பிரமாண்டக் காதல் - பிரகடனம்

உத்தரவுகள் ஏதுமின்றி - இவள்
நித்திரைக்குள் புகுந்து
யாத்திரை செய்திடும்
யவ்வனக் காதலனே...

ஆர்ப்பரிக்கும் அன்பால் - இவள்
ஆருயிர் கலந்து
அக்களிப்பு தந்திடும்
அன்புக் காதலனே…

உரசாது நின்றுகொண்டு - இவள்
உள்மனது சென்று
உற்சாக ஊஞ்சலாட்டிடும்
உன்னதக் காதலனே…

கண்ணியப் பேச்சால் - இவள்
காதிற்குள் நுழைந்து
கரகோஷம் எழுப்பிடும்
கருவக் காதலனே…

நாழிகை பாராமல் - இவள்
நயனங்கள் நோக்கி
நேசங்கள் நவின்றிடும்
நேயக் காதலனே…

மந்தகாச மொழியால் - இவள்
முன்பு மண்டியிட்டு
மறுமொழிக்கு மன்றாடிடும்
மாயக் காதலனே…

இத்தகைய,
பிரியக் காதலனைக் கண்டு
வெளிப்படையாக வெட்கப்பட்டு
பிரமாண்டக் காதலைப்
பிரகடனப் படுத்திடும்
இவள்!

எழுதியவர் : காதம்பரி (19-Jul-19, 8:48 am)
சேர்த்தது : காதம்பரி
பார்வை : 222

மேலே