இணைவிழைச்சு 5 - வெண்டளை பயிலும் கலி விருத்தம் - வளையாபதி 30

வெண்டளை பயிலும் கலி விருத்தம்

அரசொடு நட்டவர் ஆள்ப விருத்தி
அரவொடு நட்டவர் ஆட்டியும் உண்பர்
புரிவளை முன்கைப் புனைஇழை நல்லார்
விரகிலர் என்று விடுத்தனர் முன்னே. 30 வளையாபதி

பொருளுரை:

நட்பு கொள்வதற்கு அரிதாகிய வேந்தரோடு நட்பு கொள்வோர் அவ்வேந்தர் விருப்பத்தோடு வழங்கும் வாழ்வூதியத்தைப் பெற்று இன்புறுதல் கூடும்.

அஞ்சுதகு பாம்போடு பழகுவோர் தாமும் அப்பாம்பினை ஆட்டுந் தொழிலால் வருவாய் பெற்று உண்டு மகிழ்தல் கூடும்.

முறுக்குடைய சங்கவளையலணிந்த முன்கையினையும் அணிகின்ற அணிகலன்களையுமுடைய அற்ப ஒழுக்கமுடைய மகளிருடன் தொடர்பு கொண்டு பழகி வருவது நல்வாழ்க்கைக்குச் சிறிதும் பயன் தராது. என்றுணர்ந்து சான்றோர் தொன்று தொட்டே ஒழுக்கமற்ற விலைமகளிருடன் பழகுவதைக் கைவிட்டு வாழ்ந்தனர் என்று சொல்லப்படுகிறது.

விளக்கம்:

அரசரிடத்திலும், பாம்பினிடத்திலும், கற்பிலா மகளிரிடமும் கேண்மை கோடல் தீங்கு பயப்பதாம்.

ஒருவேளை அரசரோடு கேண்மை கொள்பவர் அகலாது அணுகாது தீக்காய்வார் போல விழிப்புடன் பழகி வந்தால் அவ்வரசனால் ஊதியம் பெற்று இன்புறுவர்.

பாம்போடு விழிப்புடன் பழகுவோரும் அதனை ஆட்டி வருவாய் பெற்று வாழ்தல் கூடும்.

கற்பிலாக் கயமகளிரோடு கேண்மை கொள்வார்க்குக் கேடு விளைவது உறுதியாகும்.

ஒரு சிறிதும் அம்மகளிர் ஆக்கம் செய்வாரிலர் என்பது உறுதி. இக்கருத்தினை,

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள். குறள், 916 வரைவின் மகளிர்

பொருளுரை:

தம் நல்லொழுக்கத்தைப் போற்றும் சான்றோர் அழகு முதலியவற்றால் செருக்கு கொண்டு தம் புன்மையான நலத்தை விற்கும் பொது மகளிரின் தோளைப் பொருந்தார்.

எனவும்,

நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள். குறள், 917 வரைவின் மகளிர்

பொருளுரை:

நெஞ்சத்தை நிறுத்தி ஆளும் நிறைவான ஆற்றல் இல்லாதவர், தம் நெஞ்சில் வேறுபொருளை விரும்பிக்கூடும் பொதுமகளிரின் தோளைப் பொருந்துவர்.

என்ற குறட்பாக்களாலும் உணரவேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jul-19, 6:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 68

மேலே