ஆசப்பட்டம்

வண்டிமாடு
வரப்புமேடு ஏறுனாத்தான்
வயித்துக்குச் சோறு!

பிச்ச எடுத்தாச்சும்
படிக்க வையினு
பெரியவங்க சொல்லிப் போக...

கடனவுடன வாங்கியாச்சும்
காலேஜி வர அனுப்பனும்னு
கனவு கண்டேன்!

பாமரனுக்குப் படிப்பெதுக்குனு
மூனாங்கிளாசில் முட்டுப் போடுது
இப்ப வந்த கல்விக்கொள்கை!

இங்கிலீச இங்கிதமா
நடத்த இங்க வழியில்ல!
இதுல இந்தி வந்து கூட்டுச் சேர
மூனுமொழிக் கொள்க வருதாம்!

எம்புள்ள எம்பிபிஎஸ்
ஆகக் கண்ட கனவு எல்லாம்
கானல் நீரா காணாப் போச்சே...
நீட்டு போட்ட பூட்டுனால!

கோட்டு சூட்டு போட்டுக்கிட்டு
தெருவில் புள்ள நடந்துபோக
நானுந்தான் ஆசப்பட்டேன்!
வறுமக்கோட்ட தாண்டக்கூட
வழிகொடுக்க தயங்குதய்யா
வாழும் இந்த ராசாங்கம்!

கையக்கட்டி கைநாட்டு
போட்ட நெல மாறத்தானே
பட்டம் புள்ள வாங்கி வர
பெத்த மனம் ஆசப்பட்டேன்!
என் ஆசப்பட்டம்
அறுந்து போயி
மறுபடியும் சிக்கிக்குமோ?
கைநாட்டு சகதியில....

எழுதியவர் : சிந்தை சீனிவாசன் (19-Jul-19, 10:40 pm)
சேர்த்தது : சிந்தை சீனிவாசன்
பார்வை : 22

மேலே