மனிதன் எனும் மிருகம்

உயர மரங்கள்
ஒற்றைக் காலில்
எதையோ வேண்டி
நின்று கொண்டிருக்கும்!

தவம் செய்யும்
தளிரின் உடலில்
துளையாய் சிறுவீடு
என்வீடு!

தாவி குதித்தால்
உதட்டில் கனி!
இறங்கி நடந்தால்
குழிநீர் சுரப்பு!

பேசிப் பழகிட
பறவைகள்!
ஓடித் திரிந்திட
நண்பர்கள்!

வனப்பாய் தான்
இருந்தது! அந்த
வனவாசம்!

பார்த்த விலங்குதான்!
மாற்றத்துடன் வந்தது
மனிதன் என்ற பேரில்
மீண்டும் காட்டிற்கு!

வீடு ஒன்று கட்ட
விருட்சம் நூறு வெட்ட
அகதி ஆனோம்
அனாந்திர வெளியில்!

நீர் சுரப்பின்மேல்
சுண்ணாம்பு நிரப்பினான்!
பச்சை மண் மேல்
பளிங்கு பரப்பினான்!

இத்தனையும் போதாதென
இல்லம் சுற்றி
கண்ணாடி வேலி!
இன்னும்
வளிக்கும் வெளிக்கும்
தான் இல்லை
வேலி!

பருவம் வந்தது!
புனலும் பொழிந்தது!
பூமி நீர் இறங்க
பாதையில்லை!

கோடை வந்தது!
வெப்பம் தின்றது!
தாகம் தீர்க்க மண்ணில்
நீருமில்லை!

பணம் தந்து
பானம் வாங்கத்
தெரியவில்லை!
நீரின்றி நா வறண்டு
திரிகிறேன்!

மரத்தை வெட்டி விட்டு
மனிதன் செய்கிறான்
மழை வேண்டி யாகம்!
அருகில் ஒரு பாண்டம்!
அடியில் துளி அமிழ்தம்!
நானும் நீருக்காய்
வேண்டுதல் செய்ய
துணிந்துவிட்டேன்!
தொடங்கியது...
கண்ணாடி முள்ளின் மேல்
என் பாத யாத்திரை!

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (16-Jul-19, 7:50 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 67

மேலே