சுரேஷ்குமார இந்திரஜித் – கடிதங்கள்

ஜெ



சுரேஷ்குமார இந்திரஜித் பற்றி சுனீல்கிருஷ்ணன் எழுதிய கட்டுரையை சற்று தாமதமாகவே வாசித்தேன். இலக்கியவிமர்சனக் கட்டுரைகள்தான் நாம் மிகவும் கடைசியாக வாசிப்பவை. எடுத்து வைப்போம், அப்படியே மறந்துவிடுவோம். ஆனால் யோசித்துப்பார்த்தால் நாம் நீண்டநாள் நினைவில் வைத்திருந்து பேசிக்கொண்டிருப்பவை இலக்கியவிமர்சனக்கட்டுரைகளைத்தான்



சுரேஷ்குமார இந்திரஜித் அலையும் சிறகுகள் தொகுதி வெளிவந்த காலம் முதலே எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர். தமிழில் அவருடைய இடம் போதுமான அளவுக்கு அங்கீகரிக்கப்படவில்லை. அதற்குக் காரணம் அவை எடுத்துப்பேசினால் மட்டுமே தொடர்புறுத்தும் கதைகள் என்பதுதான். அவற்றின் நடை இலக்கியப்படைப்புக்குரிய நடை அல்ல. அது செய்திசொல்லும் நடை. இந்தச்செய்திசொல்லும் நடை என்பது இருபதாம்நூற்றாண்டின் சிருஷ்டி. எந்த உணர்ச்சியும் இல்லாமல் செய்தி சொல்வது இதற்கு முன் கிடையாது. பழைய பாடல்களில் மருத்துவச்செய்திகளைக்கூட உணர்ச்சியுடன் இணைத்தே சொல்லியிருக்கிறார்கள். இந்தவகையான உணர்ச்சியில்லாத கூறுமுறை இருபதாம் நூற்றாண்டுக்கு தேவையானதாக உள்ளது. அந்த நடையில் கதையைச் சொல்கிறார் சுரேஷ்குமார்

இந்தவகையான விலகலை உருவாக்கிக்கொள்வதற்காகவே சுரேஷ்குமார் செயற்கையான வரலாற்றையும் செயற்கையான வாழ்க்கைச்சூழலையும் உருவாக்கிக் கொள்கிறார். யதார்த்தத்தைச் சொல்வதற்கான மொழியில் கற்பனையைச் சொல்கிறார். இதுதான் அவருடைய கதைகளின் சிறப்பம்சம் என நான் நினைப்பதுண்டு. அற்புதமாக அதை எடுத்துச் சொல்லியிருக்கிறார் சுனீல் கிருஷ்ணன்



கணேஷ்குமார்



அன்புள்ள ஜெ



சுரேஷ்குமார இந்திரஜித்தின் மறைந்து திரியும் கிழவன் என்ற கதை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. இங்குள்ள எல்லா சுதந்திரப்போராட்டக் காரர்களும் மறைந்து திரிபவர்கள் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. எங்களூரின் தியாகி ஒருவரை பார்க்கச்சென்றபோதும் அந்த எண்ணம் ஏற்பட்டது.



அந்தக்கதையுடன் தொடர்புள்ள இரு கதைகள். ஒன்று அடூர் கோபாலகிருஷ்ணனின் அனந்தரம் என்னும் சினிமா. இன்னொன்று பி.ஏ கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை. இரண்டிலும் இப்படி மறைந்து திரிபவர்கள் வருகிறார்கள். சமகால வரலாற்றிலிருந்து உதிர்ந்துவிட்டவர்கள்



சுரேஷ்குமார் இந்தக்கதையை எந்த உணர்ச்சியும் இல்லாமல் ஒரு சாதாரண சம்பவம் போலச் சொல்கிறார். அதுதான் அவருடைய சிறப்பியல்பு



மருதுபாண்டியன்

எழுதியவர் : ஜெ மின்னஞ்சல் ----கணேஷ்குமா (12-Jul-19, 10:21 pm)
பார்வை : 70

சிறந்த கட்டுரைகள்

மேலே