உயர்வாய் ஒழுக்கம் படையானேல் செல்வம் அழகு கல்வி அத்தனையும் பாழ் - சீலம், தருமதீபிகை 313
நேரிசை வெண்பா
செல்வம் அழகு சிறந்த குடிப்பிறப்பு
கல்வி உரைவன்மை கட்டாண்மை - எல்லாம்
உடையான் எனினும் உயர்வாய் ஒழுக்கம்
படையானேல் அத்தனையும் பாழ். 313
- சீலம், தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்
பொருளுரை:
செல்வம், அழகு, குடிப்பிறப்பு, கல்வி, சொல்வன்மை, ஆண்மை முதலிய நலங்கள் பல உடையனாயினும் ஒழுக்கம் ஒன்று இலனாயின் அவ்வளவும் பாழ் என்கிறார் கவிராஜ பண்டிதர்.
மனிதனுக்கு மதிப்பை நல்க வல்லனவாதலால் செல்வம் முதலியன இங்கே தொகுத்து எண்ண வந்தன. சிறப்பு நலங்களை விரைவில் விளைத்து எவரும் வியந்து நோக்கச் செய்யும் விசித்திரம் மிகவுடைமையால் செல்வம் முதலில் நின்றது.
செல்வம், கல்வி, குடிப்பிறப்பு முதலிய மாட்சிமைகள் எல்லாம் எய்தியிருப்பினும், சீலம் இலனாயின் மனிதன் கோலம் குறைகின்றான். ஞாலம் அவனை நன்கு மதியாது.
பிற மாண்புகள் யாவும் உடல் உறுப்புக்கள் போல்வன; ஒழுக்கம் உயிர் போல்வதாதலால் இஃது இல்வழி அவை அனைத்தும் நவை அடைய நேர்கின்றன.
Character is human nature in its best form.
‘மனித இயல்பில் ஒழுக்கம் மிகவும் உன்னதமானது' என்னும் இது ஈண்டு எண்ணத் தக்கது. ஒழுக்கத்தைக் குறித்து மேல் நாட்டார் கருதியுள்ளமையை இதனால் அறிகின்றோம்.
ஒழுக்கம் உயிரைப் புனிதப்படுத்தி வருதலால் அதனையுடையவன் மனிதருள் தெய்வமாய் இனிது விளங்குகின்றான்.
உயர்ந்த குடியில் பிறந்தவன் ஆயினும் ஒழுக்கம் இலனேல் அவன் இழிந்து படுகின்றான். தாழ்ந்த குடியில் பிறந்திருப்பினும் ஒழுக்கமுடையனாயின் அவனை உலகம் உவந்து கொண்டாடுகின்றது. ’ஒழுக்கம் உயர்குலம்’ என்னும் பழமொழியாலும் அதன் விழுமிய நிலைமை வெளியே தெளிவாயுள்ளது.
ஒழுக்கம் உடைமை குடிமை, இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். 133 ஒழுக்கமுடைமை
இழுக்கத்தின் மிக்க இழிவில்லை; இல்லை
ஒழுக்கத்தின் மிக்க உயர்வு. 64 பழமொழி நானூறு
அறுசீர் விருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
தாழ்ந்த வருணத்(து) உதித்தவரும்
தக்கோர் ஆவர் ஒழுக்கத்தால்:
வீழ்ந்த ஒழுக்கத் தாரிழிவர்
மேலாம் வருணத்(து) உதித்திடினும்:
சூழ்ந்து துணையாம் சிறப்பின்பம்
சுரக்கும். அதனால் உயிர்தனினும்
வாழ்ந்த ஒழுக்கம் ஓம்பிடுக
வழுக்கின் இடும்பை யேதருமே. - விநாயக புராணம்
ஒழுக்கத்தின் உயர்வும், அதில் வழுவினல் உளவாகும் இழிவுகளும் இவ்வாறு விழி தெரிய நூல்கள் விளக்கியுள்ளன.
’ஒழுக்கம் படையானேல் அத்தனையும் பாழ்’ என்றது இதன் தத்துவத்தை உய்த்துணர வந்தது. ஒழுக்கம் இன்மையால் பாவம் புகுகின்றது; அதனால் நண்ணியிருந்த நலன்கள் எல்லாம் நாசம் அடைந்து போகின்றன.
ஒழுக்கத்தால் புண்ணியம் வளர்ந்து வருகின்றதால் அதனை உடையவனுக்கு எல்லாச் செல்வங்களும் பல்வகைச் சிறப்புக்களும் எளிதில் வந்து கைகூடுகின்றன.
இன்னிசை வெண்பா
பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு
நிலக்கிழமை மீக்கூற்றம் கல்விநோ யின்மை
இலக்கணத்தால் இவ்வெட்டும் எய்துப என்றும்
ஒழுக்கம் பிழையா தவர். 2 ஆசாரக் கோவை
ஒழுக்கமுடையவர் எட்டு ஐசுவரியங்களையும் ஒருங்கே எய்தி இன்புறுவர் என இப்பாடல் உரைக்கிறது.
இங்ஙனம் உயர்ந்த நலங்களை அருளி உயிர்க்கு உய்தி புரிந்து வருதலால் ஒழுக்கத்தை மேலோர் உவந்து போற்றிப் புகழ்ந்து வருகின்றார் என்கிறார் கவிராஜ பண்டிதர்.