கயிலையில்_ஏறுவது_எப்படி

வாளவரி கோளபுலி கீளதுரி தாளின் மிசை நாளும் மகிழ்வர் காள முகில் மூளும் இருள் கீளவிரிதாள கயிலாய மலையே!!

என்று தேவாரம் புகழும் திருத்திகழ் மலை, திருக்கயிலாய மலையாம், இமயமலைத் தொடர்களில் திபெத் அருகே கடல்மட்டத்தில் இருந்து 6600 அடிக்கு மேல் அமைந்துள்ள இம்மலை சர்வேஸ்வரன் அனுதினமும் சஞ்சிரித்து வாழும் மலையாக இருக்கிறது.

இம்மலை சைவம் மட்டுமல்லாது சமண பௌத்த சமயங்களுக்கும் கூட மிக முக்கிய வழிபாட்டிடமாக அமைந்துள்ளது, இம்மலை மற்றைய கல் மலைகள் போலல்லாமல் தானேயமைந்த கூட கோபுரங்கள் போன்ற மடிப்புகளுடன் காணப்படுகின்றது

சைவப் பெருமக்கள் பலரது வாழ்நாள் கனவு கயிலாய தரிசனம் எனலாம், ஆனால் பல மலையேற்ற வீரர்களின் கனவு யாதெனில் கயிலாயத்தில் ஏறிப்பார்க்க வேண்டும் என்பதாம்

அதற்கான முயற்சியில் ஈடுபட்ட பல மலையேற்ற வீரர்களும் தோல்வியை மட்டுமே தழுவி உள்ளனர், வெகுசிலர் ஓரளவுக்கு கயிலையில் ஏறி அதன் குறிப்பிட்ட பகுதியை அடைந்த பொழுது "அவர்களுடைய தலை மிகவும் கனமாக இருப்பது போலவும், அவர்கள் முதுமை அடைந்து வயோதிகர்களாக ஆனது போன்றும் உணர்ந்ததாக" கூறியுள்ளனர்

பெரும்பாலான கயிலை மலை ஏற்றக்காரர்கள் உயிருடன் திரும்புவதில்லை என்றாலும் மீறி திரும்பியவர்கள் முதுமையான தோற்றத்துடன் ஓராண்டிற்குள் மரணித்து விட்டது ஆச்சர்ய வரலாறாக உள்ளது

பல ஆய்வறிஞர்கள் கயிலையின் அருகே நிறைய பறக்கும் தட்டுகள் பறப்பதனை காணலாம் என்றும் எழுதுகிறார்கள், "விண்ணவர்கள் விமானத்தொடும் இழியும் வீழிமிழலை" என்ற பிள்ளையார் தேவார வாக்கு ஏனோ இங்கு நினைவு வருகின்றது,

1999 ஆம் ஆண்டு கயிலாய மலையின் அடிவாரத்தில் தாம் தங்கியிருந்த போது, ஒரு இரவு நேரத்தில் இம்மலைக்குள் இருந்து மனித நடமாட்டத்தை காட்டும் வகையிலான சத்தங்களை தான் கேட்டதாக கூறுகிறார் ரஷ்ய அறிஞர் மெல்டஷேவ் என்பவர்,

இப்படி பல கேள்விகளை உள்ளடக்கி மானுடப் பிறவிகளுக்கு விந்தையாக தோன்றும் கயிலாய மலையை ஏறவே முடியாதா?? என்றால் அதனில் ஏறியவர்களே இல்லையா?? என்றால் நிச்சயம் ஏறமுடியும்!! அதற்கான வழி என்னவென்றும் அதன்படி ஏறியவர்களும் இருக்கிறார்கள் என்கின்றன சைவத்திருமுறைகள்🙏🏻

ஆம்!! நாமறிந்த வரை கயிலை மலை ஏறிய அருளாளர்களில் மிகமுக்கியம் வாய்ந்தவர் "எங்குடியாளும் காரைக்கால் பிராட்டியார்" ஆவார்🙏🏻😭

"நம்பன் திருமலை நான் மிதியேன் என்று உம்பர் மிசை தலையாலே நடந்தார் அம்மையார்" என்பது அனைவரும் அறிந்த வழக்கு, ஆனால் அம்மையார் ஏன் தலையாலே நடந்தார்!! என்பதனை சற்று விரித்து நோக்குதல் அவசியம்

"படர் ஔிக் கயிலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்குக் காலின் நடையினைத் தவிர்ந்து பார்மேல் தலையினால் நடந்து சென்றார்"என்பது சேக்கிழார் பெருமான் வாக்கு

அம்மையார் ஏன் கயிலையை அடைந்ததும் தலையால் நடக்க முயற்சித்தார் என்றால், அதுதான் கயிலையில் ஏறும் அடிப்படை முறைமை போலும் என்று சிந்திக்க தோன்றுகிறது.

அதற்கு, "அம்மையாருக்கு முன்பே திருக்கயிலையில் ஏறிய இருவர் சான்றும் பகர்கின்றனர்"

ஆம்!! அம்மையாருக்கு முன்பே கயிலையில் தலையால் ஏறிய இருவரை நம்முடைய பதினோறாம் திருமுறை அடையாளம் காட்டுகின்றது!!

நம்பியாண்டார் நம்பிகள் அருளிய *"கோயில் திருப்பண்ணியார் விருத்தம்"* என்னும் பதினோறாம் திருமுறை நூலின் 45ஆம் பாடல்.

"நின்றிலவே விசயன்னொடும் சிந்தை களிப்புற நீள் தென்தில்லை மாநடம் ஆடும் பிரான்தன் திருமலைமேல் தன் தலையால் நடந்தேறிச் சரங்கொண்டு இழிந்தென்பர் கன்றினையே விள மேலெறிந்து ஆர்த்த கரியவனே" என்பது அந்த பாடல்

மகாபாரதத்தில் பாசுபதாஸ்திரம் வேண்டிய அர்ச்சுனர் கிருஷ்ணருடன் திருக்கயிலை யாத்திரை செய்த பொழுது "கிருஷ்ணர் திருக்கயிலை மலைமேல் காலால் ஏறக்கூடாது தலையால் ஏறுதல் வேண்டும்" என்று கூறி கிருஷ்ணரும் அர்ச்சுனரும் இணைந்து தலையாலே கயிலையில் ஏறி இறைவனிடம் அஸ்திரம் பெற்று வந்தனராம், இச்செய்தியையே மேற்சொன்ன பதினோறாம் திருமுறை பாடல் தெரிவிக்கிறது

"திருமலைமேல் தன் தலையால் நடந்தேறிச் சரங்கொண்டு இழிந்தது என்பர் கன்றினையே விளமேல் ஏறிந்து ஆர்த்த கரியவனே" என்பது பாடல் வரிகள்

விளாமரமாக வந்த அசுரனையும் கன்றுகுட்டியாக வந்த அசுரனையும் எறிந்து கொன்ற கிருஷ்ணர் அர்ச்சுனரோடும் கயிலையில் தலையால் ஏறினார் என்ற செய்தி அம்மையார் திருத்தலையால் ஏறிய செய்தியுடன் ஒப்பிட்டு நோக்க தக்கது

தற்கால மலையேற்ற வீரர்களும் இப்படி தலையால் நடந்தேறினால் நிச்சயம் கயிலாயத்து உச்சியுள்ளானை கண்டு தொழ முடியும் போல

ஆனால் தலையால் ஏறுவது என்பது சாதாரண விஷயமா என்ன?? நம்மால் இரண்டடிகூட தலைகீழாக நடக்க முடியாது!! அம்மையாரும் கிருஷ்ணரும் அர்ச்சுனரும் எத்தனை அருள் தன்மை வாய்ந்தவர்கள் அவர்களால் அது முடிந்திருக்கிறது என்றால் அவர்களது உயரிய தவமும் இறைவன் மீதான மாறாப்பற்றும் ஒன்றுமே காரணம் ஆகும்

அதனை எம்போன்ற இழிபிறவிகளால் நினைத்தும் பார்க்க முடியுமோ!? அதனால்தான் மானுட முயற்சிகள் யாவும் இதில் தோல்வியை தழுவுகின்றன போலும்!!

திருச்சிற்றம்பலம்🙏🏻

சிவதீபன்


Sent from iPhone

எழுதியவர் : [சிவதீபன் - 17/07/19] (19-Jul-19, 3:49 am)
பார்வை : 8

மேலே