தாத்தா வழியா தந்தை வழியா என்ன செய்யப் போகிறீர்கள் உதயநிதி

குள.சண்முகசுந்தரம்

திருமங்கலம் இடைத்தேர்தலில் களப்பணி ஆற்றியமைக்கு வெகுமதியாக மகன் மு.க.அழகிரியை 2009-ல், தென் மண்டல அமைப்புச் செயலாளர் ஆக்கினார் கருணாநிதி. பத்து ஆண்டுகள் கழித்து அவரது வழியில், மக்களவைத் தேர்தலில் தமிழகம் முழுவதும் பட்டிதொட்டியெங்கும் பிரச்சாரம் செய்து திமுக கூட்டணியின் வெற்றிக்கு வலு சேர்த்தார் என்று சொல்லி மகன் உதயநிதிக்கு கட்சியின் இளவரசாக, இளைஞரணி செயலாளராக பட்டம் சூட்டியிருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இதில் ஸ்டாலினுக்கு விருப்பம் இருந்ததோ இல்லையோ... ஆனால், துர்கா ஸ்டாலினுக்கு அதீத விருப்பம் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். ஆனால், அழகிரி அன்றைக்கு தென் மண்டல அமைப்புச் செயலாளராகப் பிரகடனம் செய்யப்பட்டபோது திமுகவினர் மத்தியில் இருந்த உற்சாகமும் ஆரவாரமும் இப்போது இல்லை. காரணம், இதுதான் இப்படித்தான் நடக்கும் என ஏற்கெனவே கட்சியினர் தீர்மானித்து வைத்திருந்ததுதான். அதனால் இதைப் பெரிதுபடுத்தாமல், உதயநிதியின் மகன் இன்பநிதியை ‘வருங்காலமே’ என விளித்துப் பகிரப்படும் மீம்களையும் பார்த்துச் சிரிக்கிறார்கள். அவர்களால் வேறென்ன செய்ய முடியும்?

திமுகவைப் பொறுத்தவரை இளைஞரணி செயலாளர் பதவி என்பது கட்சித் தலைவருக்கான ஸ்டெப்னி பதவிதான். அப்படிப் பார்க்கையில் திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதி தான் என்பதை இப்போதே உணர்த்தி கழகத்தினரை அதை அங்கீகரிக்கவும் வைத்திருக்கிறார் ஸ்டாலின்.

1980-ல், மதுரை ஜான்சி ராணி பூங்காவில் அதிமுகவினரின் சோடா பாட்டில் வீச்சுக்கு மத்தியில் திமுக இளைஞரணிக்கு அச்சாரம் போடப்பட்டது. மதுரை திமுக முன்னோடிகளான காவேரி மணியம், பொன்முத்துராமலிங்கம், அக்கினி ராசு, வைகை நம்பி உள்ளிட்டவர்கள் ஸ்டாலினுக்கு இதற்கான மேடையை அமைத்துக் கொடுத்தார்கள். அந்த மேடைக்குப் பின்னால் கருணாநிதியின் விருப்பமும் கொஞ்சம் இருந்தது. அப்போதுகூட எடுத்த எடுப்பிலேயே ஸ்டாலின் இளைஞரணிக்கு தளபதியாகிவிடவில்லை. தொடக்கத்தில் இளைஞரணியை வழிநடத்த ஸ்டாலின், திருச்சி சிவா, வாலாஜா அசேன், பரிதி இளம்வழுதி, தாரை மணியன் ஆகியோரைக் கொண்ட ஐவர் குழுதான் அமைக்கப்பட்டது. ஓர் ஆண்டு கழித்துத்தான் அதன் மாநில அமைப்பாளராக அங்கீகரிக்கப்பட்டார் ஸ்டாலின்.

1983-ல், திமுக இளைஞரணிக்கு மாவட்ட அளவில் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அமைப்பாளர்களும் நியமிக்கப்பட்டார்கள். இளைஞரணி தொடங்கப்பட்டு ஐந்தாறு வருடங்களில் மாநிலக் குழுவில் இருந்த மற்றவர்களின் பெயர்கள் மங்கி ஸ்டாலின் தனித்துவமாகத் தெரிய ஆரம்பித்தார். திருச்சி சிவா, பரிதி இளம்வழுதி மட்டும் தங்களது பேச்சுத் திறமையால் தொடர்ந்து தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டே வந்தார்கள். வாலாஜா அசேன் 1989 தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியில் நிற்க சீட் கேட்டார். தலைமை மறுத்ததால் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்றார். 1980-ல், திமுக இளைஞரணிக்கு கால்கோள் நட்டவர்களில் திருச்சி சிவா தவிர மற்றவர்களோ அவரது வாரிசுகளோ இப்போது அரசியல் களத்தில் பிரகாசமாய் இல்லை.

ஆனால், இந்தச் சிரமங்கள் எதுவுமே இல்லாமல் இளைஞரணியின் தளபதி ஆகி இருக்கிறார் உதயநிதி. ``எனக்கு துதிபாடுவதும், துதிபாடுபவர்களையும் பிடிக்கவே பிடிக்காது” என்று அவர் சொல்கிறார். ஆனால், அதே கூட்டத்தில் அவருக்குப் பக்கத்தில் இருப்பவர்கள், “இனிமேல் உதயநிதியை சின்னவர் என்றுதான் அழைக்க வேண்டும்” என்கிறார்கள். இதெல்லாம் அவரை எங்கு கொண்டுபோய் நிறுத்துமோ என்ற கவலையும் தொண்டனுக்குள் மெல்ல எட்டிப் பார்க்கிறது.

“உதயநிதியை இப்போது இந்தப் பதவியில் அமர்த்த வேண்டிய அவசியம் என்ன வந்தது... ஏன், வேறு யாரும் அந்தப் பதவிக்குத் தகுதியானவர்கள் இல்லையா?” என்ற கேள்விகள் திமுகவுக்குள்ளும் சன்னமாக ஒலிக்கின்றன. ஆனால், அதை வெளிப்படையாக யாராலும் பேச முடியவில்லை. காரணம், கட்சிக்குள் காணாமல் போய்விட்ட உட்கட்சி ஜனநாயகம். 1993-க்கு முன்பு வரை ஓரளவுக்காவது உட்கட்சி ஜனநாயகம் இருந்தது. அதனால்தான் தலைமைக் கழக பதவி ஒன்றுக்காக கருணாநிதி முன்மொழிந்த வேட்பாளர் ஒருவரை எதிர்த்து வைகோ ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூடி இன்னொரு வேட்பாளரை நிறுத்த முடிந்தது. மதுரை விராட்டிபத்து பொதுக்குழுவில் வீரபாண்டியார் உள்ளிட்டவர்கள் தரையில் உட்கார்ந்து தர்ணா செய்ய முடிந்தது.

இன்றைக்கு அதுபோன்ற ஜனநாயகம் கட்சிக்குள் காணாமல் போனதற்கு வைகோவும் ஒரு காரணம். ஆம், ``திமுக தொண்டன் சிங்கிள் டீயைக் குடிச்சுட்டு கட்சிக்கு உழைப்பான்” என்று 1967-ல் ராஜாஜி சொன்னார். அவர் சொன்ன அந்த போர்க்குணமிக்க திமுக தொண்டர்களையும், தலைவரையே எதிர்த்துக் கேள்வி கேட்கும் எல்.கணேசன், மதுராந்தகம் ஆறுமுகம், செஞ்சி ராமச்சந்திரன் உள்ளிட்ட தளபதிகளையும் வைகோ தன்னோடு அழைத்துச் சென்றுவிட்டார் (எல்.கணேசன், திருச்சி செல்வராஜ் உள்ளிட்ட சிலர் மட்டும் மீண்டும் திமுகவுக்குத் திரும்பினர்). அப்படிப் பிரிந்து போனவர்களுக்கு மாற்றாக கையில் சிக்கியவர்களை எல்லாம் பிடித்து கழகத்தின் முக்கியப் பதவிகளில் அமர்த்தினார்கள். அதுவும் போதாதுக்கு மாற்றுக் கட்சியிலிருந்து வந்த வந்தேறிகளுக்கு எல்லாம் முக்கியப் பதவிகளைக் கொடுத்து, ஆட்சிக்கு வந்ததும் ‘பசையான’வர்களை அமைச்சர்களாகவும் ஆக்கினார்கள். நேற்றைக்கு வந்த செந்தில்பாலாஜி வரைக்கும் அதுதான் நடந்திருக்கிறது. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் கட்சியின் உயிர்நாடியான ஒன்றிய, நகர செயலாளர்களும், வட்ட, கிளைச் செயலாளர்களும் காலத்துக்கும் நாம் இப்படியே இருக்க வேண்டியதுதானா? என்று சலித்துக் கிடக்கிறார்கள்.

இதையெல்லாம் என்னிடம் சுட்டிக்காட்டிய தென் மண்டல திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஒருவர், “உதயநிதிக்கு பதவி கொடுத்தது பற்றியோ, வாரிசு அரசியலை விமர்சிக்கும் தகுதியோ திமுக மாவட்டச் செயலாளர்கள் 65 பேரில் யாருக்கும் கிடையாது. ஏனென்று கேட்டால், அவர்கள் அத்தனை பேரும் தத்தமது வாரிசுகளை மாவட்ட அளவில் அரசியலுக்குக் கொண்டுவந்துவிட்டார்கள். அதனால் அவர்களால் கருத்தியல் ரீதியாக உதயநிதியின் வருகையை விமர்சிக்க முடியாது.

ஆனால், கட்சியின் நாளைய தலைவராகப் போகும் உதயநிதி கட்சியின் கொள்கை கோட்பாடுகள் பற்றியும் கட்சித் தொண்டனின் நாடித்துடிப்பையும் ஆழ்ந்து படித்துவிட்டு இந்தப் பொறுப்பை ஏற்றிருக்க வேண்டும். தமிழகத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பேரூர் கழகத்தின் பெயரைச் சொன்னால் அதன் செயலாளர் யார் என்பதை அடுத்த நொடியே யோசிக்காமல் சொல்வார் கலைஞர். ஆனால், ஸ்டாலினுக்கு அந்தத் திறமை போதவில்லை. அவருக்குத் தெரிந்ததெல்லாம் 65 மாவட்டச் செயலாளர்கள் மட்டும்தான். அவர்கள் சொல்வதுதான் அவருக்கு வேதவாக்கு.

தம்பி உதயநிதி அப்படி இருக்கக் கூடாது. அவர் தனது தந்தையைப் போல் இல்லாமல் தாத்தாவைப் போல் வரவேண்டும் என்பதுதான் எங்களைப் போனறவர்களின் ஆசை. ‘ஆரல்வாய்மொழியிலிருந்து வந்திருக்கிறேன்’ என்று ஒருவர் சொன்னால், ‘அப்படியா... சுரேஷ்ராஜன் எப்படி இருக்கிறார்?’ என்று கேட்கத் தெரிய வேண்டும். இளைஞரணி தளபதி உதயநிதி இப்போது ஹம்மர் காரில் செல்கிறார். அவரை வழிநடத்தும் மகேஷ் பொய்யாமொழி, பென்ஸ் காரில் பறக்கிறார். இதெல்லாம் தலைமைக்கும் தொண்டனுக்குமான இடைவெளியை அதிகமாக்கிவிடும்.

கலைஞர் ஒரு இடத்துக்கு வருகிறார் என்றால் எங்கோ ஒரு மரத்தின் உச்சியில் ஏறி நின்றுகொண்டு, ‘டாக்டர் கலைஞர் வாழ்க’ என்று உயிரைக் கொடுத்து கத்துவான் திமுக தொண்டன். அந்தத் தொண்டனின் உணர்வுகளைப் புரிந்தவர் கருணாநிதி. ஆனால், இன்றைக்கு இருப்பவர்கள் அப்படிப்பட்ட தொண்டனைப் பார்த்து, ‘அது அவனோட தலைவிதி’ என்று ரொம்ப எளிதாகச் சொல்லிட்டுப் போய்விடுகிறார்கள்.

போகிற போக்கில் இன்னொன்றையும் உதயநிதி புரிந்துகொள்ள வேண்டும். வந்தேறிகளுக்கும் காசு பணம் வைத்திருப்பவர்களுக்கும் மட்டுமே கட்சிக்குள் வாய்ப்புகள் சாத்தியமாவதால் காலங்காலமாக கட்சியின் ரத்த நாளமாய் இருக்கும் திமுக தொண்டன் ஒருவிதமான விரக்தியில் இருக்கிறான். அவர்களது வலிக்கு மருந்து போட்டு அவர்களை அரவணைத்துச் செல்ல வேண்டிய பெரும் பொறுப்பும் உதயநிதிக்குக் காத்திருக்கிறது” என்று சொன்னார்.

ஒரே நாளில் கட்சி ஆரம்பித்து அடுத்த நாளே ஆட்சியைப் பிடிக்கும் அதிசயமெல்லாம் சினிமாவில்தான் சாத்தியம். ஆனால், அத்தகைய அதிசயம் உதயநிதியின் நிஜ வாழ்க்கையில் நடந்திருக்கிறது. மேடைகளில் எப்படிப் பேசவேண்டும் என்று அவருக்கு வீட்டில் பயிற்சி கொடுப்பதாகச் சொல்கிறார்கள். கட்டிக்கொடுக்கும் சோறும் சொல்லிக் கொடுக்கும் வார்த்தையும் ரொம்ப நாளைக்கு நிற்காது என்பார்கள். யாரோ சொல்லிக் கொடுப்பதையும் எழுதிக் கொடுப்பதையும் மேடையில் ஒப்பித்துவிட்டுவரும் சம்பிரதாய அரசியலெல்லாம் இனி எடுபடாது.

உதயநிதியானவர் கலைஞரைப் போல் மிளிர்வாரா... தளபதியாட்டம் இருப்பாரா என்பது தான் உங்களைப் பதவியில் அமர்த்தி அழகு பார்த்துக் கொண்டிருக்கும் கழகத் தொண்டனின் இப்போதைய பெருத்த எதிர்பார்ப்பு. உங்களின் தாத்தா கலைஞர் கடைக்கோடி தொண்டனுக்கும் சொந்தமாய் இருந்தார். ஆனால், உங்களது அப்பா தளபதியானவர் மாவட்டச் செயலாளர்கள் 65 பேர்தான் கட்சி என நினைக்கிறார்.

யார் என்ன சொல்லி மழுப்பினாலும் தமிழக அரசியலில் கலைஞருக்கான இடம் இன்னமும் வெற்றிடமாகத்தான் இருக்கிறது. நீங்கள் நினைத்தால் கொஞ்சமாவது அந்த இடத்தை நிரப்ப முடியும். தாத்தா பாணியில் யதார்த்தமாக பேசவும் தொண்டனின் நாடித் துடிப்பை அறிந்து அவனை அரவணைக்கவும் படித்துக் கொள்ளுங்கள். தாத்தாவுக்கு தப்பாது வந்த பேரன் என்ற பெயரை வென்றெடுங்கள்!

எழுதியவர் : காமதேனு (19-Jul-19, 6:09 am)
பார்வை : 70

மேலே