ஜப்பான், ஒரு கீற்றோவியம் -15

காமகுராவின் வழியாக ஜப்பானின் தொன்மையில் இருந்து இன்றைய ஜப்பானின் மையமென தோன்றிய ஒடைய்பா (Odaiba)வுக்குச் சென்றோம். ஒடைய்பா என்பது டோக்கியோ வளைகுடாவில் உள்ள ஒரு பெரிய செயற்கைத்தீவு. வானவில் பாலம் என்னும் பெரிய அமைப்பு மையநிலத்துடன் ஒடைவாவை இணைக்கிறது. 1850ல் பாதுகாப்புக் காரணங்களுக்காக இது அமைக்கப்பட்டது. அன்று இது ஒரு துறைமுக வாயில்.1990ல் இது ஒரு வணிக- கேளிக்கை மையமாக மாற்றியமைக்கப்பட்டது.

இதை நியூயார்க்கின் மன்ஹாட்டன் ஸ்கைலைனின் ஒரு ஜப்பானிய மாதிரியாக ஆக்க முயன்றிருக்கிறார்கள். ஏற்கனவே இதைப்போன்ற இரு முயற்சிகளைக் கண்டிருக்கிறேன். ஒன்று, சிங்கப்பூரின் வளைகுடா பகுதி. இன்னொன்று துபாயின் ஈச்சமரத்தீவுக் கடற்கரை. இரண்டுமே வானுயர்ந்த கட்டிடங்களி நிரை கடலோரமாக அமைந்த பெரிய நிலவளைவுகள். இன்றைய நாகரீகம் என நாம் எண்ணும் கார்கள், விளக்குவெள்ளம், பலவகையான விளம்பரங்கள், விதவிதமான உணவகங்கள், விடுதிகள், நடுவே கண் திகைத்துச் சுற்றிவரும் மனிதர்கள்.



ஒடைய்பாவை நோக்கியபடி நின்றிருந்தபோது அதுவரை சென்ற ஜப்பானிய வரலாற்று இடங்கள் பற்றிய உளப்பதிவுகள் அனைத்தும் பெரிய அருவி ஒன்றால் அடித்துச் செல்லப்பட்டு முற்றிலும் புதிய ஓர் உலகம் என்னுள் நிறைந்தது. அது எவ்வகையிலும் தனித்துவம் கொண்டது அல்ல. இன்னும் சில ஆண்டுகளில் மும்பையோ அகமதாபாதோ அப்படி ஆகிவிடக்கூடும். இருபதாண்டுகளுக்கு முன் நான் வெளிநாட்டில் கண்டு வியந்தவை இன்று இந்தியாவில் சாதாரணமாக ஆகிவிட்டிருக்கின்றன

உண்மையில் இதுதான் ஜப்பான். டொயோட்டோ ஜப்பான். நாம் காணும் பழைய ஜப்பான், அதை பழைய சொல்லால் டாய் நிப்பன் என அழைக்கலாம், இன்றில்லை. அது நன்றாகப் பேணப்பட்டுவரும் ஒர் இறந்தகாலம். ஒரு வெறும் கனவு. ஜப்பானின் நிகழ்காலத்திற்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சொல்லப்போனால் அது சுற்றுலாப்பயணிகளுக்காக பேணப்பட்டுவரும் ஒரு திறந்தவெளி அருங்காட்சியகம். கிமோனோ,சமுராய், கடானா, ஜென்பௌத்தம், ஷிண்டோ மதம், தேநீர், பீங்கான் என அதன் காட்சிப்பொருட்கள் சுற்றுலாக்கவர்ச்சிகள் மட்டுமே.




ஒரு வாரம் அலைந்தபோதிலும் ஜப்பானின் தெருக்களில் எங்கும் ஜப்பானிய இசையின் ஒரு கீற்றைக்கூட என்னால் கேட்க முடியவில்லை. ஜப்பானின் பாரம்பரிய உடையணிந்த ஒருவரைக்கூட எங்கும் காணவில்லை – ஜென் ஆலயத்தில் ஒரே ஒரு பிக்ஷுவைக் கண்டதைத் தவிர. ஜப்பானிய ஷிண்டோ – பௌத்த ஆலயங்களில் எங்கும் விரல்விட்டு எண்ணத்தக்க ஜப்பானிய பக்தர்கள்கூட இல்லை. ஜப்பானியர்களாக நான் எண்ணியவர்கள் சுற்றுலாப்பயணிகளாகிய சீனர்கள். பள்ளிச்சுற்றுலா வந்த மாணவர்கள் சில இடங்களில் இருந்தனர். இந்த மதங்கள் அங்கே வாழும் நம்பிக்கைகள்தானா என்னும் ஐயம் உருவாகிறது.

நாம் ஜப்பான் என்றாலே நினைவுகூரும் ஜென் பௌத்த மரபுக்கும் இன்றைய ஜப்பானுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை. ஜப்பானே ஒரு பெரிய பரபரப்பான சந்தைபோலத் தெரிகிறது. கலைந்த பட்டாம்பூச்சிகள் போல சுழன்று பறக்கும் மனிதர்கள்.



பட்டாம்பூச்சிகளே கவனம்

முட்கள்

வருகிறது புயல்



என்னும் ஹைக்கூவை நினைத்துக்கொண்டேன்.



இன்றைய ஜப்பானை பார்க்கையில் அது அமெரிக்காவை நகலெடுக்க வெறிகொண்டிருப்பதைக் காணமுடிகிறது. செவியில் ஒலிக்கும் அனைத்து இசையும் அமெரிக்க இசைதான். ஒன்று நேரடியாக அமெரிக்க இசை, அல்லது ஜப்பானிய மொழியில் அமைந்த அமெரிக்க இசை. உடை அமெரிக்க மோஸ்தர்படி.. வீடுகள் அமெரிக்க பாணியில் சீனாவில் இருந்து வரும் பொருட்களால் தயாரிக்கப்பட்டவை.



ஜப்பானியத்தன்மை என்பது இரண்டு வகையில்தான். ஒன்று உணவு. இன்னொன்று தோல்நிறமும் முக அமைப்பும். உணவுகூட விரைவாக மாறிக்கொண்டிருக்கிறது. பெரும்பாலான இடங்களில் அமெரிக்க சங்கிலித்தொடர் உணவகங்கள் வந்துவிட்டிருக்கின்றன. இளைஞர்கள், குறிப்பாகச் சிறுவர்கள் அதையே விரும்பி உண்கிறார்கள். அதை அவர்களின் உடலமைப்பிலும் காணமுடிகிறது. முந்தையதலைமுறை ஜப்பானியர்களில் குண்டர்கள் குறைவு. இன்று சிறுவர்களில் பலர் வெடித்துவிடுபவர்கள் போல் தெரிகிறார்கள்.

தோற்றத்தை மாற்றிக்கொள்வதற்கும் ஜப்பானியர் முயன்றபடியே இருக்கிறார்கள். அமெரிக்கர்களைப்போல பலவண்ணங்களில் கூந்தலை மாற்றிக்கொண்டவர்களை, இமைகளில் வண்ணம் பூசியவர்களை பார்த்தேன். உடல் அளவிலும் அமெரிக்கர்களைப்போல ஒருநாள் மாறிவிடுவார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டது



ஒடைய்பாவில் இரவு ஒன்பது மணிவரை அமர்ந்திருந்தோம். கண் எட்டும் தொலைவு வரை ஒளிப்பெருக்குகள் வழிந்தன, சுழித்தன. ஒரு மாபெரும் வாணவேடிக்கை போல. இங்கே அமெரிக்கச் சுதந்திரதேவிச் சிலை ஒன்றை சிறிய அளவில் செய்து வைத்திருக்கிறார்கள். அதன் முன் நின்று காதலர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். எங்கும் காதலர்கள். உலகமெங்கும் காதலர்கள் செய்துகொள்ளும் உடலசைவுகள்.

ஜப்பானியக் குடும்ப அமைப்பிலும் அமெரிக்கச் செல்வாக்கு பெரிய விளைவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். பெண்கள் குடும்பங்களை உதறுவது மிகுந்து வருகிறது. பொதுவாகவே மணமுறிவுகள், உறவுச்சிதைவுகள், விளைவான உளச்சோர்வு மிகுதி. தற்கொலைகள் மிகுதியாக நிகழும் நாடுகளில் ஒன்று ஜப்பான். அமெரிக்காவில் இருண்ட ஞாயிறு [gloomy sunday] என்பார்கள். இங்கே கொல்லும் திங்கள். திங்கள் அன்று காலையில் விரைவுரயில் முன் குதிப்பதுதான் ஜப்பானின் வழக்கமான தற்கொலை முறை.



ஜப்பானை ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில் எனக்கு வறுமை என ஏதும் கண்ணுக்குப் படவில்லை. ஓரிரு போதையடிமைகள், வீடிலிகளைப் பார்த்தேன். ஆனால் பெரும்பாலும் வசதியான இல்லங்கள். தூய்மையான தெருக்கள். அமெரிக்காவில் செல்வச்செழிப்புக்கு நிகராக வறுமையும் கண்ணுக்குப்படும். அங்கே பொதுவாக தூய்மைப்பணியில் இருப்பவர்கள் வறியவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் தென்னமேரிக்கர்கள், அல்லது கறுப்பர்கள். ஜப்பானில் தூய்மைப்பணியாளர்களிடம் வறுமை, அதிலிருந்து எழும் விலக்கம் தென்படவில்லை. மூக்குக்கண்ணாடி அணிந்து உற்சாகமாகப் பேசியபடியே வேலை செய்கிறார்கள்.

ஜப்பானில் அரசியல் நிலையின்மை இல்லை. பொதுவாழ்வில் உயர்மட்ட ஊழல்கள் உள்ளன என அவ்வப்போது எழும் செய்திகள் காட்டுகின்றன. ஆனால் அன்றாட வாழ்க்கையில் அரசுநிர்வாகம் மிகமிகத்திறமையானது. மிக நேர்மையானதும்கூட. ஜப்பானிய சமூகமே நட்பார்ந்தது. நான் ஜெர்மனியிலும் சுவிட்ஸர்லாந்திலும் பயணம் செய்கையில் நண்பர்கள் காரை பிழையான இடத்தில் நிறுத்துவது பற்றியெல்லாம் பயந்து நடுங்குவதைப் பார்த்தேன். அவர்கள் காவலரை அஞ்சவில்லை,சக குடிமக்களைத்தான் அஞ்சினர். ஒருவரை ஒருவர் வேவு பார்ப்பது, புகார்செய்வது அங்குள்ள வழக்கம். அதில் உள்ளடங்கிய இனக்காழ்ப்பும் உண்டு. ஜப்பானில் அவ்வியல்பு இல்லை.



அப்படியென்றால் என்னதான் காரணம் இவர்களின் உளச்சோர்வுக்கு? மூன்று விஷயங்கள், ஒன்று வாழ்க்கையின் இலக்கு என சில மானுடனுக்குத்தேவை. ஜப்பானில் அரசியல் என்பதே இல்லை. அரசை மாற்றுவது, இன்னொருவகை சமூக அமைப்பை கனவு காண்பது என்பதற்கெல்லாம் இடமில்லை. ஆகவே சமூகஇலட்சியங்கள் இல்லை. எஞ்சுவது அன்றாடம் மட்டுமே. நடைமுறை மட்டுமே. அதன் வெறுமை உளச்சோர்வுக்கு முக்கியமான காரணம்.

அன்றாடம் மட்டுமே எஞ்சும்போது நுகர்வு மட்டுமே இன்பம் என ஆகிறது. நுகர்வுக்கு எல்லையே இல்லை. அது எப்போதும் ஒப்பீட்டுத்தன்மை கொண்டது. ஆகவே ஓடிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. எவ்வளவு ஈட்டினாலும் போதாது. நுகர்வின் இன்பம் என்பது ஒரு மாயை. பத்துநிமிட இன்பத்திற்காக பத்தாண்டுகள் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும். நுகர்வில் இன்பத்தைக் கொண்டிருக்கும் சமூகம் கடும் உழைப்பில் உளச்சோர்வையே அறுதியாகச் சென்றடையும். ஏனென்றால் நுகர்வுப்பொருளியல் நுகர்வு வெறியை வளர்க்கும் அதன்பொருட்டு எப்போதும் மாறாத நிறைவின்மையை சமூக உளவியலில் நிலைநிறுத்தியிருக்கும்.



நுகர்வில் இன்பம் என்னும்போது இயல்பாகவே குடும்ப அமைப்பு ஆற்றலிழக்கிறது. இன்னொருவருக்காக வாழ்வது என்பது இல்லாமலானாலே குடும்பம் சிதையத் தொடங்கிவிடும். என் இன்பத்தை, என் நலனை மட்டுமே நான் நாடுவேன் என்பவன் இயல்பாக குடும்பத்தை இழக்கிறான். ஆனால் குடும்பம்தான் அவனுக்கு மெய்யான பாதுகாப்பை, ஆதரவை அளிக்கிறது. தன்னலத்தை துறந்தாலொழிய அதை ஆடையமுடியாது.

உன் இன்பத்தை நீ நாடுக என்று சொல்லும் எப்பண்பாடும் குடும்பம் என்னும் அமைப்பையே தாக்குகிறது. ஆனால் தன்னலத்திற்காக குடும்பத்தை துறப்பவன் அடைவனவற்றை விட பலமடங்கு இழக்கிறான். குடும்பச்சிதைவு நேரடியாகவே தனிமைக்குத்தான் இட்டுச்செல்கிறது. ஆகவே உன் இன்பத்தை நீ நாடு என்று சொல்லும் எந்தக்குரலும் தொடர்ந்து அதன் விளைவான தனிமையைச் சென்றடைவாய் என்பதையும்தான் சொல்லிக்கொண்டிருக்கிறது



அனைத்தையும் விட முக்கியமானது உழைப்பு. மனிதன் உழைப்பதற்காகப் படைக்கப்பட்டவன் அல்ல. குறைவாக உழைக்கும் மக்கள்தான் உலகமெங்கும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் – பழங்குடிகள் உதாரணம். ஜப்பானியர் வெறிகொண்ட உழைப்பை தன் இயல்பாகக் கொண்டவர்கள். அச்சமூகமே அப்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. ஜப்பானில் ஒரு இடைநிலை வாழ்க்கை வாழ வாரம் முழுக்க கடுமையாக உழைத்தாகவேண்டும். ஒரு ஜப்பானியப் பண்புநலனாகவே முழுஅர்ப்பணிப்புள்ள உழைப்பு உலகமெங்கும் கொண்டுசெல்லப்படுகிறது. சிங்கப்பூரிலேயே ஜப்பானிய உழைப்பு போற்றிப் புகழப்படுவதை நான் கண்டிருக்கிறேன்.

நண்பர்கள் ஜப்பானில் உழைப்பு நிகழும் விதத்தைச் சொன்னார்கள். அலுவலகம் எப்போது முடியும் என்பது இல்லை. மேலதிகாரி சென்றபின் செல்லலாம். மேலதிகாரி எளிதில் செல்லமாட்டார். வேலைப்போதையால்தான் அவர் அந்த இடத்திற்கே வந்திருப்பார். அதிலும் ஜப்பானிய நிறுவனங்களில் மேல்கீழ் அடுக்குகள் மிகமிக வலுவானவை. ஆகவே ஜப்பானிய இளைஞனின் இளமைப்பருவம் உழைப்பிலேயே தீர்ந்துவிடும்



அத்தகைய உழைப்பு சட்டென்று உளச்சோர்வை நோக்கிக் கொண்டுசெல்லும். ஒருவரின் உழைப்பும் தனிப்பட்ட பொழுதும் இணையாக இருக்கவேண்டும். அந்த தனிப்பொழுதில் தனக்கான கேளிக்கைகளும் சாதனைகளும் இருக்கவேண்டும். அனைத்தையும்விட ஒன்று உண்டு, மனிதனின் ஆன்மிகத்தேடல் அத்தகைய தனிப்பொழுதுகளில் மட்டுமே நிகழ முடியும். மனிதவாழ்க்கையில் உருவாக்கும் மாபெரும் வெற்றிடங்களை நிரப்புவது அதுவே

வெரியர் எல்வின் தன் நூல்களில் பழங்குடி வாழ்க்கையில் வேலையும் தனிப்பட்டபொழுதும் எப்படி இணையாக இருக்கிறது என்பதையும் ஆகவே பழங்குடிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்பதையும் பதிவுசெய்கிறார். பலநாட்கள் அமர்ந்து தன் நண்பனுக்கு பரிசளிக்க ஒரு மரச்சிற்பத்தைச் செதுக்கும் ஒரு பழங்குடியினரின் சித்திரத்தை வெரியர் எல்வின் எழுதியதை நினைவுகூர்கிறேன் .மறுபக்கம் விவசாயிகள் இடைவெளியே இல்லாத உழைப்பால் வாழ்க்கையையே ஒரு மாபெரும் வதையாக மாற்றிவைத்திருக்கிறார்கள் என்பதை அவர் காட்டுகிறார்.

நவீனத் தொழில்நுட்பம் இயந்திரங்கள் வழியாக மானுட வாழ்க்கையை எளிதாக ஆக்கவேண்டும். ஓய்வைப்பெருக்கி வாழ்க்கையை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கவேண்டும். ஆனால் அது மனிதனை மேலும் மேலும் உழைப்பில் கட்டிப்போட்டு உளச்சோர்வுக்கே ஆளாக்குகிறது. ஜப்பான் அந்த உளச்சோர்வுடன்தான் போராடிக்கொண்டிருக்கிறது. இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் அந்த திசைநோக்கியே செல்கிறோம்.



சென்றமுறை கம்போடியா சென்றபோது நண்பர் சிட்னி கார்த்திக் அவருடைய நிறுவனம் ஊழியர்களின் ‘உழைப்புத்திறனை’ மேம்படுத்தும் அறிவியல்வழிகளை கடைப்பிடிப்பதையும் அதற்கான பயிற்சிகளை அவர் உட்பட்டோர் அளிப்பதையும் பெருமிதத்துடன் சொன்னார். அது மனிதனின் ‘திறனை’ கூட்டி அவனை மேலும் ‘பயனுள்ள’வர்களாக ஆக்குவதாக அவர் நம்பினார். அவருடைய முன்மாதிரி முறைகள் அனைத்தும் ஜப்பானால் வடிவமைக்கப்பட்டவை.

நான் அது எப்படி ஒரு நவீன அடிமைத்தனம் என்று சொன்னேன். வாழ்வதற்காக உழைப்பு, உழைப்பதற்காக வாழ்க்கை என்னும் ஒரு நச்சுவட்டத்தில் மனிதனைச் சிக்கவைக்கிறது அது. மனிதன் அவன் ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்வதற்காக உருவானவன் அல்ல. அவனுடைய வாழ்க்கையின் மிகச்சிறிய பங்குதான் வேலையும் உழைப்பும். அந்த வேலைக்கும் உழைப்புக்கும் உகந்த முறையில் அவனை உருக்கி வார்ப்பது என்பது வேறெதற்கும் பொருந்தாதவனாக அவனை ஆக்குவது. அவன் ஒரு இயந்திர உறுப்பு போல மாறிவிடுகிறான்.


பழைய காலத்தில் கப்பல்களில் துடுப்புகளுடன் சேர்த்து நிரந்தரமாக இரும்புத்தளையால் பிணைக்கப்பட்ட அடிமைகளுக்கும் இத்தகைய உழைப்பாளிகளுக்கும் என்ன வேறுபாடு? உண்மையில் இத்தகைய உழைப்பாளிகளை விட வறுமையில் அன்றாட உணவைத் தேடி வாழும் மனிதர்கள் மேலும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

ஜப்பானின் அழகு ,தூய்மை அனைத்துடனும் இணைந்து இந்த மானுடப்பிரச்சினையையும் உணர்ந்துகொண்டேதான் இருந்தேன். இது உலகமெங்கும் வலுப்பெற்று வரும் பிரச்சினை. ஆனால் ஐரோப்பா அதை கடக்கும் முயற்சியிலும் இருக்கிறது. உழைப்பு வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே என்ற எண்ணம் அங்கே வலுவாகவே உருவாகிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கான வாழ்க்கையை தேடுவதன் தேவையை அது உணர்ந்திருக்கிறது என ஐரோப்பாவில் பயணம்செய்கையில் நண்பர்கள் சொன்னார்கள்.

வெறுமே இருப்பதன் விடுதலையைப் பேசிய மண்ணில், மையத்தில் புத்தர் முற்றும் கடந்து ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் பண்பாட்டில், இன்று உருவாகியிருக்கும் இந்த வாழ்க்கையை முன்வைத்து இதைப் பேசவேண்டியிருப்பது விந்தைதான். தத்துவமும் வாழ்க்கையும் எதிரெதிர்திசைகளில்தான் பயணம்செய்கின்றன என்று படுகிறது.

[மேலும்]



Save
Share

எழுதியவர் : எழுத்தாளர் ஜெயமோகன் by Email (12-Jul-19, 3:40 am)
பார்வை : 21

சிறந்த கட்டுரைகள்

மேலே