எழுதும் முறை –-------------------- கடிதங்கள்-------------------------------------மாயாவிலாசம்----------------------செல்பேசித் தமிழ் -கடிதங்கள்

-13.7 2019
------------
ஜெ

தங்கள் செல்பேசித் தமிழ் கட்டுரை பற்றி எனது எண்ணங்கள்

நம்மில் சிலர் புது கண்டுபிடுப்புகளை வேகமாக கைய்யாள தொடங்குகிறார்கள் ஆனால் பலரிடம் ஒரு தயக்கமோ அச்சமோ இருக்கிறது. smart போன் அறிமுகமான சில தினங்களிலேயே என்னுடன் பணியாற்றிய சிலர் கைபேசியிலேயே நீண்ட மின்னஞ்சல்களை எழுதத் தொடங்கிவிட்டனர். நான், ஆமாம், OK, போன்ற பதில்களைத் தாண்டி எதுவும் எழுத முயற்சிக்கவில்லை. உடனே மடிக்கணினிக்கு தாவி விடுவேன். கூட பணிபுரிந்த ஒருவர் மிகப் பெரிய techinical propsalகளைக் கூட கைபேசியில் எழுதிவிடுவார். (எண்னை விட பத்து வயது இளையவர்). இன்றுவரை நான் blog எழுதும்போது laptopல் தான் எழுதுகிறேன் – எளிதாக எழுதும் தொழில் நுட்பமும் மென்பொருளும் செல்போனிலும் iPad இலும் வந்தபிறகும் கூட. இதை நான் எனது தேர்ச்சியின்மை என்றுதான் எடுத்துக் கொள்கிறேன்.



செல்போனில் இலக்கியம் எழுத முடியுமா என்பதைப் பற்றி நான் நினைப்பது… இந்த அச்சமும் தயக்கமும் மனிதன் குகைச் சுவரில் கிறுக்கியத்திலிருந்து ஓலைச்சுவடியில் எழுதும் முறைக்கு மாறும்போதும் ஏற்பட்டிருக்க வேண்டும் அல்லவா? அதே மாதிரி ஓலைச் சுவடியிலிருந்து papyrus காகிதத்திற்கு மாறிய போதும் ஏற்ப்பட்டிருக்கும். பின் papyrus காகிதத்திலிருந்து – இன்றைக்கு நாம் உபயோகிக்கும் காகிதம். அதே மாதிரி காகிதத்திலிருந்து – typewriterக்கு மாறும்போதும் பின்னர் கம்ப்யூட்டருக்கு மாறும்போது. நீங்களும் காகிதத்திலிருந்து கணினிக்கு மாறியிருப்பீர்கள். பின் கைபேசிக்கு மாறுவதும் natural progression தானே?



ஆனால் காட்டாறு பெருக்கெடுத்து பாயும் வேகம் போல் உருவாகும் உங்கள் சிந்தனைகளை அதே வேகத்தில் இருவிரல் கொண்டு கைபேசியில் பதிவு செய்ய முடியுமா? உங்களால் முடியும் என நினைக்கிறேன். விரைவில் நீங்கள் வெண்முரசுவின் ஒரு அத்தியாயத்தை கைபேசியில் எழுதுவீர்கள் – பலருக்கு அது inspiration ஆக அமையும் என்ற நம்பிக்கையுடன்

ரமேஷ்

-------------------------
ஜெ



எந்தவகையான கருவியும் சிந்தனையை பாதிக்கும். ஆனால் உண்மையான கிரியேட்டிவிட்டி என்பது அந்த பாதிப்பை கடந்து செல்வதில்தான் உள்ளது. உதார்ணமாக, செல்பேசியில் எழுதும்போது அந்த மொழி உருவாக்கும் நிபந்தனையால் ஒருவரால் சிறப்புற எழுத முடியாமல் போனால் அவர் ஒரு சின்ன எழுத்தாளர். அவரால் அவ்வளவுதான் முடியும். கிரியேட்டிவிட்டி என்பது எப்போதுமே அடிப்படையான உந்துதல் கொண்டது. அதற்கு தடைகள் முக்கியம். தடைகளை கடக்குபோதுதான் அதன் ஒரிஜினாலிடி வெளிப்படுகிறது



எஸ்.ராகவன்
===========================================================================================================
தொடர்புடைய பதிவுகள்
====================
ஜூன் 20, 2019
மாயாவிலாசம்!
----------------------

செல்பேசியில் தமிழ் தட்டச்சிடுவது மாபெரும் பண்பாட்டுச் சீரழிவு என்பதுபோன்ற மனநிலையில் இருந்தேன் என்பதை மறுப்பதற்கில்லை. அதிலும் சுரேஷ் பிரதீப் போன்றவர்கள் முழுநாவலையும் செல்பேசியிலேயே எழுதுகிறார்கள் என்று தெரியவந்தபோது. ஏனென்றால் எனக்கு செல்பேசியில் தமிழ் தட்டச்சிடத் தெரியாது. அதற்கான மென்பொருள் என்னிடமில்லை. ஒருமுறை தரவிறக்கம் செய்திருந்தேன். அதில் தமிழும் தட்டச்சிட முடியவில்லை. ஆங்கிலத்துக்கு மாறவும் மறுத்துவிட்டது. ஒட்டுமொத்தமாக வேரோடு பிழுது எடுத்தேன். ’நெஜம்மாவா? பிடிங்கிடப்போறீங்களா? யோசிச்சீங்களா” என்றெல்லாம் கெஞ்சியது. “தயவு பண்ணுங்க எஜமான், வந்திட்டேன்ல” என மன்றாடியது. விடவில்லை.



இரண்டுவிரலால் இலக்கியத்தைக் கையாள்வது எவ்வகையிலும் சரியல்ல என்றே தோன்றிக்கொண்டிருந்தது.இன்னொரு இளம் எழுத்தாளர் வலதுகை கட்டைவிரலை மட்டுமே நாவல் கட்டுரை வம்புச்சண்டை அனைத்துக்கும் பயன்படுத்துகிறார் என அறிந்தபோது உளமுடைந்து “இது உனக்கே நல்லா இருக்கா” என்று கேட்டேன் “வாசிக்கிறது செல்போனிலேதானே? நான்லாம் பேப்பர் புக்கை தொட்டே பல வருஷமாச்சு” என்றார். அந்த வினோத தர்க்கம் ஒருமாதிரி ஏற்றுக்கொள்ளும்படியாகவும் இருந்தது.

வலைத்தளம் ஒன்று தமிழில் தட்டச்சிட உதவியது. (easynepalityping type-tamil )ஆனால் நான் எழுதுவதற்கு முன்னரே அது “இதானே எழுதப்போறே? நீ அப்டி பெரிசா என்னத்த எழுதிருவே?” என அதுவே எழுதியது. ஆனால் அது நான் உத்தேசித்த சொல் அல்ல. அதை நான் மாற்றமுயன்றபோது சலிப்புடன் “சரி, இதானே?” என இன்னொரு சம்பந்தமில்லாத சொல்லை காட்டியது. நான் நினைத்த சொல்லை கொண்டு வந்ததும் ஒரு கல்லை நகர்த்தி சுவரில் அமைத்து சாந்துபூசி நிறுத்திய நிறைவை அடைந்தேன். அப்போதும் அது என் உரைநடை அல்ல. உரைநடையில் நம்மை அறியாமலேயே நமது கை தெரிவுசெய்யும் சொற்களுக்கு ஓர் இடம் உண்டு. அவை எழாமல் இந்த செயலி தடுத்துவிட்டது. இது பாதிநானும் மீதி அச்செயலியும் சேர்ந்து எழுதிய நடை. ஒரு தப்பு நடந்து நாய் பூனைக்குட்டியை பெற்றுவிட்டதென்றால் அடையும் திகைப்பு ஏற்பட்டது. என் வேகத்திற்கு கடைசியில் அதுவே சிறுகதை, நாவல் என எழுத ஆரம்பித்துவிடுமோ என்று தோன்றிவிட்டது.



உண்மையில் இச்செயலிகள் மிகமிகத் திறமையாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த பரிந்துரைச் சொற்கள் ஒரு நல்ல ஏற்பாடுதான். ஆனால் எப்படியோ நம் சொற்தெரிவுக்கு அது ஓர் எல்லையை அமைக்கிறது. சொற்றொடர்த் தெரிவையும் வகுக்கிறது. மெல்லமெல்ல அது நம் உளமொழியை ஆளும். அது வகுத்த களத்திற்குள் நாம் விளையாடுவோம். ஆஸ்திரேலியாவில் பெரிய புல்வெளிகளில் மின்கம்பியால் வேலியிட்டு முதல்தலைமுறை பசுக்களை வளர்ப்பார்கள். பசுக்களின் உள்ளுணர்வில் மின்கம்பிவேலி பதிந்தபின் மின்சாரத்தை நிறுத்திவிடலாம். பலதலைமுறைக் காலம் அவை அந்த கம்பியை மீறிச்செல்ல முயலாது.



இந்த பரிந்துரை நாம் பொதுவாகப் பயன்படுத்தும் மொழியிலிருந்து வருகிறது. அந்தமொழி ஒரு மாபெரும் சராசரி.சராசரி உரைநடைக்கு அப்பால் செல்லும் உரைநடை மட்டுமே உண்மையில் வலுவான தொடர்புறுத்தலை நிகழ்த்துகிறது. ஏனென்றால் அதைத்தான் நாம் கவனிக்கிறோம். வழக்கமான எதையும் கவனிக்காமலிருக்கவே நம் மூளை பழகியிருக்கிறது. இல்லையேல் நாம் வாழமுடியாது. எண்ணிநோக்குங்கள் வழக்கமான சொற்றொடர்களில் அமைந்த தொழில்முறை கடிதங்களை நீங்கள் முழுக்க வாசிப்பதுண்டா, எல்லா சொற்களும் உங்கள் கண்ணில் படுவதுண்டா? ஆங்கிலத்தில் எம்.எஸ் வேர்ட் என்னும் மென்பொருள் மொழியை வகுக்கத் தொடங்கிவிட்டபின் உடைந்த சொற்றொடர்கள், உதிரிச்சொற்றொடர்கள் இன்றில்லை. ஆனால் அந்த சீர்மொழி கவனமின்மையையும் உருவாக்குகிறது



வடிவேலு பாயைவிரிக்கும் காட்சி போல அல்லாடினேன்.கல்லைக் கண்டால் நாயைக்காணோம் வகை போராட்டம். ஒருவழியாக தட்டச்சிட்டு முடித்தேன். எழுத்துப்பிழைகளைச் சீரமைக்க முடியவில்லை. ஒரு சொல்லை சீரமைத்தால் இரண்டு பிழைகள் தாமாகவே உருவாகிக்கொண்டன. எங்களூரில் அந்தக்காலத்தைய விளையாட்டு ஒன்று உண்டு ஒரு தீப்பெட்டியி குச்சிகளை மொத்தமாகக் கொட்டவேண்டும். இன்னொரு குச்சி அசையாமல் ஒவ்வொன்றாக எடுத்து அகற்றவேண்டும். உச்சகட்டப் பொறுமை தேவைப்படும் ஆட்டம் அது. அதை மீண்டும் விளையாடினேன். ஒரு கட்டத்தில் சலிப்புற்று விட்டுவிட்டேன். அப்படியே செல்பேசியிலிருந்தே வலையேற்றினேன்.



மீண்டும் சீரமைக்கலாமென முயன்றேன். ஆனால் அதை வெளியே எடுக்க முடியவில்லை. உண்மையில் மொழிக்கு பிழையாக ஆகும் ஒர் இயல்பு உண்டு. நதி கரைகளை முட்டிக்கொண்டிருப்பதுபோல. கன்றுக்குட்டியை மேய்ச்சலுக்குக் கொண்டுசெல்வதுபோல மொழியை கொண்டுசெல்லவேண்டும். மிகவும் பழகினால் செக்குமாடாகிவிடும்



ஆனால் சற்றுநேரம் கழித்து உணர்ந்தேன், நானும் செல்பேசியில் எழுதத் தொடங்கிவிட்டேன். மென்பொருட்கள் நம் உள்ளத்துடன் உரையாடுபவை. ஏனென்றால் அவை புறவயமாக ஒரு கருவியில் ஏற்றப்பட்ட உள்ளத்தின் ஒரு செயல்பாடு மட்டுமே. கூட்டல் கழித்தல் மொழிதல் என அவை உள்ளம் இயற்றுவதையே செய்கின்றன. உள்ளம் ஆடியில் தன்னைக் காண்பதுபோல அவற்றைக் காண்கிறது. உள்ளத்திற்குள் அவை தொற்றிக்கொள்கின்றன. எல்லா மென்பொருட்களும் மிக எளிதாக உள்ளத்துக்குள் ’டௌன்லோட்’ ஆகி தன்னை நிறுவிக்கொள்கின்றன. எந்த மென்பொருளை ஓரிருநாட்கள் கையாண்டாலும் நம்மையறியாமலேயே உள்ளம் பழகிவிட்டிருப்பதைக் காணலாம்.இன்னும் நாலைந்து கட்டுரை போதும், இந்த மென்பொருளை என் உள்ளத்திலுள்ள மென்பொருள் கண்டுகொண்டால் வெண்முரசை செல்பேசியிலேயே எழுதலாம்.



இவ்வுலகில் இன்று பல்லாயிரம் மென்பொருட்கள் உள்ளன. சில மென்பொருட்களை மனித இனத்தில் பெரும்பான்மையினர் பயன்படுத்துகின்றனர். இவை மானுட உள்ளத்தை ஒட்டுமொத்தமாக எப்படிப் பாதிக்கின்றன என எவராவது ஆராயலாம். உள்ளமும் மென்பொருளும் இணைந்த மாபெரும் மென்பொருள் ஒன்று உருவாகிக்கொண்டிருக்கிறது. நம் சிந்தனைகளின் கட்டமைப்பும் வழிகளும் மென்பொருள்களை முன்வடிவமாகக் கொள்கின்றன. மானுட உள்ளமும் உலகமெங்கும் உள்ள மென்பொருட்களின் தொகையும் இணைந்து ஒரு விந்தையான பேரமைப்பு உருவாகிறது – ஒரு அறிவியல்புனைகதை எழுதிப்பார்க்கலாம்.



கை துறுதுறு என்றது. செல்பேசியில் ஒரு கட்டுரை எழுதிப்பார்ப்போமே என்று. அடக்கிக்கொண்டேன். ஆனால் எழுதமாட்டேன் என்றும் உறுதி சொல்லமுடியாது. நவீனத் தொழில்நுட்பம் மீதான என் உறவு பழம்பொரியுடனான உறவுக்குச் சமானமானது. கடைசிக்கணம் வரை எதிர்த்துப் போராடிவிட்டு அப்படியே சரணடைந்து நடுமையத்திற்குள் பாய்ந்துவிடுவது. அப்பாவுக்கு இதை விளக்க ஒரு சொல் இருந்தது, மாயா விலாசம். மென்பொருள் நம் காலகட்டத்தில் பிரம்மம் கொண்ட மாயையின் வடிவம் போல.
==============================================================================================================
ஜூன் 25, 2019
-----------------------
செல்பேசித் தமிழ் -கடிதங்கள்
------------------------------------------------
ஜெ,

பயனுறு எழுத்தை செல்பேசியில் அடிக்கலாம், இலக்கியத்தை அடிக்க முடியுமா என்று சந்தேகமாகவே உள்ளது. கண்டிப்பாக மொழிச்சிபாரிசு செய்யும் மென்பொருளின் உதவியுடன் அடிப்பது மிகமிகப்பிழையானது. நான் வேலை செய்யும் நிறுவனத்தின் நெறிகளில் ஒன்று கடிதங்களை இரண்டு வகையாகப் பிரித்துக்கொள்ளவேண்டும் என்பது. சாதாரண செய்திக்கடிதங்களுக்கு வழக்கமான ஃபார்மாட் இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட கடிதங்கள் தனிப்பட்ட முறையிலேயே எழுதப்படவேண்டும். புதிய சொற்கள் சொற்றொடர்கள் இருக்கவேண்டும். வழக்கமான சொற்றொரர்கள் டெம்ப்ளேட்கள் இருக்கக்கூடாது. உண்மையில் ஒருவருக்கு தனிப்பட்டமுறையில் எழுதும்போது டெம்ப்ளேட்டுகளைப் பயன்படுத்துவது ஒரு பெரிய இன்ஸல்ட்.

அலுவலகக் கடிதங்களிலேயே இப்படி என்றால் இலக்கியத்தை டெம்ப்ளேட் சொற்களைக்கொண்டு எழுதுவது ஒரு பெரிய வெட்டிவேலையாகவே முடியும். வழக்கத்திற்கு மாறானது, வழக்கத்தை மீறியது ஆகியவையே நல்ல உரைநடையின் சிறப்பம்சங்கள் என நினைக்கிறேன்.

எஸ்.ராமச்சந்திரன்

***

அன்புள்ள ஜெ ,

இந்த கடிதத்தை நீங்கள் பயன்படுத்திய அதே செயலியில்தான் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன்;

“மொழிக்கு பிழையாக ஆகும் ஒர் இயல்பு உண்டு। நதி கரைகளை முட்டிக்கொண்டிருப்பதுபோல। கன்றுக்குட்டியை மேய்ச்சலுக்குக் கொண்டுசெல்வதுபோல மொழியை கொண்டுசெல்லவேண்டும்। மிகவும் பழகினால் செக்குமாடாகிவிடும்”;

உண்ணமைதான், மேலும் நம் எண்ணத்தை, சிந்தனையை மொழியை கொண்டு அணுகும் போதே சிந்தனையின் கூர் மழுங்கிவிடுகிறது அல்லவா? எண்ணத்தில் உருவாகும் மொழியின் வேகத்திற்கும், செயலியில் தட்டச்சு வேகத்திற்கும் ஒருமித்த ஒரு synargize உருவானால், ஓரளவேனும் கூர்மையை மழுங்காமல் பார்த்துள்கொள்ளலாம் ।।।

“உள்ளமும் மென்பொருளும் இணைந்த மாபெரும் மென்பொருள் ஒன்று உருவாகிக்கொண்டிருக்கிறது”,
நான் கருதுகிறேன் அந்த மாபெரும் மென்பொருள் ஏற்கனவே உருவாகி விட்டன, இவ்வாறு கூறலாம் நாம் இப்பொழுது 2 பாயிண்ட் O இல் இருக்கிறோம்
artificial intelligence பற்றி நீங்கள் ஒரு அறிவியல் புனை எழுத வேண்டும் என் நீண்ட நாள் ஆசை।

ஒவொரு நேரத்திலும் நீங்கள் வாழக்கை கோணத்தை எனக்கு அளிக்கிறீர்கள், மருத்துவ மனையில் சிகிழ்ச்சியிலும், வலியிலும் வாழ்க்கையை நோக்கும் விதம், அருமை என் சிரம் தாழ்ந்த வணக்கம் ।।। எந்த இடத்திலும் மீண்டும் மீண்டும் உரக்க கூறுவேன் நான் உங்கள் வாசகன், நீங்கள் என் மதிப்பிற்குரிய ஆசிரியன்,

ராம்

***

எழுதியவர் : ஜெ மின்னஞ்சல்கள் (13-Jul-19, 6:05 am)
பார்வை : 47

மேலே