மல்லிகாக்களால் ஜாரை ஒழிக்க முடியுமா------------

கவிஞர், எழுத்தாளர் சாம்ராஜின் (சாம்) புனைவுலகம் அவரது முதல் சிறுகதைத் தொகுப்பான “பட்டாளத்து வீடு” மூலம் பரவலாக கவனம் பெற்றது. சமீபத்தில் வெளியான அவரது இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “ஜார் ஒழிக!”, பட்டாளத்து வீடு தொகுப்பில் பிரதானமாக நிறைந்திருக்கும் மதுரைவாழ் மக்களது கதைகளின் தொடர்ச்சியாகவும், அதே வேளையில் சில அம்சங்களிலும், சில கதைகளிலும் விலகி நிற்கிறது. இத்தொகுப்பில் வரும் செவ்வாக்கியம், மரிய புஷ்பம் ஆகியோர் அவரது ‘என்றுதானே சொன்னார்கள்’ கவிதைத் தொகுப்பில் அதே பெயரில் வேறு கதைகளை சொல்கிறார்கள். இக்கட்டுரையில் பிரதானமாக ஜார் ஒழிக தொகுப்பை குறித்து மாத்திரமே கவனப்படுத்த விரும்புகிறேன்.



சாமின் கதைசொல்லல் முறை பெரும்பாலும் ஒரு நாட்டுப்புற கதைசொல்லியின் தன்மையைக் கொண்டது. அவரது கதைகளில் சம்பவங்கள் விரிந்தும், தாவியும், விரைந்தும் செல்லும். காலத் தாவல்கள் இருக்கும். அரிதாகவே உரையாடல்கள் நிகழும், ஓரிரு கதைகளைத் தவிர. இத்தன்மையை அதன் முழு வடிவத்தில் மூவிலேண்ட், மரிய புஷ்பம் இல்லம், செவ்வாக்கியம் ஆகிய கதைகளில் காணலாம்.



நிலப்பரப்பு குறித்த அவரது ஓர்மை வியக்க வைக்கும். மதுரை, தருமபுரி, திருச்சி, சென்னை, கோட்டயம், திருவனந்தபுரம் என ஒவ்வொரு ஊர் குறித்தும், அவற்றின் முக்கிய இடங்கள் குறித்ததுமான விவரிப்புகள், மிக இயல்பாக கதைகளில் பொருந்தி நிற்கும். அவற்றின் வளர்ச்சி, மாற்றம், நடைமுறைகள் குறித்த நுணுக்கமான தகவல்கள் கதையோட்டத்துடன் நகரும். உதாரணமாக செவ்வாக்கியம் கதையில் மதுரை எழுகடல் தெரு வியாபார வாழ்க்கை குறித்தும், அவள் திருமணம் முடித்து செல்லூர் செல்லும் வரையிலான பாதையில் உள்ள கடந்து செல்லும் இடங்கள் குறித்தும், மருள் சிறுகதையில் ஐஸ் பேக்டரி குறித்தும், கப்பல் சிறுகதையில் சின்னாண்டி குப்பம் குறித்தும், குள்ளன் பினு கதையில் கோட்டயம் பழைய போட் ஜெட்டி குறித்ததுமான அவரது விவரணைகள், கூர்ந்து கவனித்து உள்வாங்கும் அவரது இயல்பை எடுத்துக் காட்டுபவை. அவரது கதைகளை காட்சிரீதியாக வளப்படுத்துபவை.



பல இடங்களில் சாமிடம் அசோகமித்திரனின் சாயல் வெளிப்படுவதைக் காணலாம். அலட்டலில்லாமல், வார்த்தைகளை அதிகம் விரயமாக்காமல் அவர் உணர்ச்சிகளை கடத்தும் முறையை உணரலாம். மூவிலேண்டின் கடைசிக் காட்சியாக இருக்கட்டும், கப்பலில் ராஜா நாயின் கலகமாக இருக்கட்டும், பரமேஸ்வரி அழுத்தமாக துணிகளுக்கு சோப்புப் போடுவதாக இருக்கட்டும், இவற்றை நாம் காண முடியும். மேலும், அ.மி-யின் மெல்லிய கிண்டல்கள் இவரது கதைகளிலும் ஆங்காங்கே வெளிப்படுவதைக் காணலாம். சாம்ராஜ் என்பதால் சற்றே அரசியலும் கலந்து விடுகிறது.



கரைந்த நிழல்கள் நாவலில் ஒரு இடம் வரும். ஒரு சினிமா உதவி இயக்குனர் தனது துயரமும், ஆற்றாமையும் கொப்பளிக்க, குடித்து விட்டு வாந்தியெடுப்பார். அந்த வாந்தியை ஒரு நாய் வந்து நக்கியதாக எழுதி முடிப்பார் அ.மி. அதனையொத்த உதாரணமாக மரிய புஷ்பம் இல்லம் கதையில் இந்த வரிகளைப் பார்ப்போம். “…லாரி விஜயனைத் தண்ணீரில்லாத காவேரி மணலுக்குள் தூக்கி எறிந்து விட்டுப் போனது. உலர்ந்து கிடந்த காவேரி விஜயனின் ரத்தத்தை வேகவேகமாக உறிஞ்சியது.” (பக்-73) அல்லது செவ்வாக்கியம் கதையில் வரும் இந்த வரிகளைப் பாருங்கள். “தல்லாகுளத்தின் சின்னப் பிள்ளைகள் முதலில் பார்த்த குறி முத்திருளாண்டியினுடையதாகத்தான் இருக்கும். சற்று உற்று நோக்கினால் அதுவும் லேசாக நடுங்கிக் கொண்டிருக்கும்.” (பக்-22)



தண்ணீரில்லாத காவேரி எனும் முதல் வரியிலேயே வறட்சியும், அநீதியும் விளங்கி விடுகிறதுதான். ஆனாலும் கதாசிரியர் இரண்டாவது வரியில்தான் சம்பவத்தை முடிக்கிறார். முத்திருளாண்டி செய்த அக்கிரமங்களுக்கு செய்வினை ஏவப்பட்டு நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் முதல் வரி ஏற்படுத்தும் அதிர்ச்சியும், அதனைத் தொடரும் பரிதாப உணர்வையும் கடப்பதற்குள், இரண்டாவது வரி அதனை இல்லாமலாக்கி பழி தீர்த்து சிரிக்கும் உணர்வை கடத்துகிறது. எத்தனை சொற்சிக்கனம் கொண்ட ஆசிரியர்களும் எங்காவது உள்ளூறும் ஆதங்கத்தையும், வன்மத்தையும் பேசித்தான் விடுகிறார்கள்.



ஆனால், மெல்லிய கிண்டல்களுகளுடன் சாமின் கதைகள் நின்று விடுவதில்லை. பல கதைகள் வெடித்துச் சிரிக்க வைக்கும் பகடிகளைக் கொண்டவை. தொழில்-புரட்சி, ஜார் ஒழிக, மருள் போன்ற கதைகளை நீங்கள் எத்தனை முசுடாக இருந்தாலும், சிறு புன்னகையேனும் இன்றி கடக்க இயலாது. குறிப்பாக, மருள் கதையில், “அருள் எங்கு போவது என்று தெரியாமல் நின்றான். பேண்ட்டை இன் செய்த ஒருவர் அவனை அலட்சியமாக அழைத்தார். அருள் அதை விட அலட்சியமாக அவரை நோக்கி நடந்தான். போகும் வழியில் பிரமாண்டமாய் வெண்கலத்தில் நிற்கும் நிறுவனர் நடராஜன் சிலைக்கு ஒரு கேலி வணக்கம் சொன்னான். அருளைப் பார்த்த சூபர்வைசர்க்கு இவனிடம் ஏதோ சிக்கல் என தோன்றியது.” (பக்-51) என ஒரு காட்சி வரும். இந்தக் காட்சி உங்கள் மனதில் ஓடும் பொழுது எழும் புன்னகை வரப் போகும் அமளி துமளிகளுக்கு உங்களை தயார்ப்படுத்தும். இப்படியும் சொல்லலாம். சாமின் கதைகளில் பகடி மெல்ல வளர்ந்தும் கலவரம் செய்யும். தொழில்-புரட்சி போல ஆங்காங்கே தடாலென குலுங்கிச் சிரிக்கவும் வைக்கும்.



மா-லெ கம்யூனிஸ்டுகள் குறித்த ஆதங்கமும், நேசமும், பரிவும் கலந்த பகடிகள் ஒருவகையில் சுய எள்ளல்தன்மை கொண்டவை. ஏனெனில், இத்தனை நுணுக்கமான விவரணை அணுக்கத்திலிருந்து வருவதை யாரும் புரிந்து கொள்ள முடியும். ஆனால், அவர்களை விடவும் பல்வேறு கீழ்நடுத்தர வர்க்கப் பெண்கள், உழைக்கும் வர்க்க பெண்களைப் பற்றிப் பேசும் கதைகளில்தான் சாம்ராஜின் புனைவுலகம் உக்கிரம் பெறுகிறது.



இறுக்கமான சாதிய சமூகம் மற்றும் குடும்ப வன்முறைகள் உண்டாக்கும் வலிகள், துயரங்கள், தனிமை, இயலாமை ஆகியனவற்றை எதிர்த்து வைராக்கியத்துடனும், மெளனமான மூர்க்கத்துடனும், அடங்காத வன்மத்துடனும் அவர்கள் நிகழ்த்தும் கலகங்கள், நுட்பமான, வேட்டையாடப்படும் விலங்கின் எச்சரிக்கையுடன் கூடிய எதிர்வினைகள், எதிர் வன்முறைகளை, பரமேஸ்வரி, சன்னதம், மூவிலேண்ட், செவ்வாக்கியம் ஆகிய கதைகளில் நாம் காண முடிகிறது. கிராமப்புற, சிறுநகரத்து அடித்தட்டுப் பெண்களுக்கே உரிய இந்த மூர்க்கம் நகர்ப்புறத்து வாசகர்களுக்கு நம்ப முடியாததாகவும், வலிந்த புனைவாகவும் தோன்றலாம். ஆனால், இத்தகைய அக்காக்களை கண்கூடாகப் பார்த்திருக்கிறேன் என்ற முறையில், நானும் சாட்சி.



சாமினுடைய பல கதைகள் உளவியல் பகுப்பாய்வுக்கான சாத்தியப்பாடுகள் உடையவை. குறிப்பாக குழந்தைப் பருவத் தனிமை, அன்புக்கு ஏங்குதல் ஆகியன உருவாக்கும் ஆளுமைச் சிக்கல்களை போகிற போக்கில் கோடிட்டு காட்டுபவை. குள்ளன் பினு கதையில் அவன் அப்பாவின் அன்பு கிடைக்கப் பெறாமல் அக்காமார்களிடம் தஞ்சமடைந்து பின்னர் முற்றாக தனிமைப்படுவதும், ஜார் ஒழிக கதையில் தாய்மாமனாக தோழர் மூர்த்தியை கணேசன் எண்ணிக் கொள்வதும், சன்னதம் கதையில் லட்சமியின் சிக்கலான பால்யம் அவளிடம் உண்டாக்கும் கட்டற்ற தன்மையும் என உதாரணங்களை சுட்டலாம். அதே வேளையில், இவற்றின் உச்சமாக பிறழ்வுகள் நிகழ்வதையும் மரிய புஷ்பம் இல்லம் கதையில் நாம் பார்க்க முடிகிறது.



அதே போன்று, குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளையும் சாம் கதைகளினூடாக தொட்டுச் செல்கிறார். பாருக்குட்டி குள்ளன் பினுவிடம் கேட்கும் கேள்வியும், சிறுமி ராணியிடம் முத்திருளாண்டி நிகழ்த்தும் வன்முறையும் சில வரிகளாக கடந்து போகின்றன. கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் எப்படி இன்றும் இத்தகைய வன்முறைகள் சத்தமின்றி கடந்து செல்லப்படுமோ, அது போலவே கதையோட்டத்தில் சுவடின்றி கரைந்து போகின்றன. “டீசல் காதலோடு மண்ணில் பரவியது.” (பக்-28) “சிகப்பு நிற குஷன் சீட். சேர்கள் ரத்தத்தில் செய்து வைத்தது போலிருக்கும்.” (பக்-56) என சில இடங்களில் ஆசிரியர் குழந்தைகளின் பார்வையில் காட்சிகளை விவரிப்பதையும காண முடியும். குழந்தைமையை தக்க வைத்துக் கொள்வதுதான் எத்தனை பெரும் பேறு?



சில கதைகள் பெரும்பாலும் அதன் இறுதியில் மீ எதார்த்த (surrealism) தன்மை கொள்ளும். குறிப்பாக, குள்ளன் பினு கதையில் அப்பிக் கொள்ளும் தாரும், அதனால் ஆற்றில் நீண்டிருக்கும் அவனது நிழலும், கப்பல் கதையில் கப்பல் வீடு கடல் நோக்கி நகர்வதும், முத்திருளாண்டியின் குறியை பெருச்சாளி கடித்து விடுவதும், என யதார்த்த சட்டகங்களை தாண்டி கதைகள் நகரும்.



மேலும், பொதுவில் அருவெறுப்பானவை, முகம் சுளிக்க வைப்பவை எனக் கருதப்படும் விசயங்களை தேவைப்படும் இடங்களில் சாம் தயங்காமல் விவரித்து பேசுவதுமுண்டு. கப்பல் கதையில் டாஸ்மாக் சரக்கின் ஏப்பங்களும், வெளிநாட்டு சரக்கின் ஏப்பங்களும் அந்தரத்தில் சந்தித்துக் கொள்ளவே செய்யும் என்பதும், சன்னதம் கதையில் எடுப்புக் கக்கூஸில் தாமதமாக மலம் கழிக்கப் போனால் பலபேர் வெளிக்கிக்கு மேலே இருக்க வேண்டியிருக்கும் என்பதும், “ங்கொம்மாலக்க” எனும் மதுரையின் செல்ல வார்த்தையை ஒரு முழு நீள சிறுகதையாக்கியதும், ஒரு வகையில் நம்மை அசெளகரியப்படுத்தி நெகிழ்த்துபவை. ஆசிரியர் ஒரு கள்ளப் புன்னகையோடு நமைப் பார்த்து சிரிப்பதை அத்தருணங்களில் நாம் உணர முடியும்.



எனக்கு இந்தத் தொகுப்பில் மிகவும் பிடித்தவை, மூவிலேண்ட் மற்றும் ஜார் ஒழிக கதைகளே. அவையிரண்டிலும் ஒரு நாவலுக்கான பல உபகதைகளை, பல்வேறு மனிதர்களின் கதைகளை ஆர்வமுள்ள வாசகரால் கண்டறிய இயலும். அவை வரிகளாக, பாராக்களாக கடந்து போவதை உணர முடியும். ஒட்டுமொத்தமாக சொன்னால், வலியும், துயரமும், வன்முறையும், எதிர்ப்பும், சிரிப்பும், பகடியும் கலந்த, ஏதோ ஒரு வகை நிரந்தர ஊனத்தை, வன்மத்தை இயல்பாக சுமக்கும் மனிதர்களின் கதைகள் என இத்தொகுப்பை வரையறுக்கலாம்.



விமர்சனமாக ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். மா-லெ இயக்கத்தினரை மட்டும் புரட்சிகர முன்னணிக்காரர்கள், தோழர் என நேரடியாக எழுதி விட்டு, இந்து முன்னணியினரை மட்டும் கடப்பாரைக்காரர்கள் என குறிப்பிடுதல், ஜி எனக் குறிப்பிடாமல் விடுதல் என்ன வகையில் சரியான தணிக்கை முறை எனும் எழுத்தாளரும், பதிப்பகத்தாரும் பரிசீலிக்க வேண்டும். இறுக்கமான அரசியல் சன்னிதானங்கள் இயங்கும் சூழலில், எள்ளலும், பகடியும் நிச்சயம் தேவை. ஆனால், அவை முரணற்று இயங்க வேண்டும். பலம் குறைந்தவர்களை மட்டும் நேரடியாக பகடி செய்வது உண்மையில் பலவீனமானது.



இறுதியாக மூவிலேண்டில் எனக்கு மிகவும் பிடித்த வரிகளை சுட்டி நிறைவு செய்ய விரும்புகிறேன்.



“மல்லிகாவுக்கு சினிமா பாக்கப் பிடித்தது. அது அவளை வேறெங்கோ அழைத்துச் சென்றது. கொஞ்ச நேரத்திற்கு காம்பவுண்ட் வீடு, பொது கக்கூஸ், ஆட்டுரல், குடித்து விட்டு அலம்பும் அண்ணன், பெரியாஸ்பத்திரியில் அகாலமாய் செத்துப் போன அய்யா, திருச்சிக்கு வீடு மாறி போன தோழி கோகிலா என எல்லோரையும் மறக்க வைத்தது. சினிமா பார்க்காத நேரங்களில் சிலோன் ரேடியோவில் பாட்டைக் கேட்டுக் கொண்டு. அதோடு பாடிக் கொண்டும்.”



நாம் அனைவருமே மல்லிகாவைப் போலத்தான் நம்மை வேறெங்கோ அழைத்துச் செல்லும் ஏதோ ஒன்றைப் பற்றிக் கொணடிருக்கிறோம். சிலருக்கு இலக்கியம். சிலருக்கு எழுத்து. சிலருக்கு சினிமா. சிலருக்கு போர்னோகிராபி. சிலருக்கு டிக்டாக். சிலருக்கு அரசியல். மல்லிகாவைப் போல என்றோ ஒரு நாள் நாமும் நாம் பற்றிக் கொண்டிருப்பதை விட்டு விடலாம். ஆனால், ங்கொம்மாலக்க, எங்கிருந்தாவது வரும் சாமியாடிகள், என்றாவது ஒரு நாள் நமது முகத்தில் தண்ணீரைப் பீய்ச்சியடித்து நம்மை கதிகலங்க வைத்து விட்டுப் போய் விடுவார்கள். சாமியாடியின் பெயர் எப்பொழுதும் இரண்டாம் நிகோலஸ் ஜாராகத்தான் இருக்க வேண்டுமென கட்டாயமில்லை.



நூல்: ஜார் ஒழிக!

ஆசிரியர்: சாம்ராஜ்

பதிப்பகம்: நற்றிணை பதிப்பகம்

விலை: ரூ.70/-

எழுதியவர் : -சரவண ராஜா (30-Jun-19, 9:12 pm)
பார்வை : 68

மேலே