கன்னிநிலம் ------------கடிதம்

ஜெ.

கன்னி நிலம் வாசித்தேன்.

எல்லை மாநிலங்களின் ராணுவ முகாம்களின் அதிகாரிகள், வீரர்களின் சூழல், மனோநிலைகளின் சித்தரிப்பில் ஆரம்பிக்கிறது நாவல். சினிமாப்பாடல்கள் வழியான அவர்களின் இளைப்பாறுதல் பெரும்பாலருக்கும் அணுக்கமான விஷயமாக இருக்கும் என்பது நிச்சயம்.

அடுத்து இந்திய அரசாங்கத்தின் கீழ் ஒரு பிரஜையாக இருப்பதே அடிமைத்தனம் எனும் மனோபாவத்தை பெரும்பாலான மக்களின் மனதில் வேரூன்ற வைத்து, அவர்களை உண்மையில் வேறோர் அடிமைத்தனத்தில் தள்ளும் தீவிரவாதக் குழுக்களையும், அன்னிய சக்திகளையும் தொட்டுச்செல்கிறது.

படித்த பெண் ஆன ஜ்வாலா அருமையான பாத்திரப்படைப்பு. சிறு வயதிலிருந்து வலிய ஆட்படுத்தப்பட்ட தீவிரவாத வாழ்க்கை முறையில் இருந்து ராணுவ அதிகாரி நெல்லையப்பன் மூல‌மாக தன் சுயத்தைக் கண்டடைகிறாள்.

நெல்லையப்பனின் பதவியும், அதன் கொள்கைகளும் அவனை ஜ்வாலாவுடன் சேர விடாது என உணரும் தருணம் அவன் தன் சுயத்தை விட்டு புது மனிதனாக விழைகிறான். அந்த விழைவில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறான்.

தன் சுயத்தைக் கண்டடைந்தவளும், தன் சுயத்தைத் துறந்தவனும் இணையும் இந்தப் புள்ளி எதற்கும் அசராத வலிமையை உடையதாய் இருக்கிறது.

குற்றவாளியாக ராணுவத்திடம் பிடிபட்டு, சித்திரவதைகளுக்கு ஆளாகியும் தன் நிலையில் உறுதியாக இருக்கும் இருவரையும் கெடுபிடிகளையும் தாண்டிய மனிதம் இணைக்கிறது. இருவரும் தங்கள் கனவுலகமான நோ மேன்ஸ் லேண்டில் காலடி எடுத்து வைக்கிறார்கள்.

மெலிதான மற்றும் உச்சகட்ட உணர்ச்சிகளின் கலவையான பயணம் போல‌ இருந்தது நாவல்.

நோ மேன்ஸ் லேண்ட் எனும் ஆளில்லாத, ஆளுமை இல்லாத பிரந்தியங்கள் பற்றி மேலும் தேடத் தூண்டியது. இதன் மூல‌ம் இரு நாடுகளிடையே எல்லைப்பிரிப்பு விவகாரங்களால் உருவான நோ மேன்ஸ் லேண்ட் தவிர மனிதர்கள் வாழவே முடியாது என்று அந்தந்த நாடுகளே ஒதுக்கிய சில பிராந்தியங்கள் 1) ரஷ்யாவின் செர்னோபில் அணு உலை விபத்தில் பாதிக்கப்பட்ட இடம் 2) உலகப் போருக்குப்பின் ஆயுதக்கழிவுகள், மீட்கப்படாத வீரர்களின் உடல்கள் புதைந்த பகுதிகள் பற்றியும் தெரிந்து கொள்ள முடிந்தது.

எகிப்துக்கும் சூடானுக்கும் இடையில் உள்ள ஒரு பாலைவனப்பகுதி, இரு நாடுகளின் வரைபடத்தில் உள்ள சிறு குறை பாடு காரணமாக நோ மேன்ஸ் லேண்ட் ஆக இருக்கிறது. இந்த இடத்தைத் தேடிப்போய் ஒருவர் (இந்தூரை சேர்ந்த இந்தியர் சுயாஷ் தீக்ஸித்) அதை தன் பெயரில் தீக்ஸித் நாடு என்றும், தன்னை அதன் ராஜா சுயாஷ் என்றும் பிரகடனப் படுத்திக்கொண்ட கூத்தும் நடந்திருக்கிறது.

அன்புடன்

ரமேஷ் கிருஷ்ணன்

எழுதியவர் : ரமேஷ் கிருஷ்ணன் (16-Jul-19, 6:15 am)
பார்வை : 29

மேலே