எவரிடமும் அளிபுரிந்து ஆதரவு செய்வார் இளிவரவைக் காணார் - நீர்மை, தருமதீபிகை 329

நேரிசை வெண்பா

எளியர் மெலியர் எவரிடமும் அன்பாய்
அளிபுரிந்(து) ஆதரவே செய்வார் - இளிவரவை
எவ்வழியும் காணார் எடுத்த பிறவியின்
வெவ்வழி தூர்ந்து விடும். 329

- நீர்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

எளியவர், மெலியவர் முதலிய யாரிடமும் அன்புடன் அளி புரிந்து ஆதரவு செய்கின்றவர் யாதொரு இளி வரவும் காணாமல் யாண்டும் இன்பமே கண்டு பிறவி தீர்ந்து பேரின்பம் அடைவர் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

இப்பாடல், யாண்டும் தயையுடன் ஒழுகுக என்கின்றது.

எளியர் - வறுமையால் வாடியிருப்பவர், மெலியர் - வலிமை குன்றி மறுகி நிற்பவர்.

செல்வம், அதிகாரம் முதலிய செழிப்புகள் யாதுமின்றி அல்லவில் உழந்து அலமந்துள்ள மக்களிடம் உள்ளம் இரங்கி உதவி புரிக; அந்த ஆதரவு, மிக்க பசியுடையார்க்கு உணவு இட்டது போல் தக்க புண்ணியமாய்த் தழைத்து வருகின்றது.

அன்பு எல்லாரிடமும் யாண்டும் செய்ய வேண்டியதே ஆயினும் தலைமையாக முன்பு செய்ய உரிய நிலைகள் வரைந்து காட்டப்பட்டன. ஏழைகளுக்கு அருளுவதில் இறை அளி ஒளிர்கிறது.

இயல்களும் செயல்களும் இனியனவாய்க் கனியின் அவை சிறந்த தெய்வத் தன்மைகளாய் உயர்ந்து திகழ்கின்றன.

பிற உயிர்களிடம் உள்ளம் இரங்கி உதவி புரிபவனே அருமை மனிதனாய்ப் பெருமை பெறுகின்றான்.

தண்ணளியும், ஆதரவும் மனிதனைப் புண்ணிய சீலனாக்கி யாண்டும் கண்ணியம் மிகச் செய்கின்றது.

பிறர் இதங்களை யாதும் எண்ணாமல் என்றும் தன்னலமே கருதி நிற்பவர் சின்னவராகியே சிறுமையுறுகின்றனர்.

The man who has never wept over the sorrows of his people is blind to the taller peaks of life. - Kirby Page

'ஏழைகளுடைய துயரங்களைக் கண்டு உருகி அழாதவனது உயிர் வாழ்வு உயர்நிலை காணாது இழிவுறுகின்றது” என்னும் இது உணர வுரியது.

அருள் நலம் தோய்ந்து ஆதரவு அமைந்த அளவுதான் உயிர் ஒளி மிகுந்து உயர்ந்த சீவனாய்ச் சிறந்து திகழ்கின்றது.

இனிமைப் பண்புகள் தனி மகிமையை வளர்த்து வருதலால், அந்நீர்மைகளை யுடையவர் பெரிய மனிதராய்ப் பேர் மிகப் பெறுகின்றார். அப் பண்பாளரிடம் இயல்பாகவே அன்பு நலங்கள் பெருகி இன்ப இதங்கள் மருவியுள்ளன.

‘இளிவரவை எவ்வழியும் காணார்’ என்றது அவரது செவ்வி தெளிய வந்தது. கனிவான இனிய நீர்மையுடையவரது மனம், மொழி, மெய்கள் எங்கும் புண்ணிய கருமங்களையே பேணி என்றும் புகழ் வளர்த்து வருமாதலால் அவர் பழி வரவு காணாராயினர்.

தரும குண சீலராய் இவ்வாறு ஒழுகி வருபவர் இருமையும் பெருமையுடையராய் இறுதியில் பிறவி தீர்ந்து பேரின்பம் பெறுகின்றமை கருதி ’பிறவியின் வெவ்வழி தீர்ந்து விடும்’ என்றது.

எளியவர்க்கு இரங்கி உதவுக; மெலியவர்க்கு ஆதரவு செய்க; எவ்வழியும் எவ்வுயிர்க்கும் இனியனாய் அருள் புரிந்து வருக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jul-19, 5:43 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே