ரகசியமல்ல அது அவள் அவசியம்

எழுபது அகவை எட்டியப் பாட்டன்
எழும் ஊன்பசி உணர்பசி தீர்த்திட - அவன்
பெயர்த்தி வயதொத்த யுவதியுடன் கூடினால்
பணம் பதவியுடன் பலனதில் கிட்டுமெனில்
உற்ற உறவுகள் பக்கபலமாய் நின்றிடும்
பெற்றப் பெரும்பேராய் பாராட்டி மகிழ்ந்திடும்

தளிர்களுக்கு தாயாகி இளம்துணை இழந்தால் -அவள்
தவக்கோலமின்றி தனித்து வாழ்ந்திடல் வேண்டும்
தாயுணர்வுடன் சேய்களை நலமுறப் பேணினும்
தனக்கொரு துணைநாடல் குற்றமாய் போய்விடும்
உற்ற உறவுகள் கொச்சையாய் பேசிடும்
இச்சை அடங்காதவளென இழிந்தவளை ஏசிடும்

ஊன்பசி உணர்பசி உயிர்களின் தன்மை - அதை
உவப்பதும் தவிர்ப்பதும் அவரவர் உரிமை
மறைத்தவள் மறுப்பதே மாண்பென விதித்தது
மங்கையர்க்கு எதிரான சமூகத்தின் சதியது
அவளது தேடலில் தேவையில்லை இரகசியம்
அறமாய் அதைமுறையாய் அங்கீகரித்தல் அவசியம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (5-Jul-19, 12:19 pm)
பார்வை : 90

மேலே