தத்துவ வாசிப்பின் தொடக்கம்

ஜெமோ,



“இடைவெளி” நாவலையொரு 3 வருடங்களுக்கு முன்னர் வாசித்தேன் . அப்பொழுது எனக்கு அந்நாவல் சுத்தமாகபிடிபடவில்லை. மேலும் அந்நாவலை வாசிக்க காரணம் அச்சமயத்தில் மரணம் பற்றியே கேள்விகள் என்னை பெரிதும்அலைக்கழித்துக் கொண்டே இருந்தது இப்பொழுதும் இருக்கின்றது. இப்பொழுது கிட்டத்தட்ட சம்பத்தின் மனநிலையில்இருக்கிறேனோ என்று கூட தோன்றுவதுண்டு . மேலும் நான் எழுதும் சிறுகதை முயற்சிகளில் எப்படியேனும் மரணம் புகுந்துவிடும். வாழ்வை ஒரு அளவேனும் திருப்திகரமாய் வாழ (வாழ்வது என்றால் என்ன?) மரணம் பற்றி அறிந்துகொள்ளுதல்அவசியம் என்று தோன்றவே ,அப்பொழுதே மரணம் பற்றிய புதினங்கள் , கதைகளை நோக்கி நகர்ந்தேன். இப்பொழுது தத்துவ நூட்களை நோக்கி உந்தப்பட்டுளேன். உங்கள் வலைப்பூவில் அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவர் தம்மமும் பற்றியகட்டுரைகளை படித்த பின்னர் அப்புத்தகத்தை படிக்க தொடங்கினேன்.

அதில் வேதங்களும் உபநிடங்களும் முற்றிலும்”தேவையற்றவை” என்பது போன்ற sweeping statement தொனியில் கூறப்பட்டவற்றை முதலில் மனது மகிழ்ந்து படித்தாலும் , அம்மகிழ்ச்சி அதை பற்றி அறிய எவ்வித உழைப்பையும் அளிக்கவேண்டியதில்லை என்ற எண்ணத்திலே உருவானதோஎன்ற ஐயம் அதனைப்பற்றி சிறிதளவேனும் அறிந்து பின்னர் ஒரு எண்ணவடிவத்தை உருவாக்கிக்கொள்வதே சிறந்ததுஎன்று தேடிய பின் “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” நூலை படிக்கத்தொடங்கினேன் . இந்தியாவில் இருந்தவெவ்வேறு சிந்தனை முறைகளை பற்றி அறிந்துகொள்ள மிக சிறந்த தொடக்கமாக இந்நூல் அமைத்தது. இந்நூலினைபடித்துக்கொண்டிருக்கும்போதே ஒரு ஐயம் தோன்றியது. இப்புத்தகம் இந்தியாவின் முற்கால சிந்தனை முறைகளைப்பற்றிபேசுகிறது. நமது அகவுலகத்தில் அவற்றின் எச்சங்கள் புரிந்தோ புரியாமலோ சடங்குகள், மூலம் நமக்குகடத்தப்பட்டிருக்கலாம் என்ற போதிலும் நமது கல்விமுறை அன்றாடம் சந்திக்கும் வெறுமை என்று அனைத்தும் மேற்குலகம்சார்ந்ததாய் இருக்கும் பச்சத்தில், அதற்கான தீர்வினை நோக்கி செல்வதில் நமது அணுகுமுறை எதைச் சார்ந்ததாய் இருக்கமுடியும் ? என்ற கேள்வி எழுந்தது. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்களில் அக்கேள்வியை கேட்டிருக்கிறீர்கள் . பின்வருமாறு

“மேற்கத்தியத் தத்துவ மரபின் அடிப்படையில் அமைந்த நம்முடைய கல்வி முறை காரணமாக மேற்கத்தியமுறையிலேயே நம்மால் சிந்திக்க முடிகிறது. ஆகவே மேற்கத்தியச் சிந்தனைகளைப் பிரதியெடுப்பதை எளிதில்செய்துவிடுகிறோம். இன்றைய நமது அறிவுச் சூழலென்பது ஒரு வகையான ‘மொழிபெயர்ப்பு’ அறிவுச் சூழலே.எந்தச்சமூகமும் சுயசிந்தனை இன்றி இருந்துவிட முடியாது. சிந்தனையில் உள்ள அடிமைத்தனம் நேரடிஅடிமைத்தனத்திற்கே வழிவகுக்கும். நமக்கு வந்து சேரும் சிந்தனைகளைப் பரிசீலிப்பதற்கே கூட நமக்குச் சுயசிந்தனை தேவை. சொந்தமாகச் சிந்தனைச் சூழல் கொண்ட எந்த ஒரு சமூகமும் தன் மரபின் நீட்சியாகத் தன்னைஉணர்ந்துகொண்டு, மரபு மீது ஆழமான விமரிசன அணுகுமுறையை உருவாக்கிக்கொண்டுதான் அதைச்சாத்தியமாக்கியுள்ளது”



இவ்விடைவெளி ஒரு பெரும் சவால் என்றும் கூறியுள்ளீர்கள். இதனை எவ்வாறு கடப்பது ?

மேலும் இவ்வாறும் எழுதியிருந்தீர்கள் .

“இரண்டு வகையான பாமர அணுகுமுறைகள் நம் சூழலில் காணப்படுகின்றன. பழையது, புதியது என்றோ,முற்போக்கு, பிற்போக்கு என்றோ அடையாளமிடப்பட்டு நவீன அறிவு ஜீவிகளில் ஒரு சாராரால் மரபுபுறக்கணிக்கப்படுகிறது. இவர்கள் வழிபடும், முன்னுதாரணமாகக் காட்டும், மேற்குச் சிந்தனை மரபு, பழையதுஎன்பதற்காக ஸ்பினோசாவையோ, அடிமை முறையை ஆதரித்தார் என்பதற்காக பிளேட்டோவையோமன்னராட்சியை ஆதரித்தார் என்பதற்காக ஹேகலையோ நிராகரிக்கவில்லை என்பதை இவர்கள் அறிவதில்லை. பிஷப் பெர்க்லியையும், பெனடிக்ட் குரோச்சேயையும் பேசுபவர்களுக்கு சங்கரர் உதவாத பழைய குப்பையாகத்தெரிவது அவர்கள் சிந்தனை மூடியிருப்பதன் விளைவே. இரண்டாவது பாமரத் தன்மை நம் சிந்தனைமரபின் ஒருபகுதியை மட்டும் பூதாகாரமாகக் காட்டி மற்ற பக்கங்கள் காலாவதியானவை என்று வாதிடுவது. பக்தி மார்க்கமும்அதனுடன் இணைந்த தத்துவங்களும் மட்டுமே இந்து சிந்தனை என்று ஒரு சாராரால் தீவிரமாக வாதிடப்படுகிறது.மறுசாரார் பௌதிகவாதத் தரப்புகளை மட்டும் முன்னிறுத்தி மற்ற தரப்புகள் காலாவதியானவை என்கிறார்கள். இரண்டுமே அரை உண்மைகள் என்பதை இந்நூலில் கண்டோம். இந்து சிந்தனை மரபில் ஆன்மிகவாதமும்பௌதிகவாதமும் சமானமான பங்கை வகித்துள்ளன. ஒன்றையொன்று வளர்த்துள்ளன”

உருவகங்கள்,குறியீடுகள்



காவியங்கள், புராணங்கள், இந்திய சிந்தனைமுறைகள், இந்திய மருத்துவம் என்று ஏதும்தேவையே இல்லை என்று ஒரே மட்டையடியில் தூக்கிவீச பயிற்றுவிக்கப்பட்ட என்போன்ற தலைமுறைக்கு மீண்டும்இவற்றை நோக்கி செல்ல புரிந்துகொள்ள பெரும் உழைப்பும் நேரமும் தேவைப்படுகின்றன . ஆறு தரிசனங்கள் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள தேவிபிரசாத் சட்டோபாத்யாயா எழுதிய “இந்தியத் தத்துவம் ஓர் அறிமுகம்” மற்றும் “இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்” நூட்களை படித்து அறிந்துகொள்ள ஆர்வம்மேலோங்கியிருக்கிறது .



நடுவில் அரவிந்தன் நீலகண்டன்/ந்தினிதேவி ராமசாமி எழுதிய “இந்திய அறிதல் முறைகள்” புத்தகம் கிண்டிலில் கிடைத்தது . சிறப்பான வாசிப்பு அனுபவம் . இந்திய சிந்தனை முறையினை மீட்டெடுப்பதின்அவசியத்தை மீண்டும் மீண்டும் பல்வேறு உலக அறிவியல் மற்றும் வரலாற்று நிகழ்வுகள், எடுத்துக்காட்டுகள் மூலம்அப்புத்தகம் வலியுறுத்துகிறது.



அவரது நூலில் சொல்லப்பட்ட கருத்துக்களை ஒட்டி அரவிந்தன் நீலகண்டன் ஐஐடியில் ஆற்றிய உரை :----Visit pl




தற்செயலாக ஹைடெக்கர்(Heidegger) பற்றியும் அவரது “being and time ” பற்றியும் அறிந்துகொள்ள நேர்ந்தது . அதைபடித்துப்புரிந்து கொள்ளமுயன்றால் அதன் எழுத்து முறையும் , கலைச்சொற்களும் பெரும் சவாலை அளிக்கின்றன. Hubert reyfus ஆற்றும் உரைகள் மற்றும் உங்களது வலைப்பூவில் கஸ்தூரிரங்கன் எழுதிய கட்டுரை ஒருவாறு புரிந்துகொள்ளஉதவியது என்றாலும் அது ஒரு தொடக்கம் மட்டுமே.



மேற்குலகில் தத்துவம் குறித்து தொடர்ந்து ஏதேனும் உரையாடல்களோ , புத்தகங்களோ தொடர்ந்து வந்த வண்ணம்உள்ளது. உங்களது புத்தகத்திலோ, அரவிந்தன் நீலகண்டனின் புத்தகத்திலோ இந்திய தத்துவம் சார்ந்து சமகாலத்தில்வாழும் சிந்தனையாளர்களை பற்றிய குறிப்புகள் ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. மேலும் தத்துவம் சார்ந்து படிக்கவேண்டிய புத்தகங்களை பரிந்துரைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் . குறிப்பாக மொழி, மொழிகடந்த வாழ்வு(சாத்தியமா?), மரணம் ஆகியவற்றை குறித்த புத்தகங்கள் ஏதேனும் பரிந்துரைத்தால் மிகவும் நன்று.

இளவயது நினைவு .



அதிகாலையில் கோட்டாறு சாரதாபவனின் கரும்புகை மற்றும் கந்த குரு கவசம் அண்டைவீட்டார்அனைவரையும் எழுப்பும். எனக்கு அப்பாடலில் ஒரே ஒரு வரி தான் இன்றுவரை நினைவில் உள்ளது பாடகரின் குரலுடன். “தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்” ஏனோ அந்த “தத்துவக் குப்பை” என்ற வார்த்தை மிகவும் பிடித்திருந்தது.இருக்கிறது.



நன்றி.



அன்புடன்,



பிரவின் சி

=====================================================================================

அன்புள்ள பிரவீன்



தத்துவம் குறித்த உங்கள் ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள். இது ஒரு தொடக்கமாக அமையட்டும். தொடர்ந்து வாசிக்கையில் இயல்பாகவே உங்கள் வினாக்களுக்கு விடைகள் கிடைக்கும்.



இந்திய தத்துவம் பயில தமிழில் நல்ல நூல்கள் கிடைக்கின்றன. அதற்கு முன் இரு அறிவுறுத்தல்களை மட்டும் முன்னரே சொல்லிவிடுகிறேன்.



அ. தத்துவத்தை விவாதமாக வாசியுங்கள். செய்திகளாக, தரவுகளாக, பாடமாக வாசிக்கும்போது தத்துவத்தைப் பற்றி தெரிந்தவராக ஆவீர்கள். தத்துவார்த்தமாக யோசிக்க முடியாமலாகும். தத்துவக்கல்வி என்பது அடிப்படையில் ஒரு வினாவை பற்றிய விவாதத்தை விரிவாக நிகழ்த்திக்கொள்வதே



ஆ. தத்துவத்தை ஒட்டுமொத்தமாக ஒரு பரப்பாக புரிந்துகொள்ளக் கூடாது. வெவ்வேறு சிந்தனைப்பள்ளிகளாக, வெவ்வேறு தரப்புகளாக எடுத்துக்கொள்ள வேண்டும். எது எதை மறுக்கிறது, எது எதன் பகுதி, எவை விவாதித்து வளர்ந்தவை, எவை முற்றாக மறுப்பவை எனத் தெரிந்துகொள்வதே தத்துவக்கல்வியில் தெளிவை அளிக்கும்.



இன்றைய இந்திய தத்துவ சிந்தனையில் பல தத்துவப் பள்ளிகள் உள்ளன. மையமானது நவவேதாந்த தரப்புதான். சுவாமி தயானந்த சரஸ்வதி [ஆரிய சமாஜம்] ராமகிருஷ்ணர் மற்றும் விவேகானந்தர் [ ராமகிருஷ்ண மடம் ] நடராஜ குரு, நித்ய சைதன்ய யதி, முனி நாராயணப் பிரசாத் [நாராயண குருகுலம்] போன்றவர்கள் முதன்மையானவர்கள். இம்மரபைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு தத்துவவினாக்களைப்பற்றி எழுதிய நூல்கள் கிடைக்கின்றன



மரபான தத்துவப்பள்ளிகளும் தொடர்ச்சியாகச் செயல்படுகின்றன. சைவ சித்தாந்தம், வைணவம் சார்ந்து வெவ்வேறு சிந்தனைமரபுகள் இன்றுள்ளன.



பௌத்த சிந்தனையில் இரு பெரும்போக்குகள் உண்டு. மரபான பௌத்த சிந்தனை, அம்பேத்கரின் நவயான பௌத்த மரபு. இரண்டிலும் நல்ல நூல்கள் உண்டு. டி.டி.கோசாம்பி எழுதிய பகவான் புத்தர் தமிழில் கிடைக்கும் ஒரு நல்ல நூல். அம்பேத்கர் எழுதிய புத்தரும் அவருடைய தம்மமும் தமிழில் கிடைக்கிறது.



இவை தவிர நேரடியாக இந்து சிந்தனை மரபு அல்லது இந்திய சிந்தனை மரபின் தொடர்ச்சியை சொல்லிக்கொள்ளாமல் ஆனால் நுட்பமாக அம்மரபை தொடரும் சிந்தனையாளர்களான ஜே.கிருஷ்ணமூர்த்தி ஓஷோ போன்றவர்கள் உள்ளனர்.



இந்திய சிந்தனை மரபை விமர்சன நோக்குடன் அணுகும் மார்க்ஸிய சிந்தனைப்பள்ளியையும் கருத்தில்கொள்ளவேண்டும். எம்.என்.ராய்,தேபிபிரசாத் சட்டோபாத்யாய, ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபபாடு, கே.தாமோதரன், ராகுல சாங்கிருத்யாயன் ஆகியோரின் நூல்கள் உள்ளன. பல நூல்கள் தமிழில் உள்ளன.



நீங்கள் தத்துவசிந்தனையின் அடிப்படை நூல்களைப் பயில்வதுடன் அவற்றை சிந்தனைமரபாக முன்னெடுக்கும் மேற்கூறியவர்களின் நூல்களையும் வாசிக்கலாம். உங்கள் அடிப்படை நோக்கை நீங்களே உருவாக்கிக்கொள்வீர்கள். உங்கள் வினாக்களுக்கான விடைகளையும் கண்டடைவீர்கள்.



பொதுவான தத்துவ அறிமுகத்திற்கு டாக்டர் ஹிரியண்ணாவின் இந்திய தத்துவ அறிமுகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் இந்திய தத்துவ ஞானம், லக்ஷ்மணன் அவர்களின் இந்திய தத்துவம் ஓர் அறிமுகம் ஆகிய நூல்கள் உதவியானவை



ஜெ

எழுதியவர் : எழுத்தாளர் ஜெயமோகன் by Email (12-Jul-19, 3:52 am)
பார்வை : 34

மேலே