடைமை ஞாலந்தனிற் சிறந்த நற்பொருள் - சீலம், தருமதீபிகை 311

நேரிசை வெண்பா

சீலமெனும் தெய்வத் திருவுடைமை யேயிந்த
ஞாலந் தனிற்சிறந்த நற்பொருள்காண் - மூலம்
தெரிந்ததனைக் கைக்கொண்டார் தேவரெலாம் போற்றும்
விருந்தினராய் மேவிநிற்பர் மேல். 311

- சீலம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உலகில் உயர் பெருந்திருவாய் ஒளி பெற்றுள்ளது சீலமே; அம் மூல நிலையை உணர்ந்து அதனை உரிமையாக உவந்து கொண்டவர் தேவரும் போற்றும் மேன்மையாளராய்ச் சிறந்து அரிய பல இன்ப நலங்களை அடைந்து பெரிய நிலையில் திகழ்வர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

ஒழுக்கம், உணர்வு, குணம், தருமம், புனிதம் முதலிய இனிய இயல்புகள் எல்லாம் சீலம் என்னும் ஒரு சொல்லில் அடங்கியுள்ளன. சீவனின் இனிய கனிவாய் அது இலங்கியுள்ளது.

இம்மையிலும், மறுமையிலும் பெருமகிமைகளை நல்கி இறுதியில் உயிர்க்கது உய்வைத் தருதல் கருதி சீலத்தை தெய்வத் திரு என்றது. சீலமுடையானே திருவாளன் ஆகும்.

உடம்பை மட்டும் ஓம்பி உலக ஆடம்பரங்களை வளர்த்து விட்டு விரைந்து ஒழிந்து போகின்றதே யாண்டும் இயல்பாகவுடைய பொய்ம்மைத் திருவினும் வேறுபாடான மாறுபாடு தெரிய இங்கே மெய்ம்மையான தெய்வத் திரு மேவி வந்தது.

தன்னையுடையானைத் திவ்விய நிலையினன் ஆக்கி எவ்வழியும் சீலம் செவ்விய சீர்த்திகளை விளைத்தருள்கின்றது. தீது யாதும் மருவாமல் நீதி நெறியில் நிலைத்து ஒழுகும் ஒழுக்கமே சீலமாதலால் அது விழுப்பங்களுக்கெல்லாம் விளைநிலமாய் வளம் மலிந்து நிலவி நலம் மிகுந்து திகழ்கின்றது.

சீலம் உடையவர் மனித சமூகத்தில் அதிசய நலங்களை அடைந்து துதி செய்யப் பெறுகின்றார். தரும தேவதையும் அவர் கருதியபடியெல்லாம் கருணை புரிந்து வருகின்றது; கொடியவரும் அவர்முன் அடியவராய் அடங்கி இனிய நீர்மையுடன் அமர்ந்து இதம் புரிகின்றனர்.

கலித்துறை
(மா விளம் விளம் விளம் மா)
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் வரலாம்)

காலம் இன்றியும் கனிந்தன கனி;நெடுங் கந்தம்,
மூலம் இன்றியும் முகிழ்த்தன, நிலனுற முழுதும்;
கோல மங்கையர் ஒத்தன, கொம்பர்கள்; இன்பச்
சீலம் அன்றியும், செய்தவம் வேறுமொன்(று) உளதோ? 44 வனம் புகு படலம், அயோத்தியா காண்டம், இராமாயணம்

தரும குணசீலனான இராமன் புகுந்தமையால் கொடிய பாலைவனமும் இனிய சோலையாய்க் கனி, காய், கிழங்குகளை உதவி நின்றது என இப்பாடல் உணர்த்துகிறது. அற்புத நலங்களை அளித்தருளுதலால் சீலமே செய்தவம் என நேர்ந்தது.

தெய்வீக நிலையில் செழித்து நிற்றலால் சீலமுடையவர் மேலான நலன்களை எளிதே அடைந்து கொள்கின்றனர். அஃது இல்லாதவர் வறிதே இழிந்து படுகின்றனர்.

‘சீலம் இல்லவர்க்கு உணர ஒண்ணாத சிற்பரன்’ – கந்த புராணம், என்று முருகக் கடவுளை இங்ஙனம் குறித்திருக்கின்றனர். சீலம் உடையவர்க்கே கடவுட் காட்சி எளிதாம் என்னும் உண்மையை இதனால் உணர்ந்து கொள்கிறோம்.

சீலம் என்பது செய்தவமாய்ச் சிறந்துள்ளமையின் தெய்வம் அதன் கைவசமாய்க் கனிந்து நிற்கின்றது. சத்தியம் முதலிய உத்தம நீர்மைகள் தோய்ந்து சித்தசுத்தி வாய்ந்து சீவசக்தி பாய்ந்திருத்தலால் சீலன் தெய்வ தரிசனத்திற்குத் தனி உரிமையாளனாய் இனிதமைந்து நிற்கின்றான். சீலம் தெய்வ நிலையமாயுள்ளது.

சீலமும் அவைதரும் திருவு மாயுளன்
ஆலமும் வித்துமொத்(து) அடங்கும் ஆண்மையான். 74 இரணியன் வதைப் படலம், யுத்த காண்டம், இராமாயணம்

ஆலம் வித்துப்போல் அடங்கியுள்ள திருமால் சீலத்தின் உருவமாய் நின்று ஞாலம் காத்து அருள்கின்றான் என இது காட்டியுள்ளது.

தவம், கருமம், கடவுள் எனச் சீலம் புகழ்ந்து போற்றப்படுதலால் அதன் அருமையும் பெருமையும் அமைதியும் அறியலாகும். அரிய பல உறுதி நலங்கள் அதில் மருவியுள்ளன.

சீலமும், தருமமும், செம்மையும் ஆகிய இம்மூன்றையும் மூல மூர்த்திகளான மூவரும் முறையே தம் கோலங்களாகக் கொண்டுள்ளனர் என்று வசிட்ட முனிவர் இராமனுக்கு உபதேசித்திருக்கின்றார். முனிவர் மொழி இனிய ஒளி யுடையது.

தேவதேவர்களுடைய திவ்விய குணமாய்ச் சீலம் இங்ஙனம் சிறந்து நிற்கின்றமையால் அதன் நிலைமை தலைமைகள் நினைந்து சிந்திக்கத்தக்கன.

சீலத்தால் மனம் புனிதம் ஆகின்றது; அதனால் மனிதன் தெய்வீகம் பெறுவதால் அது தெய்வ சம்பத்தாய்ச் சிறந்து மிளிர்கின்றது. அவ்வுண்மையை உய்த்துணர்ந்து நன்மையுறவே தெய்வத் திரு என ஈண்டு அது செப்ப நேர்ந்தது.

தவம், தானம், ஞானம் முதலிய எவற்றினும் முத்திப் பேற்றிற்குச் சீலமே முதன்மையாக நிற்றலால் அதனை மேலோர் தலைமையாகப் போற்றுகின்றனர்.

'சீலமொடு தவவிரதம் ஒருகனவி லாயினும்
தெரிசனம் கண்டும் அறியேன்’ எனச் சீலத்தை முதலில் நினைந்து தாயுமானவர் ஏங்கியிருக்கிறார்.

அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)

சீல மின்றி நோன்பின்றிச்
..செறிவே இன்றி அறிவின்றித்
தோலின் பாவைக் கூத்தாட்டாய்ச்
..சுழன்று விழுந்து கிடப்பேனை
மாலும் காட்டி வழிகாட்டி
..வாரா வுலக நெறிஏறக்
கோலம் காட்டி ஆண்டானைக்
..கொடியேன் என்றோ கூடுவதே? 3 - 50 ஆனந்த மாலை, திருவாசகம்

சீலத்தை இங்ஙனம் தலைமையாகக் கருதிப் பேணி மாணிக்கவாசகர் உருகியிருக்கிறார். மேலான பதவிக்குச் சீலம் முதல் உரிமையாயுள்ளமையை இவற்றால் உணர்ந்து கொள்ளுகின்றோம்.

‘சீலம் இல்லாச் சிறியனேன்’ என நம்மாழ்வார் தவித்திருக்கிறார். பெரியன் ஆக விரும்பின் சீலம் மருவியாக வேண்டும்.

சீலம் தாங்கித் தானம் தலைநின்று
மேலென வகுத்த ஒருமூன்று திறத்துத்
தேவரும் மக்களும் பிரமரும் ஆகி
மேவிய மகிழ்ச்சி வினைப்பயன் உண்குவர். 137 - 140, மணிமேகலை 24 ஆபுத்திரன் நாடு அடைந்த காதை

உயிர்கள் உயர்ந்து சிறந்த தெய்வ போகங்களை நுகர்தற்குச் சீலமே மூல காரணம் என இதில் குறித்திருக்கும் நிலையைக் கூர்ந்து நோக்க வேண்டும்.

கருணை முதலியன கனிந்து புனிதம் மருவி வருதலால் சீலமுடையவர் பிறவி தீர்ந்து பேரின்பம் அடைகின்றனர்.

வெண்டளை பயிலும் எழுசீர் விருத்தம்

தோடார் இலங்கு மலர்கோதி வண்டு
..வரிபாட நீடு துணர்சேர்
வாடாத போதி நெறிநீழல் மேய
..வரதன் பயந்த அறநூல்
கோடாத சீல விதமேவி வாய்மை
..குணனாக நாளும் முயல்வார்
வீடாத இன்ப நெறிசேர்வர் துன்ப
..வினைசேர்தல் நாளும் இலவே. - வீரசோழியம்

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

சீலமுற்(று) உயர்ந்தவர்ச் சேரின் வீடுறும்
மாலையுற்(று) அறிவிலார் மருங்க டைந்திடின்
வேலையுற்(று) அலைதுரும் பென்ன வெம்பவக்
கோலமுற்(று) இறந்திறந் துழலல் கூடுமே. - பாகவதம்

சீலம் முத்தியில் உய்த்தருளும்; சீலமுடையவரைச் சேர்ந்தவரும் மேலான பதவியை அடைவர்; அதனை அடையாதவர் கடையராயிழிவர் என இவை உணர்த்தியுள்ளன.

இவ்வாறு பேரின்ப சாதனமாய்ப் பெருகியிருத்தலால் சீலத்தை யாவரும் விழைந்து கொண்டாடுகின்றனர்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

பவழவாய்ச் செறுவு தன்னுள்
நித்திலம் பயில வித்திக்
குழவிநா றெழுந்து காளைக்
கொழுங்கதி ரீன்று பின்னாக்
கிழவுதான் விளைக்கும் பைங்கூழ்
கேட்டிரேல் பிணிசெய் பன்மா
உழவிர்காண் மேயுஞ் சீல
வேலியுய்த் திடுமின் என்றான். 379 நாமகள் இலம்பகம், சீவக சிந்தாமணி

கருப்பையுள் விதைத்த சுக்கில வித்திலிருந்து மனிதன் பிறக்கின்றான்; பாலன், குமரன், கிழவன் என வளர்கின்றான்; அவ்விளைவு பழுது படாதபடி சீலம் ஆகிய வேலியை இட்டுப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என இது உரைத்திருக்கிறது. உருவகமாய் வரைந்துள்ள உரையின் உட்கோள் ஊன்றி உணரத் தக்கது. பயிருக்கு வேலிபோல் உயிருக்குச் சீலம்.

சீலத்தால் மனித வாழ்வு புனிதம் அடைந்து இனிது வளர்ந்து இன்பம் சுரந்து வருகின்றது. அவ்வரவு நிலையை உணர்ந்து அதனை உறவுரிமையாய் உவந்து கொள்க என நூல்கள் இங்ஙனம் ஆவலோடு நன்கு உணர்த்தி வருகின்றன.

ஆன்ம பரிபாகம் எய்தி எல்லா மேன்மைகளையும் ஒருங்கே பெற்றுச் சீலமுடையார் உயர்ந்து போதலால் ’மேல் மேவி நிற்பர்’ என அவரது மெய்யான நிலைமை தெரிய வந்தது.

நேரிசை வெண்பா

சீலன் சிவன்கண்டான் சீலமிலான் என்றுமே
காலன்கண் காணக் கழிந்தொழிந்தான் - ஞாலம்
பிறந்த பயனைப் பெறாதான் பெறுமே
இறந்த பயனை எதிர்.

சீலம் உடையவன் தெய்வக் காட்சி எய்தி முத்தியின்பம் அடைகின்றான்; அதனை இழந்தவன் காலன் கைப்பட்டுக் கடுந்துயரம் காண்கின்றான். உறுவதை உணர்ந்து உறுதி நலனை உவந்து கொள்வது உற்ற பிறவியின் உயர் பயனாகும். பேரின்ப மூலமான சீலத்தைப் பேணி ஒழுகுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (26-Jun-19, 6:17 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 56

சிறந்த கட்டுரைகள்

மேலே