பதவி உயரப் பணிவுடையன் ஆகி எவர்க்கும் இரங்கி உதவி புரிந்து வருக - நீர்மை, தருமதீபிகை 328

நேரிசை வெண்பா

பதவி உயரப் பணிவுடையன் ஆகி
இதமாய் எவர்க்கும் இரங்கி - உதவி
புரிந்து வருக; புகழறங்கள் எல்லாம்
பரிந்து வருமுன் பணிந்து. 328

- நீர்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

அதிகார பதவியில் உயர்ந்த போது உன் உள்ளம் பணிவும் பண்பும் உடையதாய் இனிது அமைந்து எவர்க்கும் இரங்கி இதம் புரிந்து வர வேண்டும்; அங்ஙனம் வரின் புகழ் புண்ணியங்கள் எல்லாம் உன்னை விழைந்து வந்து உவந்து கொள்ளும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், எவ்வழியும் உதவுவதே உய்வழி என்கின்றது.

அதிகாரம், அரசு முதலிய உயர்நிலைகளைப் பதவி என்றது. மனிதன் உயர்ந்த பதவிகளை அடைந்த பொழுது அவன் உணர்ந்து செய்ய வேண்டிய கடமைகள் பல தொடர்ந்து நிற்கின்றன. அந்நிலைமைகளை நினைந்து செய்யும் அளவே அவனது தலைமை சிறந்து நிற்கின்றது.

மற்றவரை ஆதரித்து வரும் மாட்சி கருதியே ஒத்த மனிதருள் ஒருவனை இறைவன் உயர்த்தி வைத்தது. தகுதி நோக்கி ஆதரிக்கும் தகைமையுடையானை உலகம் மிகுதியும் நோக்கி வருகின்றது.

இதமாய் இரங்கி உதவி புரிக என்றது உயர்ந்தவன் செய்ய வேண்டிய உரிமை உணர வந்தது.

பதவியில் இறுமாப்பும் களிப்பும் கொண்டவன் இழிந்து படுகின்றான்; அடக்கமும் அமைதியும் உடையனாய் இதம் புரிகின்றவன் உயர்ந்து திகழ்கின்றான்.

அற்பனுக்குச் சிறிய பதவியும் பெரிதாய்த் தோன்றுகின்றது; அதனால் தருக்கி நிற்கின்றான். செருக்கு சிறுமையை விளைக்கின்றன. மனப் புன்மையால் மனிதன் புல்லியனாகின்றான்.

அப்பொல்லாப் புன்மையைப் போக்கி நல்ல தன்மையை நாளும் பழகிவரின் அது எல்லா நன்மைகளுக்கும் ஏதுவாகின்றது.

Always cultivate the heart. Through the heart the Lord speaks.

'எப்பொழுதும் இதயத்தைப் பண்படுத்து; அவ்வுள்ளத்தில் கடவுள் பேசுகின்றார்' என விவேகானந்தர் இவ்வாறு உணர்த்தியிருக்கிறார்.

Where the heart is, there the muses, there the gods sojourn. - Heroism

"எங்கே நல்ல இதயம் உள்ளதோ, அங்கே கலைகளும் தெய்வங்களும் குடியிருக்கின்றன’’ என்னும் இது இங்கே அரிய உரியது.

எல்லா இன்பங்களுக்கும், எல்லா மகிமைகளுக்கும் இடமாயுள்ள உள்ளத்தை இதமாக நன்கு பண்படுத்திக் கொண்டவன் உயர் நலங்களை எல்லாம் ஒருங்கே அடைந்தவனாகின்றான்.

புனித இதயமும் இனிய இதமும் உடைய மனிதன் அடைகின்ற மகிமைகளை நினைந்து புகழ் அறங்கள் எல்லாம் பணிந்து வரும். என்றது. புகழும் புண்ணியங்களும் உயர்ந்த நலங்களாதலால் சிறந்த குண சீலனை விழைந்து வந்து அவை அடைந்து கொள்கின்றன.

’ஆறுகள் கடலினை அடைதல் போலநற்
பேறுகள் ஈகையில் பெருகி யுள்ளன’

என்றமையால் உபகாரியின் உயர்நிலைகள் உணரலாகும்.

உயிர்களுக்கு இரங்கி உதவுகின்றவன் புகழ்க் குரிசிலாய்ச் சிறந்து புண்ணியவானாய் உயர்ந்து திகழ்கின்றான்.

பணிவும் பண்பும் இதமும் ஈகையும் மனிதனைத் தனி நிலையில் உயர்த்துகின்றன. அந்த இனிய நீர்மைகளை மருவி எவரும் உயர வேண்டும் என இது உணர்த்தி நின்றது என்கிறார் கவிராஜ பண்டிதர்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jul-19, 3:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே