இணைவிழைச்சு 2 - வான்தாங் கிநின்ற புகழ்மாசு படுப்பர் - விருத்தக் கலித்துறை - வளையாபதி 27

விருத்தக் கலித்துறை

சான்றோ ருவர்ப்பத் தனிநின்றுப ழிப்ப காணார்
ஆன்றாங் கமைந்த குரவர்மொழி கோட லீயார்
வான்றாங் கிநின்ற புகழ்மாசுப டுப்பர் காமன்
தான்றாங் கிவிட்ட கணைமெய்ப்படு மாயி னக்கால். 27 வளையாபதி

பொருளுரை:

காமவேள் தன் கையிலேந்திக் கரும்பு வில்லில் தொடுத்து எய்து விட்ட மலர்க்கணை காமுகர் மார்பிற் பட்ட பொழுது, காமம் வசப்படட்வர்கள், பெரியோர்கள் தம்மை வெறுத்தொதுங்கவும், தன் மேல் பற்றுள்ளவரையும் இழந்து தனித்து நின்று, இவ்வுலகம் தம்மைப் பழிதூற்றுவதையும் அறியாதவராக இருப்பர்.

கல்வி கேள்விகளால் நிரம்பி அவற்றிற்கிசைந்து அடங்கிய தம்மாசிரியருடைய மொழிகளையும் செவி கொடுத்து ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

தான் பிறந்த குடும்ப பாரம்பரியத்தையும் தம்முடைய பெருமை மிக்க புகழையும் இழப்பார். காமம் அத்துணைத் தீமை பயப்பதாகும்.

விளக்கம்:

இது காமத்தால் வரும் கேட்டினை அறிவுறுத்தியதாகும். காமத் தீவினையுடையோரை அவர்க்குப் பற்றுக்கோடாகிய சான்றோர் முதலியவர் வெறுத்தொதுக்கலின் தனித்து நிற்க வேண்டியதாயிற்று.

ஆன்று - கல்வி கேள்விகளாலே நிரம்பி, குரவர் - நல்லாசிரியர் முதலியவர். கோடலீயார் - கொள்ளார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Jun-19, 12:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

சிறந்த கட்டுரைகள்

மேலே