செம்மைத் திருவுடையார் இம்மை மறுமை எனுமிரண்டின் மாண்பும் பெறுவர் – நேர்மை, தருமதீபிகை 341

நேரிசை வெண்பா

செம்மை உடைய திருவுடையார் தேசுடனே
எம்மை நலனும் இனிதெய்தி – இம்மை
மறுமை எனுமிரண்டின் மாண்பும் ஒருங்கே
பெறுவர் பெருமை பெரிது. 341

– நேர்மை, தருமதீபிகை
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மனச்செம்மையாகிய செல்வத்தை உடையவர் அரிய புகழுடன் இனிய நலங்கள் பலவும் அடைந்து இருமையினும் பெருமை மிகப் பெறுவர் என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல் நேர்மையால் விளையும் சீர்மைகளை விளக்குகிறது.

மனிதன் மனத்தால் விளங்குகின்றான். நல்லவன் தீயவன் மேலோன் கீழோன் என்பன எல்லாம் மனப் பண்பின் உயர்வு தாழ்வுகளிலிருந்து கிளைத்து விளைந்திருக்கின்றன. விளைவுக்கு வித்து மூல காரணம் ஆதல்போல் ஒருவனுடைய நிலைமைகளுக்கு அவன் மனம் மூல முதலாயுள்ளது.

இத்தகைய மனத்தை ஒருவன் பண்படுத்திவரின் அவன் எல்லா இன்ப நலங்களையும் எளிதே அடைந்து கொள்கின்றான்.

மனிதன் பெறத்தக்க பேறுகள் எவற்றிற்கும் மனமே இனிய துணையாய் உரிமையுடன் அமைந்திருத்தலின் அதனை எவ்வழியும் செவ்வையாக அவன் பேணி வர வேண்டுவது காணியாயது.

ஊனுடம்(பு) எடுத்திவ் வுலகிடை உதித்த
மானுடம் எல்லாம் மனநிலை அளவே
வானிடை ஏகலும் வையகம் வாழ்தலும்
தாமுடை யனவாய்த் தழைத்தமர்ந் துள்ளன.

ஆன்ம ஊதியங்கள் யாவும் மனத்தின் தகுதியளவே மருவி வருகின்றன என இஃது உணர்த்தியுள்ளது.

கருதிய உறுதி நலங்கள் கைவர வேண்டின் மனத்தைச் செம்மையாக மனிதன் செய்து கொள்ள வேண்டும்.

நேர்மை ஒர் அங்குலம் விலகின் சீர்மை உன்னை விட்டு ஒரு காதம் ஒதுங்கிப் போய் விடும்; அங்ஙனம் சீரழிந்து போகாமல் செம்மை நலம் பேணி நன்மை பெறுக.

செம்மை - செவ்விய தன்மை. அஃதாவது கோட்டமின்றி யாண்டும் நேர்மையாய் நிற்கும் நீர்மை. சிறந்த பெருந்தகையாளரது உயர்ந்த பண்பாய் ஒளி மிகுந்துள்ளமையால் இத்தன்மையை உலகம் உவந்து கொண்டாடுகின்றது.

செம்மையின் ஆணி எனப் பரதனைக் குறித்து இராமன் வியந்து கூறியிருத்தலால் இக் குண நீர்மையின் மேன்மையை அவ் வீரக் குரிசில் விழைந்து பேணியுள்ளமை விளங்கி நின்றது.

'அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன்கோல் அன்ன செம்மைத் தாகி" - மதுரைக் காஞ்சி

'அகம்புரி செம்மை அன்பிற் காட்டி’ - பெருங்கதை

'செம்மை மாதவர் செய்தவப் பள்ளியே. – சீவக சிந்தாமணி

செம்மையின் இயல்பும், அதனை யுடையவரது உயர்வும், தகவும் இவ்வுரைகளால் உணர்ந்து கொள்ளலாம்.

எல்லா நன்மைகளையும், இனிய செல்வங்களையும் தனியே நல்கி அருளுதலால் செம்மை திருவுடைமை என வந்தது.

மனிதனது மாண்பு மனத்தில் உள்ளது; அம் மனத்தின் மேன்மை செம்மையில் நிலைத்து நிற்கின்றது. நேர்மை குன்றிய பொழுது மனம் சீர்மை இன்றி நிலை தளர்வதால் மனிதன் சீர்மையிலனாய்ச் சிறுமை அடைய நேர்கின்றான்.

உயர்ந்த சீலத்தின் உயிர் நிலையமாய்ச் செம்மை சிறந்திருத்தலால் அரிய பல நலங்களை எளிதில் அது பயந்தருளுகின்றது.

“Integrity in word and deed is the backbone of character." - Smiles

’சொல்லிலும் செயலிலும் நேர்மையாய் நிற்பது ஒழுக்கக்தின் முதுகெலும்பாயுள்ளது” என்னும் இது ஈண்டு உணரத் தக்கது. நேர்மை சீலத்தின் உயிர் நிலை என்றதனால் அதன் நீர்மை நிலை தெரியலாம். கள்ளம், கரவு, கபடுகள் நேர்மைக்கு நேர் விரோதிகள். அவை உயிரைப் பழுது படுத்தி விடும்.

அந்த இழிவுகள் உள்ளத்தைப் பற்றாமல் பாதுகாத்து இந்த விழுமிய தகைமையை யாண்டும் மேவி ஒழுகின் மேன்மைகள் யாவும் விரைந்து பெருகி வியன் பயன் தரும்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

மெ’ய்’ம்மையாம் உழவைச் செய்து
விருப்பெனும் வித்தை வித்திப்,
பொ’ய்’ம்மையாம் களையை வாங்கிப்.
பொறைஎனும் நீரைப் பாய்ச்சித்
தம்மையும் நோக்கிக் கண்டு
தகவெனும் வேலி இட்டுச்
செம்மையுள் நிற்பர் ஆகில்
சிவகதி விளையும் அன்றே. 2 – 76 பொது, நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

பேரின்ப விளைவுகளுக்கு உரிய சாதனங்களை இது குறித்துள்ளது. செம்மையுள் நின்றால் சிவ கதி விளையும் என்றது. இம்மையும் மறுமையும் அது ஈந்தருளும் என்பது ஓர்ந்து கொள்ள வந்தது. தேசு - கீர்த்தி.

புகழ், பொருள், புண்ணியம் முதலிய எல்லா இன்ப நலங்களுக்கும் மன நலமே காரணமாயுள்ளது; அதனைப் புனிதமாக இனிது பேணுகின்றவன் மனிதருள் தெய்வமாய் மருவி மிளிர்கின்றான்.

கரவு முதலிய ஈனங்களால் பழுது படாமல் நெஞ்சு விழுமிய நிலையை அடைந்து, அது கடவுள் நிலையமாய்ச் சிறந்து அளவிடலரிய மகிமைகளைப் பெறுகின்றது.

O spirit, that dost prefer Before all temples the upright heart and pure - Paradise Lost

நேர்மையான தூய உள்ளத்தையே எல்லாக் கோயில்களிலும் இனியதாக உவந்து குடி கொண்டுள்ள ஓ’ கடவுளே' என ஆங்கிலக் கவி மில்ட்டன் கூறியுள்ளது ஈண்டு அறிய உரியது. செவ்விய இதயம் திவ்விய தெய்வ ஆலயமாயது.

உள்ளம் கரவு படியாமல் நேர்மையாகப் பேணிவரின் எல்லா நன்மைகளையும் இனிது விளைத்து அது தனி மகிமை தருகின்றது என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Jul-19, 6:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 83

மேலே