சுத்தி இடங்கொண்ட போதே இனிய பேரின்பம் ஒளிரும் உயர்ந்து - தூய்மை, தருமதீபிகை 353

நேரிசை வெண்பா

முத்தி அடைய முயல்வார் முதலாகச்
சுத்தி அடையத் தொடங்குவார் - சுத்தி
இடங்கொண்ட போதே இனியபே ரின்பம்
உடன்கொண்(டு) ஒளிரும் உயர்ந்து. 353

- தூய்மை, தருமதீபிகை,
- கவிராஜ பண்டிதர் ஜெகவீர பாண்டியனார்

பொருளுரை:

மோட்சத்தை அடைய முயல்கின்ற முமூட்சுக்கள் (துறவிகள்) முதலில் தம் உள்ளத்தைச் சுத்தம் செய்து கொள்ளுகின்றனர்; சித்தம் சுத்தியாய பொழுதுதான் பேரின்பம் அவரிடம் பெருகி எழுகின்றது; அப்பேற்றை விரைந்து பெறுக என்கிறார் கவிராஜ பண்டிதர். இப்பாடல், முத்தியின் மூல நிலையை உணர்த்துகின்றது.

பிறவி துன்பம்; பிறவாமை இன்பம் என அனுபவங்களால் உயிர்கள் உணர்ந்து கொள்ளுகின்றன; அதனால், பிறவி நீங்கிப் பேரின்பம் அடைய நாடுகின்றன; அப்பேறு எளிதில் அமையாது; தக்க சாதனங்களும் பக்குவமும் தகுதியாக அமைந்த பொழுதுதான் கருதிய அது கை கூடுகின்றது ; அந்த மோட்ச சாதனங்களுள் சித்த சுத்தியே முதன்மையானதாதலால் அதன் நிலைமையை இது விளக்கி நின்றது.

முத்தி என்பது பாச பந்தங்களிலிருந்து நீங்கி உயிர் பரமாய் நிற்கும் நிலை. சிப்பியிலிருந்து வெளிப்பட்ட முத்தைப் போல அசுத்தக் கட்டுகளினின்று. விடுபட்ட ஆன்மா அரிய மகிமையும் பெரிய தேசும் பெருகி மிளிர்கின்றது.

இந்த முத்திப் பேற்றிற்குத் தவம், யோகம், ஞானம் முதலியன நல்ல சாதனங்களாய் அமைந்துள்ளன. அவற்றுள் உள்ளத் தூய்மையே எல்லாவற்றிலும் முன்னதாக மன்னியுள்ளது. சித்த சுத்தி முத்தியில் உய்த்தலால் அது மெய்த்தவ நிலையில் உத்தமமாய் ஒளிர்கின்றது. வித்து வர விளைவு வருகின்றது.

கலி விருத்தம்
(காய் காய் காய் காய்)

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார்? அச்சோவே! 1 அச்சோப் பதிகம், திருவாசகம்

சித்த மலம் அற்ற வழிதான் எவரும் முத்தி நலம் பெறுவர்; அப்பொழுது சீவன் சிவமாய்த் திகழுமென இஃது உணர்த்தியுள்ளது. உண்மையை ஊன்றி உணர்ந்து உறுவதை ஓர்ந்து கொள்ளுக. உள் மாசு தீரவே உயர் தேசு நேருகின்றது.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன். (குறள், 34)

உள்ளம் தூயனாயின் அவனே உயர்ந்த தருமவான் என வள்ளுவர் இவ்வாறு தெள்ளிதாக உணர்த்தியுள்ளார்.

எண்ணிய இன்ப நலங்கள் யாவும் சித்த சுத்தியால் எய்தலாமாதலால் அது புண்ணியம் என வந்தது.

’சுத்தி இடம் கொண்டபோதே பேரின்பம்‘ என்றது மனம் புனிதமாயின் மனிதன் அடையும் மகிமை தெளிய வந்தது. பிறவி நீக்கமும் பேரின்பப் பேறும் இதய பரிசுத்தத்தால் உதயமாகின்றன; அந்தப் புனிதத்தை இனிது பேணி மனிதன் உய்ய வேண்டும்.

உயிர்க்கு ஒளி விழியாய் உள்ளது உள்ளம், அது மாசு படியாமல் தெளிவுடையதாயின் எல்லா நலங்களும் எளிதே வந்து குவிகின்றன. அருளும் அமைதியும் பொங்கி ஞான சோதி வீசி அவ்வுள்ளம் ஆனந்த நிலையமாய் அமைந்து திகழ்கின்றது.

எண்சீர் விருத்தம்
(காய் காய் மா தேமா)

தந்திரியில் எழும்இசைபோல் சாந்தி முன்னாம்
..சற்குணத்தில் ஞானமெழும் தம்மின் தாமாம்
இந்தயிரண் டும்குளமும் மலரும் போல
..இனிதுவளர்ந் திடும்ஒக்க இரண்டும் கற்கில்
வந்தணுகும் தனித்தனியே இரண்டும் கற்கில்
..வருபயன்ஒன் றிலதாமிவ் வாய்மை கேள்வி
முந்துமறம் பொருளின்பம் கீர்த்தி வாணாள்
..முழுதளிக்கும் மனத்தெளிவால் முத்தி நல்கும். – ஞானவாசிட்டம்

இனிய குண நலங்களும், சாந்தியும், ஞானமும் பேரின்ப சாதனங்கள் என்று குறித்து வந்த இது மனத்தெளிவு முத்தி நல்கும் என இறுதியில் உறுதியாக உணர்த்தியருளியது. கருதிய கதி மோட்சங்கள் யாவும் உன் இருதயத்தில் மருவியுள்ளன; அதனைத் தூய்மை செய்து வை; எல்லா இன்ப நலங்களும் உன்னிடம் எளிதே வந்து இனிது பெருகித் தனியுரிமையாய் நிற்கும் என்கிறார் கவிராஜ பண்டிதர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jul-19, 3:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 39

மேலே