பசியோடு இருப்பவனுக்கு ரொட்டியே தெய்வம்

ஏழைகளின் கந்தல் துணியில் முடிபோட்டு வைத்திருந்த செப்புக் காசுகளை,களிம்பேறிய தம்படிகளை நான் அவர்களிடம் இந்தக் கையால் வாங்கியிருக்கிறேன். அவர்களிடம் நான் புது நாகரிகங்களைப் பற்றியும் முன்னேற்றங்களைப் பற்றியும் பேசவா ? அவர்களிடம் போய் வேதாந்தம் பேசுவது அவர்களைப் புண்படுத்துவது ஆகும். பேசினால் என்னையும் உங்களையும் கொடிய அரக்கர்களாகப் பாவிப்பார்கள். அவர்களறிந்த தெய்வம் கருணையற்ற கொடுங்கோல் தெய்வமெல்லவா ?




கோபமும்,பயங்கரமும் நிறைந்த தெய்வந்தான் அவர்கள் கண்டது. இவர்களிடம் நான் ஆண்டவனைப் பற்றி என்ன பேச முடியும் ? பேச எனக்கு தைரியமில்லை. இந்த ஏழை மக்களின் ஒளியற்ற கண்களைப் பார்க்கும் போது அவர்களிடம் ஆண்டவனைப் பற்றிப் பேச எனக்கு எப்படி மனசு வரும் ? ரொட்டியே அவர்களுக்கு தெய்வம். ஊமைப் பிராணிகளிடம் நான் சாஸ்திரம் பேசுவதைப் போலவே ஆகும். அவர்களுக்குக் கூலிதரும் வேலைக் காட்டிய பிறகே நான் அவர்களிடம் ஆண்டவனைப் பற்றி பேச முடியும். இங்கே நாம் உட்காந்து நன்றாக காலைப் பலகாரம் முடித்து மத்தியான சாப்பாடு என்னவாக இருக்கலாம் என்று யோசனை செய்யும் நிலையில் நாம் தெய்வ ஆராய்ச்சி செய்யமுடியும். ஒரு வேளை ரொட்டிக்குத் திண்டாடும் நிலையில் வாழும் மக்களிடம் நான் தெய்வ ஆராய்ச்சி செய்ய முடியுமா ? அவர்களுக்கு கடவுளின் அவதாரமே ரொட்டியும் வெண்ணெய்யும் தான். ஏழைக் குடியாவனர்கள் நிலத்தை உழுது ரொட்டி சம்பாதித்துக் கொள்வார்கள். அந்த ரொட்டிக்கு வெண்ணெய் கிடைக்க ராட்டையைக் கொடுத்தேன். இன்று நான் முழங்காலுக்கு மேல் வேட்டி கட்டிக்கொண்டு பசியில் தவிக்கும் அந்த ஏழை மக்களின் தனிப் பிரதிநிதியாக உங்கள் முன் நிற்கிறேன்.

யங் இந்தியா 15-10-1931(லண்டன்)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

“நான் உங்களுக்கெல்லாம் ஓர் மந்திரத் தாயத்து அளிக்கிறேன். முடிவெடுக்கையில் அது சரியா, தவறா என்கிற ஐயப்பாடு எழும்போதோ, அல்லது உமது அகந்தையோ சுயநலமோ தலைதூக்கும்போதோ இந்தச் சோதனையைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பார்த்துள்ள, ஏழ்மைமிக்க, மிக மிக நலிவுற்ற முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம், எடுக்கவிருக்கும் நடவடிக்கை, தீட்டவிருக்கும் திட்டம், அந்த பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன் தன் அன்றாட வாழ்க்கையையும், வருங்கால வாழ்வையும் வளமாக்கி அவனது கட்டுப்பாட்டில் இருத்திக்கொள்ள வகைசெய்யுமா? இதையே வேறுவிதமாகச் சொல்லப்போனால், பசிப்பிணியாலும் ஆன்மிக வறட்சியாலும் வாடும் லட்சக்கணக்கான மக்களுக்கு உண்மையில் சுயராஜ்யம் (சுயதேவைப்பூர்த்தி) கிடைக்கச் செய்யுமா என்று உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். அதன்பின் உங்களது ஐயங்களும் சுயநலமும் கரைந்து மறைந்து போவதைக் காண்பீர்கள்” (1947 ஆகஸ்ட் மாதம் தேதி குறிப்பிடாமல் காந்திஜி ஆங்கிலத்தில் தம் கைப்பட எழுதிய குறிப்பு இது. ஆதாரம்: “CWMG” நூல் 89, பக்கம் 125).
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்தியாவில் பட்டினியால் வாடுகின்ற கோடிக்கணக்கான மக்களைப் பற்றி கவலைப்படாத அதிலிருந்து அவர்களை விடுவிக்கும் வழிமுறையைக் கண்டறியாத கல்வி "தேசியக் கல்வியல்ல" (யங் இந்தியா 17.06.1926)

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
காப்புரிமை மூலகட்டுரையாளர்களுக்கே. Dynamic Views theme. Powered by Blogger.

எழுதியவர் : யங் இந்தியா 15-10-1931(லண்டன்) (16-Jul-19, 5:33 am)
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே