மீச்சிறு கடல் -கடிதம்----------------பான்ஸாய்க் கடல்

பான்ஸாய்க் கடல்
---------------------------------ஜப்பான் சென்றிருந்தபோது பான்ஸாய் மரங்களை நிறையவே பார்க்கமுடிந்தது. இங்கே அவ்வப்போது சில நட்சத்திரவிடுதிகளின் வரவேற்பறைகளில் பான்ஸாய் மரங்களைப் பார்ப்பதுண்டு. அவை பெரும்பாலும் விரைவில் வளரும் சிலமரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை. ஜப்பானின் சில ஸென் ஆலயங்களில் நூறாண்டுகள் பழமையான பான்ஸாய் அரசமரங்கள் உள்ளன. சிறுதொட்டிக்குள் கிளைவிரித்து இலைதழைத்து தடிபெருத்து திமிறி ஆனால் அடங்கி நின்றிருக்கின்றனபான்ஸாய் மரங்களை உருவாக்குவதில் ஜப்பானியர் கொண்ட ஆர்வம் எப்படி வந்தது என ஒரு விளக்கம் உண்டு. அவர்களுக்கு அரசமரம் – போதி – புத்தரின் ஞானத்தின் வடிவம். ஆனால் அங்கே பனிவிழும் குளிர்காலம் இருப்பதனால் அரசமரங்கள் வளர்வதில்லை. ஆகவே அரசமரங்களை வீட்டுக்குள் வளர்க்க ஆரம்பித்தார்கள். கைக்கடக்கமான போதி. குளிர்காலத்தில் போர்த்திவைத்துப் பாதுகாக்கப்படக்கூடியது. சின்னஞ்சிறு ஜப்பானுக்கேற்ற சின்னஞ்சிறு பௌத்த மெய்ஞானம்பான்ஸாய் வடிவம் கொண்ட பௌத்த மெய்யியலே ஸென் என்று சொல்லலாம். குறுகும்போது கூர்கொள்வது ஞானம் என்பதனால் இன்று உலகமெங்கும் சென்றிருக்கும் பௌத்த மெய்யியல் என்பது ஸென் தத்துவம்தான்.பான்ஸாய் மரங்களை முதலில் பார்க்கையில் ஓர் ஒவ்வாமையே வந்தது. கிளைகளை வெட்டிக்கொண்டே இருக்கவேண்டும். வலைபோன்ற தொட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் மரத்தை எடுத்து வெளியே திமிறும் வேர்களையும் வெட்டிக்கொண்டிருக்கவேண்டும். எவ்வளவு வளரலாம் என அந்த மரத்துக்கு தெரிவிக்கவேண்டும். ஒவ்வொருநாளும். மெல்லமெல்ல மரம் அதைப்புரிந்துகொள்கிறது. அந்த சின்னஞ்சிறு வான்வெளிக்குள் , வான் எனும் குமிழிக்குள் தன்னை நிகழ்த்திக்கொள்கிறதுஆனால் நோக்க நோக்க அரசமரத்தின் பிரம்மாண்டம் தெரியத்தொடங்கியது. அதன் தடியின் திமிர், கிளைகளின் பின்னல் அனைத்திலும் அது அரசமரமேதான். நோக்குகையில் நாம் சிறிதாகி அதுபெரிதாகத் தொடங்குகிறது. அரசமரத்தைச் சிறிதாக்கும்பொருட்டு அதைப் படைத்தார்களா ஸென் முனிவர்கள்? அல்லது தாங்கள் சிறிதாகி அதன் வேரில் அமர்வதன்பொருட்டு அவ்வண்ணம் உருவாக்கினார்களா? எத்தனைச் சிறிய இடத்தில் நிகழ்ந்தாலும் அரசமரம் அரசமரமேதான். இப்புவியே பிரம்மம் அல்லது மகாதம்மம் தன்னை நிகழ்த்திக்கொண்ட மிகச்சிறிய வெளி அல்லவா? துளிகளெங்கும் விரிவது கடலே.ஞானக்கூத்தனின் புகழ்மிக்க கவிதை தண்ணீர்த்தொட்டி மீன்கள். அதைப்பற்றி முன்னரும் எழுதியிருக்கிறேன். தண்ணீர்த்தொட்டியை ‘இந்தக்கடல்’ எனத் தொடங்கும் அந்த உளநிலையில் உள்ளது கவிதை. அதிலிருப்பது அங்கதம். ஆனால் அவரே எண்ணாதபடி தண்ணீர்த்தொட்டியும் கடல்தான் என எண்ணச்செய்துவிடுகிறது அக்கவிதை

தண்ணீர்த் தொட்டி மீன்கள்
ஞானக்கூத்தன்இந்தக் கடலின்
எந்தக் குபேர மூலையிலும்
கிடைக்காத புழுக்கள்
வேளை தவறாமல்
தானாய் வருகிறது.

தெய்வக் கிருபையால்
புயல்களும் இல்லை.
திமிங்கிலங்களை
அவதாரக் கடவுள்
காணாமல் செய்துவிட்டார்.

ஆனால் இன்னும்
ஒன்று மட்டும்
புரியாத புதிராய் இருக்கிறது.

உலகத்தை உதடு குவியப் புணர்கையில்
அஃதென்ன இடையில்?
அப்புறம் ஒன்று
எங்கே எங்கள்
முள்ளுச் சூரியன்களும் கள்ளுப் பிறைகளும்


ச.துரை அவருடைய மத்தி கவிதைத்தொகுதியில் இவானோவிச்சின் மீன்தொட்டி என்னும் கவிதையை எழுதியிருக்கிறார். மீன்தொட்டியை, மீன்களை பான்ஸாய் வடிவம் எடுக்கச்செய்த இவானோவிச்சின் முயற்சியிலிருந்து தொடங்குகிறது. மீன்தொட்டி பான்ஸாய் கடல். மீன்தொட்டியின் பான்ஸாய் வடிவமும் கடலே.

இவானோவிச்சின் மீன்தொட்டி


ச. துரைஉலகின் மிகச்சிறிய மீன் தொட்டியை

அனடோலி இவானோவின் தயாரித்தார்

சிறிய கடலென்றுகூடக் கூறலாம்

நிலங்களெல்லாம் கடலாக

வளர்ந்துபோகிற இக்காலத்தில்

மீச்சிறு கடலானது

நெய்தல்வாசிக்குத் தொல்லைதான்

தொட்டிலுக்குள் நீந்துகிற

வரிக்குதிரை மீன்களும் தாங்கள்

மிகப்பெரிய கடலுக்கு உகந்தவர்களல்ல

என்றே நம்புகின்றன

இவானோவிச் அவைகளை

தொட்டிக்குள் விடும்போது

நீங்கள்தான் இவ்வுலகின் மீச்சிறு

மீன்கள் எனக் கூறியிருக்கலாம்

வரிக்குதிரை மீன்களும்

மிகப்பெரிய கடலுக்குள்

மீப்பெரிய மீன்கள் மட்டுமேதான் நீந்தும் என்கிற

கதைகளை திரும்பத்திரும்பச்

சொல்லியபடி நீந்தியிருக்காது[ 2 ]மீச்சிறு தொட்டியில் மீன்களுக்குப் பசியெடுத்தது

அவை தங்களது மீச்சிறு வால்களால்

இசைத்தபடியே குறுக்கும் நெடுக்குமாக ஓடுகின்றன

இவானோவிச் சற்றே தாமதமான அலட்சியத்தின் சாயலில்

மீனின் சிற்றுண்டியோடு வருகிறார்

மீச்சிறு பலூன்கள் மாதிரியான உணவைப் பரப்புகிறார்

மீன்கள் இரைகளை உண்ணும்முன்பு

நீரின் மேற்புறத்தில் குட்டிகுட்டியாக

குமிழிகளைப் பெருக்கின

பின்னிரவில் குமிழிகளை மொழிபெயர்த்த

இவனோவிச் சங்கடத்தோடு அமர்ந்தார்

அவற்றில் இவ்வாறு இருந்தது”மீச்சிறு வயிறுகளுக்கும் பசியானது மீப்பெரியது இவானோவிச்!”*

[அனடோலி இவனோவிச் கொனேகா உலகின் மிகச்சிறிய மீன் தொட்டியை உருவாக்கியவர்]சிறுகுழந்தைகளுக்கு பெரியவற்றில் சிறியவற்றையும் சிறியவற்றில் பெரியவற்றையும் காணும் பார்வை உண்டு. சைதன்யா சிறுவயதில் நீளுருளை வடிவில் இருவண்ணங்களுடன் சென்ற டாங்கர் லாரியைக் கண்டு “மாத்திர பாத்தியா?” என்று இயல்பாகச் சொன்னாள். ஒருமுறை ஒரு குழந்தை சிறிய கையில் கடல் தண்ணீரை அள்ளி அன்னையிடம் “கடல் கடல் பாத்தியா?” என கூவுவதை கன்யாகுமரியில் பார்த்திருக்கிறேன். அதற்குள் அசைந்த பாசியும் விரல்களில் மோதிய அலைகளும் அதைக் கடலாக்கிவிட்டிருந்தன.சிறிதில் பெரிதைக் காண்பது பெரிதை மீண்டுமொரு வடிவில் காண்பதுதான். ஞானக்கூத்தன் கவிதையில் கடல் என பேருருக்கொண்டிருப்பது சலிப்பு. ச.துரையின் கடலுக்குள் பசி.===========================================================================================================
ஜெ

ச. துரையின் ‘’தண்ணீர்தொட்டிக்கடல்’’ கவிதையும் தங்களின் பான்ஸாய் மரங்கள் குறித்த பதிவையும் வாசித்தேன். இதை இன்று வாசிக்கும் வரையிலும் பான்ஸாய் வளர்ப்பு குறித்தும் அம்மரங்களைக்குறித்தும் எனக்கும் ஒவ்வாமை இருந்தது. பான்ஸாய் குறித்த வகுப்புக்களிலும் பயிலரங்குகளிலும் அம்மரங்களை வளர்க்கும் நுட்பங்களை சொல்லத்துவங்கும் முன்பே, ஒரு தாவரவியலாளராக இம்முறையில் எனக்கு துளியும் விருப்பமில்லை என்பதையும் இயற்கைக்குக்கு மாறானது இவ்வளர்ப்பு முறை என்றும் சொல்லிவிடுவேன். இலைகளை பரப்பி, கிளை விரித்து மேலுயர்ந்து வரவேண்டிய மரமொன்றை, வேர்களையும் தண்டுகளையும் வளர்நுனிகளையும் தொடர்ந்து கத்தரித்து, மிகக்குறைவாக உணவும் நீரும் அளித்து, ஒளிச்சேர்க்கையை கட்டுப்படுத்த நிமிஷக்கணக்கில் மட்டும் சூரிய ஒளியில் வைத்து, கிளைகளில் கம்பிகட்டி, முறுக்கி, இழுத்து, பிணைத்து என்று இயற்கையான வளர்ச்சியை பலவிதங்களில் கட்டுப்படுத்தி, கஷ்டப்படுத்தி, அழகாக மேசைமீது வைத்துக்கொள்கிறோம் என்னும் அபிப்பிராயம் மட்டுமே இருந்தது. ஜப்பானியர்கள் கொஞ்சம் குள்ளமென்பதால் அவர்களின் மரங்களையும் குள்ளமாக வளர்க்க விரும்புகிறார்கள் என்றும் நினைத்திருக்கிறேன்,பற்பல வடிவங்களில், பலநூறாண்டுகள் வளர்ந்த, பழங்கள் செறிந்த பான்ஸாய் மரங்கள், கொள்ளை அழகாக இருப்பினும், எனெக்கென்னவோ அவற்றை பார்த்தால் மகிழ்ச்சியே ஏற்பட்டதில்லை எப்போதும்.எல்லா விதமான தாவரங்களையும் வீட்டுத்தோட்டத்தில் வளர்ந்தாலும் பான்ஸாயை இதுவரை நான் கல்லூரியைத்தவிர வேறெங்கும் வளர்க்க முயற்சித்ததில்லை.ஆனால், ’குறுகும்போது கூர்கொள்வது ஞானம்’எவ்வளவு வளரலாம் என அந்த மரத்துக்கு தெரிவிக்கவேண்டும். ஒவ்வொருநாளும். மெல்லமெல்ல மரம் அதைப்புரிந்துகொள்கிறது. அந்த சின்னஞ்சிறு வான்வெளிக்குள் , வான் எனும் குமிழிக்குள் தன்னை நிகழ்த்திக்கொள்கிறது/நோக்குகையில் நாம் சிறிதாகி அதுபெரிதாகத் தொடங்குகிறது. எத்தனைச் சிறிய இடத்தில் நிகழ்ந்தாலும் அரசமரம் அரசமரமேதான். இப்புவியே பிரம்மம் அல்லது மகாதம்மம் தன்னை நிகழ்த்திக்கொண்ட மிகச்சிறிய வெளி அல்லவா? துளிகளெங்கும் விரிவது கடலேஎன்று நீங்கள் சொல்லியிருப்பதை வாசித்தபின்னர் பான்ஸாய் வளர்ப்பை இப்படி ஒரு அழகான கோணத்திலும் பார்க்கலாமென்று அறிந்துகொண்டேன். ஆம் நோக்க நோக்க அந்த மீச்சசிறு வடிவில் மரத்தின் வயதும் வயதுக்கேற்ற பிரம்மாண்டமும் தெரிகின்றது. மிகச்சிறிய பாட்டில் மூடி அளவிலான தட்டுக்களிலும் கூட வளர்க்கப்படும் இவற்றை மீச்சிறு மரங்கள் என்று சொல்வதும் மிகப்பொருத்தமாக இருக்கின்றதுOnce a teacher ,always a learner என்பதை நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். இன்று உங்களிடமிருந்து ஒரு புதிய பாடத்தை கற்றுக்கொண்டிருக்கிறேன்.இனி பான்ஸாய் மரங்களும் வீட்டில் வளரும். நன்றிஅன்புடன்

லோகமாதேவி

எழுதியவர் : ஜெ மின்னஞ்சல் (12-Jul-19, 10:11 pm)
பார்வை : 14

மேலே