அழியாத இன்பம் அடைய புனிதமுடன் நன்மை புரிக நயந்து - நீர்மை, தருமதீபிகை 330

நேரிசை வெண்பா

அழியாத இன்பம் அடைய விரும்பின்
ஒழியா(து) அருளை உறுக; - வழியாதும்
புன்மை புகாமல் புரந்து புனிதமுடன்
நன்மை புரிக நயந்து. 330

- நீர்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

என்றும் நிலையான பேரின்ப நலனை நீ பெற விரும்பின், எவ்வழியும் இரங்கி அருளைச் செய்க; சிறுமை சிறிதும் புகாமல் இனிது பேணிப் புனிதமுடன் நன்மையைப் புரிந்து வருக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

உயிர்கள் இன்ப நலங்களை விழைந்து மகிழ்கின்றன; துன்ப நிலைகளை வெறுத்து அஞ்சுகின்றன. இவை இயற்கை நியமங்களாய் எங்கணும் பரந்து விரிந்துள்ளன. உயர்விலும் சுகத்திலும் இயல்பாகவே இங்ஙனம் பிரியம் மீதுார்த்து நின்றும், இழிவிலும் துயரிலும் தோய்ந்து வழி தெரியாமல் அவை வறிதே உழலுகின்றன.

இன்பம் கருணையில் உண்டாகின்றது; துன்பம் கொடுமையில் விளைகின்றது. இவ்விளைவின் மூலங்களை உணர்ந்து ஒழுகாமையால் சீவர்கள் வினைத் துயரங்களை அடைய நேர்கின்றனர்.

’இன்பம் அடைய விரும்பின் அருளை உறுக’ என்றது மனிதன் கருதிய இன்ப நலனை உறுதியாகப் பெறுதற்கு உரிய வழியினை விழி தெரிய விளக்கியது.

புன்மை ஆவது மனிதனைப் புல்லியனாக்கிப் புலப்படுத்துகின்ற பொல்லாத் தன்மைகள். களைகளை ஒழித்துப் பயிர்களை வளர்த்தல் போல், சிறிய கீழ்மைகளை நீக்கிப் பெரிய நீர்மைகளைப் பேணி வந்த அளவே மனித வாழ்வு இனிதாய் மாண்புறுகின்றது.

புனிதம் - மனத்தூய்மை. அரிய நலங்களுக்கெல்லாம் இனிய மூலமாய் இது மருவியுள்ளது. சித்த சுத்தியுடன் நல்ல இதங்களைச் செய்துவரின், அது உத்தம வாழ்க்கையாய் ஒளி சிறந்து உயர்கின்றது. புனித எண்ணங்கள் போகங்களாகின்றன.

’புன்மை புகாமல் புரந்து நன்மை புரிக’ என்றது நல்ல வழிகளை விலகிப் புல்லிய பழிகளில் புகுந்து உழலுவதே சீவர்களின் இயல்பாய்ப் பெரும்பாலும் பெருகியிருத்தலால், அங்ஙனம் பாழ் போகாமல் பயன் உணர்ந்து நயனடைந்து கொள்ளும்படி வியன் வகை குறித்து வந்தது.

இனிய சுகங்களை விரும்புகின்ற மனிதர் கொடிய தீமைகளைச் செய்து வருவது பெரிய மடமைகள் ஆகின்றது. தம் செயல்களால் விளையும் விளைவு நிலைகளை உணராமையால் பாழான வழிகளில் வீழ்ந்து படு துயரடைகின்றனர். உறுதி கூறினும் தெரியாமல் வறிது மாள்கின்றனர்.

மறத்துறை நீங்குமின், வல்வினை பூட்டுமென்(று)
அறத்துறை மாக்கள் திறத்திற் சாற்றி
நாக்கடிப் பாக வாய்ப்பறை அறையினும்
யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்;
தீதுடை வெவ்வினை உருத்த காலைப்
பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர். 27 – 32 வரிகள், ஊர் காண் காதை, மதுரைக் காண்டம், சிலப்பதிகாரம்

'பிற உயிர்கட்குத் துயர் செய்யாதீர்; அதனால் கொடிய துன்பங்கள் உளவாகும்; வினைப்பயன் விடாது' எனத் தரும சீலர்கள் எவ்வளவு சொன்னாலும், பாவகாரிகள் கேட்க மாட்டார்; வினைத்துயர் வந்து பிடித்தபொழுது அந்தோ! என்றலறி அழுது அலமந்து அழிவர் என இது உணர்த்தியுள்ளது.

மானிடரது இயற்கைகளையும், நிகழ்ச்சிகளையும் பரிவுடன் கூர்ந்து குறித்துள்ள இதனை ஓர்ந்து சிந்திக்க வேண்டும்.

தமக்கு நேர்கின்ற கேடுகளை உணராமல் பாழான வழிகளில் இழிந்து மனிதர் படுகின்ற பாடுகள் பரிதாபங்கள் ஆகின்றன.

எண்சீர் விருத்தம்
(காய் 3 மா அரையடிக்கு)

காடுவெட்டி நிலம்திருத்திக் காட்டெருவும் போட்டுக்
..கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்!
கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர்! எங்கே
..குடிஇருப்பீர்? ஐயோநீர் குறித்தறியீர்! இங்கே
பாடுபட்டீர் பயன்அறியீர்! பாழ்க்கிறைத்துக் கழித்தீர்!
..பட்டதெலாம் போதுமிது பரமர்வரு தருணம்
ஈடுகட்டி வருவீரேல் இன்பமிகப் பெறுவீர்
..எண்மைவுரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தனனே. – அருட்பா

இந்தப் பாட்டை ஊன்றிப் படித்துப் பொருட் குறிப்புகளை ஓர்ந்து கொள்ளுங்கள். அருள் நலங்கனிந்த பெரியோர் உள்ளங்கள் மருள் நிறைந்த மக்கள் நிலைகளை நினைந்து எப்படி உருகியிருக்கின்றன! எவ்வாறு உரிமையுடன் உறுதி கூறி உணர்வு காட்டுகின்றன! பிறந்த பிறவிப் பயனைப் பருவம் தவறாமல் விரைந்து பெறுவதையே மேலோர் விளக்கியுள்ளனர்.

தன் உயிர்க்கு நல்லதை நாடுகின்றவன் அல்லல் வினைகளை யாதும் கருதலாகாது. நல்ல செயலில் நலம் பல விளைகின்றன.

அழியாத ஆனந்த வாழ்வை அடைய வேண்டின், எவ்வழியும் ஒழியாத கருணையை ஓம்பி வரவேண்டும்.

’அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு’ என்றமையால் அருளுடையாரது இயல்பும் செயலும் தெளிய நின்றன. ’தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன்’ எனப் புத்தர் பெருமான் பேர் பெற்றுள்ளமையால் அவரது உயிர் உருக்கம் உணரலாகும். தயா மூர்த்தி, உத்தம சீலன், புண்ணிய போதகன் என உலகம் இன்றும் அவரை எண்ணி உவந்து கொண்டாடுகின்றது.

உத்தமன், மத்திமன், அதமன் என்னும் இம் முத்திறத்தார் நிலைகள் எத்திறத்தும் உய்த்துணர உரியன.

தனக்குச் சுகத்தை நாடாமல் பிறர்க்கு இதத்தை நாடுகின்றவன் உத்தமன்; இவன் மனிதருள் தெய்வமாய் மகிமையுறுகிறான்.

தனக்குச் சுகம் கண்டு பிறர்நலம் காண்பவன் மத்திமன்.

தன்னலம் அன்றிப் பிறர் நலம் காணாதவன் அதமன்.

இந்த மூன்று நிலைகளுக்கும் புறம்பாய்ச் சில பிராணிகள் உள்ளன. அவை என்றும் பிறர்க்கு இடர் செய்யும் இயல்பின.

எழுசீர் விருத்தம்
(விளம் மா விளம் மா / விளம் விளம் மா)

தன்னலம் துறந்து பிறர்க்கிதம் புரியும்
தன்மையன் உத்தம சீலன்:
தன்னலம் கருதிப் பிறர்க்கிதம் புரியும்
தன்மையன் மத்திம நிலையன்,
தன்னலம் அன்றிப் பிறர்க்கிதம் புரியாத்
தன்மையன் தாழ்ந்தவோர் அதமன்:
தன்னிலை யெல்லாம் பிறர்க்கிட ராகத்
தரணிவாழ் கின்றவன் ஈனன்.

இறுதியில் உள்ளவனை ஈனன் என்று சுட்டி, அவனது கொடுமையும் தீமையும் மடமையும் இதில் குறிக்கப்பட்டுள்ளன.

பிறர்க்கு அகிதம் செய்கின்றவன் கொடிய தீமையாளனாய் நெடிய துயரங்களை அடைகின்றான். இதம் செய்கின்றவன் இனிய தருமவானாய் என்றும் இன்பங்களை நுகர்கின்றான்.

யாண்டும் எவ்வுயிர்க்கும் எவ்வழியும் நல்லது செய்; அதுவே திவ்விய மகிமையாய் உய்வகை அருளும்.

He prayeth well, who loveth well Both man and bird and beast. - Coleridge

'பறவை, மிருகம், மனிதன் முதலிய எவ்வுயிர்க்கும் இரங்கி அருள்வதே சிறந்த கடவுள் வழிபாடாம்' என கோலரிட்ஜ் என்பவர் இங்ஙனம் கூறியிருக்கிறார்.

நேரிசை வெண்பா

அறிவு மிகப்பெருக்கி, ஆங்காரம் நீக்கிப்.
பொறிஐந்தும் வெல்லும்வாய் போற்றிச் – செறிவினால்
மன்னுயிர் ஓம்பும் தகைத்தேகாண் நன்ஞானம்
தன்னை உயக்கொள் வது. 186 அறநெறிச்சாரம்

இறைவன் எங்கும் நிறைந்து உளன். உயிரினங்கள் எல்லாம் அவனுக்கு உடல்களாய் உலாவுகின்றன. இந்த உண்மையை உறுதியாய் நம்பி எந்த உயிர்களிடமும் அன்பாய் இதம் புரிந்த ஒழுகுக என்றும், இந்த மனப்பண்பு எல்லா மகிமைகளையும் விளைத்துப் பேரின்ப நிலையையும் பயந்தருளும் என்றும் கூறுகிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jul-19, 3:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே