இப்படியும் ஒரு பெண்

இப்படியும் ஒரு பெண்

எங்கே இன்னும் இந்த இரண்டு தங்கச்சிகளையும் காணோம் குடிசையிலிருந்து வெளியே எட்டி பார்த்த வள்ளிக்கு “பாப்பா” எத்தனையாவது படிக்கறே? கேட்டவனின் கண்களில் வழியும் காமத்தை பார்த்து முகம் சுழித்த அந்த சிறு பெண் அவனுக்கு பதில் சொல்லாமல் கதவு இல்லாத குடிசைக்கு வெளியே நின்று “அப்பாவ்” உன்னை கூப்பிடுறாக, சொல்லிவிட்டு குடிசைக்குள் நுழைந்தால் எங்கே இந்த ஆளும் நுழைந்து விடுவானோ என்ற பயத்தில் குடிசையை சுற்றிக்கொண்டு பின்புறமாக சென்று ஒரு கல்லில் அமர்ந்து அவள் அப்பனையும் கூட்டிட்டுபோக வந்தவனையும் மனதுக்குள் வைய ஆரம்பித்தாள். அதுவரை போதையில் படுத்து கிடந்த இருளப்பன் மகளின் சத்தம் கேட்டு யாரு புள்ளே? அவிழ்ந்து விழும் லுங்கியை பிடித்தவாறு வெளியே வந்தான். “ஏலேய்
மாப்பிள்ளை எப்படா வந்தே? வாடா உள்ளே, கையை பிடித்து இழுத்து சென்றான். காலையில கொஞ்சம் சரக்கு அதிகமாயிடுச்சு, அவனாக உளறினான், ஆனால் வந்தவன், ஆமா உனக்கு எத்தனை புள்ளைங்க? அதை ஏண்டா கேக்கறே, இவ அம்மாக்காரி வரிசையா மூணையும் பொட்டையா பெத்து போட்டுட்டு போய் சேர்ந்துட்டா இந்த கழுதைங்க ஸ்கூலுக்கு போகணும்னு போகுதுங்க, அப்பனுக்கு ஏதாவது சோறு போடணும்னு ஒரு மூதிக்கும் தெரியறதில்லை, போதையில் உளறியவன் ஆமா நீ எதுக்கு மாப்பிள்ளை இதை எல்லாம் கேக்கறே? திடீரென்று இவன் திருப்பி கேட்கவும் வந்தவன் திடுக்கிட்டு ஒண்ணுமில்லை சும்மாத்தான் கேட்டேன், சரி நம்ம மசக்காணி அண்ணன் உன்னை கூட்டியாற சொல்லுச்சு, அண்ணன் எதுக்கு வர்ச்சொல்லுச்சு? ம்ம்..போலாம் வா தடுமாற்றத்துடனே அவன் கையை பிடித்துக்கொண்டு வெளியே வந்தனர்.

இவர்கள் போய் விட்டார்களா என்பதை உறுதி செய்து கொண்ட வள்ளி மெதுவாக குடிசையின் பின்புறமிருந்து வெளீயே வந்தவள் மீண்டும் தன் தங்கைகளுக்காக குடிசைக்கு முன்னால் நின்று பார்க்க இரு சுட்டி பெண்கள் கிழ்ந்த பாவாடை சட்டையுடன் அவர்களுக்குள் கதை அளந்தபடி சாவகாசமாய் வந்து கொண்டிருந்தனர்.” ஏ” குட்டிகளா சீக்கிரம் வாங்கலே” சத்தம் கொடுக்க அக்காவின் சத்தம் கேட்டு, இரண்டும் வேக வேகமாக வந்தன. அவர்களை உள்ளே அழைத்து சென்று தன் அப்பனுக்கு தெரியாமல் ஒரு சட்டியில் வைத்திருந்த பழைய சாப்பாட்டை எடுத்து மூவருக்கும் பிரித்து வைத்தாள்.
ஏ செவப்பி அந்த அறுவாளை எடு ! இவரின் குரல் கேட்ட செவப்பி ஆமா எத்தனை நாளைக்கு இப்படி போக வர அறுவாளை வெச்சுகிட்டு அலையறதா உத்தேசம்? ஏண்டி நானென்ன வேணும்னா அறுவாளை வெச்சுகிட்டு அலையறேன், என்னைய எப்படியாச்சும் போட்டு தள்ளறதுன்னு உன் பங்காளிகள் அலையறானுங்க, என்னைய என்ன செய்ய சொல்றே? ஆதங்கத்துடன் கேட்டார்.
ஏ மாமா எதுக்கு இந்த கொலை வெறி, எத்தனை நாளைக்கு இப்படி ஒருத்தனை,ஒருத்தன் வெட்டிக்கறது. நீ உத்தரவு கொடு நான் வேணா போய் பேசி பார்க்கிறேன், அந்த அரை ஏக்கர் கிணத்து மேட்டு தோட்டம் வேணுமின்னு இப்படி வெட்டு குத்துன்னு இருக்கறே? எடுத்துக்க அப்பவாச்சும் உன் வெறி அடங்குனா சரி, கண்ணீருடன் சொன்னாள். அப்படியே நீ போய் சொன்னாலும் கேட்டுறுவானா? இப்ப பாரு அவன் நேர்ல வந்து மச்சான்னு எங்கிட்ட பேசட்டும், அவன் என்ன கேட்கறானோ அதை கொடுக்கறதுக்கு நான் தயாராய் இருக்கேன். அவன்தான் நம்ம கூட்டத்துக்கு ஆகாதவன் பேச்சை கேட்டு ஆடறானே. சரி விட்டு தொலை நான் கம்மா வரைக்கும் போய்ட்டு வாறேன். கையில் அறுவாளை கொடுக்க மறந்தவள் சூதானமாய் போய்ட்டு வாய்யா என்று வழி அனுப்பியதுதான் கடைசி வழி அனுப்புதல் என்பது மதியத்துக்கு மேல் ராசு வந்து இருளப்பன் நம்ம “பாண்டி அண்ணனை” வெட்டிட்டு போலீஸ் ஸ்டேசன் போய் சரண்டராயிட்டானாம். என்று சொன்னவுடந்தான் தெரிந்தது.

கம்மாங்கரை தோட்டத்தில் கிடந்த பாண்டி அண்ணன் உடலை எடுத்து போலீஸ் வழக்கப்படி செய்யும் காரியங்களுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி, மீண்டும் உடல் வீடு வந்து சேர்ந்த பொழுது மறு நாள் நண்பகல் ஆகி விட்ட்து. அதுவரை செவப்பி ஒரு சொட்டு தண்ணீர் குடிக்காமல் “ஞானி” போல் அமர்ந்திருந்தாள். அவளை சுற்றியிருந்த பெண்கள் எவ்வளவோ சொல்லியும் ஒரு வார்த்தை பேசாமல் அமர்ந்திருந்ததை பார்த்த ஊர் பயந்து விட்டது. மருத்துவமனையில் இருந்து வந்த உடல் ஐந்து நிமிடங்கள் மட்டுமே வீட்டில் வைத்து மயானத்துக்கு கொண்டு சென்று விட்டனர். அப்பொழுது மட்டும் செவப்பி உட்கார்ந்த நிலையிலேயே மயங்கி விழுந்து விட்டாள். பெண்கள் பதட்டத்துடன் அவள் முகத்தில் தண்ணீர் தெளித்து அவளை தெளிய வைக்க படாத பாடு பட்டனர்.
மாலை மங்கி இருள் சூழ ஆரம்பித்து விட்டது. ஒரே ஒரு விளக்கு மட்டுமே எரிந்து கொண்டிருந்தது. சுற்றியிருந்த கூட்டங்கள் கரைந்து போயிருந்தது. வீட்டுக்குள் நெருங்கிய உறவுகள் ஒன்றிரண்டு மட்டுமே தங்கியிருந்தது. கணவனின் நினைவுகள் வேகம் தாங்காமல் வெளியிலே திண்ணையிலே உட்காரலாம் என்று திண்னையில் வந்து உட்கார்ந்தாள் செவப்பி. தூரத்தில் அவளை எதிர்பார்த்தவாறு நிற்பதை போல் மூன்று உருவங்கள் நின்று கொண்டிருந்தன. தன்னையே உற்று பார்த்தவாறு நிற்கும் உருவங்களை கை அசைத்து அருகில் வருமாறு சைகை காட்டினாள். தயங்கி தயங்கி வந்த உருவங்கள் அருகில் வர தன் கணவனை கொலை செய்த இருளப்பனின் குழந்தைகள் பயந்து போய் அவளையே பார்த்தவாறு நின்று கொண்டிருந்தன.
ஒரு கணம் அவளின் அடி வயிற்றிலிருந்து ஆங்காரம் கிளம்பி வர சட்டென்று பொங்கி அடக்கியது அவள் மனம். இவர்கள் அப்பன் செய்த செயலுக்கு இதுகள் என்ன செய்யும்? மூவரும் சாப்பிட்டு இரண்டு நாட்களாகி விட்டன.குடிசைக்குள் இருந்தால் ஊர்க்காரர்கள் ஏதேனும் செய்து விடுவார்கள் என பயந்து பயந்து புதர்காடுகளில் ஒளிந்து மறைந்து திரிந்திருக்கின்றன.
சட்டென எழுந்தாள் செவப்பி. இங்கேயே நில்லுங்கள் சைகையிலேயே கை காண்பித்து விட்டு உள்ளே சென்று உறவினர்கள் பொங்கி வைத்திருந்த சோறு குழம்பு சட்டிகளையும், தட்டுக்களையும் எடுத்து வந்தாள். மூவருக்கும் திண்ணையில் தட்டை வைத்து சட்டியில் இருந்த சாதத்தை தட்டில் போட்டு குழம்பை ஊற்றினாள்.அவர்களை வந்து உட்காரும்படி சைகை செய்தாள்
மூவரும் தட்டில் உள்ள சோற்றை பிசைந்து கொண்டிருந்தனர். கண்களில் பசி வெறி தெரிந்தது. ஆனால் பயம் அவர்களை தடுத்து கொண்டிருந்தது. செவப்பியையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
“சாப்பிடுங்கள்” செவப்பி அன்புடன் சொன்னாள்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (1-Jul-19, 10:34 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : ippadiyum oru pen
பார்வை : 325

மேலே