தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து நீங்குவதே நல்ல நெறி - நீதி வெண்பா 20

நேரிசை வெண்பா

கொம்புளதற்(கு) ஐந்து குதிரைக்கு பத்துமுழம்
வெம்புகரிக்(கு) ஆயிரம்தான் வேண்டுமே - வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி. 20

- நீதி வெண்பா

பொருளுரை:

கொம்பு உள்ள கால்நடைகளான மாடு, ஆடு, மான் போன்றவற்றிடமிருந்து காத்துக் கொள்ள ஐந்து முழம் தள்ளிப் போக வேண்டும்.

குதிரையிடமிருந்து பத்து முழம் தள்ளிப் போய்விட வேண்டும்.

மதங் கொள்ளக்கூடிய யானையிடமிருந்து ஆயிரம் முழம் ஒதுங்கி ஓடிவிட வேண்டும்.

ஆனால் நம்மைப் போலவே மனிதர்கள் உருவிலும், உள்ளத்தால் வஞ்சனையும் சூதும் மேலோங்கி நிற்கும் மானுட வர்க்கத்திடமிருந்து கண்காணாத தூரம் போய்விடுவதே நன்று.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jun-19, 4:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 486

சிறந்த கட்டுரைகள்

மேலே