சிதறல்கள்

ஆசைக் கட்டுகளை
அடுக்கி வைத்த பரணில்
கால அகடூறியின் நாசம்

நிரம்பி வழிகிற கூட்டத்தில்
அவசர கால்களிடம்
தேடாதக் கருணை

நூலாம்படை நிழலாட்டத்தில்
வடித்துக் கொண்ட கதைகளிடம்
தோற்றிடும் பொம்மலாட்டங்கள்

அத்துமீறல் பொதுவாகியதால்
பல்லிக் குட்டிகளோடு கொஞ்சிடும்
தொடக்கமறியா தெருவோரத் தளிர்கள்

தோல் சுருக்கங்களுக்கிடையில்
தேடாமல் கிடைத்திடும்
தொலையாத புதுமைகள்

தீண்டாது அருகளிக்கும்
பூவரச மரத்தடியின்
நெளியும் அடை கம்பளிப் பூச்சிகள்

நிலவொளிக்காக காத்திருந்த
நான்கு கண்களின்
தீராத மௌன ஏக்கங்கள்

உதிராத ரோமங்களும் சிறகுகளும்
சுமையேற்றிடும் குப்பைகள்
தேங்குதலும் தேக்குதலும்
கனவுகளின் தற்கொலை குட்டைகள்

இப்படியாக....
தூரத்து கடல் பரப்பில்
பிய்தெறிந்த பஞ்சுகளாக
சிதறிக் கிடக்கும் எண்ணங்கள்!!!
--இதயசகி

எழுதியவர் : இதயசகி (1-Jul-19, 3:15 pm)
சேர்த்தது : Idhayasagi
Tanglish : sitharalkal
பார்வை : 127

மேலே