தவத்தின் மாண்பு 2 – கலிநிலைத் துறை – வளையாபதி 25

கலிநிலைத் துறை

(மா விளம் விளம் விளம் மா)

தவத்தின் மேலுறை தவத்திறை தனக்கல(து) அரிதே
மயக்கு நீங்குதல் மனமொழி யொடுமெயில் செறிதல்
உவத்தல் காய்தலொ(டு) இலாதுபல் வகையுயிர்க்(கு) அருளை
நயந்து நீங்குதல் பொருடனை யனையதும் அறிநீ. 25 வளையாபதி

பொருளுரை:

தவவொழுக்கத்தை மட்டுமே பின்பற்றி உயிர் வாழ்வது அத்தவ ஒழுக்கத்திற்கு எல்லாம் தலைவனாகிய அருகக் கடவுளுக்குக் கைகூடுவதல்லாது நம் போன்றோர்க்கு மிகவும் அரியதொரு செயலேயாகும்.

ஆயினும், நம் போன்றோர்க்கு தவமாவது மயக்கம் நீங்கப் பொருளியல் புணர்தலும், மனமும் மொழியும் உடம்புமாகிய மூன்று கருவிகளையும் அடக்கி அறமாகிய சிறைக் கோட்டத்தில் இருப்பதே ஆகும்.

விரும்புதல், வெறுத்தல் ஆகிய குணங்களை விட்டு பல்வேறு வகைப்பட்ட உயிரினங்களுக்கும் அருள் செய்வதையே விரும்பவும், பொய்ப் பொருள்களின் மேல் பற்று வைக்காமல் ஒழிவதும் ஆகிய அத்தவத்தினையும் நீ நன்குணர்ந்து கொண்டு அதன்படி நடக்க வேண்டும் எனப்படுகிறது.

விளக்கம்:

தவம் செயற்கரிய ஒன்றெனக் கருதி அதனை விட்டு விட வேண்டாம்! தவத்தோர்க்குக் கூறப்பட்ட முழு இலக்கணங்களும் தவத்தோர்க்கெல்லாம் இறைவனாகிய அருகக் கடவுளுக்கே பொருந்துவது ஆகும்.

ஆயினும், அது செய்வதற்கு அரியது என்று எண்ணி சோர்ந்து விடாமல் இருக்க வேண்டும். அத்தவம் நம் போன்றோர் ஆற்றும் அளவிற்கு எளியதே.

பொருளில்லாதவற்றைப் பொருளாகக் கருதும் மயக்கம் நீங்குவதும், மனமொழி மெய்களை அடக்கித் தீய செயல்களைச் செய்வதை வெறுத்து, நற்செயல்களைச் செய்ய முனைவதும், விருப்பு வெறுப்பற்று இருப்பதும், பொய்ப் பொருள்களைப் பற்றிக் கொண்டில்லாமல் எவ்வுயிர்க்கும் அருளுடையராய் இருப்பதும் ஆகிய இவ் ஒழுக்கமே நம் போன்றோர்க்குத் தவமாகும்.

இவற்றை முறையே,

மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும் என்று,

பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானா மாணாப் பிறப்பு. 351 மெய்யுணர்தல்
என்ற குறளிலும்,

மயக்கம் நீங்கிக் குற்றம் அற்ற மெய்யுணர்வை உடையவர்க்கு, அம் மெய்யுணர்வு அறியாமையை என்ற இருளை நீக்கி இன்ப நிலையைக் கொடுக்கும் என்று,

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. 352 மெய்யுணர்தல்
என்ற குறளிலும்,

ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு விட வேண்டு்ம் என்று,

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு. 343 துறவு
என்ற குறளிலும்,

கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும், இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம் என்று,

வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தாற்கும் துய்த்தல் அரிது. 377 ஊழ்
என்ற குறளிலும்,

பொருள் இல்லாதவர்க்கு இப்பூவுலக இன்பம் இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்க்கு மேல் உலக இன்பம் இல்லை என்று,

அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்(கு)
இவ்வுலக மில்லாகி யாங்கு. 247 அருளுடைமை

என்ற குறளிலும் கூறியிருக்கும் கருத்துகளை உணர வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (27-Jun-19, 7:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 49

சிறந்த கட்டுரைகள்

மேலே