உள்ளத்தில் உண்மை உறாமல் சீர்தான் சிறிதேனும் சேருமோ – நேர்மை, தருமதீபிகை 343

நேரிசை வெண்பா

உள்ளத்தில் உண்மை உறாமல் உலகத்தே
வெள்ளத் தனைய விதமாகத் – துள்ளித்தான்
செய்தாலும் சீர்தான் சிறிதேனும் சேருமோ?
வெய்தாவ தன்றி வினை, 343

– நேர்மை, தருமதீபிகை
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

உன் உள்ளத்தில் உண்மை இல்லாமல் உலகத்தில் உயர்ந்தவன் போல் பலவகை ஆரவாரங்களைப் பரப்பித் தலைமையாகப் பிலுக்கி நின்றாலும் அந்நிலையால் யாதொரு நலனும் அடையாது; தீதே பெருகிச் சிறுமையே விளையும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

தன் நெஞ்சமே மனிதனுக்கு என்றும் இனிய தஞ்சமாய் அமைந்துள்ளது; அதனை வஞ்சிக்கலாகாது. உள்ளமே சான்றாய் யாண்டும் ஒழுகி வரவேண்டும். அங்ஙனம் ஒழுகிய பொழுதுதான் விழுமிய சீர்மையாளனாய் அவன் ஒளி மிகப் பெறுகின்றான்.

தனது அகத்தே உண்மையான தகுதி இல்லாமல் வெளியே உயர்ந்தவன் போல் வழி செய்து நடித்து வந்தாலும் நல்ல மதிப்பு வராது. உள்ளத்து அளவுதான் யாவும் உளவாகின்றன.

வெள்ளத்து அனைய விதம் என்றது புகழ் அடைய விழைந்து அவன் உழந்துபடும் விரிவுகள் அறிய வந்தது

எவ்வளவு ஆடம்பரங்களைப் படைத்துக் காட்டிக் குதித்துக் திரிந்தாலும் செவ்விய உள்ளம் இல்லாதவனுக்கு அவ்வளவும் எள்ளலாய் இழிந்துபட அவன் ஏங்கி ஏமாந்தே வீழ்கின்றான்.

தன் நெஞ்சைச் சாட்சி வைத்து நேர்மையுடன் நடப்பவனுக்கே தெய்வ அருள் கை வருகின்றது; வையமும் அவனை மதித்துப் போற்றி மாண்பு செலுத்தி யருள்கின்றது.

வஞ்சம் புரிவதால் யாதொரு இசையையும் அடைய முடியாது; வசைதான் வரும்; வரவுநிலை தெரியாமல் கரவு புரிவது பரிபவமேயாம். உறுதியான உண்மையைக் கருதி உணர வேண்டும்.

’வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை’ என்னும் பழமொழி உயர் பொருளுடையது. ஓர்ந்து சிந்திக்கவுரியது.

இறைவன் எல்லாம் அறிய வல்லவன்; எங்கும் என்றும் நிறைந்துள்ளவன். எத்தகைய கள்ளத்தையும் அவ்வள்ளல் அறிந்து கொள்ளுவானாதலால் அதனை உள்ளி உணர்ந்து உண்மையாய் ஒழுகுவதே எவர்க்கும் நன்மையாம்.

அறுசீர் விருத்தம்
(விளம் மா தேமா அரையடிக்கு)

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க்
..காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியே னாகி நின்று
..தேடினே னாடிக் கண்டேன்
உள்குவா ருள்கிற் றெல்லாம்
..உடனிருந் தறிதி யென்று
வெள்கினேன் வெள்கி நானும்
..விலாவிறச் சிரித்திட் டேனே. 3

உடம்பெனும் மனைய கத்து
..உள்ளமே தகளி யாக
மடம்படு முணர்நெய் யட்டி
..உயிரெனுந் திரிம யக்கி
இடம்படு ஞானத் தீயால்
..எரிகொள விருந்து நோக்கில்
கடம்பமர் காளை தாதை
..கழலடி காண லாமே. 4
75 பொது, திருநாவுக்கரசர் தேவாரம், நான்காம் திருமுறை

திருநாவுக்கரசர் தமது அனுபவங்களை இதில் விளக்கியிருக்கிறார். எவருடைய எண்ணங்களையும் கடவுள் உடனிருந்து அறிகின்றார் என்னும் உணர்வுடன் யாண்டும் யாரும் நேர்மையாய் ஒழுகி வர வேண்டும் என அடிகள் இங்ஙனம் உணர்த்தியுள்ளார்.

கள்ளம் செய்வதால் நல்லது காண இயலாது; அல்லலே விளையும்; அவமானமே வளருமாதலால் அதனை ஒழித்து உன் உள்ளத்தைச் செம்மை செய்து உயர் நலம் காணுக என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jul-19, 3:28 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 106

மேலே