பயணியின் புன்னகை--------------------கட்டுரை, -----------முன்னுரை

[ 1 ]

எங்களூரில் அந்தக்காலத்தில் பட்டாளத்துக்காரர்கள் தான் உலகச்சாளரங்கள். வடசேரி கனகமூலம் சந்தைக்கு காய்கறி வாங்கச்செல்வது, சுசீந்திரம் தேர்த்திருவிழா, திருவனந்தபுரம் பத்மநாபசாமி ஆறாட்டுவிழாவுக்குச் செல்வது தவிர எங்களூரில் பயணம் மேற்கொள்பவர்கள் அரிது. பெரும்பாலானவர்கள் ‘என்ன சாமி சொல்லுகது? குளித்துறைக்கு அப்புறம் ராச்சியமில்லை. தேங்காப்பட்டினம் கடலாக்கும் ’ என நம்புகிறவர்கள்

அப்படிப்பட்ட சூழலில் இரும்பு லாடம் கட்டிய சப்பாத்துகளும் பச்சைக்கம்பிளிச் சீருடையும் டிரங்குப்பெட்டியுமாக வரும் பட்டாளத்துக்காரர்கள் அச்சமும் ஆர்வமும் ஊட்டும் அபூர்வப்பிறவிகள். அவர்களில் சிலர் லடாக் வரைக்கும் சென்றவர்கள். பனிமலைகளையும் பாலைவனங்களையும் கங்கையையும் பிரம்மபுத்திராவையும் பார்த்தவர்கள். ரேஷன் வந்துசேராமல் பன்னிரண்டு நாள்வரை பட்டினி கிடந்தவர்கள். படுகாயம்பட்ட காலுடன் நூறு கிலோமீட்டர் நடந்தவர்கள். பட்டாளத்தான் வந்துவிட்டால் ஊரே சுற்றிலும் திரண்டுவிடும்.

நான் அவதானித்தது, பட்டாளத்தான்களிடம் வரும் மாறுதலை. ஒருமுறை முருகேசனாசாரியின் மனைவியை அச்சுதனுடன் சேர்த்து யட்சிகோயில் முடுக்கில் பிடித்தார்கள்.ஊரே ரகளைப்பட்டது. ஊரே கூட்டங்களாகக் கூடி நின்று வம்புபேசியது. எங்கும் கொந்தளிப்பு. ஊர் அழியுமா இருக்குமா என்ற ஐயம் பரவலாக நிலவியது.

பட்டாளத்தான் சோமன் அண்ணா சிரித்தபடி ‘விடுடே முருகேசா, அவள இத்திரி வெள்ளம் கோரி நல்லா குளிக்கச்சொல்லு….மண்ணு தின்னுத உடம்பு’ என்றார் ‘வேணுமானா நீ அவன் பெஞ்சாதிகிட்ட கேட்டுப்பாரு…இப்பம் என்ன?’

இவர் ஏன் இவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்கிறார் என்று அன்று திகைப்பாக இருந்தது. ஆனால் அத்தனை பட்டாளத்தான்களிடமும் அந்தச் சிரிப்பு இருந்தது. உலகம் இவ்வளவுதான் என அறிந்தவனின் புன்னகை அது. மனித உறவுகளை, வாழ்வை, மரணத்தை அறிந்து தெளிந்தவனின் அங்கதம் அவர்களின் ஒவ்வொரு சொல்லிலும் இருந்தது.

அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள் தமிழில் வெளிவர ஆரம்பித்தபோதுதான் நான் வாசித்தவரை அந்த பட்டாளத்தானின் சிரிப்பு தமிழிலக்கியத்தில் பதிவாகியது. உலகநாடுகள் தோறும் அலைந்து, விதவிதமான இனங்களை மொழிகளை பண்பாடுகளைச் சந்தித்து, பேதங்களையும் ஒருமைகளையும் உணர்ந்து நிதானமடைந்தவரின் புன்னகை அவரது எல்லா வரிகளிலும் இருந்தது. தோளோடு தோள் இடித்துக்கொண்டு வாழும் தமிழ்ச்சூழலின் இருட்டில் அந்த புன்னகையின் வெளிச்சம் மிகப்பெரியதாகத் தெரிந்தது

சின்னச்சின்ன விஷயங்கள் வழியாக பெரியபெரிய மனநாடகங்களை நடித்து, கொந்தளித்து கொப்பளித்து வாழும் தமிழர்களில் கணிசமானவர்களுக்கு அந்த புன்னகை எரிச்சலூட்டியதென்பதையும் கண்டிருக்கிறேன். சமகாலம் எரிந்துகொண்டிருப்பதாக அவர்கள் பாவனை செய்தார்கள். கடந்தகாலம் உடைந்து சரிவதாக எண்ணிக்கொண்டார்கள். அதன் ரட்சகர்களாக தங்களை கற்பிதம்செய்துகொண்டார்கள். அவர்களுக்கு எல்லாம் வாழ்க்கையல்லவா என்ற முத்துலிங்கத்தின் புன்னகையை புரிந்துகொள்ளவேமுடியவில்லை. ஆனால் மெல்லமெல்ல நவீனத்தமிழின் முதன்மையான படைப்பாளியாக அவர் தன் பீடத்தை அடைந்தார்

அ.முத்துலிங்கத்தின் உலகைச்சேர்ந்த இன்னொரு எழுத்தாளர் ஆசி கந்தராசா. முத்துலிங்கத்தின் மொழிநடையை ஆஸி கந்தராசா நினைவுபடுத்துவது சொற்றொடரமைப்பினால் அல்ல, உள்ளார்ந்த புன்னகையின் வெளிச்சத்தால்தான். உள்ளே விளக்கேற்றி வைக்கப்பட்ட படிகக்கட்டிபோல மொத்த எழுத்தையும் அந்தப்புன்னகை மிளிரச்செய்துவிடுகிறது.

[ 2 ]

ஆசி கந்தராசாவின் எழுத்தை மிகவும் தற்செயலாகத்தான் நான் அறிமுகம் செய்துகொண்டேன். பத்துவருடங்களுக்கு முன்பு சாதாரணமாக‌ வாசிக்க ஆரம்பித்த கதை என்னை உள்ளிழுத்துக்கொண்டது. நான் நாய்ப்பிரியன் என்பதனால்தான் நாய் பற்றிய அக்கதையை வாசித்தேன். நாயின் உடல்மொழி, மனப்போக்கு பற்றிய நுண்ணிய விவரணைகள் இவர் ஓர் எழுத்தாளர் என்ற எண்ணத்தை உருவாக்கின. தாய்லாந்தில் நாயின் நாக்கை சாப்பிட்டுவிட்டு ஆஸ்திரேலியா வரும் உரிமையாளரைக் கண்டு அவரது செல்லநாய் பதுங்கிக்கொள்ளும் கதைமுடிவில் சட்டென்று இன்னொரு உலகம் திறந்துகொண்டது.

இன்றுவரை என் நினைவில் நிற்கக்கூடிய, நான் பல மேடைகளில் உரையாடல்களில் குறிப்பிட்டுவரும் கதை அது. மண்மீதுள்ள உயிர்வலையில் கொல்வதும் தின்பதும் மிகமிக இயல்பானது என்ற எண்ணம் எல்லா அசைவ உணவுக்காரர்களைப்போலவே எனக்கும் உண்டு. ஆனால் அது ஒரு புறவய யதார்த்தமே என்றும் அதற்கப்பால் நாமறியாத அகவயமான ஓர் உண்மை உள்ளது என்றும் உயிர்க்குலங்கள் பிரியத்தின் பரிமாற்றமென்னும் வலையாலும் கட்டப்பட்டுள்ளன என்றும் கொலை எந்நிலையிலானாலும் அந்தவலையை அறுக்கிறது என்றும் உணர்ந்தேன் என்று தோராயமாகச் சொல்லிவிடலாம் .நாய்க்கும் எனக்குமான உறவு ஆடுக்கும் எனக்குமான உறவைவிட அந்தரங்கமானதாக இருப்பது நான் ஒருபோதும் அதை தின்னப்போவதில்லை என்பதனால்தானா என நினைத்து நுண்ணிய அதிர்ச்சி ஒன்றை அடைந்தேன். இன்றுவரை திறந்துகொண்டே இருக்கும் புனைகதை அது

அக்கதையை வாசித்தபின் ஆசி கந்தராசா அவர்களை நானே தொடர்புகொண்டேன். அக்கதை பற்றி நானும் நண்பர்களும் நடத்தி வந்த சொல்புதிது இதழில் மதிப்புரையும் எழுதினேன். அப்போது அவர் யாரென்றே தெரியாது. ஆஸ்திரேலியாவில் ஒரு பல்கலைகழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார், உயிரியல் நிபுணர் என்று பிற்பாடுதான் அறிந்தேன். மேலும் ஐந்தாறு ஆண்டுகள் கழித்து என் ஆஸ்திரேலியப் பயணத்தில் நான் அவரை நேரில் கண்டேன். அவருடன் சிலநாட்கள் தங்கவும் பயணம்செய்யவும் வாய்த்தது

அப்போது அவர் சொன்ன ஒரு வரி மீண்டும் என் பிரக்ஞையை அதிரச்செய்தது. ‘உயிரியல் விதிகளின்படி எல்லா உயிர்க் கரிமப்பொருட்களும் உணவே’ அதை உணவல்லாமலாக்கும் அம்சம் என்ன , உணவாக ஆக்கும் அம்சம் என்ன என்பதே வினா. ஆப்ரிக்காவில் பச்சை மாட்டிறைச்சி உண்பதைப்பற்றி அவர் எழுதியிருந்த வரிகளை விவாதித்தபோது அதைச் சொன்னார்.

ஒருவேளை அறிவியலில் சாதாரணமாக கூறப்படும் ஒரு விதியாக அது இருக்கலாம். ஆனால் எனக்கு அது விரிந்தபடியே சென்றது. இந்த உலகத்தின் மாபெரும் உயிர்ப்பெருவெளி மொத்தமாகவே உணவுதான். அந்தக்குவியலில் கிடந்து பட்டினியால் சாகிறான் மனிதன். உணவல்ல பிரச்சினை, உணவை அடையும் அறிவை அடையவில்லை என்பதுதான்.

[ 3 ]

ஆசி கந்தராசா அவரது கல்விப்பணிகள் நடுவே மிகமிகக் குறைவாகவே எழுதியிருக்கிறார் அவரது நூல்கள் ஒரு வாசகனாக எனக்கு வெவ்வேறு நிலங்களில் வெவ்வேறு அறிவுப்புலங்களில் உலவி வரும் அனுபவத்தை அளிக்கின்றன. ஆகவே என்றும் என்பிரியத்துக்குரிய எழுத்தாளர் அவர்.சமீபத்தில் ஆப்ரிக்கா சென்றிறங்கியபோது அவரும் அ.முத்துலிங்கமும் எழுதிய ஆப்ரிக்கப் பயண அனுபவக்குறிப்புகளைத்தான் நினைவுகூர்ந்தபடி இருந்தேன். குறிப்பாக விண்டூக்கின் சந்தையில் வாட்டிய மாட்டிறைச்சி உண்ணும்போது.

அறிவியலாளரின் எழுத்து என்பதனால் ஆசி கந்தராசா எழுத்து தொடர்ச்சியாக தகவல்களை அளித்துக்கொண்டே செல்லும் தன்மை கொண்டிருக்கிறது. இந்நூலின் முதல் கட்டுரையான கறுத்தகொழும்பான் ஓர் உதாரணம். கறுத்தகொழும்பான் என்ற ஈழத்து மாம்பழ வகையை ஆஸ்திரேலியாவில் கொண்டுவந்து பரப்ப முயலும் உடையார் மாமாவின் முயற்சியின் பதிவாக மட்டுமே இந்தக் கட்டுரை தன்னை முன்வைக்கிறது. அந்த மாமரத்தின் இயல்புகள், மாம்பழ விவசாயம் பற்றிய தகவல்கள், டர்பனில் நிகழும் சர்வதேச மாம்பழ மாநாடு, அன்னியத்தாவரங்களுக்கு ஆஸ்திரேலியா வைத்துள்ள கட்டுப்பாடுகள், ஆஸ்திரேலியாவின் வணிகச்சூழல் கனிகளை மதிப்பிடும் முறை என இது ஒரு தகவல்தொகுதி

ஆனால் கட்டுரை முடியும்போது இந்தக்கட்டுரை மாம்பழத்தைப்பற்றியதே அல்ல என்ற விரிவு உருவாகிறது. பாராச்சூட் விரிந்துகொள்ளும் தருணம்போல. இது ருசியின் கதை. யாழ்ப்பாணத்து ருசி. யாழ்ப்பாணத்தின் பாரம்பரியத்தின் இனிமை. அந்தக்கோணத்தில் நம் பார்வை திரும்பியதுமே ஒவ்வொரு புள்ளியாக பெரிதாகத் தொடங்குகிறது. பார்க்க அழகில்லாத கனி அது. பளபளப்பற்றது, உருண்டுதிரளாதது, ஆகவே உடனடிச் சந்தை மதிப்பற்றது.

அதை ஆஸ்திரேலிய மண்ணுக்குக் கொண்டுவரத்தான் எவ்வளவு தடைகள். கறுத்த கொழும்பான் என்ற அதன் பெயரே தடை. அது நிற ஒதுக்குதலுக்கு உள்ளாகிறது. ஆனால் தன் சுவையால் எப்படியோ அது வந்து சேர்ந்துவிடும், வேரூன்றிவிடும். அந்தப்புள்ளியில் அந்தப் பெயர் மீது என் கவனம் நிலைத்தது- கறுத்த கொழும்பான்! இவர் எதைப்பற்றிப்பேசுகிறார் என மனம் வியந்தது!

மிகத்தேர்ந்த புனைகதையாளனின் திறனுடன் இந்த இரண்டாவது தளத்தை ஆசி கந்தராசா இக்கட்டுரைக்குள் இணைத்திருக்கிறார். கட்டுரை மாம்பழத்தைப்பற்றி மட்டும்தான். மாம்பழ மாநாட்டுக்காகவே டர்பனுக்குச் செல்கிறார்கள் உடையார் மாமாவும் கதைசொல்லியும். அங்கே மாம்பழ மாநாட்டினூடாக ஆப்ரிக்காவின் குடியேறிகளின் வாழ்க்கையின் கோட்டுச்சித்திரம் வருகிறது. தங்கள் பண்பாட்டை அவர்கள் இழந்துள்ள விதம் கச்சிதமாகச் சொல்லப்பட்டபின்பு கட்டுரை மீண்டும் கறுத்தகொழும்பானுக்கு மீள்கிறது.

இந்ததொகுதியில் உள்ள எல்லாக்கட்டுரைகளிலும் இந்த இரண்டாவது தளம் அடிச்சரடாக ஓடிக்கொண்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தின் ’தலவிருட்ச’மான பனையைப்பற்றிப் பேசும் கட்டுரை ஈச்சமரம் தென்னைமரம் என்று நினைவுகளின் ஓட்டம்போல பல புள்ளிகளைத் தொட்டுச்செல்கிறது. யாழ்ப்பாணம் முதல் அரேபியாவரை நீள்கிறது. இந்த மரங்களின் ஆண்பெண் பேதம்பற்றிய விவரணை அதிகபக்கங்களை எடுத்துக்கொள்வது ஏன் என்பதை அரேபியப்பாலையில் அடிமைகளொப்ப பணியாற்றும் இந்தியத் தொழிலாளர்களைப்பற்றிய குறிப்பு விளக்குகிறது. இந்த இணைப்பை உருவாக்கிக்கொள்ளும் வாசகர்களுக்கு மிகச்சிறந்த புனைகதையளவுக்கே மனஎழுச்சியை, வாழ்க்கைநோக்கை அளிக்கக்கூடியவை இக்கட்டுரைகள்

எனக்கு இவற்றின் கட்டமைப்பில் உள்ள புதுமைதான் முதன்மையாக மனம் கவர்கிறது. உலகமயமாதல் பற்றிய கட்டுரை சாதாரணமாக ‘கொட்டை உள்ள புளியாகப்பார்த்து வாங்கி வா என்றாள் அம்மா’ என ஆரம்பிக்கிறது. பின் மிக இயல்பாக ‘புளியங்கொட்டையைப்பார்க்கும்போது பீட்டர் நினைவுக்கு வருகிறான் என்று தாவுகிறது. பீட்டரின் ஊர் உகாண்டா. இந்த அழகிய கதைகூறல் குறை ‘உலகக்கிராம’த்தில் இவை நிகழ்கின்றன என்ற பரவசத்தை அளிக்கின்றது.

சமீபகாலமாகவே ஆப்ரிக்க நிலம் எனக்கு பெரிய ஈர்ப்பை உருவாக்கியபடியே உள்ளது. ஆசி கந்தராசாவின் எதியோப்பியா பற்றிய கட்டுரையை நான் முன்னதாகவே தட்டச்சுப்பிரதியாக வாசித்திருந்தேன். வீடு என்பது மகிழ்ச்சியாக இருப்பதற்கு மட்டுமே, ஆகவே வீட்டுக்குள் நுழைந்தபின் எந்தக்கவலையையும் வைத்திருப்பதில்லை என்ற அபேராவின் வரி அன்றும் மனதை அதிரச்செய்தது. இப்போது வாசிக்கையிலும் உள்ளத்தை மலரச்செய்கிறது

[ 4 ] .

தன்னைப்பற்றி உண்மையை எழுதுபவன் உலகைப்பற்றிய உண்மையை எழுதுகிறான். உலகை சரியாக எழுதுபவன் தன்னைப்பற்றி எழுதிவிடுகிறான் என ஒரு கூற்று உண்டு. ஆப்ரிக்கா அரேபியா ஆஸ்திரேலியா என உலவும் இந்த பெரும்பயணியின் கட்டுரைகள் யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் என்றே ஒலிக்கும் விந்தையை இப்படித்தான்புரிந்துகொள்கிறேன்

ஆசி கந்தராசாவின் வெளிவரவிருக்கும் ‘கறுத்தகொழும்பான்’ கட்டுரை நூலுக்கான முன்னுரை]

எழுதியவர் : ஜெ தளம் -மின்னஞ்சல் -நவம்ப (19-Jul-19, 5:23 am)
பார்வை : 38

மேலே