கழுதையை சகிக்கின்றேன்

பிரபல சினிமா கவிஞரின் மனைவியிடம் கேட்கப்பட்ட கேள்வி
உங்கள் கணவரிடம் உங்களுக்கு பிடித்தது என்ன?

அவள் சொல்ல நினைத்த பதில் !

காதல் கணவனிடம் கவிதையால்
கதைகளை தினமும் கேட்கின்றேன்
சொல்வது கதை என்று
அறிவுக்கு தெரிந்தாலும்
கவிதையில் சொல்வதால்
மயங்கி நிற்கின்றேன்

இன்று நேற்று அல்ல !
இரு மனம் இணைந்து
திருமணம் முடிந்து
பத்து வருடங்களாய்
தினம் தினம் கதைகளை
கவிதையில் கேட்கின்றேன்

என்றும் மயங்கிடும்,
மருந்துகள் உண்டு விட்டு
நாளொரு பெண்ணிடம்
வம்புகள் வளர்த்து விட்டு
கேட்கும் என்னிடம் சகோதரி
போன்றவள். கவிதையில்
சொல்லும் கதைகளை
தினம்,தினம் கேட்கின்றேன்.

அன்புக்கு ஏங்கி நின்று
நானும் குழந்தையும் தவித்து
நிற்கையில்!
மேல் தட்டு புழுதியில்
புரண்டு விட்டு, கவிதைகள்
விற்று விட்டு கையில்
தரும் கரன்சி நோட்டுக்கள்
எங்களுக்கு வெற்று நோட்டுக்கள்

அன்றைய கவிஞன் அன்பால்
நின்றவன், அதனால் மயங்கி
இன்றைய நிலையை எட்டியவள்
நான், பெற்றவர்கள் முன்னால்
நம்பிக்கை இழந்தவள்.

சமூகத்தின் முன்னால் நான்
பிரபல கவிஞரின் மனைவி
மாளிகை உண்டு, வசதிகள்
உண்டு, மனம் மட்டும்
சஹாராவாய்

தினம் தினம் உழைத்திடும்
பெண்களை பார்க்கின்றேன், பத்துக்கும்
இருபதுக்கும், நாயாய் உழைத்திடும்
ஒத்த வயது பெண்களின்
கண்களில் தெரியும், நம்பிக்கை
ஒளிகள் வசதியில் புரளும்
என்னிடம் இல்லை

அவள் சொன்ன பதில் !

நான் கவிதையை நேசிக்கின்றேன் (கூட்டம் கைதட்டுகிறது)

(அடுத்த வரிகளை மனதுக்குள் சொல்லிக்கொள்கிறாள்)

இவன் கதைகளை அல்ல
நான் பெற்றெடுத்த பிஞ்சு
கவிதையை நேசிக்கின்றேன்.

இவளுக்காக இந்த
கழுதையை சகிக்கின்றேன்

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (12-Jul-19, 10:26 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 72

மேலே