தவத்தின் மாண்பு – கலி விருத்தம் – வளையாபதி 24

வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

பொருளொடு போகம் புணர்தல் உறினும்
அருளுதல் சான்ற அருந்தவம் செய்ம்மின்
இருளில் கதிச்சென்(று) இனிஇவண் வாரீர்
தெருளல் உறினும் தெருண்மின் அதுவே. 24 வளையாபதி

பொருளுரை:

நீங்கள் உலக வாழ்க்கைக்கு இன்றியமையாததாகிய பொருளினை ஈட்டுகின்ற செயல்களைச் செய்பவர் ஆயினும், அதனொடு சேர்ந்த இல்லறம் முதலாய சுகங்களை அனுபவிக்கும் மன ஈடுபாடு உடையவராயினும் பிற உயிர்களிடத்துக் கருணை காட்டி அவைகளும் துன்பமின்றி வாழும்படி செயற்கரியதான காரியங்களைச் செய்யுங்கள்!

உலகாயத வழிகள் கொடுக்கும் மயக்க நிலையினால் ஏற்படக்கூடிய துன்பத்திற்கேதுவான வழியினின்றும் மாறுபட்ட ஞான(அறிவார்ந்த) மார்க்கத்தில் வாழ்ந்து, மறுபடியும் இங்கு பிறக்க வாருங்கள்; உங்கள் அறிவிலே தெளிவு ஏற்பட வேண்டுமாயின் இவ்வகைத் தெளிவையும் ஞானத்தையுமே விரும்புங்கள்!

விளக்கம்:

தவமாவது, தனக்கு வரும் துன்பங்களைச் சகித்துப் பொறுத்துக் கொள்வதோடல்லாமல், மற்றைய உயிர்களுக்குத் துன்பம் ஏற்படுத்தாமலும், அவற்றிற்கு வரும் துன்பங்களை நீக்குவதற்கான நற்காரியங்களைச் செய்வதுமாம். இது பொறிமேற்செல்லும் உலகாயத வாழ்வினை மேற்கொள்வார்க்கு செய்வதற்கரிய காரியமாம் என்று குறிப்பினிற் கொண்டு எழுதப்பட்டது.

நல்ல காரியங்கள் என்று குறிப்பிடும்பொழுது, தானம் நல்ல காரியமே ஆயினும், அதனின்றும் தவம் வேறுபடுத்தப்பட்டுள்ளது இங்கு நோக்கத்தக்கது.

ஆசிரியர் ஜைனமதம் எனப்படும் சமண மதத்தவராகத் தெரிவதால், அதன் அடிப்படை நம்பிக்கைகளில் ஒன்றான மறுபிறவியில் கொண்ட நம்பிக்கை இங்கே குறிப்பிடப்படுவதாகக் கொள்ளலாம்.

அறநெறி நின்று பொருளீட்டுதலும் மகளிரொடு புணர்ந்து இன்புற்றிருத்தலும் தவவொழுக்கத்திற்கு இடையூறுகள் ஆகாது. பொருள்களின்பால் பற்றின்மையும், காம இன்பத்தின்பால் அழுந்தாமையும் அமைந்த நெறி கொண்டு வாழும் இல்வாழ்க்கை உங்களை மேன்மேலும் உயர்பிறப்பில் செலுத்தி வீடு பேற்றினையும் நல்கும் எனப்படுகிறது.

இக்கருத்தையே,

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்(கு) உரு. - குறள் 261 தவம்

என்ற குறளில், தனக்கு உற்ற துன்பத்தை பொறுத்தலும் மற்ற உயிர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகிய அவ்வளவே தவத்திற்கு வடிவமாகும் என்றும்,

தன்னுயிர் தானறப் பெற்றானை யேனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். குறள் 268 தவம்

என்ற குறளில், தவ வலிமையால் தன்னுடைய உயிர், தான் என்னும் பற்று நீங்கப் பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய பெருமையை உணர்ந்து) தொழும் என்றும் தவ வலிமையைத் திருவள்ளுவர் உணர்த்துகிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jun-19, 7:30 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே