இலியிச் பாகம் 13 முதல் 20 வரை

பாகம் 13

தும்கூரில் கஜாவின் வீடு சிறியதுதான். அதில் எப்படியோ ஒரு அறையை கொடுத்து விட்டார். இலியிச்சுக்கு இந்த அறை விருப்பமானது. இரவெல்லாம் புகைத்தாலும் தீராத ரம்யத்தை தும்கூரில் இந்த வீடு அருளியது என்று சொல்வான்.

நீங்கள் இலியிச்சுடன் அகும்பே சென்று வந்தீர்களாமே என்றேன்.

அங்கு ராஜநாகங்கள் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான். சென்று வந்தோம்.
பாம்பின் மிக அருகில் செல்ல ஒருபோதும் அவன் விரும்பவில்லை. எனது அரிய சொந்தங்கள் இவை என்று மகிழ்ந்தான்.

ஸ்ட்ரீட் ப்ளே போட்டீர்களா?


சஃப்தர் ஹாஸ்மி நினைவாக சில நாடகங்கள் போட்டு இருக்கிறேன். அதில் இலியிச் நடித்தது உண்டு. பெரும்பாலும் பார்க்க வருபவர்களிடம் ஓயாது பேசிக்கொண்டே இருப்பது வழக்கம்.

ஒருமுறை ஒரு மூதாட்டியிடம் பேசிக்கொண்டே அவள் வீட்டுக்கு போய் விட்டான். மூன்று நாட்கள் கழித்துதான் வந்தான். அவர்கள் வீட்டில் இருந்த மைனாக்களை பற்றி பேசிக்கொண்டே இருந்தான் என்றார்.

கஜா...இலியிச் உயரமான இடங்களுக்கு ஆசைப்பட்டு செல்வான் தெரியுமா?

மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகள் வழியே என் ஊருக்கு போக வேண்டும் என்பான். சாத்தியமே இல்லையே..

அவனுக்கு வாழ்க்கையை ரசிக்க தெரிந்தவரையில் வாழ தெரியாது போயிற்று அதுதான் வருத்தம் என்றேன்.

ஒருமுறை "நண்பர்களை விடவும் எதிரிகளே மனப்பரப்பில் முக்கியமாகி விடுகின்றனர்.

அவர்களோடு எளிதில் புணர முடிகிறது. நட்பிலோ கோலாகலமான சடங்குகள் புதைந்து கிடக்கிறது. எல்லா உறவுகளையும் சிதறடித்தபின்னரே என்னை எனக்குள் பார்க்க முடிகிறது. இது யாருக்கோ கிடைக்கும் கொடுப்பினை" என்றான்.

அவனால் இருப்புக்கும் உறவுக்கும் இடையில் எந்த கோடுகளையும் அழிக்க முடிந்தது.

"யாரிடமிருந்து வெளியேற நான் விரும்புகிறேனோ அவர்களின் சுவடுதான் இந்த பூமியை காக்கிறது" என்று ஒரு இரவில் என்னிடம் புலம்பினான். இலியிச் அரசியல் பார்வைகள் இப்படியும் இருக்கலாம் என்ற சம்பவம் அது என்றார்.

அவன் தற்கொலை முயற்சியை ஆந்திராவில் இருக்கும்போது சகுபர் சாதிக் சொல்லித்தான் எனக்கு தெரியும். அவன் தப்பி பிழைத்தது விதியின் பிழை. இப்படி சொல்வதுதான் சரி என்றே தோன்றுகிறது என்றார் கஜா.

சகுபர் சாதிக் ஒரு வக்கீல் குமாஸ்தா. தமிழகத்தில் பெண் கொடுத்து இருக்கிறார்.

கோயம்புத்தூர் பக்கம் வருவார். உன்னால் அவரை பார்க்க முடிந்தால் நல்லது. சகுபர் சில நாடகங்கள் எழுதி இருக்கிறார். அதில் இலியிச் பங்கு மிக முக்கியமான ஒன்று.

சகுபரின் முகவரி வாங்கி கொண்டு கஜாவை பிரிய மனமின்றி கிளம்பி வந்தேன்.

_________________________________
பாகம் 14

இலியிச் ஒரு யதார்த்தவாதி அல்ல. மிகவும் சாமானியன். பார்த்த உடனே மறக்க தோன்றும் உருவம். களைத்து போன வாழ்க்கையை மட்டுமே அவனுக்கு எல்லோராலும் கொடுக்கப்பட்டது.

அவன் வாழவும் தெரிந்துகொள்ளவும் எப்போதும் ஆர்வத்துடன் இல்லை. பிசகான பாதை என்ற ஒன்றை அவனுக்கு முன்கூட்டியே புரிந்து கொள்ள முடிந்தது.

வாழ்க்கை என்பது திட்டமிட்ட ஒன்று என்று பேசும் கூட்டத்தில் இருந்து ஓடி விடுவான்.

அவனுக்கு பிடுங்கு இருந்தது. என்னமோ பாவம் எதுக்கோ இப்படி ஒரு கஷ்டம் என்றெல்லாம் அவனிடமிருந்து ஒதுங்கி ஓடும் சொந்தத்தை எல்லாம் அவன் முன்பே தலை முழுகி விட்டான்.

அவன் கால்களை நம்பினான். அது அவனுக்கான வரைபடத்தை தயாரித்தது.

சுற்றிய இடத்தில் எல்லாம் அவனால் ஒரு மகாத்மாவை சந்திக்க முடிந்திருக்கிறது.

இந்தியாவில் நாம் இல்லை. நம்மிடம் மட்டுமே இந்தியா இருக்கிறது என்பான்.

நடுக்காட்டில் இருக்கும் ரௌத்திரமான விலங்கொன்றின் கொடிய பசிதான் இந்திய ஜாதீய முறைகள். பண்பாடும் கலாச்சாரமும் ஜாதியை தாங்கி பிடிக்கிறதே தவிர எந்த கடவுளும் அல்ல. பெரியார் கூட இன்று ஒருவிதத்தில் கடவுள்தான். இதுதான் நவீன ஜாதீயம் என்பான்.

ஒருவரை ஒருவர் நம்புவது அட்டூழியமான ஆன்மீகம். நம்புதல் என்பதே ஒரு விலங்கின் அனாயச துரத்தல். இதைத்தான் கல்வி தூண்டியும் விட்டு வெறியூட்டி வேடிக்கை பார்க்கிறது.

இப்படியெல்லாம் அவன் பேசும்போது ஒரு பெருங்கூட்டம் சூழ்ந்து இல்லை.

ஒன்றிரெண்டு நண்பர்கள் மட்டுமேதான் இருந்திருக்கிறார்கள்.

அவன் பேசும்போது தோன்றாத ஒன்று தனியே யோசிக்கும்போது தோன்றும் ஒன்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒன்றாய் இருக்கும் என்பார்கள்.

இலியிச் யாருக்கும் லட்சியவாதியோ கதாநாயகனோ அல்ல. ஒரு மனிதன்.

தன் பெயரை கூட சுமக்க விரும்பாத மனிதன். தன் நிழலை நீருக்குள் பார்க்கும்போது "இப்போது மட்டும் குளிரவில்லை" என்பான். உடனே மெல்ல சிரிப்பான்.

அவன் நண்பர்கள் இலியிச் உடன் இருந்தால் மட்டுமே போதும் என்பார்கள்.

"இலக்கியமும் காப்பியமும் முடிந்தவரை வாழ்க்கையை காப்பியடித்த பின் குப்புற படுத்து ஆபாசம் காட்டுகிறது. நான் அதில் படிக்க என்ன இருக்கிறது" என்று வைகை அணையில் கார்த்தியிடம் கேட்டிருக்கிறான்.

இலியிச்சின் பல கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே இருக்கிறது.

அவனை தாண்டிச்செல்ல விரும்பிய நான் கூட அவனிடத்தில் இன்னும் தவழ்ந்துகொண்டுதான் இருக்கிறேன்.

___________________________________

பாகம் 15

சகுபரை தொடர்பு கொண்டபோது அவர் வார இறுதியில் வருவதாக கூறினார். இலியிச் பற்றி பேச வேண்டும் என்று சொன்னபோது தானும் அதே ஆர்வத்தில் இருப்பதாக கூறியது ஆறுதல்தான்.

நீங்கள் தெய்வசிகாமணியை கேள்விப்பட்டது உண்டா என்றார். இல்லை என்றேன்.

அவர் ஸ்ரீரங்கத்தில் அடைய வளஞ்சான் தெருவில் இருக்கிறார். முடிந்தால் பேசுங்கள் என்றார்.

நிச்சயமாக அவரை பார்க்கிறேன். உங்களிடம் இலியிச் எழுதிய பிரதிகள் ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டேன்.

"ஆசையின் அவசரத்தனமான முட்டாள்தனத்தில் முக்கியமானது படைப்புக்கான சிந்தனைகள்" என்று அவன் சொன்னதை  இப்போது  என் நினைவுக்கு வர வைத்து விட்டீர்கள். இருந்தும் பார்க்கிறேன்.

நாம் சந்திக்கும்போது அவை கிடைத்தால் மிக வசதியாக இருக்கும் என்றேன்.

இலியிச் பெரும்பாலும் எழுதுவதில் ஆர்வம் கொள்ளவில்லை. அவன் ஆந்திரா வந்தபோது நவாபுகள் வரலாறு பற்றி படிக்க விரும்பினான். இங்குள்ள சில பழங்குடி மக்களை சந்திக்க விரும்பினான்.

எனக்கு அறிவியல் துளைக்காத மனிதர்களை பார்க்க வேண்டும் என்று சொன்னபோது நான் சற்று குழம்பி விட்டேன். இருப்பினும் பஞ்சாரா அருகில் சென்சஸ் மக்களிடம் அவனால் கலந்து பேச முடிந்தது.

அவர்களின் வாழ்வியலில் அவனால் கலக்க முடியவில்லை. நான் அந்நியப்பட்டிருக்கிறேன். அவர்கள் ரெட்டி என்ற சொல்லொடு பிணைத்து பின் வரும் காலத்தில் கொய்யப்பட்டு விடுவார்கள் என்ற அச்சம் வருகிறது என்று சொன்னான்.


சிறிது காலம் தங்கிவிட்டு பின் ஜெய்ப்பூர் செல்ல விரும்பினான். அங்கு சுனிதா  பரெக் என்பவர் மிக நெருங்கிய தோழி அவனுக்கு. சந்திக்க சென்றானா என்பது மட்டும் தெரியவில்லை என்றார்.

தெய்வசிகாமணி பற்றி உங்களுக்கு தெரியுமா என்று கேட்டேன். அவர் நாடறிந்த எழுத்தாளரின் தம்பி அல்லவா? உங்களுக்கு தெரியாதா என்று அந்த எழுத்தாளரின் பெயரை கூறியதும் ஒரே வியப்பு எனக்கு.

அவரோட தம்பியா இவர் என்றேன்.

ஆம்..போய் பாருங்கள். நிறைய விஷயங்கள் கிடைக்கலாம். நாமும் வார இறுதியில் பேசிக்கொள்வோம் என்று முடித்துவிட்டார் சகுபர் சாதிக்.


________________________________

பாகம் 16

இலியிச் எழுத்தாளர்களை சென்று பார்ப்பதும் அவர்கள் வந்து இவனை பார்ப்பதும் அத்தி பூத்தது போல்தான் என்று என்னிடம் முத்துக்குமரன் ஏற்கனவே சொல்லி இருக்கிறான்.

"எழுத்தாளனின் காதலி கொண்டையில் நட்சத்திரமும் அவன் வைப்பாட்டி கையில் பஞ்சாங்கமும் இருந்தால் நான் ஒன்றும் ஆச்சரியப்பட மாட்டேன்.

அப்படி ஒருவன் எழுதுவதை விட சிரைக்க போகலாம் என்றும் சொல்ல மாட்டேன். ஏனெனில் பார்பர்கள் நினைத்தால் இந்திய அரசியலை மாற்றி விட முடியும்" என்று இலியிச் சொன்னபோது நாங்கள் இருவரும் மூணாறு இலக்கியக்கூட்டம் நடந்த மைதானத்தில் இருந்தோம்.



எழுத்தில் கக்கியதை திரைப்படத்தில் வாந்தி எடுக்கின்றனர். ஒரே வசனத்தை பல வாய்கள் பேசுகிறது. பல கைகள் எழுதுகிறது. மொத்தத்தில் குப்பையை மட்டுமே அள்ளி கொண்டு இருக்கிறோம். இவர்களிடம் தப்பி பிழைத்து வாழ்வதே அதிசயம்தான் என்றெல்லாம் பேசினான்.

இலியிச் நீ அவநம்பிக்கை கொண்டவன் என்பதால் இத்துடன் நான் பேசுவதை நிறுத்தி கொள்கிறேன் என்றேன்.

நம்பிக்கை ஒரு அவலம். நம்ப தூண்டுவது அவமானம்.

கொழுத்த மனித திமிர் இதை லட்சியமாக்கி பரப்பி வைத்திருக்கிறது.
ஒருவனை நம்ப தயாராகும் மனம் மூன்று வினாடிகளில் ஏழு பேரையாவது சந்தேகம் கொள்கிறது.

பேனாவும், காட்சியும்  ஆட்டிப்படைப்பது மட்டுமே நிஹிலிஸம்.

இப்படி இலியிச் சொன்னபோது என்னால் எதுவும் பேச முடியவில்லை. நான் ஏன் இவனோடு மூணாறு பயணித்தேன் என்பதே கேள்வியாக இருந்தது.

அவனுக்கு யாரும் வேண்டாம் என்பதில் பிரச்சனை இல்லை. எது வேண்டாம் என்பதில்தான் பிரச்சனை. அவன் இதை யார் ஏன் பூமி என்றும் நிலாவென்றும் சொன்னார்கள்...? அதையே நானும் ஏன் சொல்ல வேண்டும்? என்றும் கேட்கிறான். நான் இதை எப்படி தீர்க்க முடியும்? என்ன பதில் சொல்ல முடியும்?

இறுதியில் என்னவாயிற்று?

எங்களை அந்த ஊர் நாட்டு சாராயம் மட்டுமே அமைதியாக்கியது என்றதும் இருவரும் சிரித்தோம்.

இலியிச் கனவுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மனிதன். அவன் மூளை இயந்திரங்களை வெறுத்தது. பறவைகள் ஏன் தனக்கென்று கக்கூஸையும் ஆஸ்பத்ரியையும் கட்டிக்கொள்ளவில்லை என்று கேட்கும் போது ஸ்கூல் குழந்தைகள் சிரிக்கும்.
இலியிச்க்கு அது குற்றம் அல்ல. பெற்றவர்கள் கூடவே சிரிப்பதுதான் முழு வேதனையை தருகிறது என்பான்.

_________________________________

பாகம் 17

சின்ன மேற்கூரை போட்டு மஞ்சள் பெயிண்ட் அடித்த வீடுதான் சிகாமணி சார் வீடு என்று சொன்னதும் பிடிபட்டது.

அவர் மிக உயரம்.மிக சிகப்பு. நெற்றி நடுவில் வட்டமாய் குங்குமம்.


நீங்கள் யார் என்றதும் எல்லாவற்றையும் சொன்னேன். சகுபர் சாதிக் என்றதும் அவரிடம் பவ்யம் தெரிந்தது.

சத்தமே இல்லாது ஒரு யுத்தம்  தன்னை அழித்து கொண்டது என்றால் அது இலியிச். வேறொன்றும் சொல்ல இல்லை என்றதும் எனக்கு வேதனையாகி விட்டது.

நான் டார்ஜிலிங் செல்ல இருக்கிறேன். அவனை சந்திக்கும் நம்பிக்கை இன்னும் இருக்கிறது எனக்கு என்றேன்.

எனக்கு தெரிந்து ரயிலில் மட்டுமே அவன் வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கும் என்று சொன்னவர் அமைதியானார்.

"எல்லோரும் அயர்ந்து தூங்கும் நள்ளிரவில் பலங்கொண்ட மட்டும் ஓங்கி தரையில் அறையப்பட்ட தாம்பாளத்து ஓசையின் பெயர்தான் ஜனநாயகம்" என்று இலியிச் சொன்ன போதுதான் அவன் பெயரின் அர்த்தம் புரிந்தது எனக்கு என்றார் சிகாமணி.

அரசியல் விகாரமான ஒழுக்கம். மதமும் ஜாதியும் கலந்து காய்ச்சிய விஷம். நான் யாரையும் காப்பாற்ற வரவில்லை. என்று ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும்போது என்னிடம் அவன் சொன்னான்.

அரசியலில் அவனுக்கு இடமில்லை. எல்லா மதமும் ஜாதியும் இனக்குழு அடையாளங்களும் அவனை துன்புறுத்தவே செய்தன. கடவுளிடம் இருந்து விடுபட்ட அவனுக்கு ஜெப ஓசையில் தப்பிக்க முடியவில்லை.


"நாட்டில் அரசியல் இல்லை. சட்டம் இல்லை. சட்டத்தின் ஆட்சி இல்லை. ஒன்று அறிவிக்கப்பட்ட நெருக்கடி அரசால் வரலாம். அல்லது அறிவிக்கப்படாத நெருக்கடி டீவி மற்றும் சினேமாக்களால் தொடர்ந்து இருக்கும்.

மாற்றி மாற்றி அடுத்தவன் தலையில் குப்பையையும் மண்ணையும் போட்டு வயிறெரிந்து வாழ்ந்து முடிப்பதில் இந்தியர்கள் மன்னர். தமிழனோ மன்னாதி மன்னன்.

தனக்காக அடுத்தவனை திருத்துவதிலும் நியாயங்களை உற்பத்தி செய்வதிலும் ஆதி காலம் முதல் மாறாத பற்று கொண்டவன்.

சட்டத்தின் மூலம் பிச்சையை அதிகாரமாக்கியவனின் வரம்பில்லாத கண்டுபிடிப்பில் மிக முக்கியமானது பத்தினி எனும் சொல்."

சிகாமணி இதை சொன்னதும் எனக்கும் ஒன்று நினைவுக்கு வந்தது. "காதல் திருமணம் என்றால் அது இரண்டு ஜாதிக்குள் மட்டுமே இருக்க முடியும் என்பதை எழுதியும் காட்டியும் சொல்லி  சொல்லி தரும் சமூகத்தில் நான் காறி உமிழ்கிறேன்" என்று ஆடூர் மூணாலம் பள்ளி மைதானத்தில் பணிக்கரிடம் இலியிச் ஒரு முறை சொல்லி இருக்கிறான்.

சிகாமணி தன் அறைக்குள் என்னை அழைத்து போனார். இதோ இந்த கோட்டோவியம் பாருங்கள். அந்த படம் விலை உயர்ந்த ஃபிரேமில் சட்டம் செய்து மாட்டப்பட்டு இருந்தது.

ஒரு விநாடியில் இருந்து ஒரு மணி நேரத்திற்குள் பல சிந்தனைகளை தோற்றுவிக்கும் எந்த நுட்பமும் அதில் இல்லை. நதிக்கரையை சூரியன் வந்து சேரும் காட்சி. கீழே ராமு என்றும் அதற்கு கீழே இலியிச் என்றும் எழுதியிருந்தான்.

சிகாமணி தன் கண்களை அழுந்த துடைத்து கொண்டிருந்தார். அவனுக்கு உடைகள் கூட கேவலமான விஷயம்தான். நாம் அவனுக்கு எந்த மாதிரி தெரிவோம் என்பதை நினைக்க கூட முடியாது.


__________________________

பாகம் 18

மாவூற்று வேலப்பர் கோயில் போகலாம் என்று முத்துக்குமரன் அழைத்தபோது நான் ஆண்டிப்பட்டிக்கு சென்று விட்டேன்.

இருவரும் பைக்கில் சென்று அரவம் இல்லாத மனித நெடி சற்றுமில்லாத இடத்தை தேர்ந்தெடுத்தோம். இங்கு நான் மூன்று முறையேனும் இலியிச்சுடன் வந்து இருக்கிறேன்.

மரவள்ளிக்கிழங்கும் மசாலா கடலையும் மிகவும் பிடிக்கும் அவனுக்கு. இங்குதான் குடித்து விட்டு சாப்பிடுவோம். அவன் நினைவு வரும்போது நான் இதை நினைக்காது இருக்க முடியாது என்னால். குடித்து விட்டு அவன் உளறியோ பிதற்றியோ நான் கேட்டது இல்லை.



அந்த இடம் வெயில் வர யோசிக்கும் இடம். இலியிச்க்கு அது பிடித்து போனதில் எந்த சங்கடமும் இருக்காது.

முத்துக்குமரன் யோசித்து கொண்டே இருந்ததை போலவே பேசவும் ஆரம்பித்தான். நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்துக்கலை னு கேட்டேன்.
அதுக்கு அவன் பேசினது இன்னும் மறக்கலை. பசியும் காமமும் முறியடிக்க முடியாத ஒண்ணு னு சொன்னான்.

காதலை என்னால் நிரப்பி கொள்ள முடியாது. பெண்ணிற்காக என்னை மீண்டும் நான் படைக்க முடியாது. பசி பூச்சிக்கும் உண்டு. நான் குழப்பத்தில் கிடைக்காத காட்சி. அப்படின்னு சொன்னான்.

இலியிச் கிட்ட என்ன இல்லையோ அது எல்லாம் தேவைக்கு மேல் என்கிட்ட இருக்கு. அவன் சந்தோசமா இருக்கிறதும் நான் துயரமா இருக்கிறதும் ஏன் னு இதுவரை புரியலை எனக்கு.

இலியிச் கிட்ட ஆன்மீக அமைதியோ சாதித்த பெருமைகளோ சமூக கௌரவங்களோ படிப்பறிவோ ஞானமோ ஒண்ணும் இல்லை. இருந்தாலும் ஒரு ஆழமான வாழ்க்கை அவனோடது. நானோ கரையில்  தடுமாறி கிடக்கேன்.

சின்ன சின்ன அதிகாரத்தில் சுகங்கொள்ளும் மனதோடு நான் நானாக இருக்க முடியவில்லை. அப்போது என் கதவையும் ஜன்னலையும் சாத்தி விடுங்கள் என்று கேட்டு கொள்வேன். காற்று வர வேண்டாம். வாசனை மிக்க மனிதரும் வர வேண்டாம். இது மட்டுமே என் பிரார்த்தனை னு சொல்வான்.

வர வர மனிதர்களின் முகங்களை பார்க்கவே அச்சம் வருகிறது. நான் யாரோ அல்ல. வேறு வேறு என்று கத்தி சொல்கிறேன். அவர்கள் நெருங்கி வந்து கைகளை பற்றும்போது கூசுகிறது.
அவர்களின் பட்டம் பதக்கங்களை லாரியில் திணித்து வலம் வர விடுவதை பார்க்கும்போது யாரால் நாம் இப்படி மாறி விட்டோம் என்ற கவலை வருகிறது.

சாவை குறித்து பேசவில்லை. அது ஒரு நொடி விடுதலை. எந்த மரணமும் யாருக்கும் ஓதப்படும் செய்திகள் அல்ல.

பிணங்களோடு சுற்றுவது அரசியல்வாதி மட்டும்தான். அவனுக்கான மனிதர்கள் எப்போதும் அவனுக்கு கிடைப்பார்கள். மலக்கிடங்குகள் ஆசையுடன் வரும் நாய்களை எப்போதும் வெறுக்காது உணவளிக்கும். நான் இதில் நிறுத்தி வைக்கப்பட்ட பின்புலம்தான் என் இத்தனை பதட்டத்திற்க்கும் காரணம்.

இலியிச் பிறந்தது பற்றி வருத்தம் கொள்ளவில்லை. அதன் பின் வரும் ஒரு மயக்கத்தில் இருந்து பின் தொடரும் அனைத்து மயக்கங்களும் மட்டுமே அவன் கவலையாக மாறியது.

இந்த மாற்றம் அறம்,ஒழுக்கம்,தார்மீகம்,நேர்மை,சத்தியம் என்றெல்லாம் பேசும்போது அவனுக்குள் அவன் சிதறி போகிறான்.
நாமோ மானமிழந்து பழகி விட்டோம்.

நாங்கள் இருவரும் எழுந்து கொண்டோம்.
குமரா, விரைவில் டார்ஜிலிங் போக போகிறேன். இலியிச் பார்க்க வேண்டும்.

போ. பாரு.அவனை கூட்டிட்டு மட்டும் வந்துடாதே.

முடிஞ்சா கொன்னுட்டு வா. இலியிச் இன்னிக்கு ஒரு முப்பது பேர் மனசில் இருந்தாலும் அது நாம் அவனுக்கு செய்யற துரோகம் என்று சொல்லி விட்டு மௌனமாகியது என்னை பாடாய் படுத்தியது.


_____________________________________

பாகம் 19




(நீங்கள் ஏன் எழுத கூடாது என்று களியக்காவிளை நந்தகோபால் எழுதிய கடிதத்துக்கு இலியிச் அனுப்பிய பதில். இதை சகுபர் அனுப்பி வைத்தார்.)


எழுதுபவர்கள் கொஞ்சம். அதை வாசிப்பவர்கள் கொஞ்சம். அதில் சிந்திப்பவர்கள் இன்னும் கொஞ்சம். அதையும் பரிமாறி கொள்வோர் இன்னும் கொஞ்சம். இறுதியில் அது அனைத்தும் சேரக்கூடாத இடத்தில் சேரும்போது தவறான வாயும் கையும் குதறியும் பிய்த்தும் போட ஆரம்பிக்கிறது.

விஸில் ஒலிகளும் கைதட்டல்களும் எந்த ஒன்றையும் மாற்ற போவதில்லை.

அது போகிற போக்கில் செருக்கையும் ஆணவத்தையும் விதைத்தே செல்லும்.

எதுவுமற்றவன் தன் அறிவீனத்தில் இருந்து குசும்பை மட்டுமே தேர்ந்து எடுக்கிறான். ஒப்பனை செய்கிறான். எழுதுகிறான். அவன் தொண்டர்களின் கூக்குரல்கள் கலாச்சார பண்பாடுகளை முடிந்த அளவில் சம்பிரதாயங்களாக மாற்றி வருகின்றன.

ஓலை பட்டாசும் கள்ளும் வேண்டிய அளவில் கிடைக்கிறது. பட்சணங்கள் விரும்பும் தெய்வங்களும் அரிவாள் சாமிகளும் அருள் பாலித்து கொண்டே இருக்கின்றன.

லிப்ஸ்டிக், ஆணுறை வணிகத்தின் சந்தை மதிப்புகள் இன்று குழி தோண்டி புதைத்த தத்துவங்களின் மரபணுக்களில் நான் இன்றளவும் ஒரு அனாதைதான்.

என் அறிவு என்பது படைப்பு அல்ல. ஒன்றின் வெற்றி தோல்விகளில் அல்ல. நான் சிந்திப்பதில் அல்ல.

சற்றும் யோசிக்காது என்னை யாருக்காகவோ எதற்காகவோ இழந்து போகும் ஒன்றில்தான் இருக்கக்கூடும் என்பதை இன்றுவரை நம்புகிறேன்.

என்னை இறுக்கி கொண்டிருக்கும் எதுவும் நான் சுமந்து வந்ததோ நானெ காப்பாற்றி வைத்து கொண்டதோ இல்லை. அது கீழ்த்தரமான கல்வியின் கற்பனையில் ஊறிப்போன அகந்தை.

இனிப்பான கதைகளும் பாடல்களும் புனைந்து கொட்ட நானொன்றும் பாட்டி மடி அல்ல.

எனக்கு எதிரில் இருப்பவர்களுக்கு நான் சூடும் சுரணையும் கொண்டவன் என்பதை தெரிவிக்கவே இன்றுவரை எழுதவில்லை. நந்தியின் கொம்பு வழியே பார்க்கும்போதெல்லாம் எனக்கு நந்தி மட்டுமே தெரிகிறது லிங்கம் அல்ல.

என்னை நான் பின் தொடர அனுமதிக்க மாட்டேன். உங்களையும் அனுமதிக்க மறுக்கவே எழுத மறுக்கிறேன்.


___________________________________

பாகம் 20

சகுபர் சாதிக் கோவைக்கு வந்துவிட்டதாகவும் திருப்பூர் செல்ல இருப்பதால் அங்கேயே பார்க்க முடியும். நேரே திருப்பூர் வாருங்கள் என்றார்.

அவரை சந்தித்தபோது மிக ஒல்லியாக இருந்தார். கண்கள் அவசரமாக எதையோ தேடிக்கொண்டே இருப்பது போல் பார்த்து கொண்டே இருந்தார்.

எப்போது டார்ஜிலிங் செல்ல உத்தேசம்?

வீட்டுப்பிரச்சனைகள் பற்றி சொன்னேன்.

ஆக சற்று நாள் கழியும். என் உடல்நிலை ஒத்துழைத்தால் நானும் அங்கே வந்து விடுவேன். இப்போது முடியாது என்றார்.

சகுபரின் நாடகங்கள் இலியிச்சை கொண்டு எழுதப்பட்டதா என்று கேட்டேன்.

அவர் பல விஷயங்களை சொல்ல ஆரம்பித்தார்.

இலியிச் என் நாடகங்களை வாசித்ததுண்டு. பெரும்பாலும் முனிசிபாலிட்டி ஊழல்களையும் மார்க்கெட் அரசியல்களையும் மட்டுமே எழுதி இருக்கிறேன்.

ஆர்வத்துடன் அவன் அதில் ஏதாவது பாத்திரத்தை பெற்று நடிக்க ஆரம்பிப்பான். தெலுங்கு கொச்சைகள் அவனுக்கு எளிதில் வராது. அதனால் அவன் பாத்திரங்கள் யாவும் கேலி பேசப்பட்டு அதனாலேயே புகழ் அடைய ஆரம்பித்தான்.

இலியிச் ஒரு படைப்பாளி அல்ல. அவன் நோக்கம் உழைப்பை பற்றித்தான் இருந்தது. கம்யூனிச சிந்தனைகளின் பாதிப்புகள் அவனிடம் இருக்கவில்லை.
மழைக்கு கூட அங்கு ஒதுங்க மாட்டேன் என்று சொல்வான்.

கடமை என்ற சொல் மீது அத்தனை வெறுப்பு இருந்தது.
"பொறுப்பு, தொழில் நேர்மை என்ற பதத்தை பல நாட்கள் தான் ஆராய்ச்சி செய்து வந்தேன் இறுதியில் அனைத்து குற்றத்தின் ஊற்றுகண்களே இந்த வார்த்தைகள்தான் என்பதை கண்டுபிடித்தேன்" என்று கூறினான்.

ஒருநாள் என் இளைய மகள் ரோஜா பாத்திமா ஏதோ தின்ன கேட்டிருக்கிறாள். இலியிச்சிடம் அப்போது பணம் இல்லை.
அன்று அப்போது வெளியில் போனவன் நான்கு நாட்கள் கழித்து மீண்டும் வந்து விட்டான்.

எங்கு போயிருந்தாய் என்று கேட்டபோது உழைக்க என்றான். நான் அமைதியாக இருந்தேன்.

பாத்திமாவிடம் பிரியம் அதிகம். அவளை மடியில் இருத்திக்கொண்டு அவளோடு பேசிக்கொண்டே இருந்தான். குழந்தையை தூங்கச் செய்து என்னிடம் சில நோட்டுக்களை வாங்கி கொண்டு குடிக்க சென்று விட்டான்.

மீண்டும் மாலையில் வந்தபோது "பாய் உன் பொண்ணு என்னை தோற்க செய்து விட்டாள். என்னை அழித்து விட்டாள்" என்று கதறி அழுதபோது என்னாலும் துக்கம் அடக்க முடியவில்லை.

இலியிச் கணநேர அன்பில் அவன் அறிவு ஒடுங்கிப்போனதை தாங்க முடியாமல் தவித்து கொண்டிருப்பதை பொறுக்க முடியாமலும் வேறொன்றை பதிலுக்கு செய்ய முடியாமலும் பார்த்து கொண்டிருக்க மட்டுமே முடிந்தது.

நாம் எப்படியோ தீர்மானங்களில் முடிந்து போய் வாழ பழகி விடுகிறோம். இலியிச் பழக்கங்களில் புழங்க மறுக்கிறான்.
எல்லா உத்தேசமான முடிவுகளுக்கும் நம்மால் அதிகாரியாக இருக்க முடியும்போது இலியிச் அங்கிருந்து வெளியேறி விடுகிறான்.

நம்மை அப்போது பார்த்தால் கூட இப்படி ஒரு உறுத்தலை வேறெங்கிலும் நான் பெற்றதில்லை என்று கூறுவான்.

இலியிச் காற்றுக்குள் நடந்து போககூடியவன் என்று நினைக்கும்படி அவன் செய்கைகள் இருக்கும்.

ஒருமுறை நாம் அவனிடம் வியந்து போக ஆரம்பித்தால் பின் வெளியேற முடியாது.
இலியிச் யார் கண்களுக்கும் தெரியக்கூடாத ஒருவன்தான் என்றார்.


ஜெய்ப்பூர்...சுனிதா எப்படி இலியிச் க்கு பழக்கம் என்று கேட்டேன்.

அவர் ஒரு நூலகர். என் நாடக பிரதிகள் கேட்டு வந்தார். அப்போது இலியிச்சின் நடவடிக்கைகள் பார்த்து அவனுடன் பேசி கொண்டு இருந்தார். சுனிதா ஜெயின் பெண்மணி. தொலைபேசி எண் இருக்கிறது. தருகிறேன் என்றார்.

இலியிச்சை சந்திக்கும்போது அவசியம் உங்களை பற்றி சொல்கிறேன் என்றேன்.

சொல்லுங்கள். அவன் அப்போதும் புன்னகைப்பதை விடவும் வேறொன்றும் செய்ய மாட்டான் என்றவர் சட்டென்று ஒரு அமைதிக்குள் சென்றார்.

நெடுநேரம் நாங்கள் சாலையை மட்டுமே பார்த்து கொண்டிருந்தோம்.

====================================

எழுதியவர் : ஸ்பரிசன் (11-Jul-19, 12:16 am)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 66

மேலே