கண்ணாடிப் பாத்திரமாய் கை தழுவும் வாழ்வு

கடல்வழி கடக்கும் கம்பீரக் கலம்...
கடுகளவு துளையால் கனப்பொழுதில் மூழ்கும்
மறைவழி நின்று புகழ் உச்சம் பெறினும்
முறையற்ற உறவால் வாழ்வு கறைபட்டு வீழும்

கவனிக்கப்படா கோயில் பிரகாரம்....
கரையான் புற்றால் கலங்கமாய் சூழும்.....
பண்புசால் வாழ்வு கைத்தொழும் கோபுரம்
புரைப்படர விட்டால் வெற்று சாய்மரம்

நுழைவழியற்ற அடர் கானகம்
அழுத்த அனலால் கனல் பற்றி எரியும்
அன்பு நெறியற்ற அடர் அகம்
அகந்தைக் கனலால் உறவற்றுத் திரியும்

கண்ணாடிப் பாத்திரமாய் கைத்தவழும் வாழ்வு
பதறாது சிதறாது பிரளாது புரளாது
பக்கவாட்டில் பாராது பாதையில் பயணித்தால்
பவித்திரமாய் கரைசேரும் பாரகம் நமை பின்தொடரும்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (20-Jul-19, 9:16 am)
பார்வை : 64

மேலே