போதமின்றி ஏதிலனில் ஆய்கின்றாய் என்னே அவம் - நெறி, தருமதீபிகை 339

நேரிசை வெண்பா

ஈசன் கயிலை எடுத்தானும் கீசகனும்
ஆசை பிறர்மனைமேல் ஆயன்றே - நாசமாய்ப்
போயினரப் போக்கறிந்தும் போதமின்றி ஏதிலனில்
ஆய்கின்றாய் என்னே அவம். 339

- நெறி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

ஈசன் எழுந்தருளியுள்ள கைலாச மலையை வேரோடு எடுத்த இராவணனும், மகா தீரனான கீசகனும் பிறர் மனைவியர் மேல் ஆசை கொண்டதனாலேயே நாசமாய்ப் போயினர்; அந்த நாச நிலையை அறிந்தும் அயலான் மனைவியை நீ விரும்புகின்றாயே; அந்தோ! இது எவ்வளவு நீசம்? என்கிறார் கவிராஜ பண்டிதர்.

பிறன் இல் விழைவு பிழை; பழி, பாவம் என இதுவரை உணர்ந்து வந்தோம். அங்ஙனம் விழைந்து இழிந்து அழிந்து ஒழிந்தவர்களுள் சிலரை இப்பாடலில் உணர வருகின்றோம்.

நீதிமுறை தவறி நெறிகேடு செய்யின், அவர் எவராயினும் கெடுவர் என்பதற்குச் சரித்திர ஆதாரங்களோடு இாண்டு சாட்சிகளை இது குறித்துக் காட்டுகின்றது. சரிதச் சான்றுகள் உண்மையைத் தெளிவுறுத்தி உறுதி புரிகின்றன.

அவனது அசையாத ஆண்மையையும் திசை வென்ற ஆற்றலையும் தீர பராக்கிரமங்களையும் கருதிக் காண ‘ஈசன் கயிலையை இராவணன் எடுத்தான்’ என இங்கே இசைத்துக் காட்டியது. யாரும் செய்ய முடியாத அதிசயத்தைச் செய்து முடித்தமையான் செய்தவரனைவரும் அவன் மெய்வலியை வியந்து பாராட்டியுள்ளனர்.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
*முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;

மங்க லக்குடி யான்கயி லைம்மலை
அங்க லைத்தெடுக் குற்ற அரக்கர்கோன்
தங்க ரத்தொடு தாள்தலை தோள்தகர்ந்(து)
அங்க லைத்தழு(து) உய்ந்தனன் தானன்றே. 10 திருமங்கலக்குடி, திருநாவுக்கரசர் தேவாரம்

இங்ஙனம் வெள்ளியங்கிரியை எடுத்து இறைவன் அருள் பெற்றுப் பரம பாக்கியங்களை அடைந்து மூன்று உலகங்களையும் ஏக சக்கராதிபதியாய்த் தனியரசு ஆண்டு திசைகள் தோறும் இசைகள் பரவச் சிறந்திருந்த தசமுகன் சீதை மேல் நசை புரிந்தமையால் தன் குலத்தோடு நாசமாய் அழிந்து போயினான்.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

10064
’ஓராசை ஒருவன்மேல் உயிராசைக் குலமகள்மேல்
..உடைய காதல்
தீராசை பழி’என்றேன்; எனைமுனிந்த முனிவாறித்
..தேறி னாயோ?
போராசைப் பட்டெழுந்த குலம்முற்றும் பொன்றவும்தான்
..பொங்கி நின்ற
பேராசை பேர்ந்ததோ? பேர்ந்தாசைக் கரிஇரியப்
..புருவம் பேர்ந்தோய்! 281 இராவணன் வதைப் படலம், இராமாயணம்

இராவணன் இறந்த பொழுது இரணகளத்தில் நின்று விபீடணன் இவ்வாறு அவனை நோக்கி அழுதிருக்கிறான். அவனுடைய பெருந்திருவும் அருந்திறலும் பேரரசும் ஆருயிரும் பிறர்மனை விழைவாகிய ஒரு பிழையினால் அழிந்து ஒழிந்தன என அலறியிருத்தலால் அவ்விழைவின் தீமை தெளிய வந்தது.

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

'வெற்பெடுத்(து) உயர்ந்த திண்டோள்
..இராவணன், விரகத் தெய்திப்
பொற்புடைச் சீதை நெஞ்சம்
..மெலிவுறப் புன்மை செய்து
கற்பெனும் கனலி பற்றக்
..கிளையொடும் கரிந்தான் என்னின்
அற்புடை யவர்க்குத் தீமை
..புரிவரேல் நரகின் ஆழ்வார், - கூர்ம புராணம்

தன் நெறி கேட்டினால் இராவணன் நிலை குலைத்து அழிந்தமையை நூல்கள் பல இங்ஙனம் பரிந்து குறித்திருக்கின்றன.

கீசகன் என்பவன் விராட தேசத்து மன்னனுடைய மைத்துனன். சிறந்த சேனாதிபதி. உயர்ந்த போர் வீரன். துரோபதையை விழைந்து இழிந்து அழிந்தான்.

இந்திரன் எவ்வளவு பெரியவன்; அவனது சீரும் சிறப்பும் எத்துணை உயர்வின; அகலிகையை விரும்பியதனால் அவன் பெருமை முழுதும் இழந்து சிறுமை அடைந்தான்.

கலிநிலைத் துறை
(மா விளம் விளம் விளம் மா)

கற்ற கல்வியும், அவுணர்கள் கருந்தலை உருட்டிப்
பெற்ற செல்வமும், விண்அர சாட்சியும், பிறவும்
உம்ம காமத்தின் ஒருதழற் பொறியினூர் அவிங்தாங்(கு)
அற்ற வோ!என அழிந்தனன், கரைந்தனன், அழுதான். - விநாயக புராணம்

அயலான் மனைவியை விழைந்ததனால் தனக்கு நேர்ந்த அல்லலையும் அவமானத்தையும் நினைத்து அவன் இவ்வாறு அழுதிருக்கிறான். அரிய பல பெருமைகளும் இவ்விழைவுறின் அழிவுறும் என்பது தெளிவுற வந்தது.

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல். 144 பிறனில் விழையாமை

மேலே குறித்தவர் எல்லாரையும் கருதி வந்துள்ளது போல் இது உருவமைந்துள்ளது. எனைத் துணையர் ஆயினும் என்னாம்? இந்த வினாவின் வேகத்தையும் விறலையும் கருதி நோக்குக. கல்வி, செல்வம், அதிகாரம், ஆற்றல் முதலியவற்றால் எவ்வளவு சிறந்திருந்தாலும் பிறர் மனைவியரை விழைவராயின் அவ்வளவும் நாசமாய் இழித்துபட அவர் அழிந்து கெடுவர் என்னும் ஓசை இதில் உள்ளே ஒலித்துள்ளது. அவ்வுண்மையை நுண்மையாக உள்ளச்செவியால் உற்று ஓர்ந்து கொண்டு தேர்ந்து ஒழுக வேண்டும்.

’தினைத் துணையும் தேரான்’ என்றது நுனித்துணர வந்தது. தன் மனைவியை அயலான் ஒருவன் தழுவ விழைந்தால் தன்மனம் என்ன பாடுபடும்! என்னும் உணர்வு ஒரு தினை அளவாவது இருந்தால் பிறன் இல்லை விழைந்து ஒருவன் நுழைவானா? எனத் தேவர் இதில் உளைந்து இரங்கியிருக்கும் நிலை உருகி உணரவுரியது.

தன்னைப் போல் பிறரை எண்ணி ஒழுகுவதே நல்ல மனிதத் தன்மையாம். அத்தன்மை இல்லையேல் அவன் புன்மையாளனாய்ப் புலைப்படுகின்றான்.

தன் அனுபவத்தாலும், நூலறிவாலும், சரிதக் காட்சிகளாலும் பிறர்மனை விழைவு பெரும்பிழை என்பது பெறப்படுகின்றது. அப்பிழையில் வீழாமல் விலகி வாழ்வதே விழுமிய நலமாம்.

விளையும் தீதுகளை நினைந்து ஏதிலன் இல் ஆய்கின்றாய்; என்னே அவம்! என்றது. ஏதிலன் – அயலான், இல் - மனையாள். அவம் - கேடு. அயலார் மனைவியர் மேல் ஆசை உற்றதனாலேதான் இராவணன் முதலாயினோர் நாசமாய்ப் போயினர்; அந்த நாச நிலையை உணர்த்து நீசம் புரியாமல் நெறியே வாழுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Jul-19, 5:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 45

மேலே