முன்னால் கைதியின் வாதமும் முன்னால் நீதிபதியின் தீர்ப்பும்

முன்னாள் கைதியின் வாதமும் முன்னால் நீதிபதியின் தீர்ப்பும்

நாய் குரைக்கும் சத்தம் கேட்டவுடன் வெளி வாசலை பார்த்தார் ரிட்டையர்ட் ஜட்ஜ் மகாதேவன். பங்களா கேட் அருகில் ஒரு ஆள் நின்று கொண்டிருப்பதை பார்த்தார். தொலைவில் பார்க்கும்போது முகம் சரியாக தெரியவில்லை. ஆனால் ஆள் நல்ல கட்டு மஸ்தாக இருப்பவனாக தெரிந்தான். குரைக்கும் நாயை “கீப் கொயட்” என்று சப்தமிட்டு அடக்கினார். “பங்கஜம், பங்கஜம் என்று மனைவியை அழைக்க என்னங்க என்று வந்து நின்றாள் பங்கஜம்.
யாரோ கேட்டு கிட்டே நிக்கறாங்க, மாரியமாளை அனுப்பி என்ன வேணுமின்னு கேட்டுட்டு வரச் சொல்லு. மாரியம்மாளை கூப்பிடவும் பின்புறம் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருந்தவள் அவசர அவசரமாக கைகளை துடைத்துக்கொண்டு என்னம்மா? என்று கேட்டபடி விரைந்து வந்தாள். வந்தவள் மகாதேவன் உட்கார்ந்திருப்பதை பார்த்தவள் தயங்கினாள். யாரோ கேட்டு கிட்டே நிக்கறாங்க, யாருன்னு கேட்டுட்டு வா, பங்கஜம் சொல்ல, திரும்பி பார்த்தவள் முகம் மலர அம்மா என் வூட்டுக்காரர்தான், தோட்ட வேலைக்கு ஆள் கேட்டிருந்தீங்கல்ல, அதான் என் வூட்டுக்காரரை வரச் சொன்னேன். தோட்டக்காரரைத்தான் வரச்சொன்னேனே தவிர உன் வீட்டுக்காரனை இல்லை, பங்கஜம் சிரித்துக்கொண்டே போ, போய் கூட்டிட்டு வா அவளை அனுப்பினாள்.
மாரியம்மாளுடன் வந்தவனை கூர்ந்து கவனித்தார் மகாதேவன். ஆள் தோட்ட வேலைக்கு தகுந்தவனாகத்தான் இருந்தான். மாரியம்மாள் இங்கு ஆறு வருடங்களாக வேலை செய்கிறாள். இதுவரை எந்த வித புகாரும் அவள் மீது மனைவியோ மற்றவரோ சொன்னதில்லை, உன் பேரென்ன? கேட்ட மகாதேவனுக்கு கை கட்டி ‘ராசப்பனுங்க’ பதில் சொன்னான். ஒழுங்கா வேலை செய்வீயா? நல்லா வேலை செய்வேனுங்க. முன்னாடி கூட தோட்ட வேலைதான் செஞ்சுகிட்டு இருந்தேங்க
எப்படி என்று மனைவியிடம் கண்ணால் கேட்டார் மகாதேவன், பங்கஜம் தலை அசைக்க நாளையிலேயிருந்து வேலைக்கு வந்துடு, காலையில நேரத்தோட வந்திரணும், மதியம் போயிடலாம், அதுக்கப்புறம் சாயங்காலம் மூணு மணிக்கு வந்து வேலை முடியற வரைக்கும் செஞ்சிட்டு போயிடு. அவர் சொல்ல பணிவுடன் தலையாட்டிவிட்டு விடை பெற்றான். ராசப்பன்
ராசப்பன் வந்து ஐந்து மாதங்கள் ஓடி விட்டது. உண்மையிலேயே அவன் கடும் உழைப்பாளியாகத்தான் இருந்தான். தோட்டம் ஒழுங்குடன் பூச்செடிகளுடன் பார்க்க கண்ணைக் கவரும் வண்ணம் அமைத்திருந்தான். யார் கூடவும் பேச்சு வைத்துக்கொள்ள மாட்டான். மனைவியிடம் கூட தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்ச மட்டுமே வந்து கேட்பான். அதுவும் மோட்டாரை மாரியம்மாளிடம் போடச்சொல்லி நிறுத்தியவுடன் போய் வேலையை பார்ப்பான். மகாதேவனுக்கும், பங்கஜத்துக்கும் அவன் பொறுப்புணர்ச்சியை பார்க்க ஆச்சர்யமாக இருந்தது.
மகாதேவன் வீட்டுக்கு அவர்கள் மகள் தன் குழந்தைகளுடன் வந்திருந்தாள். அவளுக்கு மாரியம்மாளை நன்கு தெரியும், அவள் கணவன் தான் தோட்டக்காரன் என்றவுடன் அவனை மரியாதையுடன் பார்த்தாள். அதே போல் குழந்தைகளுக்கும் தோட்டம் மிகவும் பிடித்து விட்டது. அது என்ன செடி? இது என்ன செடி? என்று அவனை கேள்விகள் கேட்டு துளைத்து விட்டனர். அவனும் பொறுமையாக குழந்தைகளுக்கு பதில் சொன்னான். குழந்தைகளும் அவனுடன் நன்கு பழகினர். நான்கைந்து நாட்கள் கழித்து மகாதேவனின் மருமகன் வந்து ஒரு நாள் இருந்து விட்டு குழந்தைகளை அழைத்துக்கொண்டு ஊர் போய் சேர்ந்தார்.
மருமகன் ஊர் போய் சேர்ந்த மறுநாள் மருமகனிடமிருந்து மகாதேவனுக்கு போன். உங்க தோட்டக்காரன் ஒரு ஜெயில் கைதியாக இருந்தவன், யாரையோ வெட்டிட்டு ஜெயிலுக்கு போய் அஞ்சு வருசம் ஜெயில்ல இருந்துட்டு வந்திருக்கான். நான் அவனை பார்க்கும்போதே எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன். இங்க வந்த பின்னால விசாரிச்சு எல்லாம் தெரிஞ்சு கிட்டு உங்களுக்கு போன் பண்ணறேன், எனக்கு முன்னாடி இருந்த இன்ஸ்பெக்டர் தான் இந்த கேசை ‘டீல்’ பண்ணியிருக்காரு, எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க, என்னைக்கேட்டா பேசாம அவனை வேலைய விட்டு அனுப்பிச்சிடுங்க, சொன்ன மாப்பிள்ளையிடம் ரொம்ப நன்றி மாப்பிள்ளை, நான் பார்த்துக்கிறேன், நன்றி சொல்லி போனை வைத்தவர் “பங்கஜம்” குரல் கொடுத்தார், வந்த பங்கஜத்திடம் அந்த ‘மாரியம்மாளை’ வர சொல் சொன்னவரின் குரலில் இருந்த வேகம் பங்கஜத்தை மிரள வைத்தது.
மாரியமாள் தயங்கி தயங்கி அவரிடம் வந்தாள், உன் புருசன் இத்தனை நாள் எங்கிருந்தான்? கேட்ட கேள்வியில் தென்பட்ட கோபத்தை கண்டு தலை குனிந்து நின்றாள் மாரியம்மாள். தலை குனிஞ்சு நின்னா என்ன அர்த்தம்? ஐயா என்னைய மன்னிச்சிடுங்க, என் வூட்டுக்காரரு இத்தனை நாளா ஜெயில்லதான் இருந்தாரு. அவர் வெளியில வந்தப்புறம் நாந்தான் ஐயா வூட்டுல வேலை வாங்கித் தாறேன்னு கூட்டி வந்தேன். அது வரமாட்டேன்னுதான் சொல்லுச்சு, ஜெயிலுக்கு போயிட்டு வந்தவனுக்கு யாரும் வேலை தரமாட்டாங்க, அப்படீன்னு சொல்லுச்சு, நாந்தான் கூறு கெட்டத்தனமா அவரை இங்க கூட்டிட்டு வந்துட்டேன், என்னை மன்னிச்சுங்குங்க ஐயா.
போய் உன் புருசனை கூட்டிகிட்டு வா, விரட்டினார் மகாதேவன். மாரியம்மாள் அவனிடம் விசயத்தை சொல்லியிருப்பான் போல, வந்தவன் கைகட்டி தலைகுனிந்து நின்று கொண்டான். நீ ஜெயிலுக்கு போயிட்டு வந்தவனா? ஆமாங்கய்யா, தெளிவாக பதில் சொன்னான். ஏன் எங்கிட்ட முதல்லயே சொல்லலை?. ஐயா மாரியம்மாதான் சொல்ல வேணாமுன்னு சொல்லிடுச்சு, சொன்னா வேலை தரமாட்டாங்க, அதுக்கப்புறம் எதையும் சந்தேகமாத்தான் பார்ப்பாங்க, அப்படீனுடுச்சு. எங்களை மன்னிச்சுடுங்க ஐயா, நான் அந்த காரியம் செஞ்சுட்டேன்னு வருத்தப்படலே, ஏன்னா அன்னைக்கு மட்டும் அந்த மாதிரி நடக்காம இருந்திருந்தா என்னென்னமோ நடந்திருக்கும், அதனால எனக்கு கிடைச்ச தண்டனையை கூட நான் பெரிசா நினைக்கலை, நான் வர்றேன்யா, என்னைய மன்னிச்சுடுங்க, இருவரும் அங்கிருந்து கிளம்ப ஆயத்தாமாகினர்.
நில்லுடா நான் உங்கிட்ட என்ன கேட்டனோ அதுக்கு மட்டும் பதில் சொன்னா போதும். நீ எதுக்கு ஜெயிலுக்கு போனெங்கிறதெல்லாம் எனக்கு அநாவசியம். நான் உன்னை நம்புறேன், உன்னைய விட மாரியம்மாளை நம்புறேன், அவ ஆறு வருசமா இங்க வேலை செய்யறா, இது வரைக்கும் அவ மேலே எந்த பிரச்சினையும் வந்ததில்லை. போய் அவங்கவங்க வேலைய பாருங்க, சொன்னவரின் காலில் கிடந்தனர். மாரியம்மாளும் ராசப்பனும்.
ஏண்டா இத்தனை வயசுக்கப்புறம் உங்களுக்கு என் ஆசிர்வாதம் வேணுமாடா? கிண்டலாய் கேட்டு மகாதேவன் சிரிக்க அவர்கள் இருவரும் வெட்கத்துடன் எழுந்து வெளியேறினர். இத்தனை வருட அனுபவத்தில் ஒருவனை பார்த்தவுடன் கணித்து விடும் “ரிட்டையர்டு ஜட்ஜ்” மகாதேவனுக்கு இவனை பார்த்தவுடன் இவனைப்பற்றி போலீஸ் துறையில் விசாரித்து அவனை தாராளமாக வேலைக்கு வைத்துக்கொள்ளலாம், என்று அவனை பற்றி சிறைத்துறை அதிகாரி உறுதி கொடுத்ததை மனைவி பங்கஜதுக்கு தெரிவித்து இருவரும் ஏற்கனவே இவனைப்பற்றி தெரிந்திருந்தாலும் தெரிந்ததாக காட்டிக்கொள்ளாமல் இருந்து விட்டனர்.
இந்த நாடகம் கூட மாப்பிள்ளையை திருப்தி படுத்தத்தான்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (12-Jul-19, 10:09 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 122

மேலே