பிறனில் விழையாப் பெருந்தகையான் அறனில் உயரும் அமர்ந்து - நெறி, தருமதீபிகை 340

நேரிசை வெண்பா

எத்திக்கும் கீர்த்தி எழுந்துலவும்; இன்பமுயர்
முத்தித் தலத்து முதன்மையுறும்; - ஒத்த
பிறனில் விழையாப் பெருந்தகையான் என்றும்
அறனில் உயரும் அமர்ந்து. 340

- நெறி, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

பிறன் மனையாளை விரும்பாத பெருந்தகையாளன் சிறந்த புண்ணிய சீலனாய் உயர்ந்து, யாண்டும் புகழொளி பரப்பி முத்தித் தலத்திலும் தலைமை எய்தி நிலவியிருப்பான் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

நெறி கேடராய்ப் பிறர் மனைவியரை அவாவினார்க்கு உளவாகும் பழி கேடுகளை மேலே கண்டு வந்தோம்; இப்பாடலில் அங்ஙனம் தவறு செய்யாதவரது பெருமேன்மைகளைக் காண வந்துள்ளோம்.

நிறையால் பெண்பிறப்பு பெருமை பெறுதல் போல், நெறியால் ஆண்பிறப்பு மகிமையுறுகின்றது. நிறை இல்லையாயின் பெண்மை புன்மையாம்; நெறி இல்வழி ஆண்மை கீழ்மையாம். பெண்மைக்கும் ஆண்மைக்கும் நிறையும் நெறியும் முறையே உயிர் நிலையங்களாய் ஒளி புரிந்துள்ளன.

கற்புடைய பெண் அற்புத நிலையளாய் அகிலமும் துதிக்கப் பெறுகின்றாள். கற்பு பெரும் பேறாக மதிக்கப் பட்டுள்ளது.

கற்பு என்னும் திண்மை உண்டாகப்பெறின் அப்பெண்ணின் பெருமை விண்ணினும் பெரிது; அவளைத் தனக்கு மனைவியாகப் பெற்றவன் பெரும் பாக்கியவான்; அப் பேற்றினும் ஏற்றமான பேறு வேறு யாதும் இல்லை என வள்ளுவர் கூறியுள்ளார்.

கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது
பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால்
வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது
நீணில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு - அடைக்கலக் காதை, மதுரைக் காண்டம், சிலப்பதிகாரம், 15

மழைவளம் தரும் பெண்டிர். - மணிமேகலை
கற்பில் நின்றன. கால மாரியே. – இராமாயணம்

பத்தினிகளை மேலோர் இவ்வாறு புகழ்ந்து வியந்து துதித்திருக்கின்றனர். நிறையுடைய பத்தினிகளைப் போலவே நெறியுடைய உத்தமர்களும் இங்ஙனம் துதிக்கக் தக்கவர். பெண்மைக் கற்பினும் ஆண்மைக் கற்புக்குச் சோதனைகள் அதிகம். அரிவையர் அரிய பாதுகாவலுடன் இல்லுள் ஒதுங்கி இருக்கும் இயல்பினர். ஆடவர் தனியராய் வெளியே உலாவிவரும் நிலையினர்.

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும்? மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. 57 வாழ்க்கைத் துணைநலம்

நிறையான் மிகுகில்லா நேரிழை யாரைச்
சிறையான் அகப்படுத்தல் ஆகா. 30 பழமொழி நானூறு

மகளிர்க்கு நிறை, சிறை என்று இரண்டு பாதுகாப்புகள் உள. அவற்றுள் நிறைக்காவல் சிறப்புடையது; அஃது இல்லையானால் சிறைக் காவலால் பயன் இல்லை என இவை உணர்த்தியுள்ளன.

“That virtue which requires to be ever guarded is scarcely worth the sentinel." (Goldsmith)

’என்றும் புறக்காவலிலுள்ள கற்பு அப் பாதுகாப்பால் யாதும் பயன்படாது' என மேல் நாட்டு அறிஞரும் இங்ஙனம் கூறியுள்ளார்.

தன் நெஞ்சே சான்றாய் நெறி அமர்ந்து ஒழுகிய பொழுதுதான் அது உண்மைக் கற்பாய் ஒளி சிறந்து திகழ்கின்றது.

இந்நிலையில் இருபாலும் நிறைஒத்து ஒருபாலும் கோடாமல் நெறியே ஒழுகி வருமாயின், அச்சமுதாயம் பரம புனிதமுடையதாய்ப் பெருமகிமை அடையும்.

கலிவிருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)

முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
2 ,3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)

ஆச லம்புரி ஐம்பொறி வாளியும்
காச லம்பும் முலையவர் கண்எனும்
பூசல் அம்பும், நெறியின் புறம்செலாக்
கோச லம்புனை ஆற்றணி கூறுவாம் 1 ஆற்றுப்படலம், இராமாயணம்

என இரு பாலாருடைய கற்பு நிலையை ஒரு முகமாய் உணர்த்தியிருக்கும் இந்த அற்புதப் பாடல் நுட்பம் மிகவுடையது. அரிய உறுதி நலங்கள் நிறைந்தது. ஆழ்ந்து சிந்திக்கத்தக்கது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (16-Jul-19, 3:42 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே