மண்டுபழி படரும் மற்றொருவன் மனைவிழையின் காண் - நெறி, தருமதீபிகை 338

நேரிசை வெண்பா

கொண்ட மனையாள் குணந்திரிவள்; மக்களுமே
கண்ட படிதிரியக் காலெழுவர்; - மண்டுபழி
பாவம் படரும் பகைதுயராம் மற்றொருவன்
காவல் மனைவிழையின் காண். 338

- நெறி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பிறனுடைய மனையாளை நீ விழைந்து போனால் உன் மனைவி குணம் மாறி நிலை கெடுவாள்; பிள்ளைகளும் மனம் போனபடி பிழையான வழிகளில் இழிந்து திரிவர்; பழியும் பாவமும் பகையும் துயரும் எவ்வழியும் விளைந்து வரும் என்கிறார் கவிராஜ பண்டிதர். இது, பிறர்மனை விழையின் தன்மனை அழியும் என்கின்றது.

தாம் சார்ந்த இனத்தின் வண்ணமே சீவர்கள் யாண்டும் நேர்ந்து இயங்குகின்றன. அயலே வாய்ந்த வகையின் அளவே இயல்பாகச் சாயம் தோய்ந்து மிளிர்கின்றன. எங்கும் என்றும் இவை இயற்கை நியமங்களாய்ப் பொங்கி வருதலால் செயற்கைச் சூழல்கள் சீர் தூக்கி நோக்கப் படுகின்றன.

‘அரசன் எப்படி, குடிகள் அப்படி’ என்னும் பழமொழி சேர்க்கையின் இயற்கை நிலையைத் தெளிவுறுத்தி யுள்ளது.

ஒரு குடித்தலைவன் ஒழுக்கம் கெட்டு இளிநிலைகளில் இழிந்து திரியின் அவன் குடும்பத்தில் உள்ளவர்களும் அவனைப் பின்பற்றி நிலை குலைந்து படுவர். வழி காட்டியாய் உள்ளவன் பழி காட்டலாகாது; காட்டினால் யாவும் இழிவாய்ப் பழிபட நேரும்.

தந்தையும் தாயும் நல்லவராயின், அவர் வழி வந்தவர் ஒளி மிகுந்து உலாவுகின்றனர். அல்லராயின் இளிபுரிந்து உழலுகின்றனர்.

கலி விருத்தம்
(விளம் விளம் மா கூவிளம்)

'தூயராய்ச் சிலர்புவி துதிக்க வாழ்தலும்,
தீயராய்ச் சிலர்பழி சேர்ந்து வீழ்தலும்,
தாயர்தந் தையர்நிலை சார்ந்து மேவலால்
ஆயவர் சேயவர்க்(கு) அரணம் ஆவரால்.

என்னும் இது ஈண்டு உணரவுரியது.

நேர்ந்த தலைவன் நிலைமையே அவன் நிழல்வழி வாழ்வார்க்குப் படிகின்றது.

'ஓர் பிழை குருவே செய்யின், ஒன்பது சீடன் செய்வான்' என்பது செயற்கைக் கேட்டை விளக்கி நிற்கின்றது.

நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்(கு)
இனத்தியல்ப தாகும் அறிவு. 452 சிற்றினஞ் சேராமை, என்றது பொய்யாமொழி.

மனித சுபாவம் இவ்வாறு மருவியுள்ளமையால் தன்னைச் சார்ந்தவரை ஒரு தலைவன் எவ்வாறு பாதுகாத்து வர வேண்டும்? என்பதை அவன் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். சிந்தனை இல்லாத வாழ்வு நிந்தனையாய்த் தாழ்கின்றது.

பிறனுடைய மனையாளை ஒருவன் விழைந்து போனால் அவனுடைய மனைவி தவறுபட நேர்வாள். புதல்வரும், புதல்வியரும் அவனைப் பார்த்துப் பழிவழியில் இறங்குவர். இங்ஙனம் குடும்பம் இழிந்து படவே அவன் வாழ்க்கை மதிப்பும் மரியாதையும் இழந்த அவமானமாய் அழிகின்றது.

கொண்ட மனைவி குணம் திரிவள் என்றது அவள் பதி விரதையாய் இருக்கும் பான்மை குலைவாள் என்றவாறு. சந்ததிகளும் நிந்தை வழிகளில் இழிதல் கருதி மக்களுமே கண்டபடி திரிவர் என்றது. ஒருவன் நெறி கேடு பலர்க்கும் பழி கேடுகளாக வழி புரிகின்றது.

பிறர் மனைவியரை விழைந்து உழலும் ஒரு பேயனை அவன் மனைவி திருத்த முயன்றாள். நான் இங்கு இருக்க நீங்கள் அங்கே போவது ஏன்?' என நாளும் இதமாகச் சொல்லிப் பார்த்தாள். அவன் யாதும் கேட்கவில்லை. ஒருநாள் இாவில் அவன் எழுந்த பொழுது அவளும் உடனே கதவை மூடிவிட்டு வெளியேறி வேறு ஒரு வழியாய் நடந்தாள். அவன், எங்கே போகின்றாய்?’ என்றான். நீங்கள் செய்யும் வேலையை நானும் இன்று முதல் செய்யப் போகின்றேன்' என்றாள். அவனுக்கு மானமும் அறிவும் வந்தன. உடனே திரும்பி வீட்டுக்கு வந்தான்; அன்று முதல் அப்பழக்கத்தை விட்டான். அவளோடு அன்புடனமர்ந்து இன்பமாய் வாழ்ந்தான்.

எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

அயல்மனை நாடி அவாவுடன் எழுந்தான்;
அவன்மனை கதவினை மூடி
இயலுடன் வெளியே நடந்தனள்; எங்கே?
எனஅவன் வினவினன்; தங்கள்
செயலினை நானும் செய்யவென்(று) உரைத்தாள்;
சிந்தையுள் நாணிமீண்(டு) அந்த
மயலினை அன்றே ஒழித்துதன் மனையை
மருவிவாழ்ந் திருந்தனன் மகிழ்ந்தே!

தன் மனைவி விபசாரியாய் இருக்க எவனும் சம்மதியான் என்பது இதனால் தெரிகின்றது. தனது அனுபவம் இங்ஙனம் இருப்பதை ஓர்ந்துணராமல் ஒருவன் பிறர் மனையைப் பழுதுபடுத்திப் பாழாக்கப் போவது எவ்வளவு மதியீனம்? எத்துணைப் பழி பாவம்! உய்த்துணர வேண்டும்.

நீ அயல் மனையை விரும்பினால், உன் மனைவி விபசாரியாவள்: பிள்ளைகளும் பிழை பட்டு இழிவர்; குடும்பம் குன்றி ஒழியும்: இப்பழி கேடுகள் நேராதபடி ஓர்ந்து நெறி கோடாமல் வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Jul-19, 3:40 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 36

மேலே