கண்ணீரில் ஓர் கவிதை

என்றுனைக் காணும் நாள்வரு மென்றே
எண்ணியென் காலமும் கழியும்!
பொன்மக னுன்றன் பூமுகம் காணாப்
பொழுதுகள் மனத்தினை யழுத்தும்!
தன்னல மின்றி வாழ்ந்தவ னுன்னைத்
தாயுளம் நித்தமும் நினைக்கும்!
புன்னகை முகத்தைப் படத்தினிற் பார்க்கப்
பொங்கியே அழுகையும் வெடிக்கும்!!

ஆழ்மனக் கிடங்கி லாயிர முண்டே
ஆறுத லிங்கெனக் கில்லை!
சூழ்ந்திடுந் துயரை விரட்டிடும் வழியைச்
சொலித்தர நீயரு கில்லை!
பாழ்விதி யுன்னை யெம்மிட மிருந்து
பாதியில் பிரித்ததி லதிர்ந்தேன்!
வாழ்வினி லெனக்குப் பற்றெது மில்லை
வருத்தத்தி லுள்ளமு டைந்தேன்!

கலங்கரை விளக்கா யிருந்தவ னென்னைக்
கலங்கிட வைத்துவிட் டாயே!
தலைமக னேயுன் நினைவுக ளாலே
தனிமையி லிதயமொ டிந்தேன்!
பொலபொல வென்றே விழிகளில் வடியப்
புயலது வீசிடத் துடித்தேன்!
நலந்தர வுனையே நம்பினேன் முழுதாய்
நல்வழி காட்டிடு வாயே!!!

( மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் ..( 07:07:2019 )

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (12-Jul-19, 12:18 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 61

மேலே